ஈஷா பசுமைக்கரங்கள் திட்ட நாற்றுப் பண்ணைகள்:

a-movement-that-started-with-a-seed-sadhguru-writing-7lakh-guinessrecord

கின்னஸ் சாதனை படைப்பது என்பதற்கு ஒருவருக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைக்கும். உண்மையை சொல்ல வேண்டுமானால், நம்மில் பலருக்கு இது அசாத்தியமான ஒன்று. ஆனால் அக்டோபர் 17, 2006 காலையில் 2,50,000 திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரு கின்னஸ் சாதனையை படைக்க இணைந்தனர் - இது சொந்த லாபத்துக்காகவோ, சொத்து, புகழுக்காகவோ இல்லை - இந்த பூமி தாய்க்காக.

சூரியனின் கதிர்கள் சுடாத வண்ணம் மேகங்கள் குடை பிடித்து நிற்க, தமிழகத்தின் 6200 க்கும் மேற்பட்ட இடங்களில் ஈஷா பசுமைக்கரங்கள் இயக்கத்தின் 2,56,289 தன்னார்வத் தொண்டர்கள் அடுத்த சில மணி நேரங்களில் 8,52,587 மரக்கன்றுகளை நட்டு முடித்தனர். இந்த ஒட்டுமொத்த கூட்டு முயற்சியில், மூன்று நாட்களில் அதிக எண்ணிக்கையிலான மரக்கன்றுகளை நட்டதற்கான உலக சாதனையை அவர்கள் படைத்திருந்தனர்‌.

pgh-guinness-certificate

கின்னஸ் உலக சாதனை என்பது அனைவரது கண்ணிலும் 'பளிச்சென' தென்பட்டுவிடும். ஆனால் இந்த மாபெரும் முயற்சியை வெற்றிகரமாக நிகழ்த்த பின்னணியில் எவ்வளவு செயல்கள் நடக்க தேவையிருக்கிறது என்பதும் அதே அளவுக்கு இல்லையென்றாலும், அதைவிட சற்று அதிகமான அதிசயம்தான். தன்னார்வத் தொண்டர்களில் சிலர் தீவிரமான ஒரு குழுவாக இணைந்து தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகள், இல்லத்தரசிகள், மாணவர்கள், தொழில் முனைவோர், அரசு அதிகாரிகள், புகழ் பெற்றவர்கள் என எல்லா தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்தனர். தமிழக சுற்றுச்சூழலை மீட்டெடுக்க ஒரு மக்கள் இயக்கம் இப்படித்தான் அரும்பு விட்டு தழைக்கத் துவங்கியது.

மக்கள் மனங்களில் விதைத்தல்

a-movement-that-started-with-a-seed-pgh-sapling-row

நமது இந்த முயற்சியில் முக்கிய அம்சமாக 852,587 க்கும் மேற்பட்ட செடிகளை உற்பத்தி செய்து வழங்கின தமிழகம் முழுவதும் நிறுவப்பட்டிருந்த ஈஷா நாற்று பண்ணைகள். நாற்று உற்பத்தி மட்டுமின்றி, மக்கள் இதயத்திலும் மனங்களிலும் மரங்கள் வேர்பிடிக்க உரமாகவும் அமைந்தன. நாற்றுப் பண்ணையை பார்த்துக்கொண்ட தன்னார்வத் தொண்டர்கள், மக்களிடமும், விவசாயிகளிடமும் நல்லுறவு ஏற்படுத்தி, செடிகள் மற்றும் மரங்களை வளர்த்து காக்க வேண்டிய அவசியம் பற்றி புரிந்துகொள்ள உதவினர்.

மக்கள் தங்களின் வாழ்வில் மரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து பார்க்க இது உதவியாக இருந்ததுடன் ஒரு‌ உணர்ச்சிபூர்வமான உறவு பாலத்தையும் ஏற்படுத்தியது. லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு மண்ணில் மரம் நடுவதற்கு முன்பாக, சத்குரு குறிப்பிடுவதைப்போல, முதலில் "மக்களின் மனங்களில் மரங்களை ஊன்றியது" பசுமைக்கரங்கள் இயக்கம்.

