சமீபத்தில் நடிகர் லியனார்டோ டிகாப்ரியோவிற்கு எழுதப்பட்ட திறந்த கடிதமொன்று, பிரபலமான நட்சத்திரத்தின் ஆதரவைப்பெற்று பெருமளவிலான மக்களுக்குத் தெரிந்த ஒரு இயக்கத்தைத் தாக்குவதன் மூலம் விளம்பரம் தேட முயற்சிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, உண்மையறிய சிரத்தையெடுக்காமல், சம்பந்தப்பட்ட பிறருடன் ஆலோசிக்காமல், சில ஊடகங்கள் இந்தக் கதையை வெளியிடுகிறார்கள். இவர்களின் திறந்த கடிதம், உண்மையான ஆதாரங்களின்றி, அப்பட்டமான பொய்கள் மற்றும் வாய்க்கு வந்த வார்த்தைகள் உள்ளடங்கிய அடிப்படையற்ற கருத்து. இதன் முக்கிய வாதம், காவேரி கூக்குரல் இயக்கம் சிக்கலான பிரச்சனைக்கு ஓரின மரங்களை நதிக்கரைகளில் வளர்ப்பது எனும் எளிமைப்படுத்தப்பட்ட தீர்வை வழங்குகிறது என்பதுதான். இது உண்மையல்ல. காவேரி கூக்குரல் என்பது காவேரி வடிநில மாவட்டங்களிலுள்ள தனியார் விவசாய நிலங்களின் ஒருபகுதியில் மரங்களை வளர்ப்பதற்கான விரிவான திட்டம். காவேரி கூக்குரலின் அடிப்படை கொள்கைகளை கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு மாநில அரசுகள் ஆதரித்துள்ளன. தனிப்பட்ட விதத்தில் ஈஷாவையும் அதன் நிறுவனர் சத்குருவையும் தாக்கும் விதமான பொய்யான குற்றச்சாட்டுகளை இக்கட்டுரை தொடுத்துள்ளது. இவற்றை பொய்யென நாங்கள் முன்பே விளக்கியுள்ளோம், மீண்டும் மீண்டும் மறுப்புத் தெரிவித்துள்ளோம்.

karnataka-govt-contributes-2crore-saplings-blog-featureimg

tamilnadu-govt-supports-cauvery-calling

 

 

 

 

ESG கருத்தை எடுத்துக்கொள்ளும் கார்டியன் மற்றும் பிற பதிப்பகங்களுக்கு ஒரு குறிப்பு

இந்தியாவில் சுற்றுச்சூழல் நீதி முயற்சிகளின் கூட்டணி சார்பில், சுற்றுச்சூழல் ஆதரவுக் குழு அறக்கட்டளை (Environment Support Group Trust / ESG) எழுதியுள்ள இந்த கடிதம், காவேரி கூக்குரல் நோக்கத்தின் அடிப்படைகளை புரிந்துகொள்ளவில்லை.

அதை பார்க்கும்முன், காவேரி கூக்குரல் இயக்கத்தில் என்ன செய்ய முயல்கிறோம் என்பதன் சுருக்கத்தைப் பார்ப்போம். காவேரி கூக்குரல், விவசாயிகள் தங்கள் தனியார் விவசாய நிலங்களில் உள்ளூர் இனங்களைக் கொண்டு செய்யக்கூடிய வேளாண் காடுவளர்ப்பை ஊக்குவிப்பதன் மூலம், சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு பொருளாதாரத் தீர்வை வழங்குகிறது.

