நீம் கரோலி பாபா ஏன் ராம்தாஸை மேற்கத்திய நாடுகளுக்கு அனுப்பினார்? (Neem Karoli Baba in Tamil)
நீம் கரோலி பாபா அல்லது மஹராஜ் ஜி, மார்க் சக்கர்பர்க் மற்றும் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆகிய இரண்டு தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கும் ஒரு வகையான உத்வேகமாக இருந்தார். இங்கே, செரில் சிமோன் நீம் கரோலி பாபாவின் சிஷ்யனுடனான தனது அனுபவத்தைப் பற்றியும், பின்னர் சத்குருவுடன் தனது உரையாடலைப் பற்றியும் எழுதுகிறார்.
முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பர்க், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம், வட இந்திய மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தில் கோசி நதிக்கரையில் அமைந்துள்ள கைஞ்சி தாம் என்ற சிறிய கோயிலுக்குச் சென்றதைக் கூறினார். நீம் கரோலி பாபாவை (அன்புடன் மஹாராஜ் ஜி என்று அழைக்கப்படுகிறார்) பார்க்க, பல ஆண்டுகளுக்கு முன்பு தானே பயணத்தை மேற்கொண்டிருந்த ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் ஆலோசனையின் பேரில் சக்கர்பர்க் அங்கு சென்றிருந்தார். ஜாப்ஸ் துரதிர்ஷ்டவசமாகச் சந்திப்பைத் தவறவிட்டார், கரோலி பாபா ஜாப்ஸ் வருவதற்கு முன்பே தனது உடலை விட்டுப் பிரிந்தார். அனுமானின் பக்தரான நீம் கரோலி பாபாவிற்குப் பகவான் தாஸ் மற்றும் கிருஷ்ண தாஸ் உட்படப் பல பிரபலமான சீடர்கள் இருந்தனர்.
இந்த கட்டுரையில், பிரபலமான “மிட்நைட்ஸ் வித் தி மிஸ்டிக்” என்ற புத்தகத்தின் ஒரு பகுதியில், எழுத்தாளர் செரில் சிமோன், நீம் கரோலி பாபாவின் சீடரான ராம் தாஸுடனான தனது மாய அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கிறார். அந்த அனுபவத்திற்குப் பல வருடங்களுக்குப் பிறகு சத்குருவுடனான தனது உரையாடலில் சரியாக என்ன நடந்தது என்பதையும் விளக்குகிறார்.
நீம் கரோலி பாபாவின் சீடர்
செரில் சிமோன்: பணம் சம்பாதித்து, எனது தொழிலை வளர்த்துக் கொண்டிருக்கும் போது, நானும் எனது உள் வளர்ச்சிக்குப் பின் சென்றேன். ஒரே நேரத்தில் நான் இந்த இரண்டு வழிகளிலும் நகர்ந்தேன்: வணிகம், சுய உதவி, தனிப்பட்ட வளர்ச்சி, அதோடு ஆன்மீக வளர்ச்சி. நான் அமெரிக்க ஆன்மிக ஆசிரியர் ராம்தாஸைச் சந்தித்து, அவருடைய பல பேச்சுக்களுக்கும் தங்கிப் பயிலும் நிகழ்ச்சிகளுக்கும் சென்றேன். ராம் தாஸ் பேச்சுக்களுடன் என்னால் எளிதில் தொடர்புப்படுத்திக்கொள்ள முடிந்தது. அவர் ஒரு அறிவாளி மற்றும் நான் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் பேசினார். என்னைப் போலவே ராம்தாஸும் எல்.எஸ்.டி. யை பரிசோதனை செய்துள்ளார். ராம்தாஸ் உடனான ஆரம்பகால சந்திப்பில் எனக்கு விளக்கமுடியாத ஆழமான மாய அனுபவம் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் நான் இன்னும் இளமையாக இருந்தேன், சரியாகச் சொல்வதானால் இருபத்தி இரண்டு, எனக்குள் பல கேள்விகள் நெருப்பாக எரிந்தன. அந்த நேரத்தில், நான் யோகா, முக்தி மற்றும் கிழக்கு மதங்களைப் பற்றி அதிகம் படித்திருந்தேன், மேலும் தியானத்தின் போது எனக்கு சைகடெலிக் அனுபவங்கள் மற்றும் சில அசாதாரண அனுபவங்கள் இருந்தன. நான் படித்த மற்றும் அனுபவித்தவற்றின் காரணமாக, ஏதோவொரு வகையில் நமக்கு உடல்நிலையைத் தாண்டி இன்னும் நிறைய இருக்கிறது என்பதையும், கடவுள் தொலைதூர இடத்தில் இருக்கும் ஏதோ ஒரு அன்பான தாத்தா இல்லை என்பதையும் நான் உறுதியாக நம்பினேன்.
