உலகம் முழுவதும் தனிமையில் பயணம்? ஷாம்பவி மஹாமுத்ரா உதவி புரியும்
லெப்டினன்ட் சி.டி.ஆர். அபிலாஷ் டோமி சமீபத்தில் உலகம் முழுவதும், தனி ஒருவராக இடைவெளியில்லாத ஒரு முழுபடகோட்டப் பயணத்தை முடித்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இந்த சாதனையை நிகழ்த்தும்பொழுது அவர் எதிர்கொண்ட சவால்களை சமாளித்த விதம் மற்றும் ஷாம்பவி மஹாமுத்ரா எவ்வாறு அதற்கு உதவியது என்பதைப் பற்றிய அனுபவப் பகிர்வு.
கிரிக்கெட் வீர்ர்களுக்கு மட்டுமல்ல. உலகெங்கிலும் லட்சக்கணக்கான விசிறிகள் இவருக்கும் இருக்கிறார்கள். செய்தித்தாள்களும் ஈ மெயில்களும் யூ டியூபும் இவரைப் பற்றியே பரபரப்பாக பேசின. இரண்டு மாதங்களுக்கு பின் சுமார் 18000 இணையதளங்கள் இவரைப் பற்றி எழுதியிருக்கின்றன. ஃபேஸ் புக்கிலும் சுமார் 50000 லைக்குகளுக்கு மேல் வாங்கிய இந்த நிஜ ஆக்ஷன் ஹீரோ யார்?
இவர்தான் இந்திய கப்பற்படையை சேர்ந்த லெப்டிணண்ட் கமாண்டர் அபிலாஷ் டாமி - உலகம் சுற்றிய வாலிபர். படகில் உலகை வலம் வரும் தன் பயணத்தை, தனியாக, எந்தவித உதவியும் இன்றி 2012 நவம்பர் 1 ஆம் தேதி மும்பையில் துவக்கினார்.
அரபிக் கடலோரம் துவங்கிய இவரது படகு இந்தியப் பெருங்கடல் வழியாக பூமத்திய ரேகையை கடந்து கேப் லூயினை (cape leeuwin) டிசம்பர் 12ஆம் தேதி அடைந்தது.
புத்தாண்டில் சர்வதேச தேதிக் கோட்டில்! ‘சர்வதேச தேதி கோட்டி’ற்கு ஒரு பக்கம் இருக்கும்போது டிசம்பர் 31 ஆம் தேதி. கோட்டினை கடந்தவுடன் ஜனவரி 1 பிறக்கும். இந்த சாகச புத்தாண்டிற்கு பின்னர் பசிபிக் பெருங்கடல் வழியாக கேப் ஹார்னை (cape horn) ஜனவரி 26ஆம் தேதி அடைந்தார்.
கேப்டவுனில் சி.டி.ஆர். தாண்டே என்பவருடன்
இது போன்ற பயணங்களில் சரியாக நேரத்தை கடைபிடிப்பது மிகவும் கடினம். ஆனால் சரியாக கேப் ஹார்னை ஜனவரி 26ஆம் தேதி அடைந்த இவர் அங்கே மூவர்ணக் கொடியை ஏற்றி குடியரசு தினத்தை கொண்டாடி நம் நாட்டிற்கு பெருமை சேர்த்தார். பின்பு அட்லாண்டிக் கடலை நோக்கி படகு பயணித்தது. அப்போது கப்பலை இயக்கும் மோட்டார் பகுதியில் கசிவு ஏற்பட்டதை அபிலாஷ் கவனித்தார். ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் ஒரு முறை தண்ணீரை எடுத்து வெளியே ஊற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மணிக்கு 101 கிலோமீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசியது.
படகு கட்டுப்பாட்டை இழந்து மிக வேகமாக சென்றது. பாய்மரத்துணி கிழிந்தது. அதனை கழட்டிவிட்டு வேறொரு துணியை பொருத்தி, வீசும் காற்றில் நிலைமையை முழுவதுமாக சரி செய்ய 3 டிகிரி செல்சியஸ் குளிரில் அபிலாஷ் சுமார் 20 மணி நேரம் போராடினார்.
பின்னர் பிப்ரவரி 19 ஆம் தேதி அபிலாஷ் நன்னம்பிக்கை முனையை (cape of good hope) கடக்கும்போது காற்று மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் வீச ஆரம்பித்தது. சுமார் 10 மீட்டர் உயரமுள்ள பெரும் அலை படகை வேகமாக உலுக்கியது. என்ன செய்வதென்று தெரியாத அபிலாஷ் கப்பலின் மேல் கம்பியை பிடித்து தொங்கிக் கொண்டே சில மணி நேரம் பயணம் செய்தார்.
Subscribe
கரடுமுரடான கடல்கள்
மீண்டும் பலமாக வீசியகாற்று பாய்மரத்தின் இடது பக்கம் இருக்கும் துணியை தார் தாராக கிழித்து தகர்த்தெறிந்தது. கொந்தளிக்கும் கடல்! தனிமையில் அபிலாஷ்! எல்லாம் முடிந்து விட்டது என்றே நம்பினார். அபிலாஷுக்கு துணையாக சில கடல் பறவைகளும், பறக்கும் மீன்களும், டால்ஃபின்களும்தான் இருந்தன. வீசும் காற்று சற்று ஓய்ந்த பின், அவர் தான் இன்னும் உயிரோடு இருக்கிறோம் என்று சுதாரித்துக் கொண்டார்.
