அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் Youth & Truthல் சத்குரு!
கடந்த செப்டம்பர் 10ஆம் தேதியன்று சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இளைஞரும் உண்மையும் சந்திக்கும் வாய்ப்பை வழங்கும் விதமாக Youth & Truth நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் நிகழ்ந்த சில சுவாரஸ்ய தருணங்களின் பதிவு உங்களுக்காக!
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட நுண் செயற்கைக்கோள் ANUSAT இந்தியாவிலேயே இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தவிர்த்து முதன்முறையாக ஒரு இந்திய பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்டு இயக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும்.
நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்தபோது, அங்கே பல்வேறு குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆங்காங்கே குழுமியிருந்து உற்சாகமாக உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அப்போது அங்கே அவர்களிடையே அதிகமாக வெளிப்பட்ட ஒரு வார்த்தை ‘சத்குரு’ என்பதுதான்! வழக்கமான ஈஷா நிகழ்ச்சிகளைப் போலவே இந்நிகழ்விற்காகவும் தன்னார்வத் தொண்டர்கள் அன்று காலைமுதலே நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முழுமையான ஈடுபாட்டுடன் செய்துகொண்டிருந்தனர்.
ஆனால், இதில் வித்தியாசம் என்னவென்றால், இந்த செயல்களில் ஈடுபட்டிருந்தவர்கள் ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் அல்லர்; இவர்கள் பல்கலைக்கழகத்தின் தன்னார்வத் தொண்டர்கள். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செவ்வனே நிகழ்ந்துள்ளதா என்பதை உறுதிசெய்யும் வகையில் அவர்கள் வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் அவர்கள் சுற்றி வந்துகொண்டிருந்தனர். அதேசமயம் நிகழ்ச்சி துவங்கிய கண நேரத்தில் மாணவர்கள் அனைவரும் அரங்கத்திற்குள் சென்று அரங்கத்தை நிறையச் செய்தனர்.
இந்நிகழ்ச்சியின் ஒரு குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவென்றால் நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் பொறுப்பேற்று, ஈஷா தன்னார்வத் தொண்டர்களுடன் இணைந்து செயல்பட்டனர்; நிகழ்ச்சிக்கு வருகை தந்த மக்களை உற்சாகமாக வரவேற்று அரங்கத்திற்குள் செல்வதற்கான வழிகாட்டுதல்களை வழங்கியதோடு மட்டுமல்லாமல், நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பும் நிகழ்ச்சி நிறைவடைந்த பின்பும் மாணவர்களை நேர்காணல் செய்வதிலும் இவர்களின் பங்களிப்பு அபாரமாக இருந்தது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்ச்சியை இளைஞர்களிடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு இடங்களில் வீதி நாடகங்களை வார இறுதி நாட்களில் மாணவர்கள் அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் கிண்டி பொறியியற் கல்லூரி மாணவர்களுக்காக மட்டுமே திட்டமிடப்பட்டருந்த இந்நிகழ்ச்சி, அதன்பின் மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி (MIT) மற்றும் அழகப்பா தொழில்நுட்பம் மற்றும் கட்டிடக்கலை அறிவியல் மற்றும் திட்டமிடுதலுக்கான கல்லூரியும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
சவுண்ட்ஸ் ஆப் ஈஷாவின் கால்களை தாளமிடச் செய்த துள்ளிசை நிகழ்ச்சி மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் கலைநயமிக்க பாரம்பரிய பரதநாட்டிய நிகழ்ச்சியுடன் நிகழ்வு இனிதே துவங்கியது.
Subscribe
கைதேர்ந்த வாத்தியக் குழுவினருடன் நிகழ்ச்சியில் சினிமா இசைப் பாடகர் கார்த்திக் அவர்களின் வசீகரமிக்க இசைக்கச்சேரி பார்வையாளர்களுக்கு எதிர்பாராத ஆச்சரியத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அனைத்திற்கும் மேலாக கார்த்திக் அவர்களின் உற்சாக துள்ளல் இசைக்கு ஏற்ப சத்குரு தனது இயல்பான உற்சாக நடனத்தை வெளிப்படுத்தி அரங்கத்தை தன்வசப்படுத்தினார்.
அதன்பின் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த சத்குருவுடன் கேள்வி-பதில் நிகழ்ச்சி ஆரம்பமானது. மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் மனதில் நெருப்பாய் தகித்துக்கொண்டிருந்த பல்வேறு கேள்விகளை சத்குருவிடம் முன்வைத்தனர். தோராயமாக மாணவர்களிடத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத 700 மாறுபட்ட கேள்விகள் இருப்பதைக் கண்டு ஆச்சரியம் அடைந்தோம்.
