காட்டிற்குள் அந்த ஆசிரமத்திற்கு…
சத்குரு வளர வளர அவரது சாகசங்களும் வளர்ந்தன; பின் அவர் மோட்டார் சைக்கிள் வாங்கினார்! காட்டிற்குள் பயணித்தார். ஒருநாள் ஸ்வாமி நிர்மலானந்தா அவர்களின் ஆசிரமத்திற்கு உடலில் சேறும் அழுக்குமாக செல்ல நேர்ந்தது! ஆனாலும் சத்குருவை ஒரு யோகி என சத்குரு அறிவதற்கு முன்பே அவர் அறிந்திருந்தார்!
சத்குரு இளமைப் பருவத்தை அடைந்து ஒரு மோட்டர் பைக் வாங்கிய பிறகும் அவரது சாகசங்கள் தொடர்ந்தன. இப்படி ஒருமுறை காட்டிற்குள் சென்றபோது, சுவாமி நிர்மலானந்தாவை சந்தித்தார். அவரைப் பற்றி சத்குரு கூறுகையில், "நான் ஒரு யோகி என்பது எனக்குத் தெரிவதற்கு முன்பாகவே அவருக்குத் தெரிந்திருந்தது" என்றார்.
சத்குரு: சுவாமி நிர்மலானந்தா பிலிகிரி ரங்கண்ணபெட்டா மலைத்தொடரில் கர்நாடகத்தில் வாழ்ந்துவந்தார். நீண்டகாலமாக அவர் என்னுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தார் - நான் ஒரு யோகி என்பது எனக்குத் தெரிவதற்கு முன்பாகவே அவருக்குத் தெரிந்திருந்தது. அவருடைய நான்கு ஏக்கர் ஆசிரமத்தை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்காமல் பதிநான்கு வருடங்களாக மௌனத்தில் வாழ்ந்தார். எங்களுக்குள் ஒருவிதமான உறவு மலர்ந்தது - ஆன்மீக காரணங்களுக்காக அல்ல - ஒருவருக்காக ஒருவர் சற்று நெகிழ்ந்தோம்.
அங்கே ஒரு சிறிய ஆசிரமம் இருப்பதாக கேள்விப்பட்டிருந்தேன், அங்கு செல்ல முடிவெடுத்தேன்.
எனக்கு 19 அல்லது 20 வயதாக இருந்தபோது, மலைப்பகுதிகளில் அதிக காலம் சுற்றித் திரிந்தேன். என்னுடைய மோட்டர் பைக்கை காட்டிற்குள் நிறுத்திவிட்டு ஆறேழு நாட்களுக்கு காட்டினுள் சுற்றித் திரிவேன். அது என்னுடைய சாகசங்கள் நிறைந்த காலம், எனக்குத் தோன்றியபோதெல்லாம், ஒரு மாற்றுத் துணி கூட எடுத்துக்கொள்ளாமல் நான் காட்டிற்குள் சென்றுவிடுவேன்.
ஒருமுறை இப்படிச் சென்றபோது, மிகவும் அற்புதமான அனுபவங்கள் கிடைத்தது, யானைகளை மிக நெருக்கமாக சந்திக்க நேர்ந்தது. அப்போது இப்பகுதியில் வனவிலங்குகள் மிகுந்திருந்தன. அப்போது குறிப்பாக நேர்ந்த இன்னொரு நிகழ்ச்சி, ஒரு கரடியின் கவனம் என்மீது திரும்பியதால் நான் ஒரு மரத்தின்மீது 24 மணி நேரம் இருக்க நேர்ந்தது! எப்போதும் போல மூன்று நான்கு நாட்களில் கொண்டுவந்த உணவு தீர்ந்துவிட்டது. நான் ஏழு நாட்களுக்கான உணவை எடுத்துச்செல்வேன், ஆனால் அது மூன்று நாட்களில் தீர்ந்துவிடும், அதைவிட அதிகமாக எடுத்துச்செல்வது சற்று சுமையாக இருக்கும். அதனால் காட்டில் சரியாக எதுவும் சாப்பிடாமல் இன்னும் இரண்டரை நாட்கள் கழித்தேன், அதனால் தாங்க முடியாத பசி. அது பருவமழை காலமாக இருந்ததால் மழை பெய்துகொண்டு இருந்தது. இரவிலும் காட்டிலேயே தூங்கியதால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை சேறும் சகதியுமாக இருந்தேன்.
