இளமையில் வறுமை... நம்பிக்கை தரும் ஈஷா வித்யா
மாணவர்கள் சிலரின் வாழ்க்கை அடைந்துள்ள மகத்தான மாற்றங்கள் குறித்த சில நெகிழ்ச்சியான பகிர்வுகள் இங்கே!
புதுமையின் பாதையில் ஈஷா வித்யா: நெஞ்சைத் தொடும் பகிர்வுகள் -பகுதி 2
இந்த தொடரில் ஈஷா வித்யா பள்ளிகளின் மூலம் வாழ்க்கையில் மாற்றம்கண்ட மாணவர்கள் மட்டுமல்லாது, ஆசிரியர்கள் தன்னார்வத்தொண்டர்களின் பகிர்வுகளை தொடர்ந்து வழங்கவுள்ளோம். இந்த பதிவில் மாணவர்கள் சிலரின் வாழ்க்கை அடைந்துள்ள மகத்தான மாற்றங்கள் குறித்த சில நெகிழ்ச்சியான பகிர்வுகள் இங்கே!
“‘என்னுடைய நல்வாழ்விற்காக அக்கறைகொள்ளும் மனிதர்கள் இங்கே இருக்கிறார்கள்’ என்று இந்த குழந்தைகள் தெரிந்துகொள்ள தேவையுள்ளது. இந்த நம்பிக்கையுடன் மனித சமுதாயத்தில் நாம் அவர்களை வளர்த்தெடுப்போம்!”-சத்குரு
தந்தையை இழந்து படிப்பை தொலைக்க இருந்த மாணவனின் கதை!
“நான் ஈஷா வித்யா பள்ளியில் படித்திருக்கவில்லையென்றால், இந்நேரம் 7ஆம் வகுப்புடன் முடித்துவிட்டு, கூலி வேலைக்கு சென்றிருப்பேன்.” - கார்த்திக் ராஜா, 11ஆம் வகுப்பு (ஈஷா வித்யா பள்ளி, பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் ஒருவன்)
கார்த்திக் 8ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கையில் அவனது தந்தைக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. விரைவில் நோயின் தாக்கம் அதிகமானதை தொடர்ந்து, அவரால் அதிகபட்சம் ஒரு மாத காலம்தான் உயிருடன் இருக்கமுடியும் என்ற நிலை உருவானது. குடும்பத் தலைவியான கார்த்திக்கின் தாய் அதன்பின் மனமுடைந்துபோனார். தனது இரண்டு மகன்கள் கார்த்திக் (13) மற்றும் ஒரு ஆறுமாத குழந்தை ஆகிய இருவரையும் எப்படி வளர்க்கபோகிறோம் என்று கவலைப்பட்ட அவர், அவர்களது எதிர்காலம் குறித்து மிகவும் வேதனையுற்றார். தனது கணவரின் இறுதிச் சடங்கிற்கு கூட வசதியில்லாத நிலையில் அவர் இருந்தார். கார்த்திக் தனது அப்பா ஆசைப்பட்டு சேர்த்துவிட்ட புகழ்பெற்ற ஒரு CBSE பள்ளியிலிருந்து விலகும் நிலையில் இருந்தான். சில சொந்தக்காரர்கள் அவனுக்காக கூலி வேலை தேடித் தருவது குறித்து விவாதித்து வந்தனர்; அதன்மூலம் அவன் தனது தாய் மற்றும் தம்பிக்கு உதவிபுரிய முடியும் என்று அவர்கள் நினைத்தனர்.
அதன்பின் உறவினர் ஒருவர், படிக்க ஆசையிருந்தும் படிப்பை தொடர முடியாத கார்த்திக்கின் துரதிர்ஷ்டவசமான நிலையைக் கண்டு ஒரு யோசனை தெரிவித்தார். ஈஷா வித்யா ஒருவேளை இவனுக்கு உதவலாம் என அவர் எண்ணினார். அவர் நினைத்ததுபோலவே ஈஷா வித்யா கார்த்திக்கிற்கு கைகொடுத்தது. ஈஷா வித்யாவில் முழுமையான கல்வி உதவித்தொகை பெறும் மாணவனாக கார்த்திக் சேர்த்துக்கொள்ளப்பட்டான். அவனுக்கான நன்கொடையை வழங்கும் அந்த ஆஸ்திரேலிய அன்பருக்கு நன்றி!
Subscribe
கார்த்திக் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 482 மதிப்பெண்கள் பெற்றுள்ளான். கணிதத்துறையில் பேராசிரியர் ஆகவேண்டுமென்பது அவனது விருப்பம்!
ஒரு தாயின் துயரம் துடைக்கப்பட்டது!