இன்று தமிழகம் முழுவதும் உள்ள 32 நாற்றுப் பண்ணைகள் மூலமாக 84 வகையான, 3,50,00,000 மரக்கன்றுகளை மக்கள் நடுவதற்கு பசுமைக்கரங்கள் இயக்கம் துணை நின்றுள்ளது. இந்த மண்ணின் வளத்தை மேம்படுத்தவும், மண்ணில் மழைநீரை பிடித்து வைத்துக்கொள்ளவும், இறந்து கொண்டிருக்கும் நதிகளுக்கு புத்துயிரூட்டவும் பெரிதும் துணை நிற்கும் மரங்களை அந்த மக்கள் ஒரு உயிராகவே பார்க்கிறார்கள். இன்று ஈஷா பசுமைக்கரங்கள் இயக்கம் 50,00,000 மரக்கன்றுகளை நாற்றுப் பண்ணைகள் மூலமாக ஒரே ஆண்டில் உற்பத்தி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியின் பின்புலத்தை சென்று பார்த்தோமானால் - ஒரு சிறு நிலப்பகுதியும், ஆர்வம் பொங்கும் சில தன்னார்வத் தொண்டர்களும், அவர்களின் அசைக்கமுடியாத உறுதியுமே இந்த நிலைக்கு வளர காரணமாக இருந்திருக்கிறது.

ஈஷா நாற்றுப் பண்ணை பிறந்த கதை

a-movement-that-started-with-a-seed-pgh-volunteers-making-sapling-bags

ஈஷா யோக மையத்தில் 2004ம் ஆண்டு முதல் நாற்றுப் பண்ணை துவங்கப்பட்டது. பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய சிறு குழுவினர் தங்களின் கரங்களின் முயற்சியில் துளிர்த்த முதல் செடியை முதன்முறையாக மக்களுக்கு வழங்க துவங்கினார்கள்.

"இலவச மரக்கன்றுகள்" என்று அறிவித்த பதாகைகள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்த அன்பர்களை வரவேற்றது. விரும்பிய அனைவருக்கும் இலவசமாக மரக்கன்றுகளை வழங்க துவங்கினார்கள். அத்துடன் கிராமம் கிராமமாக பயணம் செய்து பொதுமக்களிடம் மரம் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வும், உதவியும் வழங்கியதுடன் தாங்கள் உற்பத்தி செய்திருந்த செடிகளை கிராமத்தினருக்கு நன்கொடையாக வழங்கினார்கள். நமது ஈஷா யோக மையத்திற்கு அருகில் உள்ள கிராமமான மாதம்பட்டியில், 15 வயதான அந்த மரங்களை இப்போது நீங்கள் சென்றாலும் பார்க்க முடியும். நமது சின்னஞ்சிறு முதல் நாற்றுப் பண்ணையில் பிறந்த தளிர்கள்தான் இன்று ஓங்கி உயர்ந்து நிழல் தரும் மரமாக நிற்கிறது.

நாற்றுப் பண்ணை துவங்கிய அந்த ஆரம்ப நாட்களில், பிரம்மச்சாரிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்களின் குழு ஒரு செடியை எப்படி உற்பத்தி செய்வது என்பதில் தேர்ச்சி பெற துவங்கினர்.

ஆரோக்கியமான மரக்கன்றுகளை நீங்கள் எப்படி வளர்க்கலாம்?

பசுமைக்கரங்கள் நாற்றுப்பண்ணைகளில் நாற்றுகளை உற்பத்தி செய்வது என்பது இத்தனை ஆண்டுகளில் ஒரு துல்லியமான விஞ்ஞானமாகவே முறைப்படுத்தப்பட்டிருக்கிறது‌. தரமான விதைகளை தேர்ந்தெடுப்பது, நாற்றுகளை தனித்தனியான பைகளில் வளர்ப்பது, பராமரிப்பது, வளர்ச்சியை கவனித்து தேவையான பகுதிகளில் அவைகள் சென்று சேர்வதை உறுதி செய்வது என அனைத்துமே பசுமைக்கரங்கள் இயக்கத்தின் கவனத்திலேயே நடக்கிறது. a-movement-that-started-with-a-seed-pgh-tiny-saplings