உணவு மற்றும் விவசாய அமைப்பு கூறுவதன்படி: வேளாண் காடு வளர்ப்பு என்பது பல்லாண்டு வாழும் தாவரங்களோடு (மரங்கள், புதர்கள், பனைகள், மூங்கில்கள் ஆகியன) விவசாயப் பயிர்கள் மற்றும் / அல்லது விலங்குகளை திட்டமிட்டு ஒரே நிலத்தில் இடைவெளி விட்டு, அல்லது தற்காலிகமாக பயிரிடும் நிலப்பயன்பாட்டு முறைகள் மற்றும் தொழில்நுட்பங்களைக் குறிக்கும். வேளாண் காடு வளர்ப்பு முறைகளில் அதன் பல்வேறு பாகங்களிடையே சுற்றுச்சூழல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் பரிமாற்றங்கள் உள்ளன. வேளாண் காடு வளர்ப்பை, பண்ணைகள் மற்றும் விவசாய நிலங்களில் மரங்களை சேர்ப்பதன்மூலம், அனைத்து நிலைகளிலும் நிலத்தைப் பயன்படுத்துவோருக்கு அதிக சமுதாய, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் பலன்கள் தரும்விதமாக, விளைச்சலை பல்வகைப்படுத்தி நிலைப்படுத்தும் தேவைக்கேற்ப மாற்றக்கூடிய, சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்ட இயற்கை வள மேலாண்மை முறை எனவும் விவரிக்கலாம். குறிப்பாக சிறு குறு விவசாயிகளுக்கும் பிற கிராமத்தவருக்கும் இது மிகவும் அவசியமானது. ஏனென்றால், இது அவர்களின் உணவு, வருமானம் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடியது. வேளாண் காடு வளர்ப்பு முறைகள், பலவிதமான பொருளாதார பலன்கள், சமூக-கலாச்சார பலன்கள் மற்றும் சுற்றுச்சூழல் பலன்களை வழங்கக்கூடிய பல்நிலை செயல்பாட்டு முறைகளாகும்.

காவேரி கூக்குரல் முன்மொழியும் திட்டம் முழுவதிலும், விவசாய நிலத்தில் எங்கு வேளாண் காடு வளர்ப்பை ஊக்கப்படுத்த வேண்டும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. காவேரி கூக்குரல் விழிப்புணர்வு பயணத்தின் பொழுதோ, அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களிலோ அல்லது எங்கள் பதிப்பிலோ, ஒரு இடத்தில்கூட இதனை நதிக்கரைகளிலுள்ள அரசு நிலங்கள் அல்லது வனநிலங்கள் அல்லது புல்வெளிகளில் செய்யவேண்டுமென நாங்கள் குறிப்பிடவில்லை. இது தவறான குற்றச்சாட்டு.

வேளாண் காடு வளர்ப்பை தனியார் நிலங்களில் ஊக்குவிப்பது, இதில் சம்பந்தப்பட்டவர்களில் நதியை அதிகம் சார்ந்திருக்கும் விவசாயி, அதற்கு புத்துயிரூட்டும் செயல்முறையில் பலன்பெற வேண்டும் என்பதற்காகத்தான். காவேரிக்கு நாங்கள் முன்மொழிந்துள்ள வேளாண் காடு வளர்ப்பு மாதிரிகள், உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) வேளாண் காடு வளர்ப்புக்கு வழங்கியுள்ள விளக்கத்துடன் ஒத்திருக்கிறது. எவ்விதத்திலும் இது ஓரின மரங்கள் நடுவதை ஊக்குவிக்கவில்லை.

 

இதில் மரங்கள் நடுவது மட்டுமில்லாது, புதர்கள் மற்றும் பிற தாவரங்கள் வளர்ப்பதும் உள்ளடங்கும்.

காவேரி கூக்குரலை ஆதரிக்கக்கூடாது என்று திரு.லியனார்டோ டிகாப்ரியோவை நீங்கள் கேட்டுக்கொள்ளும் உங்கள் திறந்த கடிதத்திற்கு நாங்கள் பதிலளிக்க விரும்புகிறோம். தேவையில்லாமல் வெறுப்பை உமிழும் உங்கள் பிரச்சாரத்திலுள்ள அப்பட்டமான பொய்களைத் திருத்துவதற்கான கடிதமிது. உங்கள் கடிதம் எழுப்பும் கருத்துகளுக்கு எங்கள் பதில்களைக் கீழே காணலாம்.

குற்றச்சாட்டு:: உங்கள் கடிதம் சொல்வது:"எனினும் 'காவேரி கூக்குரல்' இயக்கம், நதி வடிநிலத்தின் நிதர்சனங்களையும் அவள் வருங்கால நல்வாழ்வையும் புரிந்துகொள்ளும் ஒரு திட்டமில்லை. சிக்கலான பிரச்சனைக்கு, நதிக்கரை, கிளைநதிக்கரை, ஓடைக்கரை மற்றும் வெள்ளச் சமவெளிகளில் மரங்கள் நடுவதன்மூலம் நதியைக் காக்கலாம் எனும் எளிமைப்படுத்தப்பட்ட தீர்வை முன்வைக்கும் திட்டமாகத் தெரிகிறது.

