IYO-Blog-Mid-Banner  

கேள்வியாளர்: நமஸ்காரம் சத்குரு, நான் ஈஷாங்கா ஆசிரியருக்கான பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். ஈஷாங்கா என்பதன் அர்த்தம் என்ன? மேலும் எங்களிடம் இருந்து நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

சத்குரு: "ஈஷா" என்ற வார்த்தைக்கு "அனைத்துக்கும் அடிப்படையாய் இருக்கும் ஒன்று" என்று பொருள். ஏதுமில்லா வெறுமை நிலையே அனைத்துக்கும் அடிப்படையானது. இந்த உலகை பல ஒலி அதிர்வுகளாக நீங்கள் பார்த்தால், அப்போது அனைத்துக்குமே அடிப்படையாக இருப்பது மோனம் (நிசப்தம்) தான். இந்த உலகை பலவகையான வடிவங்களாக நீங்கள் பார்த்தால், வடிவமும் உருவமும் அற்றதே அதன் அடிப்படையாக இருக்கிறது. இந்த உலகை பல அளவீடுகளைக் கொண்டு நீங்கள் பார்த்தால், அளவற்றதே அதன் அடிப்படையாக இருக்கிறது. இந்த உலகை ஏதோ ஒன்றாகவோ அல்லது எல்லாமுமாகவோ நீங்கள் பார்த்தால், ஏதுமற்றதே அதன் அடிப்படை. படைத்தலுக்கு மூலமாக இருக்கும் அந்த உருவமற்ற தெய்வீகமே ஈஷா. அங்கா என்றால் அதன் அங்கமாக மாறுவது என்று அர்த்தம்.

எப்படியும் நீங்கள் இந்த படைத்தலுக்கு எது மூலமாக இருக்கிறதோ, அதன் அங்கமாகவே இருக்கிறீர்கள் - அதைப் பற்றிய விழிப்புணர்வுதான் உங்களிடம் இல்லை. மனிதர்களின் அறியாமை எத்தகையதெனில், ஒவ்வொரு மனிதருமே தன்னளவில் தனக்குத்தானே ஒரு உலகமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு சாதாரணமான பரிமாற்றமும் இவ்வளவு சிக்கலாக மாறுவதற்கான காரணம், ஒவ்வொரு மனிதரும் தன்னளவில் தானே ஒரு படைப்பாக இருப்பதினால்தான். அதுமட்டுமல்ல, படைப்பை விட தாமே பெரியவர் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். அவர்கள் அவ்வளவு பெரியவர்களாக இருப்பதால்தான், எந்த பக்கம் நகர்ந்தாலும் யாருடனாவது முட்டி மோதிக்கொள்கிறார்கள். அவர்களின் ஒவ்வொரு நாள் வாழ்க்கைப் பயணமும் ஆபத்தானதாக அமைகிறது. இதை முற்றிலுமாக நீக்க முடியாவிட்டாலும், நமது வகுப்புகள் மற்றும் பயிற்சிகள் மூலம், நாம் வரக்கூடிய ஆபத்துகளை குறைக்க விழைகிறோம். இதனால் இயற்கையாகவே மக்கள் தங்களின் உச்சபட்ச சாத்தியத்தை கண்டுணரும் வாய்ப்பு ஏற்படும்.

மூன்று எளிய வாழ்க்கைப் பாடங்கள்

எதுவே நடந்தாலும் சரி, ஒரு நாளின் முடிவில் உங்களின் முட்டாள்தனத்தைப் பார்த்து உங்களால் சிரிக்க முடிய வேண்டும் - மற்றவரைப் பார்த்து அல்ல. இந்த எளிய பயிற்சியை ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டும். தினமும் அந்த நாளின் முடிவில், உங்களின் படுக்கையில் அமர்ந்து கொண்டு, நீங்கள் காலையில் கண் விழித்த கணத்திலிருந்து ஒவ்வொரு நிகழ்விலும் நீங்கள் எப்படி இருந்தீர்கள் என்பதைத் திரும்பிப் பாருங்கள். குறைந்தது தொண்ணூறு சதவிகித நேரம் நீங்கள் முட்டாளாக இருந்ததை நீங்களே பார்ப்பீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

#1

உங்களுக்கு சிறிதளவு பொறுப்பு கொடுக்கப்பட்ட உடனே, திடீரென்று நீங்கள் மிக முக்கியமானவராக ஆகிவிடுகிறீர்கள். எத்தனை முறை இந்த பிரபஞ்சத்தைவிடவும் நீங்கள் பெரிதாக இருந்தீர்கள் என்பதை கவனித்துப் பாருங்கள். பெரும்பாலான நேரங்களில் நீங்கள் வீங்கி இருந்ததை நீங்களே பார்ப்பீர்கள்.