தேர்வு செய்யப்பட்ட விதைகள் முதலில் மாட்டு சாணம் மற்றும் தேங்காய் நார் கொண்டு ஏற்படுத்தப்பட்ட படுக்கையில் எந்தவிதமான இரசாயனங்களோ, பூச்சிக்கொல்லிகளோ இல்லாமல் அவை முளைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தி பக்குவப்படுத்தப்படுகிறது. அவை முளைவிட துவங்கியதும், செடிகள் உறுதியாகவும் வளமாகவும் வளர, பாதி வெயில் படுமாறு நிழற்பாங்கான இடத்தில் வைக்கப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வழக்கமான கவனம் மற்றும் கிளை கழித்தலுக்குப் பிறகு‌ மூன்று மாதங்களில் ஊட்டமாக வளர்ந்து நிற்கும் செடிகள் நடவுக்காக தேவையானவர்களுக்கு வழங்கப்படுகிறது. சுற்றுச்சூழலை மீட்டெடுக்க விரும்பும் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக மிகக்குறைந்த விலையில் செடிகள் வழங்கப்படுகிறது. உண்மையில் நமக்கு ஒரே ஒரு உறுதி மட்டுமே தேவை. நாற்றுகளை நடவு செய்ததுடன் விட்டுவிடாமல்‍, அது செடியாக, ஆரோக்கியமான மரமாக வளர்வதை பெற்றுச் செல்பவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

நாற்றுப் பண்ணையில் இருந்து மரமாக வளரும் இடத்திற்கு பயணப்படும் நாற்றுகள், பயணத்தில் பிழைத்திருக்க வேண்டும் என்பதால் எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு மிகக்குறைந்த அளவே நகர்த்தப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் செடிகள் தேவைப்படுவோருக்காக பசுமைக்கரங்கள் உருவாக்கியுள்ள தனித்துவமான வழிமுறையில் ஒரே நேரத்தில் 10,000-12,000 செடிகளை மிக குறைந்த அளவு சேதாரத்துடன் தேவையான இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

இதில் முக்கியமான அம்சம், இந்த எல்லா செயல்களையும் கண்காணித்து மதிப்பிடுவதுதான். விதைகளை சேகரிப்பதில் துவங்கி, செடிகளை நடவு செய்யும் இடங்களை தயார் செய்வது வரை, எல்லா செயல்களையும் பதிவு செய்கிறோம். வருங்காலத்தில் தேவையான நேரத்தில் அவற்றை மீண்டும் சரிபார்த்துக்கொள்ள முடியும்.

இப்படி நாற்று வளரும் ஒவ்வொரு அம்சத்தையும் கவனித்து பார்த்துக்கொள்வது, தரமான நாற்றுகள்‌ உற்பத்தி ஆவதை உறுதி செய்கிறது. நாற்றுகள் நடவு செய்த இரண்டு வருடங்களுக்கு பிறகும் 80% செடிகள் பிழைத்திருக்க இது உதவுகிறது.

சுனாமி தந்த உத்வேகம்

ஈஷா யோக மையத்தில் பசுமைக்கரங்கள் நாற்றுப் பண்ணை நிறுவிய சில மாதங்களிலேயே பெரிய அளவில் நாற்று உற்பத்தியை விரிவாக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. காரணம் தமிழக கடற்கரை பகுதியில் சுனாமி பேரலைகள் ஏற்படுத்தி இருந்த பேரழிவுகள்.

2004ம் ஆண்டு வடக்கு ஆசிய நாடுகள் பலவற்றிலும் பாதிப்பு ஏற்படுத்தியிருந்த சுனாமி அலையால் 2,00,000 திற்கும் மேற்பட்ட மக்களின் உயிரிழப்பும், பலத்த பொருளாதார சேதமும் ஏற்பட்டது. இந்தியாவில், குறிப்பாக தமிழகம் சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டது.

