மஹிமா – அருளின் இருப்பிடம்
அமெரிக்காவில் அமையப்பெற்ற ஈஷா மையமான ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், ‘மஹிமா’ எனும் 39,000 ச.அடி கொண்ட ஒரு தியான மண்டபம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகளிலேயே இது மிகப்பெரியதொரு மண்டபமாகும். இந்த இடம் ஒருவர் உள்நிலையில் ஆழமான பரிமாணங்களை உணர்வதற்கு வாயிற்படியாக அமைகிறது!
அமெரிக்காவில் உள்ள டென்னஸி மாநிலத்தில் ‘ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸ்' அமைந்துள்ளது. இவ்விடத்தில், 39000 சதுரடியில் மஹிமா என்ற தியானமண்டபத்தை சத்குரு அமைத்துள்ளார். வாழ்வின் மறைஞானப் பரிமாணத்திற்கு நுழைவாயிலாய் இருக்கும் இவ்விடம், மேற்கத்திய அரைகோளத்திலேயே மிகப் பெரியது.
சத்குரு: மஹிமா என்றால் அருள். அருள் என்பது அவ்வப்போது தோன்றி மறையும் விஷயமல்ல. எல்லா நேரத்திலும் செயல்படும் ஒன்று. அதாவது புவியீர்ப்பு சக்தியைப் போல். புவியீர்ப்பு சக்தி எல்லா நேரத்திலும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் முதல்மாடியிலிருந்து கீழே விழும்போதுதான் அதன் தாக்கத்தை நீங்கள் உணர்வீர்கள். அதேபோல், நீங்கள் மேலே எழும்போதுதான் அருளின் சக்தியை உணரமுடியும்! அருள் என்பது எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் செயல்படும் ஒன்று.
"ஏன் ஒரு குறிப்பிட்ட இடத்தை 'அருள்' எனும் பொருள்பட பெயரிடுகிறோம்? அங்கு மட்டும்தான் அருள் நிகழுமா?" இப்போது நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். 'கீழே விழுவதை' நீங்கள் உணரவேண்டுமென்றால், இங்கிருந்து விழுவதில் பயனில்லை. ஒரு மலை மீது ஏறி, அங்கிருந்து விழுந்தால்தான் 'விழுவதன்' நிஜமான அனுபவத்தை நீங்கள் உணரமுடியும். அதாவது, புவியீர்ப்பு விசையின் சக்தியையும், விழுவதன் தாக்கத்தையும் உணரவேண்டும் என்றால், அதற்கு ஓரளவிலான உயரம் தேவைப்படுகிறது. அதேபோல்தான் அருளும்.
அருளின் சக்தியையும், அதன் தாக்கத்தையும் உணர வேண்டுமென்றால், அதற்கு ஓரளவு 'உள்வாங்கும் திறன்' தேவை. எதையும் உள்ளே அனுமதிக்காமல் இறுகிய பாறைபோல் இருக்கும் உங்களில், ஒரு சிறு வெடிப்பை, பிளவை ஏற்படுத்த, ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை நீங்கள் உருவாக்கவேண்டும். அந்த வெடிப்பு ஏற்பட்டால், அருளின் சக்தியை நீங்கள் உணரமுடியும்.
இல்லையென்றால் நூறு வருடங்கள் இங்கு வாழ்ந்தாலும், உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் இப்படியொரு சக்தி உங்கள் மீது செயல்பட்டுக் கொண்டிருப்பதை நீங்கள் அறியமாட்டீர்கள்.
மஹிமா மிக மென்மையானது, நுட்பமானது. அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன், அதாவது ஆரோக்கியம் மற்றும் தியானத்திற்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கத்திய நாடுகள் இன்று சந்தித்து வரும் மாபெரும் பிரச்சினை, மனநல பாதிப்புகள். அதனால் மக்களுக்கு சமநிலையான மனநிலையைத் தரும் பொருட்டு 'மஹிமா' உருவாக்கப்பட்டது. சாதாரணமாக, கிழக்கத்திய நாடுகளைவிட மேற்கத்திய நாடுகளில் மக்கள் பலவிதமான சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். அதுமட்டுமல்ல... அவர்கள் பெறும் கல்வியின் தரமும் அதிகமாயுள்ளது. அக்கல்வி வாழ்வின் சாரத்தை பரிமாறாவிட்டாலும், பிழைப்பிற்கான அறிவைப் புகட்டுவதில் அதன் தரம் நன்றாகவே உள்ளது. இத்தனை இருந்தும் மேற்கத்தியவர்கள் துன்பத்தில் ஆழ்வதற்குக் காரணம், மனதளவில் சமநிலையின்மை.
மனநிலையில் சமநிலை இல்லாததுதான், மேற்கத்தியர்களின் ஆன்மீக வளர்ச்சிக்குப் பெரும் தடையாக இருக்கிறது.
மஹிமா பிரதிஷ்டை செய்யும்போது, நாம் கவனத்தில் கொண்டு செயல்பட்ட முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று.