பதில்: "நதி வடிநிலத்தின் நிதர்சனங்களை" நாங்கள் புரிந்துகொள்ளவில்லை என்று என்ன அடிப்படையில் நீங்கள் முடிவுசெய்தீர்கள் என்று எங்களுக்குத் தெரியவில்லை. உங்கள் கடிதம் சொல்வதற்கு மாறாக, தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசு, பாரதப் பிரதமர், ஐக்கிய நாடுகளின் UNCCD மற்றும் UNDP, எல்லாவற்றுக்கும் மேலாக விவசாய சமூகத்திடம் பரவலான ஆதரவைப் பெற்று, பலதரப்பினர் சம்பந்தப்பட்டுள்ள திட்டமிது. இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம், ஜலசக்தி அமைச்சகம், நதிகளை மீட்போம் உயர்மட்ட செயற்குழுவிலுள்ள உலக வனவிலங்கு நிதியத்தின் பொது செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகி திரு.ரவி சிங், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு.அர்ஜித் பஷயத், பயோகான் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திருமதி.கிரண் மஜூம்தார் ஷா, நீர்வளத்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்து ஓய்வுபெற்ற திரு.சஷி சேகர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் முனைவர். திரு.AS.கிரண் குமார், இந்திய விவசாய அமைச்சகத்தில் சிறு விவசாயிகள் வேளாண்தொழில் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநராக இருந்த திரு.பிரவேஷ் சர்மா, டாடா ஸ்டீல் முன்னாள் துணைத் தலைவர் திரு.B.முத்துராமன், இந்திய தொழில் வர்த்தக கூட்டமைப்பின் இயக்குநர் திரு.சந்திரஜித் பானர்ஜி, வேளாண்துறை மற்றும் வனத்துறை நிபுணர்கள் பலர், தேர்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் இரு மாநில விவசாயிகளும் காவேரி கூக்குரல் இயக்கத்தை ஆதரிக்கின்றனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

 

 

 

UNCCD எனும் ஐக்கிய நாடுகளின் நிலம் பாலைவனமாதலைத் தடுக்கும் பேரவையின் COP14 மாநாட்டிற்கு சத்குருவிற்கும் ஈஷாவிற்கும் காவேரி கூக்குரல் குறித்து பேசச் சொல்லி அழைப்பு வந்தது. அங்கு இத்திட்டத்திற்கு இந்தியாவில் கிடைத்துள்ள வெற்றியைக் கண்டு உலகளவில் இதை செயல்படுத்தும் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP), மற்றும் உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி (GEF) அதரவு வழங்கியுள்ளன. இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) காவேரி கூக்குரலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. நதி புத்துணர்வு மற்றும் விவசாயி நல்வாழ்வு தொடர்பான கொள்கைகள் வரைவதற்கு, தேசிய அளவில் உச்சநிலையில் பொருளாதாரக் கொள்கை தீட்டும் நிதி ஆயோக் அமைப்புடன் இடைவிடாமல் தொடர்பில் இருக்கிறோம்.

இவை பிரசித்தி பெற்ற உலகளாவிய அமைப்புகள், சாதாரணமாக எவ்வியக்கத்தையும் ஆதரிக்கக்கூடிய அமைப்புகள் இல்லை. எங்கள் cauverycalling.org இணையதளத்தை மேலோட்டமாகப் பார்த்தாலும்கூட, காவேரி கூக்குரலின் பிரதான நோக்கம் வேளாண் காடு வளர்ப்பு, அதாவது தனியார் விவசாய நிலங்களில் மரத்தை அடிப்படையாகக் கொண்ட விவசாயம் செய்வது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். எங்கும் நாங்கள் பொது நிலத்திலோ நதிக்கரையிலோ மரங்கள் நடுவது பற்றி கூறவில்லை. ஒரு நல்ல நோக்கத்தை எதிர்த்து அவப்பெயர் உருவாக்கும் பிரச்சாரத்தைத் துவங்கும்முன் அத்திட்டத்திற்கான இணையப் பக்கத்தையாவது வாசிக்கவேண்டும். அறிவியல்பூர்வமாக எங்கள் குழுவுடன் கலந்துரையாடும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் நாங்கள் சந்தோஷமாக ஏற்பாடு செய்துதருகிறோம்.

