ஆன்மீக உள்கட்டமைப்பு எதற்காக ? பகுதி 1 என்ற தலைப்பின் முதல் பகுதியில், ஆன்மீக செயல்முறையின் தேடல் என்று வரும்போது, சமூகத்திடமிருந்து பெறக்கூடிய ஆதரவின் தேவை பற்றிப் பார்த்தோம். இரண்டாவது பகுதியில், பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களின் தேவை பற்றிப் பார்க்கவிருக்கிறோம்…

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, இந்தியா எண்ணிலடங்கா ஞானமடைந்த குருமார்களை உருவாக்கித் தந்துள்ளது. பதிலுக்கு, இந்த அற்புதமான மனிதர்கள் அவர்களது அறிதலையும் ஞானத்தையும் சமூகத்திற்கு வழங்கியதன் பலனாக, அதே நிலையை அடைவதற்கான திறனை தலைமுறைகள் கடந்தும் மக்கள் பெறுகின்றனர்.

பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்கள்

இந்த மண்ணின் ஆன்மீக குருமார்கள், மக்களுடைய நல்வாழ்வுக்கென்று செயல்படும் விதமாக அபரிமிதமான பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களை அர்ப்பணித்துள்ளனர். பிரதிஷ்டை என்பது என்ன? சத்குரு கூறுகிறார், “பிரதிஷ்டை என்பது ஒரு உயிரோட்டமான செயல்முறை. நீங்கள் மண்ணை உணவாக மாற்றினால், அதை நாம் விவசாயம் என்கிறோம். உணவை சதையாகவும் எலும்பாகவும் மாற்றினால், அதை செரிமானம் என்றும் இணைத்துக் கொள்ளுதல் என்றும் கூறுகிறோம். சதை மற்றும் எலும்புகளால் ஆன உடலை மண்ணாக்கினால், அதை தகனம் என்கிறோம். இந்த உடலை அல்லது ஒரு கல்லை அல்லது ஒரு வெற்று வெளியை தெய்வீகத்திற்கான ஒரு சாத்தியமாக மாற்ற முடிந்தால் அதனை பிரதிஷ்டை என்கிறோம்.இன்றைக்கு நவீன விஞ்ஞானம் உங்களுக்குக் கூறுவது என்னவென்றால், எல்லாமே ஒரு சக்தியாக இருக்கிறது; இலட்சக்கணக்கான வெவ்வேறு வழிகளில் அது உருவாகி வெளிப்பட்டுள்ளது. அப்படியென்றால், தெய்வீகம் என்று நீங்கள் அழைப்பதும், கல் என்று நீங்கள் அழைப்பதும், பெண் என்றும் ஆண் என்றும் நீங்கள் அழைப்பதும், பிசாசு என்று நீங்கள் அழைப்பதும் எல்லாமே ஒரே சக்திதான், ஆனால் வெவ்வேறு விதங்களில் அவை செயல்படுகின்றன.”