சுனாமியால் பாதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் களமிறங்கிய ஈஷா அறக்கட்டளை, மருத்துவ உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவிகளை அந்த பகுதிகளில் வழங்கத் துவங்கியது. இந்த பயங்கர அபாயத்தால் இந்தியாவில் 10,000 திற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். வீடுகளையும் தங்கள் வாழ்வாதாரத்தையும் இழந்து ஆயிரக்கணக்கானோர் வேறு இடம் பெயர்ந்தனர். கடலூரில் மட்டும் 99,704 குடும்பங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டனர். இதில் உயிரிழந்த 610 பேரில், 214 பேர் குழந்தைகள். a-movement-that-started-with-a-seed-pgh-tsunami-area

சுனாமியால் சுற்றுச்சூழலுக்கும் பேரழிவு ஏற்பட்டிருந்தது. புயல் ஓய்ந்ததும், மரங்களை நடும் நம் இயக்கத்தின் வேகம் அடுத்த நிலைக்கு நகர வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார் சத்குரு. சுனாமியால் பாதித்த பகுதிகளில் புனரமைப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அதிக எண்ணிக்கையில் மரங்கள் நடப்பட்டது‌. முதலில் கடலூர் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 25,000 மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஈஷா முன்னெடுத்த முதல் பெரிய அளவிலான மரங்கள் நடும் திட்டம் இது. இதன் பிறகு, தமிழகம் முழுவதும் 7,00,000 மரக் கன்றுகள் நடும் இலக்கை முன்னெடுத்தார் சத்குரு.

பசுமைக்கரங்கள் இயக்கம் வேகமாக செயல்பட தூண்டப்பட்டது. முதன்முதலில் ஒரேயொரு நாற்றுப் பண்ணையாக துவங்கிய பயணம் 2005ம் ஆண்டில் பசுமைக்கரங்கள் இயக்கமாகி, விழிப்புணர்வு பரவவே, மேலும் கிளைகள் பரவி வளர துவங்கியது. குறுகிய காலத்திலேயே சிறிய‌ அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையிலிருந்து பெரும் இயக்கமாக உருவெடுத்ததுடன், தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று தமிழகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தத் துவங்கியது பசுமைக்கரங்கள் இயக்கம்.

நாற்றுப் பண்ணைகளுடன் இணைந்து செயல்படல்

நாற்றுகளை வளர்ப்பதில் தேர்ச்சி பெற்றதும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழகம் முழுவதும் பலதரப்பட்ட மக்கள் குழுக்கள் மற்றும் நிறுவனங்களுடன் பசுமைக்கரங்கள் இயக்கம் இணைந்து செயல்பட துவங்கியது.

45 புதிய நாற்றுப் பண்ணைகள் துவங்கப்பட்டதுடன், பல நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் நிலம் மற்றும் கிடங்கு வசதிகளை பயன்படுத்தி செடிகள் உற்பத்தியை பெருக்கியது பசுமைக்கரங்கள் இயக்கம். ஒவ்வொரு நாற்றுப் பண்ணையும் அந்தந்த பகுதிக்கு ஏற்ற செடி, மர வகைகளை தன்னகத்தே கொண்டிருந்தது.

நெய்வேலி நகரைச் சேர்ந்த மக்கள் தங்களின் விளைநிலங்களில் நாற்று உற்பத்தி செய்து ஆயிரக்கணக்கான செடிகளை உருவாக்கித் தந்தனர். துவக்கத்தில் நாற்றுகள் உற்பத்தி பற்றிய தேர்ச்சி இல்லாத போதும், அவர்களிடம் இருந்த இதயமும், இந்த இயக்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்ற வேகமும் இதை சாத்தியமாக்கியது. தமிழக மக்களின் அமோக வரவேற்பை பெற்று வளர்ந்த நமது நாற்றுப் பண்ணைகளின் வேகத்தில், ஒரு சமயத்தில் செடிகளை உற்பத்தி செய்வதற்கான விதைகள் கூட கையிருப்பில் இருந்து தீர்ந்திருந்தது!

தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இந்நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலமாக நம்பிக்கையான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நம்பிக்கை, விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் மீது நேர்மறையான தாக்கம் ஏற்படுத்த அவர்களிடம் உறுதியை ஏற்படுத்தியுள்ளது.

