ஒரு ஓநாண் வந்தபோது…
இயற்கை உலகில் சஞ்சரிக்கும் உயிரினமான ஒரு ஓநாண் தனது வீட்டிற்குள் ஏற முயற்சித்தது குறித்து சத்குரு கூறுகிறார். தனது வாழ்வில் நிகழ்ந்த அந்த சுவையான தருணத்தை அவர் இங்கே விவரிக்கிறார்!
சத்குரு: என் வீட்டில் எப்போதும் எல்லாவித பிராணிகளும் நிறைந்திருக்கும். சில நாட்களுக்கு முன்பு அங்கு ஒரு சிறு உடும்பும் குடியேறியது. அது மிகச் சிறிதாக இருந்தது. வீட்டின் தாழ்வார ஓட்டில் வாழ்ந்தது. அந்தத் தோட்டத்தில் அது நல்ல பாதுகாப்பாகவே வளர்ந்தது. ஆம்... அங்கு பெரிதாக வேறெந்த விலங்குண்ணியும் இல்லை. சுற்றியிருந்தவற்றில் அதுவே பெரிதான விலங்காய் இருந்தது. மெதுமெதுவாக அங்கிருந்த பறவைகள், அணில், பாம்புகளை எல்லாம் உண்டு அது அங்கு சுகபோஜனமாய் வாழத் துவங்கியது. நாளடைவில் நன்றாக வளர்ந்து இப்போது அது நான்கடி நீளத்திற்கு வளர்ந்துவிட்டது!
இப்போதெல்லாம் அவர் பெரும்பாலும் வெளியில் தங்கிவிடுவதால் பரவாயில்லை. இல்லையெனில் அவர் அத்தனைப் பெரிதாக இருப்பதால், ஓட்டில் நகரும்போது அவ்வப்போது அந்த ஓடுகளை உடைத்தோ, நகர்த்தியோ விடுகிறார். தாழ்வாரத்தின் மேலே அவர் இருக்கும் வரை பிரச்சினை இல்லை... ஆனால் வீட்டுக் கூரைமீது ஏறி அங்கிருக்கும் ஓடுகள் உடைந்தாலோ, மழை பெய்யும்போது வீட்டினுள் ஒழுக ஆரம்பித்துவிடுகிறது. என்றாலும், அவரை அங்கிருந்து விரட்டவும் நமக்கு மனமில்லை, ஏனெனில் அவர்தான் அங்கு அதிகம் தங்குகிறார்... நான் அந்நியன் போன்று.
என்னைப் பொறுத்தவரை வீடு, உடைமை என்று பார்த்தால், நான்தான் அங்கு அந்நியன்... அவர் அங்கு எப்போதும் இருப்பவர். ஆதலால் அவருக்குதான் என்னைவிட அங்கு தங்குவதற்கு உரிமை அதிகம்.
அதனால் குறைந்தபட்சம் அவர் வீட்டினுள்ளாவது வரமுடியாதபடி, ஓடுகளை ஒருவிதமாகப் பொருத்தி இருக்கிறோம். வெளித் தாழ்வாரத்தில் அவர் இருந்துவிட்டுப் போகட்டும்.