இந்தியா முழுவதிலும், குறிப்பாகத் தென்னிந்தியாவில், பிரமிக்க வைக்கும் கோவில்களைக் கொண்ட பல கோவில் நகரங்கள் உள்ளன. இன்றைக்கு நமக்கு இருக்கின்ற நவீன இயந்திரங்களைக் கொண்டு செய்யக்கூடிய பொறியியல் அதிசயங்களுக்கு இணையாக அவை அமைக்கப்பட்டுள்ளன. கல்வி, கலை மற்றும் பண்பாட்டின் உறைவிடமாக இருந்த கோவில்கள், ஆற்றல் நிறைந்த சக்தி மையங்களாகவும் பயன்படுத்தப்பட்டன. பழமையான கோவில்கள் பிரார்த்தனை செய்வதற்கான இடங்களாகக் கட்டப்படவில்லை. கோவில்கள் சக்தியின் ஈர்ப்பு மையங்களாக இருந்தன. மக்கள் விருப்பத்துடன் உள்வாங்கும் தன்மையில் இருந்தால், மிகவும் ஆழமான விதத்தில் அவர்கள் தங்களையே தன்னிலை மாற்றமடைய செய்துகொள்ள முடியும். தங்களது வசிப்பிடம் முக்கியமல்ல, ஆனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு இடத்திற்கு அருகாமையில் இருப்பது வாழ்வில் அற்புதமான ஒரு வித்தியாசத்தை உருவாக்கும் என்று சமூகம் உறுதியாக நம்பியது. பிரதிஷ்டை செய்யப்பட்ட இடங்களில் வாழ்வதன் முக்கியத்துவம் பற்றி சத்குரு கூறுகிறார், “ஒவ்வொரு மனிதரும் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஒரு இடத்தில் வாழும் தகுதியுள்ளவர். இந்த விழிப்புணர்வின் காரணமாகவே, நமது கலாச்சாரத்தில், ஒவ்வொரு தெருவுக்கும் மூன்று கோவில்கள் இருந்தன. ஒரு சில மீட்டர் தொலைவுகள் கூட பிரதிஷ்டை செய்யப்படாமல் இருக்கக்கூடாது என்பதுதான் காரணம். ஒரு கோவிலுக்குப் போட்டியாக இன்னொன்று என்பது நோக்கமல்ல; பிரதிஷ்டை செய்யப்படாத ஒரு இடத்தில் யாரும் நடந்து செல்லக்கூடாது என்பதுதான் நோக்கம்; பிரதிஷ்டை செய்யப்படாத ஒரு இடத்தில் ஒருவரும் வாழக்கூடாது. ஆகவே கோவில்கள் முதலில் கட்டப்பட்டன, பிறகு வீடுகள் கட்டப்பட்டன.”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

காலங்காலமாகவே, கடவுளை உருவாக்கும் கலையை, அறிவியலை, அதன் தொழில்நுட்பத்தை பாரதம் அறிந்து வைத்துள்ளது. திரு உருவங்கள் என்பவை, ஒரு குறிப்பிட்ட விதமாக இயங்கும் சக்தி ரூபங்களாக இருக்கின்றன. பாரதம் 33 இலட்சம் கடவுள்களையும் பெண்கடவுள்களர்களையும் கொண்டது. ஏனென்றால், இந்த ஒரு கலாச்சாரம் மட்டும்தான், கடவுள் என்பது நமது உருவாக்கம் என்பதை உணர்ந்திருக்கிறது. இந்திய யோகிகள் எண்ணற்ற கடவுள்களையும், பெண்கடவுள்களையும் வடிவமைத்து, பிரதிஷ்டை செய்துள்ளனர். அவர்கள் ஒரு கடவுளையோ அல்லது ஒரு பெண்கடவுளையோ உருவாக்கியபோது, அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன், ஒரு குறிப்பிட்ட இலக்கை நோக்கி செய்யப்பட்டது. தாந்த்ரீக பெண்தெய்வங்களாகிய ராகினி, டாக்கினி, சங்கினி போன்றவற்றை உருவாக்கியவர்கள், அதற்கான வடிவங்களுடன் குறிப்பிட்ட காரணங்கள் மற்றும் திறன்களையும் படைத்தனர் என்று சத்குரு நமக்குத் தெரிவிக்கிறார். மேலும் சத்குரு இதுபற்றிக் கூறும்பொழுது, “ஒரு விதத்தில், அவைகள் சக்திவாய்ந்த ரோபோக்கள். அவைகள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டன, ஒரு குறிப்பிட்ட விதமாக அவைகள் செயல்படுத்தப்பட்டன, ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவை அணுகப்பட்டன, ஒரு குறிப்பிட்ட விதத்தில் அவைகள் பயன்படுத்தப்பட்டன,” என்கிறார்.

 

காசி என்னும் வசீகரம்

இந்த மண்ணின் ஆன்மீகக் கட்டமைப்பின் வியப்பூட்டும் உதாரணங்களுள் ஒன்றாக இருப்பது காசி நகரம். சத்குரு இதுகுறித்து சொல்கையில், “காசியைப் போன்ற ஒரு நகரத்தை உருவாக்குவதென்பது ஒரு பித்தேறிய குறிக்கோள், அதுமட்டுமல்ல, அதனை அவர்கள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே நிறைவு செய்துவிட்டனர். ஒரு நகரத்தின் வடிவில், ஒரு விதமான சாதனத்தை அவர்கள் கட்டினார்கள்; அங்கே 72,000 புனிதத் தலங்கள் இருந்தன, மனித உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கை இவை. அதாவது, அணுவுக்கும், அண்டத்துக்கும் இடையில் ஒருமையைக் கொண்டுவருவதாக, பரந்த ஒரு பிரபஞ்ச உடலுடன் தொடர்பு கொள்வதற்கான ஒரு மெகா சைஸ் மனித உடலின் உருவாக்கம் போல காசியின் ஒட்டுமொத்த செயல்பாடும் இருக்கின்றது,” என்கிறார்.