குற்றச்சாட்டுமரங்கள் நடுவதை வரவேற்கிறோம், ஆனால் தேவைப்படும் இடத்தில், உரிய இனங்களைத் தேர்ந்தெடுத்து செய்தால் மட்டுமே அது ஏற்புடையது. இச்செயல்முறையை, உள்ளூர் தேவைகள் மற்றும் நுட்பமாக கவனித்துப் புரியக்கூடிய பகுதிசார்ந்த சுற்றுச்சூழல் நிலைமாற்றங்களைப் புரிந்து, ஆலோசித்து செய்வதே சிறந்தது. மேலும், இத்தகைய திட்டம் உரிய சமூக நடவடிக்கையுடன் சேர்ந்து நடத்தப்பட வேண்டும் - அடிமட்டத்திலிருந்து மேலே செல்ல வேண்டும், அரசியலமைப்புரீதியாக அதிகாரம் பெற்ற பஞ்சாயத்துகள், சட்டப்பூர்வமான வன உரிமை குழுக்கள், பல்லுயிர் மேலாண்மை குழுக்கள், வார்டு குழுக்கள் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுத்தப்பட வேண்டும். அதோடு நதிக்கு புத்துயிரூட்ட மரங்கள் நடுவது நாம் செய்யவேண்டிய பல செயல்களில் ஒன்று மட்டும்தான் என்பது சொல்லிப் புரியவேண்டிய விஷயமில்லை. மரங்கள் நடுவது மட்டுமே காவேரியை காக்கும் முக்கிய செயலை சாதிக்காது. மரங்கள் நடுவது மேலே விவரித்திருப்பதன்படி உரிய முறையில் செய்யப்பட்டாலும்கூட, காவேரியின் காடுகளையும் நீர்த்தேக்கப் பகுதிகளையும் கண்மூடித்தனமாக அழிக்கும் செயலை அவசரமாக நிறுத்தவேண்டிய அவசியமிருக்கிறது. இந்த அழிக்கும் செயல் நதி நீர்த்தேக்கப் பகுதி முழுவதிலும் 'முன்னேற்றம்' எனும் பெயரில் பரவலாக நிகழ்ந்துவருகிறது.

பதில்: வடிநிலப்பகுதி முழுவதற்கும், அந்தந்த பகுதிக்கேற்ப நடுவதற்குப் பொருத்தமான மரங்கள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம் - கர்நாடக வனத்துறை, வேளாண் தொழில்நுட்ப வல்லுநர்கள் நிறுவனம், வேளாண் காடு வளர்ப்பு விவசாயிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் நிறுவனம், வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கல்வியாளர்கள், இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம், வேளாண் காடு வளர்ப்பு மற்றும் காவேரி வடிநிலப்பகுதி மரங்கள் குறித்து பல்லாண்டு அனுபவமிக்க தனிப்பட்ட வல்லுநர்களின் ஆலோசனையைக் கேட்டபின், காவேரி கூக்குரல் திட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே இப்பட்டியலை தயாரித்துள்ளோம்.

agroforestry-success-story-of-farmer

இதோடு, இந்தியாவின் உயரிய சுற்றுச்சூழல் விருதான இந்திரா காந்தி பார்யவரன் புரஸ்கார் விருதை பெற்றுள்ள ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்திற்கு தமிழகத்தில் வேளாண் காடு வளர்ப்பில் 18 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் உண்டு.

PGH-Award-5-June

காவேரி வடிநிலப்பகுதி மாவட்டங்கள் உட்பட, தமிழகத்தின் பல மாவட்டங்களில் வேளாண் காடு வளர்ப்பை வெற்றிகரமாக செய்துவரும் விவசாயிகளின் வெற்றிக்கதைகள் உள்ளன.

சமுதாய நடவடிக்கையின்றி காவேரி கூக்குரல் நடத்தப்படுகிறது என்று நீங்கள் முடிவெடுத்துள்ளது தவறு. இவ்வியக்கம் துவங்குவதற்கு முன், சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு, தன்னார்வத் தொண்டர்கள் காவேரி வடிநிலத்திலுள்ள 7000 திற்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று 2.7 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுடன் கலந்துரையாடியுள்ளார்கள். காவேரி கூக்குரல் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு தருவதுடன், லட்சக்கணக்கான விவசாயிகளை பாதிக்கும் வேளாண் பிரச்சனைக்கும் தீர்வு தருவதால், பஞ்சாயத்துத் தலைவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டியுள்ளார்கள்.

