ஈஷா யோக மையம், யானைகள் வழித்தடத்தில் அமைந்துள்ளதா? உண்மை என்ன?
யானை வழித்தடம் மற்றும் யானை இருப்பிடம் பற்றிய புரிதல் இன்மையை சுட்டிக்காட்டும் இந்த பதிவு, ஈஷா இந்த இரண்டு பகுதியிலும் அமையவில்லை என்பதற்கும், ஈஷா வனப்பகுதியை ஆக்கிரமிக்கவில்லை என்பதையும் ஆணித்தரமான ஆதாரங்களுடன் விளக்குகிறது!
குற்றச்சாட்டு : ஈஷா, வனப்பகுதியை ஆக்கிரமித்துள்ளது!
உண்மை : ஈஷா யோக மையம் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பட்டா நிலத்தில் மட்டுமே செயல்படுகிறது.
ஆதாரம் 1 : வனத்துறை நிலத்தை ஈஷா ஆக்கிரமித்துள்ளதா என்கிற கேள்விக்கு வனத்துறையே பதில் தந்துள்ளது. மண்டல வனப்பாதுகாப்பு காவலர் தலைமையிலான வனத்துறை அலுவலர்கள் ஈஷா வளாகத்தை ஆய்வுசெய்தனர். அதன்பின், முதன்மை வனப் பாதுகாவலருக்கு ஓர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ஈஷா யோக மையம், பட்டா நிலத்தில் மட்டுமே அமைந்துள்ளது என்றும், வனப்பகுதியில் எவ்வித ஆக்கிரமிப்பும் ஈஷா செய்யவில்லை என்றும் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர். (Document reference number: CFCIT/07/2013)
குற்றச்சாட்டு: யானைகளின் வழித்தடத்தில் ஈஷா யோக மையம் அமைந்துள்ளது.
உண்மை: ஈஷா யோக மையம் யானைகளின் வழித்தடத்தில் இல்லை.
ஆதாரம் 1: கோயம்புத்தூர் மாவட்டத்தில், எங்குமே யானைகளின் வழிதடங்கள் இல்லை என்று தமிழ்நாடு வனத்துறை அறிவுத்துள்ளது.
ஈஷா யோக மையம் அமைந்திருக்கும் சுற்றுவட்டாரத்தில் மொத்தம் ‘0’ யானைகளின் வழித்தடங்கள் உள்ளன என்று தமிழ்நாடு வனத்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஈஷா யோக மையம் அமைந்திருக்கும் கோவை மாவட்டதில் எவ்விடத்திலுமே யானை வழித்தடங்கள் இல்லை என்றும் அறிவித்திருக்கிறது. ஈஷா மையம் இதை 2013ல் தகவல்பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.
நீலகிரி மாவட்டம்தான் அருகில் இருக்கும் யானைகளின் வழித்தடங்கள் என்று வனத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டிற்குள் 5 யானை வழித்தடங்கள் உள்ளன என்று வனத்துறையின் நிபுணர்குழு அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இவை அனைத்துமே நீலகிரி பகுதியிலுள்ள சேகூர் சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ளன என்றும், அவைகள் மசினங்குடியிலுள்ள சிங்காரா, மேவினஹள்ளாவில் செம்மநத்தத்திலும், பொக்காபுரத்திலும், க்லெங்கோரின் மற்றும் வாழ்தோட்டத்திலும் (Singara- Masinagudi, Chemmanatham-Mavinhalla, Bokkapuram-Mavinhalla, Glencorin, and Valzthottam) உள்ளன என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த 5 தடங்களுமே நீலகிரி மாவட்டத்தில் உள்ளது, கோயம்பத்தூர் மாவட்டத்தில் இல்லை.
ஆதாரம் 2: சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்புத் துறையின் அமைச்சகத்தினால் அடையாளம் காட்டப்பட்டுள்ள யானை வழித்தடங்களின் பட்டியலிலும் ஈஷா இருக்கும் பகுதிகள் இருக்கவில்லை.
2010ல், சுற்றுச்சூழல் மற்றும் வனப்பாதுகாப்புத் துறையின் ஒரு அமைப்பான யானைகள் பாதுகாப்புப்படை ‘கஜா’ என்ற யானைகளை பாதுகாக்கும் முறைகளுக்கான ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த ஆய்வு தென்னிந்தியாவின் 10 முதன்மையான மற்றும் 10 இரண்டாம் நிலை யானை வழித்தடங்களை அடையாளம் காட்டியுள்ளது. ஈஷா இந்த யானை வழித்தடங்கள் எதிலும் அமைந்திருக்கவில்லை.