செடிகள் உற்பத்தியில் நிறுவன‌ ஊழியர்களின் தன்னார்வம்

a-movement-that-started-with-a-seed-corporate-volunteers

2009, ஏப்ரல் 9, அன்று பசுமைக்கரங்கள் இயக்கத்துடன் இணைந்து லார்சன் அன்ட் டூப்ரோ (L&T) நிறுவனம் தனது சென்னை நிறுவன வளாகத்தில் நாற்றுப் பண்ணையை துவங்கியது. L&T யின் தன்னார்வலர்கள் அலுவலக வேலை நேரம் முடிந்த பிறகு மற்றும் வார இறுதி நாட்களில் தங்களின் நேரத்தை ஒதுக்கி செடிகளை பார்த்துக்கொள்ள துவங்கினர். இதுவரையில் 3,00,000 த்திற்கும் மேலான செடிகளை உற்பத்தி செய்துள்ள இந்நிறுவன பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் மரம் வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

ஈஷாவின் நாற்றுப் பண்ணைகள், ஸ்கோப் இன்டர்நேஷனல், இநாட்டிக்ஸ் மற்றும் IBM போன்ற நிறுவனங்களுடன் தொடர்ந்து நல்லுறவுடன்‌ செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாட்களில் இந்நிறுவனங்களின் ஊழியர்கள் தன்னார்வத்துடன் நாற்று உற்பத்தியில் ஈடுபடுகின்றனர். ஊழியர்களில் பலர், தங்களுடன் தங்கள் குடும்பத்தினரையும் உதவிக்கு அழைத்து வந்து உற்சாகத்துடன் பங்கேற்கின்றனர்.

நாற்றுப் பண்ணையில் ஒரு நாள் முழுவதும் தனது நேரத்தை பகிர்ந்து கொண்ட ஊழியர் ஒருவர் தனது அனுபவம் பற்றி இவ்வாறு பகிர்ந்து கொண்டார். "செல்வம், பணம், வீடு மற்றும் பல பொருட்களுக்காகவும் நாம் கடுமையாக உழைக்கிறோம், ஆனால் அடுத்த தலைமுறைக்கு இது போதுமா? இல்லை. இவை எல்லாமே இரண்டாம் பட்சம்தான். நாம் அவர்களுக்கு சுத்தமான காற்றும், நீரும் கிடைக்கும்படி செய்ய வேண்டும், இதுதான் எல்லாவற்றுக்கும் முக்கியமானது."

தங்களின் தன்னார்வத்தில், செயலில் இறங்கும் ஊழியர்கள் முழு ஈடுபாட்டுடன் செடிகளை வளர்க்கத் துவங்குகின்றனர். வருங்கால தலைமுறையினருக்காக சற்றே மேம்பட்ட உலகை உருவாக்க உதவினோம் என்ற நிறைவு இதயத்தில் பொங்க நாளினை நிறைவு செய்து விடைபெறுகின்றனர்.

பசுமை விழிப்புணர்வு

தொடர்ந்த இதுபோன்ற கூட்டு முயற்சிகள் மரங்களுடன் நமது உறவின் முக்கியத்துவத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் இயக்கத்தின் விதையாக அமைந்தது. பொதுமக்களிடம் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்பது தற்போது பல நிலைகளிலும் நடந்துவருகிறது. பள்ளிகள் முதல் திருமணங்கள் வரை மக்கள் கூடுமிடம் அனைத்துமே பசுமைக்கரங்களின் களமாக மாறியிருக்கிறது. a-movement-that-started-with-a-seed-offering-sapling-on-special-occasions

பசுமைக் கரங்களிடம் இருந்து பெறப்படும் நாற்றுகளில் முக்கால் பாகத்திற்கு மேல் திருமண நிகழ்வுகளில் விநியோகமாகிறது. விசேஷங்களில் நாற்றுகளை விநியோகம் செய்ய பசுமைக்கரங்கள் இயக்கத்தின் சார்பில் ஒரு சிறு பதாகையுடன் தனித்த இடம் விழா வளாகத்தில் அமைக்கப்படும். தன்னார்வத் தொண்டர் ஒருவர் வந்திருந்து, அங்குள்ள செடிகளின் பயன்களையும், தன்மையையும் விருந்தினர்களிடம் விளக்கி அவர்களுக்கு செடிகளை நடுவதற்கு வழங்குவார். செடிகளை நடவு செய்து வளர்க்க விரும்பும் விருந்தினர்களுக்கு மட்டுமே நாற்றுகளை வழங்குவதை பசுமைக்கரங்கள் இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஈஷா நாற்றுப் பண்ணைகள், பசுமைப் பள்ளி இயக்கம் மூலம் பள்ளிகளுடனும் நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது. பசுமைக்கரங்கள் இயக்கம், தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைந்து 2011 ம் ஆண்டு பசுமைப் பள்ளி இயக்கம் துவங்கியது. பள்ளி மாணவர்களிடம் "பசுமை விழிப்புணர்வு" ஏற்படுத்தும் நோக்கோடு சுற்றுச்சூழல் பற்றிய மனப்பான்மையில் மாற்றம் ஏற்படுத்தி நாற்றுகள் உற்பத்தி மற்றும் செடிகள் நட மாணவர்களை ஊக்குவித்து வாய்ப்பு வழங்குகிறது.