தினமும் குடித்துவிட்டு தனது தாயை துன்புறுத்தும் காட்சியை கவிதா காண்கிறாள். விளையாட்டுப் பருவத்தில் இருந்தாலும் சமைப்பது மற்றும் தனது இளம்வயது தங்கையை கவனித்துக்கொள்வது போன்ற உதவிகளைச் செய்வதன்மூலம் கூலி வேலைக்குச் செல்லும் தனது தாய்க்கு உதவியாய் இருக்கிறாள். கவிதாவின் தாயார் தனது உடல்திறனையும் தாண்டி வீட்டு வேலைகளோடு கூலி வேலைக்கு செல்வது மற்றும் இரவில் சர்க்கஸ் டிக்கெட்டுகளை விற்பனை செய்வது போன்ற வேலைகளைச் செய்து, தனது குழந்தைகளுக்கு மூன்றுவேளை உணவு கிடைப்பதற்கு முயற்சிக்கிறார்.
தனது தாயின் இந்த கஷ்டங்களைப் பார்க்கும் கவிதா துன்பமும் மனவேதனையும் கொள்கிறாள். ஒருநாள் ஒரு ஈஷா வித்யா பள்ளியின் முதல்வர் அவரது தாயை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் இருவரும் தங்கள் பால்ய காலத்தில் சிநேகிதமானவர்கள். அந்த பெண்மணி இந்த தாயின் நிலையைப் பார்த்து, உடனடியாக அந்த இரு குழந்தைகளையும் ஈஷா வித்யா பள்ளியில் சேர்த்துக்கொண்டார். இதுதான் கவிதாவின் வாழ்வில் மகத்தான ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
இப்போது கவிதா மாவட்டத்திலேயே மிகச் சிறந்த அந்த உறைவிடப் பள்ளியில் பயில்வதோடு, அனைத்து பாடங்களிலும் முதல் மாணவியாகத் திகழ்கிறாள். 100% கல்வி உதவித்தொகை பெற்று படித்துவரும் கவிதா மருத்துவராகும் கனவைக்கொண்டிருக்கிறாள்.
கடினமான சூழலில் உழன்ற தந்தையின் சந்தோஷம்!
“ஒருவேளை ஈஷா வித்யா தினேஷிற்கு உதவிக்கரம் நீட்டாமல் இருந்திருந்தால் அவனது வாழ்க்கை கேள்விக்குறியாகியிருக்கும்” அவனது தந்தை உருக்கமாக கூறினார்.
தினேஷ் மற்றும் ஸ்வேதாவின் தாய் சற்று புத்திசுவாதீனம் இல்லாதவர். அதனால் அவரால் தனது பிள்ளைகளை கவனித்துக்கொள்ள இயலாத நிலை. ஒரு விவசாய கூலியாக இருக்கும் தினேஷின் தந்தையால் தனது மனைவிக்கு தகுந்த மருத்துவ செலவு செய்வதற்கு இயலாது. ஆனால், அவரால் இயன்ற அளவிற்கு அவரது மனைவியையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறார். அவர்களுக்காக தானே தினமும் உணவு சமைத்து பரிமாறுவார். குழந்தைகள் இருவரும் பெரும்பாலான நேரங்களில் இரவு உணவிற்காக பசியுடன் காத்திருப்பர். தினேஷ் கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வுமனப்பான்மையால் ஆழமாக பாதிக்கப்பட்டான்.
ஈஷா வித்யாவில் 6ஆம் வகுப்பில் அவன் சேர்ந்த பிறகு அவனது வாழ்வு சிறப்பான வகையில் பரிமாற்றம் கண்டது. அவன் 10ஆம் வகுப்பில் 90%க்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெற்றான். தற்போது ஈரோடு ஈஷா வித்யா பள்ளியில் கணினி அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்து, முழுமையான கல்வி உதவித்தொகையுடன் படித்துவரும் தினேஷ் தனது கனிவான குணநலனால் அனைவராலும் அறியப்படுகிறான்.
குழந்தை தொழிலாளர் என்ற நிலையிலிருந்து கதாநாயகர்களாக...
“எனது குழந்தைகள் ஈஷா வித்யாவில் சேர்ந்திருக்கவில்லை என்றால், சட்டவிரோதமான குழந்தை தொழிலாளராக உள்ள பல்லாயிரம் குழந்தைகளைப் போல இந்நேரம் அவர்களும் மாறியிருப்பார்கள்.”
அனுஷ்கா (13) மற்றும் அவளது இளைய சகோதரன் அன்பு (9) ஆகியோரின் தந்தை ஒரு தினசரி 120 ரூபாய் சம்பாதிக்கும் ஒரு கூலித் தொழிலாளி. இதை வைத்துதான் அவரும் அவரது இரண்டு குழந்தைகளும், மனைவி மற்றும் வயதான தாயும் ஜீவனத்தை நடத்தவேண்டும். “நான் கனவிலும் கூட நினைத்துப் பார்க்கவில்லை, எனது மகனும் மகளும் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளியில் படிப்பார்கள் என்று” அவர் சொல்கிறார்.