எல்லாப் பொருட்களும் ஆற்றலைக் கொண்டிருப்பதாகவும், பௌதீகமான அனைத்தையும் ஆற்றலாகக் குறைக்க முடியும் என்றும், ஆற்றலை அழிக்க முடியாது என்றும் அறிவியல் கூறுகிறது என்பதை நான் அறிவேன். என் படிப்பு மிகத் தொன்மையானவற்றைத் தொட்டபோது, அந்த அளவுக்கு நான் ஒரே கடவுள் தான் என்றும், கடவுள் பல வடிவங்களை எடுத்துள்ளார் என்றும், நம் அனைவரின் உள்ளேயும் கடவுள் இருக்கிறார், அது நமக்குத் தெரியவில்லை என்றும் நிறைய இடங்களில் படித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது. என் மனம் தொடர்ந்து அதை ஏற்றுக்கொள்ளப் போராடிக் கொண்டிருந்தது.
எனவே, ராம் தாஸை நான் சந்தித்தபோது எனக்கு எழுந்த எரியும் கேள்வி என்னவென்றால், "வாழ்க்கையை நான் தனியாளாகத்தான் உணர்கிறேன் மற்றும் அனுபவிக்கிறேன் எனும்போது நாம் அனைவரும் எப்படி ஒன்றாக முடியும்?" இருப்பினும், அனைத்தும் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருப்பதை நான் அறிவேன். வாழ்க்கை மாயா அல்லது மாயை என்று வர்ணிக்கப்படுவதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எனக்கு எப்போதும் கோபத்தை ஏற்படுத்தியது. அது முற்றிலும் அக்கறையில்லாத தன்மையாகத் தோன்றியது. சொல்லப் போனால், சில திரைப்படங்களை அது கற்பனைதான் என்று கடந்துசெல்ல முடியாதது போல வாழ்க்கை மிகவும் கொடூரமாகத் தோன்றியது. வாழ்க்கை உண்மையற்றது என்று சொல்லப்படுவது மிகவும் வேதனையானது என்று நான் நினைத்தேன், ஆனால் பொருள் தன்மையின் நிலையற்ற தன்மையையும் நான் எப்போதும் அறிந்திருக்கிறேன். எனவே, உண்மையானது எது என்று நான் வியந்தேன். எதற்கு இறப்பு என்பது இல்லை? கடவுளிற்கா? என் இருப்பில் ஏதேனும் உண்மை இருந்ததா மேலும் எப்படியாவது அதை நான் தெரிந்து கொள்ள முடியுமா?
Subscribe
நீம் கரோலி பாபாவுடனான ராம்தாஸின் நேரம்
ராம் தாஸ் உடன் அமர்ந்தபோது இந்தக் குழப்பம் எல்லாம் என்னுடன் இருந்தது. அந்த நேரத்தில், அவர் நீண்ட காலமாக இந்தியாவிலிருந்து திரும்பி வரவில்லை. அவர் மிகவும் அற்புதமானவராக இருந்தார். அவர் தனது குருவான நீம் கரோலி பாபாவுடன் நிறைய நேரத்தைச் செலவிட்டார், மேலும் நிறைய ஆன்மீகப் பணிகளையும் செய்தார். எனது நண்பர்கள் சிலர் அவருடன் இருக்க நியூயார்க் நகரத்திற்கு இடம்பெயர்ந்தனர். மேலும் அவர் அட்லாண்டாவில் இருக்கப் போகிறார் என்றும் நான் அவரிடம் சென்று பேச வேண்டும் என்றும் அவர்கள் என்னை அழைத்தனர். அந்த நாட்களில் நான் கொஞ்சம் யாரிடமும் பழகாமல் தனியாக இருந்தேன், ஆனால் அட்லாண்டா பெருநகரத்தின் ஒரு பகுதியான ஸ்டோன் மவுண்டனில் அவர் ஆற்றிய பேச்சுக்குப் பிறகு ஏதோ ஒன்று என்னை அவரை அணுகத் தூண்டியது. நான் ராம் தாஸிடம் என்னைச் சந்திக்க உங்களுக்கு நேரம் கிடைக்குமா என்று கேட்டபோது, அவர் சில நிமிடங்கள் மேலே பார்த்து, “ஆம், சரி. நாளை ஸ்டோன் மவுண்டன் விடுதிக்கு வாருங்கள்” என்றார். நேரம், இடம், அறை எண் ஆகியவற்றையும் கொடுத்தார்.