நமது இந்த முயற்சி மாபெரும் வெற்றியாக அமைந்தது. ஜனவரி 5, 2015 அன்று தமிழக பள்ளிக் கல்வி துறையுடன் இணைந்து ஒரே நாளில் மாணவர்கள் 9,00,000 மரக்கன்றுகளை நடுவதற்கு நாம் உதவினோம். இந்த இயக்கத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், குழந்தைகளே செடிகளை நடுவது, நீரூற்றி வளர்ப்பது‌, பராமரிப்பது என ஈடுபடுவதால் இயற்கை மீது அவர்களிடம் ஆழமான இணக்க உணர்வு ஏற்படுகிறது. பொதுமக்கள் இணைந்து குழுவாக, குடியிருப்போர் நலச்சங்கம், பொது அமைப்புகள் வாயிலாக தங்களுடன் இணைந்து மரம் நடுவதையும் பசுமைக்கரங்கள் இயக்கம் வரவேற்கிறது. செடிகள் நடப்பட்டதும், அந்தந்த பகுதி மக்களை ஊக்குவித்து, செடிகளை வளர்த்து பராமரிக்கும் பொறுப்பு அவர்களிடமே வழங்கப்படுகிறது.

விவசாயிகளை காக்க வேளாண் காடுகள் இயக்கம்

நாற்றுப் பண்ணைகளின் முக்கியமான அம்சத்தில் ஒன்றாக, தற்போது இந்திய விவசாயிகளின் இடையறாது சந்திக்கும் இக்காட்டான சூழ்நிலையை வெற்றி கொள்ள உதவுவதும் இடம்பெறுகிறது. தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை நேரடியாக சந்திக்கும் விவசாய துறையில்தான் இந்திய மக்களின் பெரும் பகுதியினர் பங்கெடுக்கின்றனர். உற்பத்தி குறைவு, நிலையற்ற பருவகாலம் மற்றும் சந்தை நிலவரங்களும் சேர்ந்து விவசாயிகளின் உற்பத்தியிலும் பொருளாதார நல்வாழ்விலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. a-movement-that-started-with-a-seed-agroforest

குறைந்தபட்ச பராமரிப்பு இருந்தாலே மரங்கள் நல்ல வருமானம் தருபவை என்பதை பசுமைக்கரங்கள் இயக்கம் உணர்ந்துள்ளது. எனவேதான், தேக்கு, கருங்காலி, செம்மரம், மகோகனி, பட்டு பருத்தி, பலா, நெல்லி, மா மற்றும் நிழல் தரும் மரங்களை வேளாண் காடுகள் திட்டத்தின் ஒரு பகுதியாக நட விவசாயிகளுக்கு பரிந்துரைக்கிறது. பசுமைக்கரங்கள் இயக்கத்தின் திட்டமிட்ட அணுகுமுறையால் திட்டத்தின் செயலாக்கத்தில் விவசாயிகளுக்கு அடிப்படையான முக்கிய பங்கு வழங்கப்பட்டு இருக்கிறது. ஏனென்றால்,அவர்களிடம் தானே நிலம் இருக்கிறது. செடிகளை நாடுவதுடன், அவற்றின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பை பார்த்துக்கொள்வதும் விவசாயிகள்தானே.

