அசத்திய ஐவர் : காவேரி கூக்குரல் - கரம் கோர்க்கும் விவசாயிகள்... களத்துமேட்டில் ஒரு பயணம்
பெயர் தெரியாத வாய் பேச முடியாத ஒருவர், வேளாண் உற்பத்தி சந்தை குழுவின் முன்னாள் தலைவர், பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள உத்வேகமான இளைஞர், தேங்காய் மட்டைகளை உரிக்கும் சொந்த நிலம் இல்லாத ஒருவர், வயல்களோடு சேர்ந்து வளர்ந்த அனுபவசாலி விவசாயி - இப்படி வாழ்வில் பலநிலைகளிலும் இருக்கும் மக்கள் அனைவரையும் தன்னார்வத் தொண்டர்களாக தன்னுடன் இணைத்துக் கொண்டு காவேரி கூக்குரல் இயக்கத்தின் பயணம் புது வெள்ளமாக சீறிப் பாய்கிறது. நம் அனைவரின் நல்வாழ்வையும் முன்னிறுத்தும் சத்குருவின் ஒரு சிந்தனை, மாபெரும் மக்கள் இயக்கமாக மாறும் அந்த தருணங்களை விவரிக்கிறார்கள் கிராமம் கிராமமாக பயணம் செய்யும் ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்கள்.
ஜூலை 31, 2019 அன்று காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுக்கும் வேளாண்காடுகள் திட்டம் பற்றி தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகளை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 28 வாகனங்களில் நூற்றுக்கணக்கான தன்னார்வத் தொண்டர்கள் சத்குரு கொடியசைத்து வைக்க புறப்பட்டனர். விவசாயிகளின் வாழ்வை மாற்றியமைக்க துவங்கியிருக்கும் இந்த பயணத்தில், நெஞ்சம் உறைய வைக்கும் விவசாயிகள் வாழ்வின் நிதர்சனங்களை தன்னார்வலர்கள் நேரில் காண்கிறார்கள். கிராமம் கிராமமாக பயணிக்கும் தன்னார்வத் தொண்டர்களின் ஆழமான அனுபவங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டின் ஆனந்தம் வழியாக நாமும் காவேரி கூக்குரல் இயக்க பயணம் செய்வோம், நமக்கு உணவளிக்கும் விவசாயிகளின் வாழ்வை மாற்றியமைப்போம். களத்துமேடுகளின் வழி செல்லும் இந்த பயணத்தில் இணைந்திருங்கள்..
காற்றின் மொழி பேசும் தன்னார்வலர்
பிசாலேஹள்ளி கிராமம், திப்தூர் தாலுகா.
நல்ல செவிப்புலன் கொண்டவர், அநேகமாக பிறப்பிலிருந்தே பேச முடியாத மாற்றுத்திறனாளி - அந்த கிராமத்தை சேர்ந்த யாருக்கும் இவரது பெயர் தெரியவில்லை. வேளாண்காடுகள் திட்டம் பற்றி மக்களிடையே விளக்கத் துவங்கியதும் அமைதியாக எங்கள் அருகில் வந்து நின்று கொண்டார். நாங்கள் பேசுவது முழுவதையும் கூர்மையாகக் கவனித்துக் கொண்டே இருந்தார். அவர் என்ன புரிந்து கொண்டார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வத் தொண்டராக அவர் மாறிவிட்டார்.
அந்த பகுதியின் ஒவ்வொரு கடையாக அழைத்துச் சென்றவர், சைகை வழியாக நாங்கள் பேசுவதை கவனிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார். நாம் கொண்டு சென்றிருந்த குறிப்பு சீட்டுகளை அனைவருக்கும் வழங்கவும் உதவினார். அந்த வழியாக வந்த மக்களை நிறுத்தி நாங்கள் பேசுவதை கவனிக்குமாறு சைகையால் உணர்த்தினார். அவரது பெரும்பாலான சைககள் எங்களுக்கு புரியவில்லை என்றாலும், அவர் காட்டிய ஆர்வமும், அந்த பகுதியில் இருந்த அனைவருக்கும் இது சென்றடைய வேண்டும் என்ற அவரது உற்சாகமான ஈடுபாடும் எங்களை மலைக்கச் செய்தது.
Subscribe
30 விநாடிகள் மட்டுமே!
ஹனுமப்ப கௌடா, நெரலகட்டா கிராமம், தொட்டநாலபுரா தாலுகா.
விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயியாகவே வளர்ந்தவர் ஹனுமப்ப கௌடா. இந்த மண்ணில் ஒவ்வொரு விவசாயியும் சந்திக்கும் பருவநிலை மாற்றம், நிலத்தடி நீர்மட்டம் குறைதல், மண்ணின் வளம் குறைதல் என பல சவால்களையும் கடந்து வந்திருக்கிறது இவரது வாழ்க்கை. காவேரி கூக்குரல் இயக்கம் பற்றி நாம் பேசத் துவங்கியதும், இதைப் புரிந்து கொள்ள இவருக்கு 30 விநாடிகள் கூட தேவைப்படவில்லை! அந்த ஷணத்திலேயே காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வத் தொண்டரானார். அந்த வழியாக சென்ற அனைவரையும் அழைத்து இயக்கத்தில் பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொண்டார். நிலப்பரப்பு மிக குறைவாக இருக்கிறதே என்று தயங்கியவர்களையும், ஒவ்வொரு விவசாயியும் குறைந்தபட்சம் அரை ஏக்கர் அளவிலாவது வேளாண் காடுகளை வளர்ப்பது அவசியம் என்பதை அவர்களிடம் விளக்கி, புரியவைத்து பதிவு செய்து கொள்ள உதவினார். இந்த புகைப்படங்களை பார்த்த பிறகு அவரைப்பற்றி இன்னும் விளக்கவும் வேண்டுமா என்ன?
