மரங்கள் நமது நெருங்கிய உறவுகள்
நமது ஒரு பகுதி நுரையீரலாக இருந்து நமக்கு பிராணவாயுவை வழங்கும் மரங்கள், நம்மை உயிர்வாழ வைப்பதற்கு செய்யக்கூடிய செயல்பாடுகள் எத்தகையது என்பது குறித்து சத்குரு பேசுகிறார்!
மரங்கள்தான் நம் நெருங்கிய உறவினர்கள். அவர்கள் வெளிமூச்சு நம் உள்மூச்சு, நம் வெளிமூச்சு அவர்களின் உள்மூச்சு.
சத்குரு: மரங்கள் நமக்கு வெளியே இருக்கும் நுரையீரலைப் போல நம்மை உயிர்வாழச் செய்கின்றன. நீங்கள் உயிர்வாழ வேண்டுமென்றால் உடலை புறக்கணிக்க இயலாது, இந்த பூமியும் இதற்கு விதிவிலக்கல்ல. எதை நீங்கள் "என் உடல்" என்கிறீர்களோ, அது இந்த பூமியின் ஒரு சிறு துண்டு. ஆன்மீக செயல்முறையின் சாராம்சமே இதுதான்.
"ஆன்மீகம்" என்றால் மேலே பார்ப்பதையோ கீழே பார்ப்பதையோ நாம் குறிப்பிடவில்லை. அது உள்முகமாகத் திரும்பி, "இது" எதைப் பற்றியது என்று அறிந்துகொள்வது. உள்முகமாகத் திரும்பும்போது உணரும் முதல் அடிப்படை உண்மை, உங்களைச் சுற்றியுள்ள அனைத்துடனும் ஓர் இயற்கையான அங்கமாக நீங்கள் எப்போதும் இருக்கிறீர்கள் என்பதுதான். இதை உணராவிடில், உண்மையில் ஆன்மீக செயல்முறையே இல்லை. இது ஆன்மீகத்தின் இலக்கல்ல, இதுதான் ஆன்மீகத்தின் அடிப்படை - நீங்கள் யார், அல்லது நீங்கள் யாரென்று நினைத்திருக்கிறீர்களோ, அது மற்ற எல்லாவற்றுடைய பகுதியாக இருக்கிறது.
இன்று பிரபஞ்சம் முழுவதும் ஒரே சக்தி என்று நவீன இயற்பியல் சொல்கிறது. உங்கள் உடலின் ஒவ்வொரு அணுவும் அண்டவெளி முழுவதுடனும் இடையறாது தொடர்பில் இருக்கிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. ஆன்மீக செயல்முறை என்பது ஒருவரின் புரிதலை விரிவாக்கி, இதனை ஒருவரின் அனுபவத்திற்குக் கொண்டுவருகிறது. எப்படியும் ஒருவரின் கற்பனைக்கு மட்டுமே தீணி போட்டு, வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்த முடியாத சுவாரசியமற்ற ஓர் அறிவியல் உண்மையால் என்ன பிரயோஜனம்? மாறாக, இது ஒவ்வொரு கணமும் உங்களுக்குள் நீங்கள் அனுபவப்பூர்வமாக உணரும் உண்மையாக மாறிவிட்டால், உங்களைச் சுற்றியுள்ளவற்றையும் உங்களை கவனிப்பது போல் அக்கறையுடன் கவனித்துக் கொள்வது இயற்கையான செயல்முறையாகிவிடும்.
ஒரு மரம் என்பது உங்களுக்கான ஒரு செயல்திட்டமல்ல, ஒரு மரம் உங்களுடைய உயிர்.
ஒரு மரம் உங்களுக்கு வெளியே இருக்கும் உங்களுடைய அங்கம். உங்களுக்காக அது தினமும் சுவாசிக்கிறது. அது உங்கள் நுரையீரலுக்கு மேலானது; மரங்கள் இல்லாமல் உங்கள் நுரையீரலால் எதுவும் செய்ய இயலாது. இதை மிக எளிமையான வழிகளில் மக்களுக்கு உணர்த்தினோம். கிராமத்து மக்கள் இதற்காக எழுந்து நின்று, உறுதியுடனும் ஒருநோக்குடனும் உற்சாகத்துடனும் செயலாற்றிய விதம் வியக்கத்தக்கது. அவர்கள் செயலாற்றுவதைப் பார்ப்பதே அவ்வளவு ஆனந்தமாக இருந்தது.
கிராமங்களுக்கு நான் செல்லும்போது, தினசரி உணவிற்கு வேலை செய்யத் தேவையான சூழ்நிலையில் இருக்கும் மனிதர்கள் இதற்காக நேரம் ஒதுக்கி செயலாற்றுவதைப் பார்க்கும்போது என் கண்களில் கண்ணீர் பெருகும், ஏனென்றால் இவர்களுக்கு தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மாற்றம் குறித்து எதுவும் தெரியாது. பூமி வெப்பமடைவது என்றால் என்னவென்றே இவர்களுக்குத் தெரியாது. புவி வெப்பமடைதலுக்கு பூமியிலேயே மிகக் குறைவாகப் பங்களிப்பவர்கள், அல்லது துளியும் பங்களிக்காதவர்கள் என்றால் இவர்கள்தான். ஒரு சிட்டுக்குருவி கூட இன்னும் அதிகமாக பூமியின் வெப்பமடைதலுக்குப் பங்களிக்கும், ஏனென்றால் இவர்கள் நிலத்தை உழுது விவசாயம் செய்து பூமியோடு வாழ்பவர்கள். அவர்கள் வீட்டில் மின்சாரம் கிடையாது, அவர்கள் எதையும் எரிப்பதில்லை, அவர்கள் சுற்றுச்சூழலுக்கு மிகவும் நட்பானவர்கள், ஆனால் அவர்களை இப்பணியில் ஈடுபடச் சொன்னோம். அவர்களின் ஈடுபாடும் உற்சாகவும் மிக அற்புதமாக இருந்துள்ளது. இந்த எளிய மக்களின் துணிவும், சாத்தியமில்லாத அளவு அதிக எண்ணிக்கையில் மரங்கள் நட்டு இவர்கள் காட்டியுள்ள அக்கறையும் உலகம் முழுவதும் பலரையும் ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்.
சுற்றுச்சூழலுக்கான பணியை அங்கீகரிக்கும் இந்தியாவின் மிக உயரிய விருதான இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார் விருதைப் பெற்றுக்கொண்டபோது, சத்குரு அவர்கள் தனது ஏற்புரையில் பேசியதிலிருந்து எடுக்கப்பட்ட துளிகள்தான் மேலே தொகுக்கப்பட்டுள்ளது. 20 கோடிக்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்களின் பங்களிப்போடு 170 கோடி மரங்களை நட்டதை அங்கீகரித்து, பசுமைக் கரங்கள் திட்டத்திற்கு ஜூன் 5, 2010ல் இவ்விருது வழங்கப்பட்டது.