high-five-on-the-farmers-trail-pic-collage2

sadhguru-isha-on-the-farmers-trail-cauvery-calling-spirited-warriors-on-ground-3

காவேரி கூக்குரலுக்கு அவதூறு ஏற்படுத்தும் பிரச்சாரம், விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்கும், இந்தியாவின் மண், நீர் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கு புத்துணர்வூட்டுவதற்கும் எதிரானதாக இருக்கிறது. வேளாண் காடு வளர்ப்பு, வெட்டுமரங்கள் தேவையால் வனங்களுக்கு இருக்கும் அழுத்தத்தை தவிர்த்திட உதவும் என்பதால், வனங்களுக்கு வெளியே மரங்கள் வளர்க்கும் ஒரு வெற்றிகரமான திட்டம், தற்போதைய இயற்கைக் காடுகளையும் பல்லுயிர்களையும் பாதுகாக்க உதவுகிறது. இதனால் செயற்கை காடுகள் உருவாக்குவதற்கான தேவையின்றி போகும், காடுகள் பாதுகாப்பு வலுவடையும். காவேரி கூக்குரலைப் பற்றி 'சுற்றுச்சூழலா பொருளாதாரமா' என்று விவாதிப்பதே முற்றிலும் தவறானது. காவேரி கூக்குரல் என்பது குறிப்பிடத்தக்க சூழலியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விவசாயிகளுக்கான பொருளாதாரத் திட்டம்.

செயல்படுத்தும் கட்டத்திற்குள் இவ்வியக்கம் நுழையும்போது, நாங்கள் பஞ்சாயத்து அமைப்புகளுடன் இணைந்து செயலாற்றுவோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டில் வலுவான பஞ்சாயத்துராஜ் முறை உள்ளது. இரு மாநிலங்களும் காவேரி கூக்குரலுக்கு ஆதரவு தந்துள்ளன. அவர்களின் ஆதாரவு பஞ்சாயத்துராஜ் அமைப்புகளிலும், அதன் செயல்பாடுகளிலும் அதற்குக் கீழேயுள்ள அமைப்புகளிலும் பிரதிபலிக்கும். பல்லுயிர் மேலாண்மை குழுக்கள் செயல்படும் இடங்களில், வேளாண் காடு வளர்ப்பு அப்பகுதி பல்லுயிரை மேம்படுத்துவதற்கு அவர்கள் உதவியையும் நாடுவோம். வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களில், விவசாயிகள் வன உரிமைகள் சட்டத்தின்கீழ் விவசாயம் செய்ய உரிமம் பெற்றிருந்தால், வன உரிமைகள் குழுக்களுடன் நாங்கள் பிரதானமாக பணியாற்றுவோம்.

நீங்கள் குறிப்பிடுவது போல திரு.டிகாப்ரியோவிற்கு காவேரி கூக்குரல் குறித்து தவறான ஆலோசனை வழங்கப்படவில்லை. இவ்வியக்கத்தில் எவ்வளவு வேலைகள் நடந்திருக்கிறது என்று எங்களுடன் அமர்ந்து புரிந்துகொள்ளுமாறு உங்களை அழைக்கிறோம். தமிழகத்தில் 69,760 விவசாயிகளுடன் 18 ஆண்டுகளுக்கு மேல் நாங்கள் இம்மாதிரியை செயல்படுத்திக் காட்டியுள்ளோம். இவர்களில் பெரும்பாலான விவசாயிகளிடம் அதிக மதிப்புடைய முதிர்ச்சியடைந்த மரங்கள் உள்ளன, இவற்றை தேவையானபோது அவர்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும். இதில் பல விவசாயிகள் மரங்களை அறுவடை செய்து 300% முதல் 800% கூடுதல் வருமானம் பெற்று மீண்டும் மரங்கள் நட்டுள்ளார்கள். நதிகளைக் காக்க மரங்கள் நடுவதுதான் ஒரே வழி என்று நாங்கள் கூறவேயில்லை. காவேரி உட்பட பெரும்பாலான இந்திய நதிகளின் பிரச்சனைக்கு செலவு குறைவான மற்றும் இயற்கையை அடிப்படையாகக் கொண்ட தீர்வு என்பதால் இச்செயலை நாங்கள் தேர்வுசெய்துள்ளோம். பிற புத்துணர்வூட்டும் செயல்கள் தேவையில்லை என்று நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. rallyforrivers.org இணையதளத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்யக்கூடிய நதிகளை மீட்போம் வரைவுத்திட்ட பரிந்துரைகள் ஆவணத்தில் இதை விரிவாக விளக்கியுள்ளோம். எவருக்கும் அவர் எவ்விதத்தில் பங்களிக்க விரும்புகிறார் என்பதைத் தேர்வுசெய்யும் சுதந்திரம் உண்டு. விவசாயிகளுடன் இணைந்து செயலாற்றி மரங்களை வளர்ப்பதை நாங்கள் தேர்வுசெய்திருப்பது, அதில் எங்களுக்கு அனுபவம் இருக்கிறது என்பதால்தான்.