அடுத்த நாள் நான் மிகுந்த ஆர்வத்துடன் அங்குச் சென்றேன். நான் கதவைத் தட்டினேன், ராம் தாஸ் என்னை உள்ளே வரச் சொன்னார், நான் கதவைத் திறந்தபோது, அவர் மோட்டல் படுக்கையில் சம்மணமிட்டு அமர்ந்திருந்தார். நீங்கள் இடைவேளை எடுத்துக் கொண்டிருக்கிறீர்களா என்று நான் அவரிடம் கேட்டேன், அதற்கு அவர், "இது எல்லாம் ஒரு இடைவேளை தான்." என்றார். எனக்கு வாழ்க்கை ஒரு போராட்டமாகத் தோன்றியது. அது அவருக்கு மிகவும் நன்றாக இருக்கும் என்று நான் நினைத்தேன்.
அவர் என்னை உள்ளே வந்து நாற்காலியை இழுத்து உட்காரச் சொன்னார். நான் அவருக்கு நேர் எதிரே அமர்ந்தேன் பின் பேச ஆரம்பித்தோம். நான் ஏன் அவரைச் சந்திக்க விரும்பினேன் என்று அவர் கேட்டார், நான் அவரிடம் அதை வார்த்தைகளால் விவரிப்பது கடினம் என்று சொன்னேன், ஆனால் ஏதோ ஒரு வகையில் நான் சிறைப்பட்டிருக்கிறேன் என்று எனக்குத் தெரியும், எனக்கு உட்சபட்ச விடுதலை வேண்டும் என்று சொன்னேன். இதைவிட மிகப் பெரிய வாழ்க்கை அனுபவம் ஒரு மனிதனுக்குச் சாத்தியம் என்று நான் நம்பினேன். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, அவர் என்னைப் பற்றிய விஷயங்களை அகக்காட்சியாக கண்டதைப் போல என்னிடம் சொல்லத் தொடங்கினார். அவர் என்னிடம் மிகவும் தனிப்பட்ட, குறிப்பிட்ட மற்றும் நுண்ணறிவுள்ள நிறைய விஷயங்களைச் சொன்னார்.
பின்னர் மிகவும் விசித்திரமான ஒன்று நடந்தது. நாங்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது, ராம் தாஸ், ராம் தாஸைப் போல் இல்லை. நான் உட்கார்ந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவர் முற்றிலும் வித்தியாசமாகத் தோன்றத் தொடங்கினார். அவர் தோற்றம் முற்றிலும் மாறிவிட்டது. அவரது கண்கள், அவரது முகம், அவரது முடி எல்லாம் மாறிக்கொண்டே இருந்தது. அவர் பலவிதமான வடிவங்களை எடுத்தார், இது பண்டைய ஞானம் மற்றும் அருளின் உருவகம் போன்று இருந்தது, இது பல குருமார்களின் வெளிப்பாடுகளாக நான் உணர்ந்தேன். ஒவ்வொரு மூச்சிலும் அவர் ஒரு வேறு வேறு ஞானமடைந்தவர்களாக மாறுவது போல் தோன்றியது. அவரது உடல் வடிவம் உண்மையில் மாறிவிட்டது.
