முழுமையான ஈடுபாடு
சத்குரு ஆழமான ஈடுபாடுகொள்வது குறித்து சொல்லும்போது, தனது தாயார் தனது மீதும் தனது குடும்ப உறுப்பினர்கள் மீதும் கொண்டிருந்த குறிப்பிட்ட நிலையிலான ஈடுபாடு குறித்து பேசுகிறார்.
சிறுவயதில் சத்குருவின் தாய் இவர்கள் மீது எந்த அளவிற்கு பிரியமாக இருந்தார் என்றும், அவர் ஒருவராலேயே இவர்கள் வாழ்க்கை எந்தளவிற்கு அழகாய் இருந்தது என்பதையும் சத்குரு இங்கே பகிர்கிறார்.
சத்குரு: நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது எங்கள் தாயார் ஒர் முழு நேர குடும்பத்தலைவி. வீட்டு வேலைகள் அனைத்தும் அவரேதான் செய்வார். திரைச்சீலை தைப்பதிலிருந்து, தலையணை உரை தைப்பது, படுக்கை விரிப்புகளில் எம்பிராய்டரி செய்வது என்று எல்லாமே அவரே செய்வார். நாங்கள் வெளியூர்களுக்கு ப்ரயாணம் செய்யும்பொழுது, அங்கே தூங்க நேரிட்டால், "வெற்று தலையணை உரைகளில் குழந்தைகள் எப்படி தூங்குவார்கள்?" என்பார். உடனே தன்னிடமுள்ள ஊசி நூல் கொண்டு தலையணை உரையில் இரண்டே நிமிடங்களில் ஏதோ ஒரு கிளியோ அல்லது ஒரு சிறு பூவோ எம்பிராய்டரி செய்துவிடுவார். எனக்கு அந்த பச்சைகிளிகள் இன்றும் நன்றாக நினைவில் இருக்கின்றது, அதைப் பார்த்துக்கொண்டே நான் தூங்கிவிடுவேன். அம்மாவின் அந்த அக்கறை – "யாரோ ஒருவர் அக்கறையின்றி, மெஷினில் தைத்த தலையணை உரையில் குழந்தைகள் தூங்குவதா?" – இது எங்கள் வாழ்க்கையில் பெரிய வித்தியாசத்தை ஏற்ப்படுத்தியது. எங்களின் நலனுக்காகவே வாழ்ந்த அந்த ஒரு நபரின் ஆழ்ந்த ஈடுபாடு இல்லாமல், எங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என கற்பனை கூட செய்ய முடியவில்லை. அப்படி ஒன்றும் அன்பை எப்போதும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த உறவல்ல, ஆனால் அவரில்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துப்பார்க்க முடியாது, அவர் அன்பு எல்லாவற்றிலும் எப்போதுமே நிறைந்திருந்தது.
சத்குரு: அக்காலத்திற்கு என் தாய் ஓரளவு நன்றாகவே கல்வி கற்றிருந்தார். தன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும், காலை முதல் இரவு வரை, அவர் ஒரு நேர்த்தியுடன் சீராகக் கையாள்வார். ஆசிரமத்திலும் கூட இதை ஒரு எடுத்துக்காட்டாகக் கூறுவேன். அவர் மாதாந்திர மளிகை சாமான் பட்டியல் போட்டாரென்றால், மாத நடுவில் அது இல்லை இது இல்லையென்று யாரும் கடைக்கு ஓடத்தேவையே இருக்காது. இது அனைத்தையும் அவர் ஒரு மனக்கணக்காகவே செய்துவிடுவார். தற்சமயம் வீட்டில் என்னென்ன சாமான் இருக்கிறது, இந்த மாதம் எத்தனை விருந்தாளிகள் வரலாம் என்பதெல்லாம் கணக்கிலெடுத்து, மேற்கொண்டு என்ன தேவையிருக்கும் என்பதை கணக்கிட்டு வாங்குவார். பின், எல்லாம் கனக்கச்சிதமாக நடந்தேறும்.
இதுபோல் சின்னஞ்சிறு விஷயங்களிலும்கூட அந்தளவிற்கு மிகுந்த ஈடுபாட்டுடன் அவர் செயல்படுவார். காலையில் 6 மணிக்கு எழுந்துவிடுவார். நாங்கள் அனைவரும் 7.30 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிவிடுவோம். அதனால் அதற்குள் எங்களுக்கான காலை உணவை தயார் செய்து, நாங்கள் அனைவரும் உண்டுவிட்டு வெளிசெல்ல பார்த்திருப்பார். நாங்கள் அனைவரும் கிளம்பிய பிறகு, அவர் குளித்து முடித்து, தன் பூஜைகளைச் செய்துவிட்டு பின் மதியவேளை உணவைத் தயாரிக்க சமையலில் ஈடுபடுவார். என் தந்தை சரியாக மதியம் 12.30 மணிக்கு வீட்டுக்கு வருவார். அவர் வரும்போது என் தாய் நேர்த்தியாய் உடையணிந்து, பூச்சூடி உணவைப் பரிமாற தயாராய் இருப்பார். பிற்காலத்தில் என் தாயின் உடல்நிலை சரியில்லாமல் போனபோதும், கால்கள், முகம் எல்லாம் வீக்கமடைந்து நடப்பதற்கே சிரமப்படும் நிலையிலும் கூட, எப்படியோ தோட்டத்திற்கு நடந்துசென்று ஒரேவொரு மல்லிப்பூவையேனும் பறித்து, தலையில் வைத்துக்கொள்வார்.