குற்றச்சாட்டு242 கோடி மரங்கள் நடுவதற்கு நன்கொடை வழங்கச்சொல்லி மக்களிடம் முறையிடும் ஈஷாவின் மரங்கள் நடும் முயற்சி நம்மை வசீகரிப்பதாய்த் தோன்றலாம். ஆனால் ஆழமாக ஆராய்ந்து பார்த்தால், நிலத்தை மறுசீரமைப்பதற்கு ஓரின மரங்கள் நடுவதைப் பரிந்துரைக்கும் மாதிரியாகத் தெரிகிறது, இதனை இந்திய மக்கள் நெடுங்காலத்திற்கு முன்பே நிராகரித்துவிட்டனர். அதுதவிர, இத்தகைய திட்டம் தெரியாமலே எதிர்பாராத சமுதாய மற்றும் சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தும், ஏனென்றால் குறிப்பிட்ட சில இடங்களில் (உதாரணத்திற்கு புல்வெளிகள் மற்றும் வெள்ளச் சமவெளிகள்) மரங்கள் நடுவது, ஓடைகள் மற்றும் சிற்றோடைகளை உலரச்செய்து வனவிலங்குகளின் வசிப்பிடங்களை அழிக்கும். மேலும், இது வெள்ளச் சமவெளிகள் மற்றும் நதிப்படுகைகளை ஆக்கிரமிப்பிற்கு வழிகோலும், இது ஏற்கனவே பல இடங்களில் நிகழ்ந்துள்ளது.

பதில்: எங்கள் திட்டம் எதைப்பற்றியது என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள சிரத்தையெடுக்கவில்லை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. நாங்கள் பரிந்துரைக்கும் வேளாண் காடு வளர்ப்பு ஓரின மரங்கள் வளர்ப்பதுமில்லை, பல்வகை மரங்கள் வளர்ப்பதுமில்லை. ஒவ்வொரு விவசாயியும், இதுவரை வருடாந்திர பயிர்கள் மட்டுமே விளைந்த நிலத்தில், பலவித உள்ளூர் வெட்டுமரங்கள் மற்றும் பழமரங்களை தனது வேளாண் நிலத்தில் வளர்ப்பார். இது தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் வகைகளைப் பெருக்கும். நதிநிலம், புல்வெளிகள் மற்றும் வனநிலம் உள்ளடங்கிய அரசு நிலத்தையோ பொது நிலத்தையோ காவேரி கூக்குரல் தொடப்போவதில்லை. விவசாயிகளை தங்கள் நிலத்தின் ஒரு பகுதியை வேளாண் காடு வளர்ப்புக்கு மாற்றச்சொல்லி முறையிடுகிறோம். இந்த விவசாய நிலங்கள் நதி வடிநிலப் பகுதிகளில் உள்ளன; நதி வடிநிலப் பகுதியில் மூன்றில் இரண்டு பகுதி விவசாயிகள் கைகளில் இருப்பதால், விவசாயிகள் மரங்கள் நடாமல் பசுமைப் போர்வையை அதிகரிக்க முடியாது. மரங்களை வளர்க்கக்கூடாத இடங்களில் வளர்த்தால் சுற்றுச்சூழலை அது எப்படி பாதுகாக்கும் என்பது பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். இது "ஓரின மரங்கள் வளர்க்கும் மாதிரி" என்ற முடிவுக்கு வர நீங்கள் எவ்வித "ஆழமான ஆராய்ச்சி" செய்தீர்கள் என்று தயவுகூர்ந்து எங்களுக்கு விளக்குங்கள். அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் விரிவான திட்ட வரைவறிக்கையில், வேளாண் காடு வளர்ப்புடன் சேர்ந்து ஊடுபயிர்கள் செய்யும் மாதிரிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

குற்றச்சாட்டு:மனித உரிமைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டங்களைப் பின்பற்றுவதில் ஈஷாவின் நம்பகத்தன்மை மிகக் குறைவு. அரசியலமைப்பின் ஒரு நிறுவனமான இந்திய கம்ப்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) அறிக்கையில், ஈஷா அறக்கட்டளை அதன் தலைமையகத்தை யானை வழித்தடத்திலும் உள்ளூர் ஆதிவாசிகளுக்குச் சொந்தமான நிலத்திலும் கட்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. அதோடு திரு.ஜகி வாசுதேவும் ஈஷாவும் பல்வேறு பொதுவான பிரச்சனைகளுக்கு பிரபலமான எளிமைப்படுத்தப்பட்ட தீர்வுமுறைகளை அடிக்கடி வழங்குவதன்மூலம், சிக்கலான சுற்றுச்சூழல் பிரச்சனைகள் மற்றும் சமூக நீதிப் பிரச்சனைகளுக்கு தீர்வுதேடும் முறையான மற்றும் தீவிரமான முயற்சிகளை இழிவுபடுத்தியுள்ளனர்.

