காட்டிற்குள் தொலைவது வாடிக்கை!
தனது இளமைப் பருவத்தில் இயற்கையுடன் அதிகநேரம் செலவழித்த சத்குரு, அடிக்கடி காட்டிற்குள் சென்று பல நாட்களை கழித்திருக்கிறார்!
சத்குரு: குழந்தைப் பருவத்தில் நான் அதிகநேரம் தனியாக இயற்கையுடன் இருந்ததுண்டு. சிறு வயதிலிருந்தே, தோராயமாக எனக்கு பதினோறு வயதாக இருந்த போதிலிருந்தே, வீட்டில் எங்காவது கொஞ்சம் காசு கிடப்பதைப் பார்த்தால், அதை எடுத்துக்கொண்டு இரண்டு மூன்று ரொட்டி பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு, கொஞ்சம் முட்டைகளை வேகவைத்து எடுத்துக்கொண்டு, ஒரு சிறிய காகிதத்தில் நான் திரும்பி வரும் தேதியை எழுதி வைத்துவிட்டு காட்டிற்குள் மறைந்துவிடுவேன். நடந்து திரிந்து, மரங்களில் உறங்கி, ஒரு பை நிறைய பாம்புகளைப் பிடித்துக்கொண்டு, மூன்றரை நாட்களில் எடுத்துச் சென்ற உணவு தீர்ந்துபோய் நான் திரும்பிவிடுவேன். முதலில் நான் இப்படிச் செய்தபோது ஊர் முழுவதும் பரபரப்பாகியது, போலீஸில் புகார் கொடுத்து எல்லாப்பக்கமும் தேடினார்கள். ஆனால் இப்படி இரண்டு மூன்று முறை நடந்தபிறகு, என் பெற்றோர்கள் சற்று சமாதானமானார்கள், ஏனென்றால் எங்கு சென்றாலும் நான் எப்படியும் திரும்பி வந்துவிடுவேன்.
இரவும் பகலும் நான் தனியாக காட்டிற்குள் கும்மிருட்டில் நடந்தேன்.
என்னிடம் டார்ச் எதுவும் கிடையாது. நான் காட்டிற்குள் அப்படியே நடந்து சென்றேன், அங்கு சாதாரணமாக வாழ்ந்திடக் கற்றுக்கொண்டேன். மூன்றாவது நாளுக்குப் பிறகு நான் திரும்பும்போது, மாற்று உடை கூட இல்லாமல் சேறும் சகதியுமாக இருப்பேன்! என் இளமைப் பருவத்திலும் இது தொடர்ந்தது. வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் காட்டிற்குள் காணாமல் போனேன், காட்டில் நடந்து திரிந்தேன், மரங்களில் தூங்கினேன்.