காற்று சில நேரங்களில் மிகவும் கடினமானதாக இருக்கும்.
மார்ச் மாதம் மீண்டும் இந்திய பெருங்கடலில்..
கடல் நீரை சுத்திகரிக்கும் இயந்திரம் பழுதுபட்ட நிலையில் படகின் தொட்டியிலிருந்த 200 லிட்டர் குடிநீரும் மாசுபட்டது. மினரல் வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரும் மாசுபட்டது.
கோடையின் வெப்பம்! தாகத்தில்.. நடுக்கடலில்.. அப்போது கொட்டும் மழையின் துளிகள் உயிர்த் துளிகளாக தெரிந்தன. கடல் நடுவே மழை நீர் சேகரிப்புத்திட்டம் தாகத்தை தணித்தது. அபிலாஷ் கடினமான சூழ்நிலையிலும் ஆனந்தமாகவே இருந்தார். உயிரை விழுங்கும் அலைகள் பெரிதாக எழும்போதும் அதனை பதட்டமின்றி தன் கேமராவில் பதித்துக் கொண்டிருந்தார்.
மார்ச் 31 ஆம் தேதி அந்த பயணம் முடிந்து அபிலாஷ் மீண்டும் மும்பை வந்தடைந்தார்.
நடுக்கடலில் 151 நாட்கள்! 40,000 கிலோ மீட்டர்கள்!
உலகை வலம் வந்த முதல் இந்தியர், 2 ஆம் ஆசியர், 79 ஆவது மனிதர்! பின்பு என்ன? கேமராக்கள் மைக்குகள் மற்றும் பத்திரிகையாளர்கள் கூட்டத்திற்கு நடுவே அபிலாஷ்..
“இந்த 151 நாட்களில் நான் இந்த கடல் மீது தீராத காதல் கொண்டுவிட்டேன். அந்த காற்றின் குளிரும் சூரியனின் வெப்பமும் அலையின் சப்தமும் இல்லாமல் இனி நிலத்தில் எப்படி நான் இருக்கப் போகிறேன் என்று தெரியவில்லை,” என்கிறார்.
இவரது வெற்றியின் ரகசியம்...
அபிலாஷ் சொல்கிறார், “சாதாரணமாக இது போன்ற பயணங்களின்போது உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும். மலச்சிக்கல் ஏற்படும். நான் படகிலேயே ஒரு நாள் கூட தவறாமல் ஷாம்பவி மஹாமுத்ரா தியானம் செய்து வந்தேன். பலரும் “இதுபோன்ற கடினமான பயணத்திற்கு என் உடல் எப்படி ஒத்துழைத்தது?” என்று கேட்கிறார்கள்.
என் பயணம் மிகவும் கடினமானது. மிகவும் மோசமான தருணங்களில் கூட நான் ஆனந்தமாகவே இருந்தேன். பிரச்சனைகளை பார்த்து என்னால் சிரிக்க முடிந்தது. படகில் என் முழுத்திறனையும் வெளிப்படுத்த முடிந்தது.
என் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் "ஈஷா யோகா" தான். அது என் உடலையும் மனதையும் மிகச் சிறந்த நிலையில் வைத்திருந்தது,” என்று ஆனந்தமாக பகிர்ந்து கொள்ளும் இவரை வரவேற்க மும்பை இந்திய நுழைவாயிலில் இந்திய ஜனாதிபதி மாண்புமிகு. திரு பிரணாப் முகர்ஜி நேரில் வந்திருந்தார்.
சுற்றும் உலகும் தூசாகும் நம் கைகளில் சக்தி இருந்தால்! வாழ்த்துக்கள் அபிலாஷ்.
ஆசிரியர் குறிப்பு: ஈஷா யோகா என்பது யோக அறிவியலிலிருந்து பெறப்பட்ட நல்வாழ்வுக்கான தொழில்நுட்பமாகும். உங்கள் வாழ்க்கை, உங்கள் பணியிடம் மற்றும் நீங்கள் வாழும் உலகத்தை உணர்ந்து அனுபவிக்கும் விதத்தில் உள்நிலை மாற்றத்தை ஏற்படுத்துவதுடன், ஒருவரின் உள்நிலை வளர்ச்சிக்கான முழுமையான கருவியாக இது வழங்கப்படுகிறது.
தன்னிலை மாற்றத்திற்கான சக்திவாய்ந்த செயல்முறைகள், பாரம்பரிய யோகத்தின் சாரம், வாழ்க்கையின் உன்னத அம்சங்களை உணர்ந்தறிவதற்கான தியானங்கள் மற்றும் தொன்மையான ஞானத்தின் ரகசியங்களை அறிவதற்கான உத்திகள் ஆகியவற்றின் மூலம் உங்கள் உள்ளார்ந்த திறனை வெளிக்கொணர்வதே இந்த வகுப்பின் நோக்கமாகும்.
ஈஷா யோகா வகுப்பு சுய-ஆய்வு மற்றும் தன்னிலை மாற்றத்திற்கான ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கி அதன்மூலம் ஆனந்தமான மற்றும் முழுமையான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.