ஒவ்வொரு கேள்விக்கான விடையையும் சத்குரு தெளிவாகவும் ஆழமாகவும் வழங்கிய வேளையில், பங்கேற்பாளர்களிடமிருந்து வரவேற்பும் ஆரவாரமும் அவர்களின் விடையறியா கேள்விகளுக்கு விடைபெற்ற ஆனந்தத்தை உணர்த்தியது. அரசியல், ஆன்மீகம், போதைப் பொருள், உறவு நிலைகள், கல்வி, விவசாயம், குழந்தை வளர்ப்பு துவங்கி முதல் பார்வையில் காதல் மலர்வதுவரை பல்வேறு நிலையிலான மாறுபட்ட கேள்விகள் அங்கே சத்குருவிடம் தொடுக்கப்பட்டன.
நிகழ்ச்சி குறித்து மாணவர்கள் சிலர் கூறியபோது ஒரு ஆன்மீக சொற்பொழிவை எதிர்பார்த்திருந்த தங்களுக்கு சத்குருவின் தர்க்க ரீதியான, நேரடியான பதில்கள் மற்றும் ஆழமான உள்நிலை தரிசனங்கள் ஆச்சரியத்தை அளித்ததாகக் கூறினர்; சத்குருவின் கருத்தாழமிக்க பதில்கள் மூலம் மிகவும் ஈர்க்கப்பட்டவர்களாகவும் பரிமாற்றம் அடைந்தவர்களாகவும் அவர்கள் காணப்பட்டனர். மாணவர்கள் இன்னொரு கேள்வி கேட்க வாய்ப்பு கேட்டபோது ‘நீங்கள் கேள்விகளற்றுப் போகலாம், நான் பதில்களற்றுப் போகமாட்டேன்!’ என்று சத்குரு கூறியவுடன் அரங்கத்தில் வெடிச்சிரிப்பு எழுந்தது!
நிகழ்ச்சி நிறைவடையும்போது சத்குரு விடைபெறும் தருணத்தில் கூடியிருந்த பார்வையாளர்கள் முகங்களில் உற்சாகமும் புத்தொளியும் குடிகொண்டிருந்ததைக் காணமுடிந்தது.
நிகழ்ச்சி குறித்து தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்திய மாணவர்களிடமிருந்து உற்சாகத்தையும் புதியதொரு ஆனந்தத்தையும் காணமுடிந்தது. அவர்கள் நிகழ்ச்சி முடிந்து திரும்பும்போது தெளிவும் ஆனந்தமும் கொண்ட முகங்களாக தங்கள் வீடுகளை நோக்கிச் சென்றனர்.
நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மேலும் சில மாணவர்கள் கூறிய வார்த்தைகள்...
“சத்குரு ஒரு மகத்தான மனிதர்!”
“ஆஹா… நான் இது போன்ற ஒரு மனிதரையும் இத்தகைய பதில்களையும் சற்றும் எதிர்பார்க்கவில்லை! நான் இது ஒரு ஆன்மீகம் சார்ந்த விஷயமாக இருக்கும் என நினைத்திருந்தேன்.”
“முதல் பார்வையில் காதல் மலர்வது, காலம்/பாதிப்புக்கு உள்ளாதல் போன்றவை குறித்த அவரின் பதில் அறிவுபூர்வமாக அமைந்தது.”
“நாங்கள் இனி வீடியோ கேம்கள் அல்லது youtubeல் வீடியோ கேம் விளையாட்டுகளை பார்ப்பது போன்றவற்றை தவிர்த்து நாட்டின் முன்னேற்றத்திற்காக தன்னார்வத் தொண்டாற்றவிருக்கிறோம்.”
“அரங்கத்திற்குள் நுழைந்த ஒவ்வொரு மனிதரும் அரங்கின் வெளியே செல்லும்போது அறிவுநிலையில் பரிமாற்றம் அடைந்தவர்களாக சென்றனர்.”
“சத்குரு வருகைதந்தது முதல் விடைபெற்றது வரையில் அதே அளவிலான சக்தியுடன் காணப்பட்டார். அவருடைய வயதில் என்னால் இது போன்று இருக்க இயலாது.”
“தன்னார்வத் தொண்டர்களாக உங்களையெல்லாம் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை நாங்கள் எப்போது பெறுவோம்?”
ஆசிரியர் குறிப்பு: சர்ச்சைக்குரிய சிந்தனையா, பேசினால் பிறர் தூற்றக்கூடிய விஷயம் பற்றி குழப்பமா, எவரும் பதில் சொல்ல விரும்பாததால் உங்களைத் துளைக்கும் கேள்வியா, கேட்பதற்கு இதுதான் நேரம்! சத்குருவிடம் நீங்கள் கேட்க விரும்புவதை UnplugWithSadhguru.org வலைதளத்தில் பதிந்திடுங்கள்!