ஈஷா யோக மையத்தில் யாருக்கும் கொரோனா நோய் பாதிப்பு இல்லை
கோவை ஈஷா யோக மையத்தில் கொரோனா நோய் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை.
ஈஷா யோக மையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் வந்து செல்லும் நிலையில், உலக சுகாதார அமைப்பு (World Health Organisation) கொரோனா வைரஸை (COVID-19) கொள்ளை நோய் தொற்றாக (pandemic) அறிவிக்கும் முன்னரே, மத்திய, மாநில அரசுகள் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் முழு அடைப்பை, ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் முன்னதாகவே, ஈஷா யோக மையம் விரைந்து செயல்பட்டு தேவையான வழிகாட்டல் நெறிமுறைகளை உருவாக்கி, கடைபிடிக்கத் துவங்கியது. கொரோனா பாதிப்பு முதலில் தென்படத் துவங்கிய சீனா, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் இதர நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் மற்றும் குழுவினரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்கள் பயணத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டது. அதுமட்டுமின்றி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள் மற்றும் விமான மாற்றல் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தவர்கள், பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
அப்போது முதலே கட்டாய பரிசோதனை நடைமுறைகளும், அரசு அறிவித்துள்ள சமுதாய இடைவெளி நெறிமுறைகளும் ஈஷா யோக மையத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மற்ற நாடுகளிலிருந்து ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்த வெளிநாட்டினரை, 28 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஈஷா யோக மையத்தில் தங்கியுள்ள ஆசிரமவாசிகள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள், ஈஷாவின் கடுமையான ஆரோக்கியம் மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள், சாதாரண நாட்களிலேயே பின்பற்றுவது வழக்கமான ஒன்றுதான். இப்போது அனைவருக்குமே இரண்டு நாட்களுக்கு ஒருமுறை கட்டாய உடல்நலப் பரிசோதனை நடைபெற்று வருகிறது. இந்த வழிகாட்டுதல் நெறிமுறைகள் காவல் பணியில் இருப்போர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் களப் பணியில் அமர்த்தப்பட்டுள்ள ஈஷா மையத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தும். மேலும் ஈஷா யோக மைய வளாகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கை சுத்திகரிப்பான்கள் (Hand sanitizer) வைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் முதலே, மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்து, பரிசோதனைகள் மற்றும் சோதனைகளை நடத்தி வருகிறார்கள். இந்தப் பரிசோதனைகளில் இதுவரையில் யாருக்கும் நோய் தொற்று இருப்பதாக கண்டறியப் படவில்லை.
சமீபத்தில், ஒருவேளை கொரோனா நோய் தொற்று கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு செல்லும் நிலை ஏற்பட்டால், நோயைக் கட்டுப்படுத்த மைய வளாகத்தை தமிழக அரசுக்கு ஈஷா யோக மையம் தாமாக முன்வந்து வழங்க விருப்பம் தெரிவித்திருந்தது. ஈஷா யோக மையம் அனைத்து நோய் பாதிப்பு ஆய்வு விதிமுறைகளையும் கடைபிடிக்க முழுமையாக தயார்நிலையில் இருப்பது மட்டுமின்றி, தனிமைப்படுத்தல் விதிகள் மற்றும் சமுதாய இடைவெளியை பின்பற்றுவதில் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Subscribe