சிறிது நேரம் கழித்து, அவர் என்ன ஆனது என்று கேட்டார், என் முகத்தில் ஒரு வேடிக்கையான முகபாவம் இருந்திருக்க வேண்டும் என்று என்னால் நினைத்துப் பார்க்க முடிந்தது. ஒன்றும் இல்லை என்றேன்; அவரது உருவம் மாறுவதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர், "அது உங்களைப் பயமுறுத்துகிறதா?" என்றார். நான், “இல்லை; என்னால் இதை நம்ப முடியவில்லை, இருப்பினும் இது எனக்கு இதுவரை நடந்த எல்லாவற்றையும் விட உண்மையானதாகத் தெரிகிறது. ஒருவரின் வடிவம் மாறுவதையும் மறைவதையும் பார்ப்பது மட்டும் விந்தையானது அல்ல, இது மிகவும் பரிச்சயமானதாகவும் சாதாரணமாகவும் இருப்பதைக் காண்பதும் கூட விசித்திரமானது. எனக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருப்பதும், நான் என்று குறிப்பிடப்படும் இந்த சுயமும் ஒன்றாகவே தெரிந்தது. நான் என் வீட்டில் இருப்பதைப் போல உணர்ந்தேன், அது நானாக உணர்ந்தேன். நமது வடிவங்கள் மிகவும் நிலையற்றவை என்பதை இந்த அனுபவம் எனக்கு உணர்த்தியது. நமது தனிப்பட்ட அடையாளங்கள் தற்காலிகமானவை என்பதையும், நான் வெளிப்படுத்த விரும்புகிற முற்றிலும் நிலையான ஒன்று உள்ளே இருப்பதையும் நான் புரிந்துகொண்டேன்.
அந்த அனுபவம் சக்தி வாய்ந்ததாக இருந்தது. நாம் அனைவரும் ஒரே உள்நிலையைக் கொண்டிருப்பதை இது எனக்குக் காட்டியது, இது நம்முடைய வெவ்வேறு தனித்தன்மைகளால் மறைக்கப்பட்டிருக்கிறது. மேலும் வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? அந்தச் சந்திப்புக்குப் பிறகு, நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். உண்மையில் நான் என்ன என்பதை வெளிக்கொணர எனக்கு எந்த சிரமமும் இருக்காது என்று நான் நினைத்தேன்.
நிச்சயமாக, அந்த அனுபவத்தைப் பற்றி பலரிடம் சொல்ல எனக்குச் சௌகரியமாக இல்லை. பெரும்பாலான மக்கள் நான் ஒரு முட்டாள் என்று நினைப்பார்கள். எனது நண்பர்களில் ஒருவர் இது முன்பு எல்எஸ்டி எடுத்துக்கொண்டதன் பக்க விளைவாக இருந்திருக்க வேண்டும் என்று சொன்னார், ஆனால் அதற்கு முன்பு எனக்கு இப்படிப்பட்ட அனுபவம் ஏற்பட்டதில்லை. அதற்கு பிறகும் அப்படி ஒரு அனுபவம் ஏற்பட்டதில்லை. அதனால் இது அவர்கள் சொல்வது போல் இல்லை என்று எனக்குத் தெரியும். எனக்குத் தெரிந்த ஒரு நவீனக் கால நபர் எனது மூன்றாவது கண் சக்கரம் திறக்கப்பட்டதாக என்னிடம் கூறினார், ஆனால் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. நான் அந்த அனுபவத்தால் ஆழமாகத் தாக்கப்பட்டதை மட்டுமே அறிந்தேன், முன் எப்போதையும் விட, நான் இன்னும் அதிகமாக அதை விரும்பினேன். பின்னர், வடக்கு கலிபோர்னியாவில் உள்ள ராம் தாஸை அவரது இல்லத்தில் சந்தித்து அவர் தான் என் குருவா என்று கேட்டேன். அதற்கு அவர் இல்லை, அவர் குரு இல்லை என்றார். சில சமயங்களில், ஒருவரின் தேடுதல் தீவிரமாக இருக்கும்போது, அவர் வழியாக விஷயங்கள் நடக்கும் என்று அவர் கூறினார். எனது உண்மையான குருவை நான் சந்திக்கும் போது, அது எனக்குத் தெரியும் என்றார். என்னுடைய ஆன்மீகப் பயணம் இனிதே தொடங்கப்போகிறது, மேலும் பெரிய விஷயங்கள் எனக்கு நடக்கப் போகிறது என்று நினைத்தேன்.
இந்தச் சம்பவம் நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சத்குருவைச் சந்தித்தேன். நான் சத்குருவிடம் ராம் தாஸ் உடனான எனது கதையைச் சொன்னேன். நான் சத்குருவிடம் "நான் உங்களை முதன்முறையாகப் பார்த்தபோது, நீங்களும் நீண்ட காலத்திற்கு முன்பு ராம் தாஸிடம் நான் பார்த்த அதே உயிராக அல்லது அதே சாராம்சமாகவோ இருப்பதாகத் தோன்றியது என்று சொன்னேன். இது மிகவும் பரிச்சயமானதாக இருந்தது மேலும் நான் நினைத்ததெல்லாம், அடடா! இந்த நாடகம் முடிவுக்கு வரப்போகிறது என்று எனக்குத் தெரியும். எது உண்மையானது என்பது இறுதியாக மீண்டும் கண்முன் விரிந்தது.