பதில்: இவை அப்பட்டமான பொய்கள், தெளிவாக இவை தீய நோக்கத்துடன் பரப்பப்பட்டுள்ளன. சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம், மற்றும் தமிழ்நாட்டு மாநில வனத்துறை இந்த பொய்க்கு நெடுங்காலத்திற்கு முன்பே முடிவுகட்டியுள்ளதுடன், இப்பகுதியில் யானை வழித்தடம் இருந்ததேயில்லை என்பதை திட்டவட்டமாக பதிந்துள்ளது. இந்திய வனவிலங்குகள் அறக்கட்டளையும் இதை தெளிவுபடுத்துகிறது. ஆதிவாசிகளின் நிலத்தை ஈஷா அபகரிக்கவில்லை. இது எவ்வித ஆதாரமுமின்றி வெளியிடப்பட்ட ஒரு பத்திரிக்கைக் கதையின் அடிப்படையில், திரும்பத்திரும்ப கூறப்படும் ஆதாரமற்ற அவதூறு. இவற்றுக்கு நாங்கள் முன்பே மறுப்புத் தெரிவித்துள்ளோம். ஒரு நிறுவனம் உண்மையறிய முயற்சிக்காமல், துளியும் ஆதாரமில்லாமல், இப்படி வெட்கமின்றி குற்றம் சாட்டுவது வியப்பாக இருக்கிறது.

சிக்கலான சுற்றுச்சூழல் பிரச்சனைகளை தெளிவான முறையில், பெருவாரியான மக்களுக்கு புரியும்படி எடுத்துச்சொல்வதில் இந்த அளவு வெற்றியடைந்துள்ள வேறு எந்த இயக்கமும் இந்த தேசத்தில் இல்லை. இது எங்களை பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக்கியுள்ளது என்றால் இருக்கட்டுமே. இதுதான் இவ்வியக்கத்தின் வெற்றியாக இருந்துள்ளது. நம் நதிகளின் ஆபத்தான நிலை குறித்து ஒரு தேசமே விழித்தெழுந்துள்ளது என்றால், சுற்றுச்சூழல் நலனுக்காக பணியாற்றுவதாக சொல்லிக்கொள்ளும் குழுக்கள் இதை ஆதரிக்கவேண்டுமே தவிர, உண்மையை ஆராயாமல் கண்மூடித்தனமாக தாக்கக்கூடாது. அதன் கருத்தை திறம்பட புரியவைப்பதில் வெற்றிகரமாக இருந்துள்ளதால், பிரச்சனைக்கான தீர்வு தொழில்நுட்பரீதியாக எவ்விதத்திலும் நுட்பமாக இருக்காது என்று கிடையாது.

குற்றச்சாட்டு:சொல்லப்போனால், 'காவேரி கூக்குரல்' இயக்கத்திற்காக நிதி திரட்டுவதை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஈஷா இணையதளத்தின் முகநூல் பக்கத்தில் நீங்கள் பகிர்ந்துள்ள லிங்க், திரட்டப்படும் நிதியின் அளவு ரூ.10,000 கோடியைத் தாண்டும் (அமெரிக்க டாலர் 1.5 பில்லியன்) என்று காட்டுகிறது. இப்படி பெருந்திரளான நிதி ஒரு தனியார் நிறுவனத்திடம், அதுவும் மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களை பின்பற்றுவதில் மிக பலவீனமான, சந்தேகத்திற்குரிய ஒரு நிறுவனத்திடம் சேர்வது கவலைக்குரியது.