வேளாண் காடுகள் என்பது புதிதாக தோன்றிய ஒரு திட்டமல்ல. விவசாயிகள் நலன் காக்கத் துவங்கிய ஆரம்ப காலகட்டத்திலேயே பசுமைக்கரங்கள் இயக்கத்திற்கு வேளாண் விஞ்ஞானி டாக்டர். நம்மாழ்வார் ஐயா அவர்களின் ஊக்கமும் உற்சாகமும் கிடைத்தது. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை விவசாயத்தில் தனது ஐம்பது ஆண்டு கால வாழ்வை அர்ப்பணித்தவரான நம்மாழ்வார் ஐயா திட்ட இயக்குநராக இருந்து, பாரம்பரிய மரக்கன்றுகளை தேர்வு செய்வது, பொதுமக்களின் ஈடுபாட்டை கொண்டு வருவது என பசுமைக்கரங்கள் இயக்கம் செல்ல வேண்டிய பாதைக்கு வழிகாட்டினார். மரங்கள் நடுவது மற்றும் ஈஷா விவசாய இயக்கம் இவற்றில் ஐயா நம்மாழ்வாரின் பங்கு அளப்பரியது. dr.nammalvar

வேளாண் காடுகள் மற்றும் இயற்கை விவசாய முறைகள் இரண்டையும் இணைத்து முழுமையான பயிற்சியளிக்கும் திட்டம் மூலம் பசுமைக்கரங்கள் இயக்கம் விவசாயிகள் தங்கள் மண்ணில் மீண்டும் சமநிலையை கொண்டு வர உதவுகிறது. இதனால் நேரடியாக விவசாயிகள் பலனடைவதுடன், மண்ணின் வளம் அதிகரிப்பதால் மண் மழைநீரை தக்க வைத்துக் கொண்டு, நிலத்தடி நீர்மட்டம் உயரவும் ஆறுகள் புத்துயிர் பெறவும் உதவுகிறது.

இன்னும் பிரம்மாண்டமாக

இந்த 15 ஆண்டுகால பயணத்தில், பசுமைக்கரங்கள் இயக்கம் சமுதாயத்தில் பல்வேறு பிரிவினரிடையே இந்தியாவின் பசுமைப் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரு நோக்கத்தை முன்னிருத்தி ஒற்றுமையை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுச்சூழல் குறித்த கவனம் செலுத்துவதை ஒரு கலாச்சாரமாக ஏற்படுத்துவது நாம் வாழும் இன்றைய காலகட்டத்திற்கு அத்தியாவசியமான தேவையாக உருவெடுத்துள்ளது. நம் நாடு மட்டுமின்றி இந்த உலகமும் இன்று சுற்றுச்சூழல் பாதிப்புகளால் அபாயகரமான சூழ்நிலையை சந்திக்கிறது. சரித்திரத்தில் இதுவரையில் இல்லாத ஒரு அவசரநிலையை உலகமக்களான நாம் அனைவருமே சந்திக்கிறோம். இப்போது நாம் செயல்படாவிட்டால், அதற்கான விலையைக் கொடுத்தே ஆகவேண்டும்.

இந்த சூழ்நிலையை மாற்றியமைக்க வேண்டிய தேவையும், காலமும் வந்துவிட்டது. இதனால்தான் காவேரி கூக்குரல் இயக்கம் துவங்கியது. காவேரி நதியை மீட்க விவசாயிகள் மூலம் 242 கோடி மரங்களை நடுவதற்கு உதவியாக காவேரி கூக்குரல் இயக்கம் இருக்கும்.

இந்த முயற்சியில் நாற்றுப் பண்ணைகள் பெரும்பங்காற்ற இருக்கின்றன. 242 கோடி நாற்றுகளை உற்பத்தி செய்யும் பிரம்மாண்ட இலக்கை நோக்கி தங்களின் பணிகளை விரிவுபடுத்தி வருகின்றன. இந்த இயக்கத்தின் செயல்களில் நீங்களும் தன்னார்வத் தொண்டராக பங்கேற்க முடியும், அல்லது ஒரு மரத்திற்கு ரூ.42 வீதம் உங்களுக்கு விருப்பமான எண்ணிக்கையில் மரங்களை விவசாயிகள் நடுவதற்கு உதவ முடியும். காவேரி கூக்குரல் இட்டு அழைக்கிறாள். உங்கள் இதயத்திற்கு கேட்கிறதா?

caca-blog-banner