ஆதாரம் 3: WTI வெளியிட்டுள்ள யானைகள் வழித்தடங்களில் ஈஷா மையம் அமைந்துள்ள பகுதி இல்லை
2005ல் இந்திய வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான WTI, இந்தியாவின் ஒரு முன்னணி இயற்கை பாதுகாப்பு அமைப்பு, ஆசிய இயற்கை பாதுகாப்பு அமைப்பு (ANCF), மாநில வனத்துறையின் பங்களிப்புடன் யானைகளுக்கான திட்டம் மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் இணைந்து தங்களது முதல்பதிவான ‘Right of Passage: Elephant Corridors of India” எனும் இந்தியாவில் யானைகளின் வழித்தடங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட வழித்தடங்கள் என்ற பதிப்பில் இந்தியாவிலுள்ள 88 யானைகள் வழித்தடங்களின் தொகுப்பை வெளியிட்டுள்ளனர். இதன் இரண்டாம் பதிப்பு 101 வழித்தடங்களுடன் 2017ல் வெளியாகியுள்ளது. ஈஷா யோக மையத்தின்பெயர் இந்த 101 தடங்களிலும் இடம்பெறவில்லை.
யானைகள் வழித்தடங்களைப் பற்றிய இந்த ஆய்வு, இந்தியாவிலேயே மிகவிரிவான ஒன்றாகும். இந்த வழித்தடங்கள் அரசாங்கத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், இவை முக்கியமான யானை வழித்தடங்களாக முன்மொழியப்பட்டுள்ளன. இங்கே கொடுக்கப்பட்டுள்ள எல்லா பதிவுகளும் இணையதளங்களில் உள்ளன. சரிபார்த்துக்கொள்ளலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வரைபடங்களும் கோயம்புத்தூரில் யானைகளின் வழித்தடங்களாக WTIஆல் முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் ஈஷா யோக மையம் – யானை வழித்தடத்தில் மட்டுமல்ல – அதன் அருகாமையில்கூட இல்லை என்பதை இரண்டு வரைபடங்களிலும் காணலாம்.
சர்ச்சைக்குரிய கட்டிடங்கள் காணப்பட்டதாக அறிக்கை – ஈஷா மையத்தில் அப்படியொன்றும் ஒன்றுமில்லை!
தனியார் நிலம், கட்டிடங்கள் மற்றும் கிராமங்களும் இந்த வலசைப் பாதைகளில் உள்ளன என்று ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவை எதுவும் ஈஷா யோக மையத்துடனோ அல்லது ஈஷா சம்பந்தப்பட்ட எந்தவொரு இடத்துடனோ தொடர்புடையதல்ல.
ஆதாரம் 4: உலக இயற்கை பாதுகாப்பு நிதியமைப்பினால் (WWF) அடையாளம் காட்டப்பட்டுள்ள யானை வலசைப் பாதைகளிலும் ஈஷாவின் பெயர் இல்லை
WWF தனது ஆராய்ச்சியில் தமிழ்நாட்டில் யானைகள் வழித்தடங்களாக இருக்கக்கூடிய சில இடங்களை அடையாளம் காட்டியுள்ளது. இதிலும் ஈஷா யோக மையத்தின் பெயர் இல்லை.
யானை வலசைப் பாதை அல்லது வழித்தடம் என்றால் என்ன?
“யானைகளின் வழித்தடம் என்ற சொல்விளக்கத்திலேயே ஒரு தெளிவின்மை இருக்கிறது. இதனால் யானைகளின் இருப்பிடத்தை, யானைகளின் வழித்தடம் என்று தவறாக புரிந்துகொள்ளுதல் உள்ளது,” என்று WTI தன் அறிக்கையில் தெளிவாகக் கூறியுள்ளது.
யானைகளின் இருப்பிடங்களை வழித்தடங்கள் என்று தவறாகப் புரிந்துகொள்ளக்கூடாது என்று இந்த அறக்கட்டளை மேலும் தெளிவுபடுத்துகிறது. யானை வழித்தடம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு யானைகள் இடம் பெயரக்கூடிய, சுமார் 100 மீட்டரிலிருந்து 1 கிமீ அகலமுள்ள குறுகிய பாதைகளாக இயற்கையிலேயே அமைகின்றது. இந்த குறுகிய பாதைகள், யானைகளுக்கான வாழ்விடங்களாக இருக்க சிறிதளவும் தகுதியற்றவை.
யானை வழித்தடங்களுக்கு உண்டான விதிமுறைகளும், நியதிகளும் இந்த குறுகிய பாதைகளுக்கு மட்டும் பொருந்துமே தவிர, பொது இடங்களுக்கோ பிற பகுதிகளுக்கோ பொருந்தாது.
ஈஷா யோக மையம் வனத்துறை எல்லைக்குள் இல்லை என்றும் யானைகளின் இருப்பிடத்திலோ, வழித்தடத்திலோ இல்லை என்பதும் இந்திய WTI, WWF மற்றும் தமிழ்நாடு வனத்துறை ஆய்வுகளிலிருந்து தெளிவாகிறது.