காசியைக் குறித்த உண்மைகள் அளவிட முடியாதது. பல காலங்களாக, மக்கள் அங்கேயே வாழ்ந்து உயிர் விடுவதற்கு பேராவல் கொண்டுள்ளனர், இது சுகநோக்கத்தில் நடைபெற்ற செயல் அல்ல, அந்த நகரம் அளித்த சாத்தியக்கூறின் காரணமாக: எல்லா வரையறைகளையும் கடந்து செல்வதற்கான ஒரு இயல்பான நுட்பம் அது.

 

தியானலிங்கம்

ஒரு தியானலிங்கம் உருவாக்கவேண்டும் என்பது எப்போதும் பல ஞானமடைந்த மனிதர்களின் கனவாக இருந்து வந்துள்ளது. ஆனால் அது மிக அரிய நிகழ்வாக அமையும்வண்ணம் அதன் உருவாக்கம் பல நுட்பங்களை உள்ளடக்கியது. தீவிரமான, மூன்று வருடகால பிராணப் பிரதிஷ்டை செயல்முறையின் மூலம் சத்குருவினால் பிரதிஷ்டை செய்யப்பட்ட தியானலிங்கம், உச்சநிலைக்குத் தூண்டப்பட்ட ஏழு சக்கரங்கள் அனைத்தின் சக்திகளுடன் உருக்கொண்டுள்ளது. காலப்போக்கில் தன் சக்திகளை இழப்பதை தவிர்ப்பதற்காக அது பூட்டப்பட்டுள்ளது. தியானலிங்கத்தின் வெளிப்புற வடிவத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ள கருப்பு நிற கிரானைட் கல் என்பது இந்த சக்திக்கான ஒரு தற்காலிக அமைப்பு மட்டும்தான். இப்போதே இதை அகற்றவேண்டி இருந்தாலும், அங்கே தங்கியிருக்கும் சக்தி வடிவம் அழிக்கப்பட முடியாததாக இருக்கிறது. அந்த சக்தி வடிவம் என்றென்றைக்கும் நிலைத்திருப்பதாக, அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இருக்கிறது.

தியானலிங்கம் “பிரபஞ்சத்தின் ஒரு சிறிய கேப்ஸ்யூல்”, என்று சத்குரு விவரிக்கிறார். அது வழங்கும் சாத்தியங்களைப் பற்றி, அவர் மேலும் சொல்கையில், “ஒவ்வொரு மனிதரும் தாமாகவே திறந்த நிலையில் இருப்பதற்கான முழு விருப்பத்துடன் இருந்தால், அதன் அருகாமையிலோ அல்லது தன் உணர்வு நிலையிலோ தியானலிங்கத்துடன் தொடர்பில் வருபவர்களுக்கு, தியானலிங்கத்தின் அருள்வெளியும், சக்தியும் ஒரு மகத்தான சாத்தியத்தை உருவாக்கும்.”

 

இந்தியாவின் சிறப்பியல்பை காத்தல்

சரியான விஷயங்களுக்குச் சரியான இடத்திற்குச் செல்வது, வெற்றிக்கு அடிப்படை. ஆன்மீகத்தின் வாயில்படியாக இந்த தேசம் இருக்கையில், அதன் அடிப்படையான சிறப்பியல்புகளைக் காப்பது மிகவும் முக்கியம். மனிதரின் உள்நிலை இயல்பு குறித்த ஆழமான வெளிப்பாடுகள் இந்த மண்ணில் ஆயிரக்கணக்கான வருடங்களாக நிகழ்ந்து வந்துள்ளன. இதை நாம் மீண்டும் கொண்டுவந்தால், ஒட்டுமொத்த உலகமும் தங்களது உள்தன்மையின் நலனுக்காக, இந்தியாவை நோக்கித் திரும்பும்.