அங்கே ஒரு சிறிய ஆசிரமம் இருப்பதாக கேள்விப்பட்டிருந்தேன், அதனால் அங்கு செல்ல முடிவெடுத்தேன். அது ஒரு சிறிய இடம், வெளியே தோராயமாக 15 படிக்கட்டுகள் இருந்திருக்கும், அது ஒரு சிறிய குடிலை அடைந்தது. நான் படிக்கட்டுகள் மேலே பைக் ஓட்டிச்சென்று பைக்கை ஒரு சுவற்றின்மீது சாய்த்து வைத்தேன். இந்தியாவில் ஆன்மீகப் பாதையில் இருப்பவராகக் கருதும் வண்ணத்தில் உடை அணிந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் வெளியே வந்தார். அவர் என்னைப் பார்த்ததும் முகத்தில் ஒரு பெரிய புன்னகை பூத்தார். "எனக்கு கொஞ்சம் உணவு வேண்டும்" என்றேன். அவர் என்னைப் பார்த்தார், அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அவர் அருகில் வந்து சேறுபடிந்திருந்த என்னுடைய பூட்ஸைத் தொட்டு என் பாதங்களைப் பற்றிக்கொண்டார். அது என்னை சற்று தடுமாற வைத்துவிட்டது, ஏனென்றால் என் வாழ்நாள் முழுவதும் நான் எவருக்கும் தலைவணங்கியது கிடையாது - ஒரு கோயிலில் கூட யாரையும் வணங்கியது கிடையாது. ஆனால் நான் சேறும் சகதியுமாக இருந்த நிலையிலும் இவர் என் அழுக்குப் படிந்த பூட்ஸ் கால்களைப் பற்றிக்கொண்டார். ஒருசில நிமிடங்கள் தடுமாறிவிட்டேன், பிறகு அதிலிருந்த்து மீண்டு வந்து, "எனக்கு உணவு வேண்டும், அதற்கு நான் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறேன்." என்றேன். அவசர காலத்திற்காக கொஞ்சம் பணத்தை ஒரு கவரில் சுருட்டி வைத்து என்னுடைய பேன்ட் பாக்கெட் ஒன்றில் செருகி வைத்திருப்பேன்.
அவரிடம் இருந்ததெல்லாம் கொஞ்சம் தேனும் ரொட்டியும் தான். எனக்காக இன்னும் கொஞ்சம் ரொட்டிகள் சமைத்து தேனுடம் கொடுத்தார், நான் அத்தைனையையும் விழுங்கிவிட்டேன். சாப்பிட்டு முடித்தபின் பணம் கொடுக்க விரும்பினேன், ஆனால் அவர் எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டார். அதனால் ஒருவிதமான உறவு உருவானது. சில மாதங்களுக்கு ஒருமுறை நான் அந்த மலைப்பகுதிக்குச் சென்றபோதெல்லாம் அவருக்கான வாழைப்பழ சீப்புகளையோ வேறு பழங்களையோ எடுத்துச் செல்வேன். அவர் எப்போதும் அங்கிருந்த மலைவாசிகள் அவருக்கு அளித்த தேனில் நான்கு லிட்டர் தேனை எனக்குத் தருவார்.
சில மாதங்களுக்கு ஒருமுறை நான் அந்த மலைப்பகுதிக்கு சென்றபோதெல்லாம் அவருக்கான வாழைப்பழ சீப்புகளையோ வேறு பழங்களையோ எடுத்துச் செல்வேன். அவர் எப்போதும் அங்கிருந்த மலைவாசிகள் அவருக்கு அளித்த தேனில் நான்கு லிட்டர் தேனை எனக்குத் தருவார்.