கிராமத்தின் முன்னுதாரண மனிதர்
T V லக்ஷ்மி நாராயணன்,தலகவரா கிராமம்,தொட்டபாலபுரா கிராமம்.
எங்கள் கிராமத்தில் ஏரி, குளங்களில் எப்போதுமே நீர் நிறைந்திருப்பதையே பார்த்திருக்கிறோம். பருவமழை துவங்கினால், சாலைகளில் 4 அடி அளவுக்கு மழைநீர் ஓடும். ஆனால் இப்போது வறட்சியை சந்திக்கிறோம் என தங்கள் கிராமத்து வாழ்க்கையின் பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்ட லக்ஷ்மி நாராயணன், ஜில்லா பஞ்சாயத்து உறுப்பினராகவும், வேளாண் உற்பத்தி சந்தை குழுவின் முன்னாள் தலைவரும் ஆவார்.
தற்போதைய வறட்சிக்கு என்ன காரணம் என்பதை பற்றிய முழுமையான புரிதல் லக்ஷ்மி நாராயணன் அவர்களிடம் இருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக வேளாண் காடுகளை முன்னெடுத்து, தனது 18 ஏக்கர் பூமியில் மரங்களின் பசுமை போர்வையை ஏற்படுத்தி உள்ளார். இந்த மண் தன்னை வளமோடு வாழ வைத்திருக்கிறது என்பதையும், தனது பிள்ளைகளும் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட வேண்டும் என்ற தனது விருப்பத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார். காவேரி கூக்குரல் இயக்கத்தின் செயல்திட்டம் தனக்கு மிக மகிழ்ச்சியளிப்பதாக சொன்னவர், தமது அருகிலுள்ள கிராமங்களுக்கும் இந்த திட்டத்தை கொண்டு செல்லும் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
வேளாண்காடுகள் திட்டத்தில் தனது கிராமத்திற்கே முன்னுதாரணமாக இருக்கும் லக்ஷ்மி நாராயணன் கேட்டுக் கொண்டபடி, ஒட்டு மொத்த கிராமமும் காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு ஆதரவாக தங்களால் இயன்ற அளவு அதிக மரங்களை நட முன்வந்துள்ளது!
கிராமம் திரும்ப ஒரு வேண்டுகோள்!
ஒரு உற்சாகமான துடிப்பான இளைஞரை சந்திக்கும் வாய்ப்பு நமது ஹேமாவதி குழுவினருக்கு அமைந்தது. பொருளாதார பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் ரேணுகாஸ்வாமி. நகர்ப்புற இளைஞர்கள் மீண்டும் கிராமம் திரும்பி இயற்கையுடன் இயைந்து வாழ வேண்டும் என விரும்புகிறார் இவர். தனது கிராமத்தில் வேளாண்காடுகள் திட்டத்தை முன்னெடுக்க உள்ள இவர், அனைவரும் இத்திட்டத்தில் இணைய இந்த காணொளி மூலம் வேண்டுகோள் விடுக்கிறார். இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகளில், காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு இவரது ஆதரவு வெள்ளமென பெருக்கெடுக்கிறது.
சத்குருவின் வீடியோக்களை யூடியூப் சேனல் மூலம் தொடர்ந்து பார்த்து வருவதையும், தான் சத்குருவின் பரம விசிறி என்பதையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார் ரேணுகாஸ்வாமி.
தன் 3 வயது குழந்தைக்காக...
33 வயது இளைஞரான ஸ்ரீ ஹோரேகிரி, தினமும் சில மணி நேரம் காய்ந்த தேங்காய் மட்டைகளை உரிப்பவராகவும், மீதி நேரத்தில் டாக்ஸி ஓட்டுனராகவும் தன் குடும்பத்தை நடத்தி வருகிறார். அன்று மழை பெய்ததால் கிடைத்த ஓய்வில் நமக்கு உதவ முன்வந்தார். குப்பூர் கிராமத்தை சேர்ந்தவரான ஸ்ரீ ஹோரேகிரி, தனது கிராமத்தினருக்கு அலைபேசி வழியாக காவேரி கூக்குரல் இயக்கம் பற்றி விளக்கியதில் இதுவரை 50க்கும் மேற்ப்பட்டோர் பதிவு செய்துள்ளதுடன், அவரது அழைப்புகள் இன்னும் தொடர்கிறது! நம் வருங்கால சந்ததியினருக்கு இந்த இயக்கம் என்ன உருவாக்க முனைகிறது என்பதில் மகிழ்கிறேன் என்றவர், தனது ஈடுபாட்டிற்கு தரும் காரணம் மிக எளிமையானது. "எனக்கு மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள், அவளது எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும்."
ஆசிரியர் குறிப்பு :காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறோம். கீழ்க்கண்ட ஏதேனும் வகையில் நீங்களும் இணையலாம்,
ஒரு மரத்திற்கு ₹ 42 நன்கொடை வழங்க முடியும்.
தன்னார்வத் தொண்டாற்றலாம்.
ஆன்லைனில் தனி பக்கம் துவங்கி மக்களிடம் நிதி திரட்டி உதவலாம்.
காவேரி வடிநிலப்பகுதி விவசாயிகளை அணுக உதவ முடியும்.இணைந்திருங்கள்