மோட்டார் சைக்கிளில் சத்குரு - அமெரிக்க ஆன்மீகத்தின் அடித்தடம் தேடி
சத்குரு வடஅமெரிக்காவில் புதுமையான மோட்டார் சைக்கிள் பயணத்தைத் துவங்கியுள்ளார் - அமெரிக்க பூர்வக்குடி மக்களின் ஆன்மீகத்தையும் மறைஞானத்தையும் ஒரு யோகியின் பார்வையில் ஆராய்ச்சி செய்யும் ஒர் உன்னதப் பயணம்.
ஒரு நிலத்தின் மரபு அங்கு வாழும் மக்களிடம் தாக்கத்தை உண்டு பண்ணுமா? நூறாண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மனிதர்களுக்கு நிகழ்ந்த துயரங்கள் எவ்வாறு நிகழ்காலத்தை மற்றும் எதிர்காலத்தை பாதிக்கும்? வாழ்க்கையைப் பற்றிய ஆழ்ந்த புரிதல் உடைய ஒரு மறைஞானியாய் இருந்தாலொழிய சிலர் மட்டுமே பதிலளிக்க முற்படும் சங்கடமான கேள்விகள் இவை.
Subscribe
அமெரிக்காவின் வெளிசூழல் மற்றும் உள்சூழலை ஆராயும் விதமாக துவங்கப்பட்டுள்ள 10,000 மைல் மோட்டார் சைக்கிள் பயணத்தில் சத்குரு டென்னசி மாகாணத்தில் தொடங்கி 15 மாநிலங்கள் வழியாக பயணித்து அதன் அமெரிக்க பூர்வக்குடி மக்களின் வரலாறு, கலாச்சாரம் மற்றும் வாழ்க்கைப் பற்றி ஆராயப் போகிறார்.
புலம்பெயர்ந்தவர்களின் வருகைக்குப் பிறகு, அமெரிக்கா உலக மக்களைத் தன் கரைக்கு வரவேற்றுள்ளாள் - புதுமையான கண்டுபிடிப்புகள், வர்த்தகம், சாகசங்கள் மற்றும் படைப்பாற்றல் கொண்டு நாட்டின் தலையெழுத்தை திருத்தியபடி 200 வருடங்களாக தன் நாட்டை கட்டமைத்துள்ளாள். 15-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்னர் இருந்த அமெரிக்காவின் பூர்வீகத்தை, அதன் மரபை ஆராயும் ஒரு முயற்சிதான், "மோட்டார் சைக்கிளில் ஒரு யோகி."
அமெரிக்க ஈஷா யோக மையத்தை பிரமிக்கத்தக்க காட்சி அமைப்புகள் கொண்ட கம்பர்லேண்ட் பீடபூமியில் சத்குரு அவர்கள் உருவாக்கியுள்ளார். ஒரு காலத்தில், இந்த பூமி "செரோகி பழங்குடி இன" அமெரிக்கர்களுக்கு உரித்தானதாக இருந்தது. சத்குரு இதைப் பற்றி பேசும்போது, "இந்த நிலத்தின் அழகால் நான் ஈர்க்கப்படவில்லை, மாறாக இங்குள்ள வேதனை தான் என்னை இங்கு இழுத்தது. 1999-ஆம் ஆண்டு சென்டர் ஹில் ஏரியில் நான் இருந்தபோது, அவ்விடத்தில் வலியில் துடித்தபடி உறைந்து போயிருந்த ஒர் ஆன்மாவை நான் சந்திக்க நேர்ந்தது. அப்போது இருந்துதான் இந்த நிலத்தின் பல பகுதிகளில் ஆழமான வேதனை குடி கொண்டுள்ளத்தை நான் கவனிக்க துவங்கினேன். வரலாற்று ரீதியாக இந்த நிலப்பகுதி "கண்ணீரின் வழித்தடங்கள்" என்று அழைக்கப்படுவதைப் பற்றி வெகுகாலத்துக்குப் பிறகே எனக்குத் தெரிய வந்தது. தங்களை சுற்றியுள்ளவையோடு ஒத்திசைவில் இருப்பவருக்கு, அவர்கள் எங்கே அமர்ந்தாலும் நின்றாலும், அவற்றின் தன்மை ஒட்டிக் கொள்கிறது - அது மகிழ்ச்சியாக இருந்தாலும் சரி துன்பமாக இருந்தாலும் சரி."
உலக மக்களின் கற்பனைகளையெல்லாம் கட்டிப்போட்ட இந்த பழங்குடி கலாச்சாரத்தின் பல்லடுக்குகளை ஆழமாக ஆராயும் ஒரு முயற்சிதான் சத்குருவின் இந்த ஒரு மாத கால மோட்டார் சைக்கிள் பயணம். இயற்கையோடு நெருக்கமான தொடர்பில் இருப்பதற்கு பெயர் போன அமெரிக்க பழங்குடியினர் உள்ளார்ந்த புரிதலையும் மேம்பட்ட உள்ளுணர்வையும் கொண்டவர்களாக இருந்தனர். அதுவே இந்த தனித்துவம் பெற்ற கலாச்சாரத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் ஆள்கிறது.
அமெரிக்க ஈஷா யோக மையத்தில் துவங்கும் சத்குருவின் இந்தப் பயணம் செரோக்கீ நிலங்கள், கமான்சி பகுதிகள் மற்றும் வலிமைமிக்க மிசிசிப்பி பகுதிகளை உள்ளடக்கியது. அமெரிக்க மாநிலங்களான இல்லினாய்ஸ், மிசூரி, நியூ மெக்சிகோ, கொலராடோ மற்றும் சிலவற்றின் வழியாக பயணித்து மீண்டும் டென்னசி வந்தடையும் வகையில் இந்த பயணத்திட்டம் அமைந்துள்ளது.
ஆசிரியர் குறிப்பு: "மோட்டார் சைக்கிளில் ஒரு யோகி" பற்றி சத்குரு தமிழ்(Sadhguru Tamil) இன்ஸ்டாகிராமில் உடனடி தகவல்களைப் பெற்றிடுங்கள்.