சிலகாலங்களுக்குப் பின்னர் எனக்குள் பல விஷயங்கள் நடந்தது, அப்போது இவரைப் பற்றி முழுவதுமாக மறந்துவிட்டேன். நான் பெரியளவில் யோக வகுப்புகள் நடத்தி பயணம் செய்ய ஆரம்பித்தேன். பல வருடங்களுக்குப் பிறகு, கிட்டத்தட்ட பதிநான்கு பதினைந்து வருடங்களுக்குப் பிறகு, அப்போது என் தோற்றம் முழுவதும் மாறியிருந்தது, அப்போது அவர் ஆசிரமத்திற்கு என் மனைவி விஜியுடனும் மகள் ராதேயுடனும் சென்றேன். நாங்கள் அங்கே சென்று அமர்ந்தோம், அவரும் எங்களை வரவேற்றார், ஆனால் அவர் பேசவில்லை, அப்போதும் அவர் மௌனத்தில்தான் இருந்தார். ஆரம்பத்தில் அவர் என்னை அடையாளம் கண்டுகொள்ளவில்லை, ஏனென்றால் நான் முற்றிலும் மாறியிருந்தேன். பிறகு நான் புன்னகைத்து, "என்னை அடையாளம் தெரியவில்லையா?" என்று கேட்டேன். அவர் மிகவும் கவனமாக என்னைப் பார்த்துவிட்டு, "ட்ரூம்! ட்ரூம்!" என்றார். நான், "ஆம்." என்றேன். அவருடைய ஆசிரமத்தின் படிக்கட்டுகளில் நான் பைக் ஓட்டிச்சென்றதை அவர் மறக்கவில்லை. அதற்குப் பிறகு எங்களுக்குள் வேறு விதமான உறவு துவங்கியது.
1996 ஜனவரி மாதத்தில் அவர் உடலை உதற முடிவெடுத்து, தான் மஹாசமாதி அடையப்போவதாக அறிவித்தார்.
அவருக்கு 73 வயதானபோது அவர் உடலைவிட்டு உயிர்நீக்க முடிவெடுத்தார். அவர் எனக்கு கடிதமெழுதி, "தயவுகூர்ந்து என்னைச் சந்திக்க வாருங்கள். உங்களிடம் பேசவேண்டும்." என்று எழுதியிருந்தார். நான் அங்கு சென்றபோது பல விஷயங்களைப் பற்றி பேச ஆரம்பித்தோம், அவர் கேள்விகளை எழுதிக்காட்டுவார், நான் பேசி அவருக்கு பதில் சொல்வேன். இப்படிப்பட்ட பேச்சுக்கள் சாதாரணமாக நடக்கவே நடக்காது. எவரும் இப்படிக் கேள்விகள் கேட்க மாட்டார்கள், அதனால் இப்படிப்பட்ட பேச்சும் நடக்காது. அவர் மிகவும் மென்மையான ஒரு துறவி, ஒரு அழகான மனிதர், ஆனால் அவர் உடலுடைய சூட்சுமங்களை அறியாததால் அதைப் பற்றி என்னிடம் பேசிக்கொண்டு இருந்தார். இதைக் காதால் கேட்ட அந்த நாளில் தான் விஜியின் ஆன்மீக சாதனை துவங்கியது.
1996 ஜனவரி மாதத்தில் அவர் உடலை உதற முடிவெடுத்து, தான் மஹாசமாதி அடையப்போவதாக அறிவித்தார். ஆனால் சுற்றும் முற்றும் களேபரமாகிவிட்டது. கர்நாடகத்தின் பகுத்தறிவாளர்கள் சங்கம், இவர் தற்கொலை செய்யப்போகிறார் என்று சொல்லி அவர்மீது ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்தது, அதனால் ஆசிரமத்திற்கு முன்னால் இரண்டு கான்ஸ்டபிள்களை நிற்க வைத்தார்கள்.
நான் அங்கே சென்றபோது என்னைக் கட்டிப்பிடித்து அழுதார், "நான் மரத்திலிருந்து ஒரு மலரைக் கூட கொய்ததில்லை. என் பூஜைக்குக் கூட நான் பூக்களைக் கொய்ததில்லை, ஆனால் என் ஆசிரமத்திற்கு முன்னால் போலீஸை நிறுத்தியுள்ளார்கள்." என்றார். அந்த அவமானத்தை அவரால் தாங்க முடியவில்லை. அவர் ஒரு பழத்தைக் கூட மரத்திலிருந்து பறித்ததில்லை. மரங்களுக்கு வலிக்கக்கூடாது என்று நினைப்பார். அவர் கீழே விழுந்தால் தான் எடுத்துப் புசிப்பார், இல்லாவிடில் தொடமாட்டார். நான் அவரிடம், "நீங்கள் கவலைப்படாதீர்கள். இந்தக் காவலர்கள் உங்களுக்கு என்ன செய்துவிட முடியும்?" என்றேன். விடைபெறும் நேரம் வந்தபோது அவர் வெளியில் ஒரு சிறிய மேடையின்மீது அமர்ந்தார். அந்த காவலர்களைச் சேர்த்து 40 பேர் அவருடைய ஆசிரமத்தில் அமர்ந்திருந்தனர். அவர்கள் முன்னால் அமர்ந்துகொண்டு அப்படியே உடலை உதறிச்சென்றார்.