நீம் கரோலி பாபா: ஒரு தனித்துவமான ஆன்மீகவாதி
சத்குரு என்ன நடந்தது என்பதை விளக்க ஆரம்பித்தார். உங்களுக்குத் தெரியும்,"ராம் தாஸ், நீம் கரோலி பாபாவிடம் சென்றார்," என்று அவர் கூறினார். “நீம் கரோலி பாபா மகத்தான திறன்களைக் கொண்ட ஒரு அற்புதமான மனிதர். ராம் தாஸ் மீதான அவரது அன்பினாலோ, அல்லது ராம் தாஸின் நேர்மை மற்றும் கற்றுக்கொள்ள அவரிடமிருந்த விருப்பத்தாலோ ஒரு குறிப்பிட்ட பரிமாணம் அவர் மீது நிச்சயமாக இறங்கியது. ராம் தாஸ் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் உங்களிடம் மட்டும் இதைச் சொன்னாரா அல்லது அவர் எல்லோரிடமும் இதைச் சொன்னாரா என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் அவரது இயல்பிலேயே, ராம்தாஸ் உங்கள் குருவாக இருக்கமுடியாது. இருப்பினும், வாழ்க்கையின் மற்றொரு பரிமாணத்தை உங்களுக்குக் காட்ட அவர் ஒரு நல்ல சாளரமாக இருக்க முடியும், அதையே அவர் செய்தார். ஏனெனில் ராம் தாஸ் தனது சொந்த திறமையால் ராம் தாஸ் அல்ல, ராம் தாஸ் தனது சொந்த பயிற்சிகளால் ராம் தாஸ் அல்ல. ராம் தாஸ் தனது வாழ்க்கையில் ஒரு விவேகமான காரியத்தைச் செய்ததால் மட்டுமே ராம் தாஸ் ஆனார்: அவர் நீம் கரோலி பாபா போன்ற ஒரு மனிதருடன் அமர்ந்தார். அவருடன் அங்கு உட்கார தேவையான அறிவு அவருக்கு இருந்தது, மேலும் அவர் அந்த உயிரின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை உள்வாங்கினார். நீம் கரோலி பாபா பல ஜன்னல்களைத் திறக்க விரும்பினார், எனவே அவர் ஒரு சாளரத்தை உருவாக்கி அதை அமெரிக்காவிற்கு அனுப்பினார்.”
நீம் கரோலி பாபா ராம்தாஸை ஒரு ஜன்னலாக மாற்றினார்
அப்போது சத்குரு எனக்கு மைக்ரோசாப்ட் விண்டோஸ் பற்றித் தெரியுமா என்று கேட்டார். “நீங்கள் XP பயன்படுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். அது உனக்குத் தெரியுமா? எனவே, இது அப்படித்தான். இது ஒரு குறிப்பிட்ட வகையான மென்பொருள், ஒரு ஜன்னல். நீங்கள் எதையாவது பார்க்க முடியும் என்று ஒரு ஜன்னலைத் திறந்து அமெரிக்காவிற்கு அனுப்பினார். நீங்கள் அவருடன் ஒரு குறிப்பிட்ட தீவிரத்துடனும் ஈடுபாட்டுடனும் அமர்ந்திருந்தால், நீங்கள் சில விஷயங்களைப் பார்ப்பீர்கள், ஆனால் ஜன்னலே அதைப் பார்க்காமல் போகலாம்.” ராம் தாஸ் சில சமயங்களில் மக்களுடனான சந்திப்புகளில் கூட அவர் இருப்பதில்லை என்று கூறியதை நான் பின்னர் படித்தேன், அதைப் பற்றி நான் ஆச்சரியப்பட்டேன்.
"ஜன்னல்கள் ஒருபோதும் பார்ப்பதில்லை" என்றார் சத்குரு. "அவர்கள் தங்கள் சொந்த திறன்களுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை மக்களை அனுபவிக்கவும் பார்க்கவும் வைக்க முடியும். ஜன்னல்கள் காண்பிக்க மட்டுமே செய்யும். ஜன்னல் வழியே இமயமலையின் அழகை நீங்கள் கிரகித்துக் கொள்ள முடியும்.
