சத்துக்கள் நிறைந்த சாமை அரிசியின் பயன்கள்! (Samai Rice Benefits in Tamil)
நம் பாரம்பரிய சிறுதானியங்களில் சுவையும் சத்தும்மிக்க சாமை அரிசியை பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாருங்கள்.
கொல்லைப்புற இரகசியம் தொடர்
மகேந்திர சிங் தோனி மீண்டும் கேப்டனாக களமிறங்க, கடைசி ஓவரில் மைதானத்தைத் தாண்டி செல்லும் சிக்ஸர்களைக் காணும் ஆவலில் நான் ஐபிஎல் போட்டிகளில் மூழ்கிக்கிடந்த ஒரு மாலைவேளையில், அத்தி பூத்தாற்போல எனது வீட்டிற்கு வருகைதந்தாள் உமையாள் பாட்டி.
பேரன்-பேத்திமார்கள் கோடைவிடுமுறைக்கு பாட்டி வீட்டிற்கு வந்திருந்ததால், உற்சாகமும் கும்மாளமும் நிறைந்திருந்த பாட்டியின் வீட்டிற்குச் சென்றால், "என்னை எங்கே கண்டுகொள்ளப் போகிறார்கள்?!" என்ற ஒரு தப்புக்கணக்கில், நான் கடந்த சிலநாட்களாக பாட்டி வீட்டிற்குப் போகாமல் இருந்தேன். இப்போது பாட்டி என்னைத்தேடி என் வீட்டிற்கு வந்தது, எனக்கு இன்ப அதிர்ச்சியை அளித்தது.
ஐபிஎல் போட்டியின் கடைசி ஓவரை ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்த எனது பின்னால், அரவமில்லாமல் வந்து நின்றுகொண்டிருந்த பாட்டி, என்னுடன் சேர்ந்து போட்டியைக் கண்டுகளித்தார்.
"என்னப்பா யார் ஜெயிச்சா, இந்தியாவா ஆஸ்திரேலியாவா?" பாட்டி எனக்குப் பின்னாலிருந்து கேட்டபோதுதான் பாட்டி வந்திருந்ததை நான் அறிந்தேன். பாட்டியைப் பார்த்ததும் எனக்கு சந்தோஷத்தில் வார்த்தைகள் எதுவும் வரவில்லை.
எனது மனநிலையைப் புரிந்துகொண்ட பாட்டி,
"என்னப்பா ஷாக் ஆகிட்டியா? ஊர்ல இருந்து வாண்டுகள் வந்திருந்ததால கொஞ்சநாளா நானும் ரொம்ப பிசிதான். ஆனா அவங்க லீவு முடிஞ்சு ஊருக்கு போயிருவாங்க. நீதான் என்கூட எப்பவும் இருப்ப. என்னைவந்து அப்பப்போ பார்த்துப்ப. உன்னை எப்படி கண்டுக்காம விடமுடியும்."
பாட்டியின் வார்த்தை என்னை நெகிழச் செய்த அதேவேளையில், பாட்டி கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸிலிருந்து வந்த பிரியாணி வாசனையும் என்னை வெகுவாக ஈர்த்தது.
பாட்டி என்னைப் பார்க்க வெறுங்கையோடு வராம சாமை அரிசியில் பிரியாணி செய்து கொண்டுவந்து கொடுத்தார். இதுவரை நான் சாப்பிட்ட பிரியாணிகளிலேயே சங்கரன்கோவில் மற்றும் திண்டுக்கல் பிரியாணி தான் எனது ஞாபகத்தில் ருசியான பிரியாணியாக இருந்தது. ஆனால், அன்று முதல் உமையாள் பாட்டியின் சாமை அரிசி பிரியாணி, முதலிடத்திற்கு வந்துவிட்டது.
பாட்டியிடம் பிரியாணியின் ருசி பற்றி நான் கேட்க முயன்றபோது, பாட்டி பிரியாணி செய்யும் பக்குவத்துடன் சாமை அரிசியின் ஆரோக்கிய நன்மைகளையும் எடுத்துரைத்தார்.
சாமையின் வரலாறு
"சிறுதானிய தாவரங்கள்ல ரொம்ப சிறப்புவாய்ந்த தானியமான சாமை, இந்தியாவில்தான் அதிகமா விளையுது. இதை ஆங்கிலத்தில் 'Little Millet'னு சொல்வாங்க. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே தெற்கு ஆசியக் கண்டத்துல தோன்றியதா சொல்லப்படுற சாமை, பழங்காலத்திலேயே தமிழர்களோட உணவா இருந்ததா பண்டைய கல்வெட்டுகள்லயும், தொல்பொருள் ஆராய்ச்சிகள்லயும் சொல்லப்பட்டிருக்கு.
இப்போ சாமையை இந்தியா, இலங்கை, நேபாளம், மலேசியா, மேற்கு மியன்மார் போன்ற நாடுகள்ல பயிரிட்டு வர்றாங்க" பாட்டி சாமையின் வரலாறு பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது, பாட்டி கொண்டுவந்திருந்த சாமை பிரியாணியின் பாதியை நான் ருசித்து முடித்திருந்தேன்.
தொடர்ந்து பாட்டி சாமையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள் பற்றி கூறலானார்.
