2020 உலக பொருளாதார மாநாட்டில் (WEF) சத்குருவின் தியான வகுப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல்வேறு உலகத் தலைவர்களும் ஆளுமைகளும் பங்கேற்கும் 2020 உலக பொருளாதார மாநாட்டில், சத்குரு பங்கேற்கிறார். இந்நிகழ்வு குறித்த சில முக்கிய தகவல்களை தொடர்ந்து படித்தறியலாம்.
சுவிட்சர்லாந்தில் நடக்கும் உலக பொருளாதார கூட்டமைப்பின் (World Economic Forum) 50-ம் ஆண்டு மாநாட்டில் சத்குரு அவர்கள் பங்கேற்று தியான வகுப்புகளை நடத்த உள்ளார். மேலும், முக்கிய பேச்சாளர்களில் ஒருவராக பங்கேற்று அவர் உரை நிகழ்த்த உள்ளார்.
சர்வதேச அளவில் சக்திவாய்ந்த அமைப்பாக திகழும் உலக பொருளாதார கூட்டமைப்பு சார்பில் பொருளாதார உச்சிமாநாடு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அவ்வமைப்பின் 50-ம் ஆண்டு மாநாடு சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டாவோஸ் நகரில் ஜனவரி 21-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
Subscribe
இதில் அரசியல், வணிகம், கல்வி மற்றும் சர்வதேச அமைப்புகளில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க மற்றும் சக்திவாய்ந்த தலைவர்கள் உட்பட 3,000 பேர் பங்கேற்க உள்ளனர். குறிப்பாக, அமெரிக்க அதிபர் திரு.டொனால்ட் டிரம்ப், இங்கிலாந்து இளவரசர் திரு.சார்லஸ், பாகிஸ்தான் பிரதமர் திரு.இம்ரான் கான், சீனா குடியரசின் துணைத் தலைவர் திரு.ஹான் செங் உட்பட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ஐ.நா பொதுச்செயலாளர் திரு.அண்டோனியோ கட்டரஸ், சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund) மேலாண் இயக்குநர் திரு.கிரிஷ்டாலினா ஜார்ஜியாவா, உலக வர்த்தக கூட்டமைப்பின் (World Trade Organization) தலைவர் திரு. ராபர்ட் அசிவேடா, உலக சுகாதார அமைப்பு (World Health Organization) தலைவர் திரு. டெட்ரால் அந்தோனாம் ஜெப்ரியெசெஸ் உட்பட பல முக்கிய சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டில் உலகளவில் புகழ்பெற்ற சத்குரு அவர்கள் முக்கிய பேச்சாளராக பங்கேற்று பேச உள்ளார். மேலும், 3 நாட்கள் தினமும் காலையில் தியான வகுப்புகளை அவரே நேரடியாக நடத்த உள்ளார். விழிப்புணர்வுகான ரெட்ரீட் என்ற நிகழ்ச்சியையும் அரைநாள் நடத்த உள்ளார்.
இதுதவிர, ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் மற்றும் ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் சார்பில் துவக்கப்படும் 2030-ம் ஆண்டுக்குள் உலகளவில் 1 லட்சம் கோடி மரங்கள் நடும் புதிய முன்னெடுப்பிலும் சத்குரு அவர்கள் பங்கேற்று சிறப்புரை நிகழ்த்த உள்ளார். சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு தொடர்பான ஐ.நாவின் அடுத்த பத்தாண்டுக்கான திட்டத்தை செயல்படுத்துவதில் துணைபுரியும் வகையில் இந்த முன்னெடுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நதிகளை மீட்போம் இயக்கம், காவேரி கூக்குரல் இயக்கம், ஈஷா பசுமை கரங்கள் திட்டம் போன்ற பல்வேறு மிகப்பெரிய சுற்றுச்சூழல் திட்டங்களை சத்குரு சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். இதை அங்கீகரிக்கும் விதமாக சத்குரு இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு சத்குரு அவர்கள், 2006 முதல் 2009 வரை நடந்த உலக பொருளாதார மாநாடுகளில் பங்கேற்று உரை நிகழ்த்தியுள்ளார். அதேபோல், ஐ.நா., தலைமையகம், லண்டன் பாராளுமன்றம், கூகுள் தலைமையகம், போன்ற பல சர்வதேச அரங்குகளில் சத்குரு பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.