பக்கத்து வீட்டிலுள்ள போலீஸ்காரரைப் பார்த்து தானும் போலீஸ் அதிகாரியாக வேண்டுமென்ற உத்வேகத்துடன் அன்பு இருக்கிறான். அனுஷ்காவின் தாயார் அவளை ஒரு IAS அதிகாரியாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறார். ஆனால், நாம் அவளிடம் கேட்கும்போது அவள் தான் ‘சோட்டா பீம்’ ஆகப்போவதாகக் கூறுகிறாள். நமக்கு அவள் சொல்வது வேடிக்கையாக இருந்தாலும், எப்படியும் அந்த குழந்தைகள் இருவரும் சமூகத்தை காக்கும் கதாநாயகர்களாக விரைவில் பரிணமிக்க போவதில் சந்தேகமில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பிறருக்காக அர்ப்பணிக்க விரும்புகின்றனர்.
தொழில் நஷ்டத்தால் ஏழ்மையில் விழுந்த குடும்பத்தில்...
புவனேஷ்வரம் மற்றும் கமலி ஆகியோரின் தந்தை திடீரென மிகப்பெரும் தொழில் நஷ்டத்தை சந்தித்தார். தனது குழந்தைகள் அரசு பள்ளியில் படித்து வாழ்க்கையில் பலவித கஷ்டங்களை சந்திப்பதை நினைத்துப் பார்த்தபோது, அவரது தற்கொலை எண்ணத்தை கைவிட்டார். பின் அவர் ஈரோட்டில் ஒரு தரமான தனியார் பள்ளி இருப்பதைக் கேள்விப்பட்டார். அவரது பொருளாதார சூழல் சரியாகும் வரை சிறப்பு கல்வி கட்டணமில்லாமல் அங்கு குழந்தைகள் படிக்கமுடியும் என்பதை உணர்ந்தார். ஆனால், அவர், அந்த பள்ளி மிகவும் மோசமான நிலையில், விருப்பமில்லாத ஆசிரியர்கள் மற்றும் மோசமான மாணவர்களோடு இருக்குமோ என கற்பனை செய்திருந்தார். ஆனால், அங்கு சென்று விசாரித்துப் பார்ப்பதில் என்ன கெட்டுவிடும் என்று எண்ணி நேரடியாக செல்ல தீர்மானித்தார்.
அவர் அங்கு சென்று பார்க்கையில், சுத்தமான நேர்த்தியான வகுப்பறைகள் மற்றும் கல்வி வசதிகள் இருப்பதைக் கண்டார். புன்னகை ஏந்திய முகங்களுடன் வரவேற்கும் திறமைமிக்க ஆசிரியர்களைக் கண்டபோது அவர் புரிந்துகொண்டார், தான் நினைத்ததுபோல் இல்லாமல், இது ஒரு சிறந்த பள்ளி என்பதை! விரைவில் அவரது குழந்தைகளுக்கு ஈஷா வித்யா கல்வி உதவித் தொகை வழங்கியதையடுத்து, அவர் ஈரோட்டிற்கு இடம்பெயர்ந்து வந்துவிட்டார்.
எளிமையான வாழ்வை வாழும் பல குழந்தைகளுக்கு அசாத்தியமான குறிக்கோள்களை எட்டுவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் ஈஷா வித்யாவின் இந்த சிறிய அளவிலான முயற்சி இந்திய கல்வி நிலையில் ஒரு மகத்தான சேவையாகும்.
ஈஷா வித்யாவின் பிற மகத்தான செயல்பாடுகளைப் பற்றி அடுத்த பதிவில் காணலாம்!
ஆசிரியர் குறிப்பு:
“Innovating India’s Schooling” இந்த கல்வி மாநாடு ஈஷா வித்யா, ஈஷா ஹோம் ஸ்கூல் மற்றும் ஈஷா லீடர்ஷிப் அகாடமி ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு நடத்தப்படுகிறது. குறிப்பிட்ட தனிநபர்கள், கல்வித்துறை சார்ந்த அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களைச் சார்ந்த சிந்தனையாளர்கள் போன்றோரை ஒன்றிணைத்து இந்த கலந்துரையாடல் நிகழவுள்ளது. தொடர்ச்சியாக நடைபெறும் உரைகள், விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் கல்வி குறித்த பொதுப்படையான பார்வைக் கோணத்தை மாற்றியமைப்பதாய் அமையும். கல்வி என்றால் அதிக வேலைசெய்யக் கூடிய திறம்படைத்த ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்குவதற்கானது மட்டுமல்ல, கல்வி என்பது முழுமையான பொறுப்புமிக்க மற்றும் மகிழ்ச்சியான ஒரு சமுதாயத்தை வடிவமைப்பதற்கானது என்ற சிந்தனையை இது உருவாக்கும். இந்த நிகழ்ச்சி கிராமப்புற ஏழைக் குழந்தைகளின் கல்விக்காக உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் ஈஷா வித்யாவின் பத்தாம் ஆண்டு கொண்டாட்டத்திற்கான அடையாளமாகவும் நிகழ்கிறது. மேலும் அறிய: ishavidhyaconference.com