Subscribe
சாமை அரிசியின் பயன்கள் (Samai Rice Benefits in Tamil)
சாமையில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்:
புரதச்சத்து, கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள், மக்னீஷியம், சோடியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, துத்தநாகம், நார்ச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற எண்ணற்ற சத்துக்கள் சாமையில் அடங்கியிருப்பதைத் தெரிவித்த பாட்டியிடம், சாமையின் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதைக் கேட்க ஆர்வமானேன்.
நார்ச்சத்து:
“அதிக நார்ச்சத்து கொண்ட தானியமா இருக்கிறதால, இரத்தத்துல சர்க்கரை அளவை சீரா வைக்க சாமையரிசி உதவுது.”
மலச்சிக்கல்:
“சாமையரிசியை உணவில சேர்த்துட்டு வரும்போது மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.”
எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும்:
“சாமையில இயற்கையான சுண்ணாம்புச் சத்து இருக்கறதால எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல பலனளிப்பதா இருக்குது. எலும்புகளுக்கு ஊட்டமளிக்க இது உதவுது.”
புரதச்சத்து, இரும்புச்சத்து:
“இதில் புரதசத்து அதிகமா இருக்கறதால குழந்தைகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் நல்லது. சாமை உடலுக்கு வலிமையைத் தருது. சாமையில இரும்புச்சத்து அதிகமா இருக்குது.”
இதயம் சம்பந்தமான நோய்கள்:
“சாமையில உடலுக்கு நன்மை தரும் கொழுப்புகள் அடங்கியிருப்பதால இதயம் சம்பந்தமான நோய்கள்ல இருந்து நம்மை பாதுகாக்குது.”
உமையாள் பாட்டி சாமை அரிசியின் ஆரோக்கிய நன்மைகளைச் சொல்லி முடிப்பதற்குள், பாட்டி கொண்டுவந்திருந்த பிரியாணியை முழுமையாக உண்டுமுடித்து, அந்த டிபன் பாக்ஸை கழுவி, அதில் வீட்டில் அம்மா செய்துவைத்திருந்த சர்க்கரைப் பொங்கலை நிரப்பிக்கொடுத்து பாட்டிக்கு நன்றி சொன்னேன்.
புன்னகையுடன் வாங்கிக்கொண்ட பாட்டி, "நீ இன்னும் மேட்ச் ஜெயிச்சது இந்தியாவா ஆஸ்திரேலியாவான்னு சொல்லலையே?" என்று கேட்க,
"மஞ்சள் டி-சர்ட்னா ஆஸ்திரேலியா இல்ல பாட்டி, இது ஐபிஎல் போட்டி. இதுல எல்லா நாட்டுக்காரங்களும் இருப்பாங்க" என்றேன்.
"அப்படின்னா இது பயிற்சி ஆட்டமா? நம்ம நாட்டுக்காக விளையாடுற போட்டி வரும்போது சொல்லுப்பா!" என்று விடைபெற்றாள் பாட்டி.
மருத்துவ குறிப்பு: டாக்டர். சுஜாதா MD (S)
ஆரோக்யா சித்தா க்ளினிக், சேலம்.
சிறுதானியங்கள் பற்றிய பிற பதிவுகள்:
1) ராகி வழங்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்! 4 எளிய ராகி ரெசிபிகளுடன்!
கேழ்வரகு அல்லது ராகி எனும் சிறுதானியத்தின் வரலாறு, 7 ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ராகி ரெசிபிகள் என ராகி பற்றிய முக்கியக் குறிப்புகள் இப்பதிவில்...
2) தினை அரிசி நன்மைகள் மற்றும் 6 சுவையான சமையல் குறிப்புகள்
எடை குறைதல், நீரிழிவு நோய் கட்டுப்படுவது மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கு துணைநிற்பது உட்பட தினையின் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. இதில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் அதிகமாக உள்ளன. மேலும், இதன் சுவையின் காரணமாக பல்வேறு சமையல் பதார்த்தங்களில் அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு அற்புதமான மாற்றாக அமைகிறது.
3) வியக்க வைக்கும் வரகு அரிசி பயன்கள்!
சிறுதானியங்களில் அதிக சத்தும் சுவையும்கொண்ட வரகு அரிசியின் ஆரோக்கிய பலன்கள் பற்றி உமையாள்பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாருங்கள்.
4) குதிரைவாலி அரிசி பயன்கள் மற்றும் 2 எளிய ரெசிபிகள்
மலச்சிக்கல், உடல் எடை, நீரிழிவு, இதய ஆரோக்கியமின்மை என பல்வேறு பிரச்சனைகளிலிருந்து வெளிவர உதவும் சத்தான குதிரைவாலி அரிசியைப் பற்றி இந்தப் பதிவில் உமையாள் பாட்டி வாயிலாக அறிந்து கொள்வோம்!
5) கம்பு சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்!
நம் தென்பகுதிகளில் சிறுதானியங்களில் மிகவும் பிரசித்திபெற்ற கம்பு, அதிக சத்துடையதாக, ஆரோக்கிய பலன்களை வழங்கக்கூடியதாக உள்ளது. கம்பு தானியம் பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டறிய வாருங்கள்.
6) சோளம் பயன்கள் மற்றும் 4 சுவையான சோளம் ரெசிபிகள்
கம்புக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் சோளத்தை தங்கள் அன்றாட உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சோளத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மேலும் நான்கு சுவையான சோளம் ரெசிபிகளையும் அறிந்து கொள்ளுங்கள்.