ஆனால் அந்த ஜன்னல் இமயமலையின் அழகைப் புரிந்து கொள்ளாமல் கூட இருக்கலாம். எனவே, ராம் தாஸ் ஒரு நல்ல ஜன்னல், சகதியில் கறைபடாத ஒரு சுத்தமான, கண்ணாடி ஜன்னல். இது நல்லது. இது உங்களுக்குப் பல விஷயங்களைக் காட்டுகிறது மற்றும் அது அற்புதமானது. ராம் தாஸ், அவர் உங்கள் குரு அல்ல என்பதை ஒப்புக்கொண்டது உண்மையில் அருமையான விஷயம்.
அவர் வெறும் ஜன்னல். இது மிகவும் அற்புதம். அவரது பணிவு அற்புதமானது, ஏனென்றால் அவரது நிலையில் உள்ள பெரும்பாலான மக்கள் ஒரு சாளரமாக இருப்பதால், தாங்களே இமயமலை என்று கூறிக்கொள்கிறார்கள். ராம் தாஸ் ஒரு அற்புதமான சாளரம், ஏனென்றால் அவர் தனது வரம்புகளை அறிந்திருக்கிறார். அவர் யார் என்பதன் அழகையும் அதே சமயம் தான் யார் என்பதன் எல்லையும் அவருக்குத் தெரியும். ஒரு மனிதன் தனது சொந்த வரம்புகளை அறிந்திருப்பதும், ஒரு மனிதன் தங்களுக்கு உண்மையாக இருப்பதும் ஒரு அழகான விஷயம்.
“சௌகரியம் கருதி, நீங்கள் உங்களுக்கு நிர்ணயித்த வரம்புகளைப் பற்றி நான் பேசவில்லை. இருப்பு உங்களுக்கு நிர்ணயித்த சௌகரியம் இல்லாத வரம்புகளைப் பற்றிப் பேசுகிறேன். உங்கள் வரம்புகளை நீங்கள் ஒப்புக் கொள்ளும்போது, அது உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட பணிவைக் கொண்டுவருகிறது. அது உங்களுக்கான இடத்தில் உங்களை வைக்கிறது. நீங்கள் எப்போதும் உங்களுக்கான இடத்தில் இருப்பது மிகவும் முக்கியம், ஏனென்றால் உங்களைப் பற்றி நீங்கள் செய்யும் கற்பனை உங்களை எங்கும் அழைத்துச் செல்லாது.”
"எனவே, உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பது பொருத்தமற்றது," என்று அவர் கூறினார். "உங்களைப் பற்றி எல்லா வகையான கதைகளையும் நீங்கள் உங்களுக்குச் சொல்லலாம். உங்களைப் பற்றிய அனைத்து வகையான ஆடம்பரமான விஷயங்களையும் நீங்கள் நினைக்கலாம், ஆனால் அதற்கு இருத்தலியல் யதார்த்தத்துடன் எந்த தொடர்பும் இல்லை. உங்கள் கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் சில சமூகத்துடனான பொருத்தத்தைக் கொண்டிருக்கலாம், ஆனால் அந்தப் பொருத்தம் அங்கேயே முடிகிறது. இருப்பு உங்களை வைத்திருக்கும் விதம் - நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன் - நீங்கள் இப்போது இருக்கும் விதம், வாழ்க்கையால் உணரப்படுகிறது, மேலும் நீங்கள் கடவுள் என்று அழைக்கும் உயிர்களை உருவாக்கும் ஒன்று நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களை உணர்கிறது. இருப்பில் உள்ள வெளி நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களோ அப்படியே உங்களைத் துல்லியமாக உணர்கிறது, நீங்கள் விரும்புகிற விதமாக அல்ல, நீங்கள் ஆடை அணியும் விதமாக அல்ல, உங்கள் தோற்றத்தை வைத்து அல்ல, நீங்கள் பேசும் விதமாக அல்ல, உங்களைப் பற்றி நீங்கள் உங்களுக்குச் சொல்லும் விதமாக அல்ல, உலகம் உங்களைப் பற்றி நினைக்கும் விதமாகவும் அல்ல. ஆனால், நீங்கள் உண்மையில் எப்படி இருக்கிறீர்களோ அப்படியே இருத்தலால் எப்போதும் உணரப்படுகிறது."