பதில்: ஆம், உங்கள் கடிதத்தைப் போல பொய்கள் நிறைந்த ஒரு பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது உண்மைதான். உதாரணத்திற்கு, நீங்கள் சொல்வதுபோலவே இந்த பொதுநல வழக்கிலும், கர்நாடக அரசுடன் ஆலோசிக்காமல் பொது நிலங்களில் மரங்கள் வளர்க்க ஈஷா பணம் சேகரிக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நாங்கள் "மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களை பின்பற்றுவதில் மிக பலவீனமான, சந்தேகத்திற்குரிய ஒரு நிறுவனம்" என்று நீங்கள் எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? யானை வழித்தடத்தில் கட்டிடம் கட்டியிருப்பதாகவும் ஆதிவாசி நிலங்களை ஆக்கிரமித்ததாகவும் நீங்கள் சாட்டியுள்ள குற்றச்சாட்டுகள் துளிகூட ஆதாரமற்றவை என்பதை நாங்கள் ஏற்கனவே நிரூபித்துள்ளோம்.

குற்றச்சாட்டு'இந்தியாவின் தண்ணீர் மனிதர்' ராஜேந்திர சிங், ஜகி வாசுதேவின் 'காவேரி கூக்குரல்' இயக்கத்தை "வெறும் பெயரும் பணமும் சம்பாதிப்பதற்கான" பிரச்சாரம் என்று கூறியுள்ளார்.

பதில்: அவரவருக்கும் அவரவர் சொந்தக் கருத்தை உருவாக்கிக்கொள்ளும் உரிமையுண்டு. நீங்கள் திரு.டிகாப்ரியோ கருத்தை எதிர்த்திருப்பது, அது உங்கள் கருத்துடன் ஒத்துப்போகாததால்தான். காவேரி கூக்குரலுக்கு பொதுமக்களிடையே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள பல்வேறு நிபுணர்கள் கருத்தையும், நிபுணர்கள், நிர்வாகிகள், சூழலியலாளர்கள், சட்டவல்லுநர்கள் மற்றும் அரசு ஊழியத்தில் இருந்துள்ள மக்கள் உள்ளடங்கிய நதிகளை மீட்போம் இயக்கத்தின் உயர்மட்ட செயற்குழுவின் கருத்தையும் நீங்கள் பார்க்கத் தவறியுள்ளீர்கள். 'பத்ம விபூஷன்' விருதுபெற்ற சத்குரு 'பெயரும் பணமும் சம்பாதிக்க' இப்படியொரு மாபெரும் மக்கள் இயக்கத்தை நடத்துகிறார் என்று நீங்கள் சொல்வது நகைப்பூட்டுவதாக இருக்கிறது.

இதனை ஆதரித்தவர்கள் எவரும், காவேரி கூக்குரல் பெயரும் பணமும் சம்பாதிப்பதற்கானது என்று கருதவில்லை. ஜனநாயகம் என்பது தனியொரு மனிதரின் கருத்தை வெளிப்படுத்துவதைப் பற்றியது மட்டுமல்ல. நடுநிலையாக நிதர்சன உண்மைகளை ஆராய்ந்து, ஒருவர் தனது கருத்தை மாற்றிக்கொள்ள அனுமதிப்பதும் ஜனநாயகத்தில் உள்ளடங்கும். திரு.டிகாப்ரியோவிற்கு நீங்கள் எழுதிய தெளிவில்லாத ஆதாரமில்லாத திறந்த கடிதத்திற்கு மாறாக, நிதர்சன உண்மைகளை நீங்கள் சுட்டிக்காட்ட விரும்பினால் நாங்கள் செவிகொடுக்கத் தயாராக இருக்கிறோம். தமிழக விவசாயிகளுடனான எங்கள் பணியைப் பார்க்க உங்களை அழைக்கிறோம். ஈஷா யோக மையத்தைப் பார்வையிட அழைக்கிறோம். சுற்றுச்சூழல் சட்டங்களையோ மனித உரிமைகளையோ எவ்வகையிலும் நாங்கள் மீறுவதாக ஏதேனும் ஆதாரம் இருந்தால் காட்டும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இறுதியில், இந்த தேசத்தின் சுற்றுச்சூழல், நதி மற்றும் விவசாயிகள் பற்றி உண்மையான அக்கறையுள்ள எவராக இருந்தாலும், எதிர்க்கும் நோக்கத்தைப் புரிந்துகொள்ள முடியாதபடி அவதூறு பிரச்சாரம் செய்வதற்கு முன்பு, காவேரி கூக்குரல் இயக்கத்தைப் புரிந்துகொள்ள முயற்சி எடுத்திருப்பார். காவேரி கூக்குரல் இயக்கம் உண்மையில் எதைப் பற்றியது என்பதை உங்களுக்கு நாங்கள் விளக்குவதற்கு, எங்களுடன் வந்து நடுநிலையான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு அழைக்கிறோம்.

Editor's Note: For more details of clarification, email mediarelations@ishafoundation.org.