உன்னை நீயே ஏமாற்றலாம், உன் சமுதாயத்தை ஏமாற்றலாம், உன்னைச் சுற்றியுள்ள உலகை ஏமாற்றலாம், உன் நண்பர்களை ஏமாற்றலாம், ஆனால் இந்த இருப்பை ஏமாற்ற முடியாது. இருப்பை ஏமாற்ற முயல்வது உங்களை நீங்களே முட்டாளாக்குவதாகும். உங்களின் அனைத்தும் தொடர்ந்து உணரப்படுகின்றன. பாசாங்கு செய்து தப்பிக்க முடியாது. எல்லா ஏமாற்றுத்தனங்களும் மனதின் விளைவே. உங்கள் அடிப்படை இருப்பு மனம் சார்ந்தது அல்ல. ஆன்மீகம் என்பதை ஒரு வகையாக விவரிப்பதென்றால், அது மனதின் செயல்முறைகளுக்கு அப்பாற்பட்டது. இப்போது, உங்கள் புலன் உணர்வுகள் மூலம் நீங்கள் உணரும் அனைத்தும் மனதின் செயல்முறையின் மூலம் நடக்கிறது. மனம் என்பது உண்மையற்றதையும் உண்மையென நம்பவைக்கிறது. இந்த வகையில் தான் எல்லாமே மாயா அல்லது மாயை என்று கூறப்படுகிறது.
அடிக்கடி நடப்பது போல நான் கேட்ட ஒரு கேள்விக்கு சத்குரு பதிலளிப்பதைக் கேட்டபோது, நான் ஆழ்ந்த அமைதியில் ஆழ்ந்தேன். ராம் தாஸ் உடனான அனுபவத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஒரு மாற்றத்தை அது வெளிச்சம் போட்டுக் காட்டியதை உணர்ந்து அவருடைய பதிலில் நான் எதிரொலிக்க ஆரம்பித்தேன். ராம் தாஸுடன் உட்கார்ந்து, கடவுள் நீங்கள்தான், என் வாழ்க்கையை எப்போதும் விழிப்போடு கவனித்துக்கொண்டிருக்கும் அதே உள்ளிருக்கும் சுயம், அது அனைவரிடமும் எல்லாவற்றிலும் உள்ளது என்பதை நான் உண்மையில் புரிந்துகொண்டேன். நாம் அனைவரும் ஒரே உள் சுயத்தைக் கொண்டவர்கள். நமக்கு வெவ்வேறு ஆளுமைகள் மற்றும் நான் என்னும் அகங்காரம் உள்ளன, ஆனால் நமது உள்தன்மை அனைவருக்கும் ஒன்று தான். ராம்தாஸ் மூலம் அந்த சுயம் என்னுடன் பேசியபோது நான் முழுவதுமாக அன்பில் குளித்ததாக உணர்ந்தேன் - மேலும் அந்த அன்பு என்னை எல்லாவிதமான பாசாங்குகளிலிருந்தும் இழுத்தது. என்னைப் பற்றி அறியாதது எதுவுமே இல்லையென்றாலும், இருந்தும் நான் முழுமையாக நேசிக்கப்படும் போது, மறைக்க ஏதும் இல்லை என்பதை நான் உணர்ந்தேன். நீங்கள் எப்படியும் நேசிக்கப்படுவதால் அனைத்தும் மன்னிக்கப்படுவது மிகவும் சுதந்திரமான விஷயமாக இருந்தது. நீங்கள் நீங்களாக இருக்க உங்களுக்குச் சுதந்திரம் இருக்கிறது.
குறிப்பு:
செரில் அவர்களின் “மிட்நைட்ஸ் வித் தி மிஸ்டிக்” புத்தகத்தை ஈஷா ஷாப்பியில் வாங்கலாம், இந்தியாவிலும் அமெரிக்காவிலும் ஹோம் டெலிவரி செய்யப்படுகிறது.
பொதுவாக மனிதனாகக் கருதப்படும் வரம்புகளை உடைத்த மூன்று மனிதர்களின் வாழ்க்கைக் கதைகளைப் பின்தொடருங்கள். புரூஸ் லீ, சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது சொந்த யோகா ஆசிரியரைப் பற்றி சத்குரு பேசுவதைப் பாருங்கள். சத்குரு எக்ஸ்க்ளூசிவ் தொடர்களில் மட்டும்! சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்!