#2

நீங்கள் எத்தனை முறை இறவா நிலையை‌ அடைந்தவராக - அதாவது உங்கள் நிலையற்ற வாழ்வு பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தீர்கள் என்று பாருங்கள்..

#3

உங்களைச் சுற்றியுள்ள மக்கள் மற்றும் பொருட்களை எத்தனை முறை எந்தவொரு ஈடுபாடும் இல்லாமல் பார்த்தீர்கள் என்று பாருங்கள்.

இந்த மூன்று விஷயங்களை மட்டும் நீங்கள் கவனித்தாலே, இரவு முழுவதையும் நீங்கள் சிரித்தே கழிக்க வேண்டியிருக்கும் என்பதை பார்ப்பீர்கள். இப்படி இருக்கிறேனே என்று உடனே அழத் துவங்கிவிடாதீர்கள். உங்கள் முட்டாள்தனத்தைப் பார்த்து நீங்கள் சிரிக்கப் பழகினால், நீங்கள் சுமந்து கொண்டிருக்கும் எல்லா குப்பைகளும் விரைவாகவே உங்களுக்கான உரமாக மாறிவிடும், உங்கள் வளர்ச்சிக்கு உரம் மிக நல்லது.

ஈஷாங்காவாக இருப்பது என்றால், உங்கள் இருப்பின் நிதர்சனத்தைப் புரிந்து கொள்வது. இந்த பேரண்டத்தின் சிறு அங்கம்தான் நீங்கள். ஏதுமற்ற இந்த பெருவெளியின் ஒரு சிறு அங்கம்தான் நீங்கள். இதற்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. உங்களை "ஈஷாங்கா" என்று நாம் அழைக்கும்போது, நீங்கள் ஈஷா அறக்கட்டளையின் ஒரு அங்கமாக இருக்கிறீர்கள். இதையே வேறுவிதமாக கூற வேண்டுமென்றால், என்னுடைய கரங்களாக நீங்கள் செயல்படுகிறீர்கள். ஒரு ஈஷா ஆசிரியராக நீங்கள் மக்கள் முன் நிற்கும்போது, அவர்கள் உங்களை ஒரு மனிதராக பார்க்கப் போவதில்லை - அவர்கள் உங்களை சத்குருவின் வெளிப்பாடாகவே பார்ப்பார்கள். நான் எப்போதும் முகத்தை தூக்கி வைத்துக்கொள்வதில்லை, மக்களை நிந்திப்பதோ பரிகாசம் செய்வதோ இல்லை. மக்கள் எல்லாவிதமான செயல்களையும் என்னிடமும்தான் செய்கிறார்கள். ஆனால் ஒரு புன்முறுவலோடு சிரித்தபடி நாம் வாழ்க்கையை கடந்து செல்கிறோம். என்னை சுற்றி அனைத்தும் அருமையாக இருக்கிறது என்று இதற்கு அர்த்தம் இல்லை. என்னுள் நான் அருமையாக இருக்கிறேன், அவ்வளவுதான். நான் அருமையாக இருப்பதால் உலகம் எப்படி இருந்தாலும் சரிதான்.

உங்கள் முடிவுகளை தள்ளி வையுங்கள்

மக்கள் என்னில் ஒரு அங்கமாகவே உங்களைப் பார்க்கிறார்கள் - நீங்கள்‌ நிச்சயமாக அதற்கேற்ப வாழவேண்டும். நீங்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டியது, மக்களை இருமை தன்மையை வெளிப்படுத்தும் கண்களால் பிரித்து பார்க்காமல் இருப்பதுதான். "அவள் நயமானவள் - இவள் இல்லை. அவன் நல்லவன் - இவன் இல்லை. அவள் சரியானவள் - இவள் இல்லை. அவன் பணக்காரன் - இவன் ஏழை. இது சரி - அது சரியில்லை" - இவை அனைத்தும் குப்பை. அனைவரையும் சமமாக, ஒரே பார்வையுடன் ஒற்றை விழியால் பார்க்க நீங்கள் நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் முன் மக்கள் இருக்கும் நிலையில், உங்கள் வாழ்க்கை இனிமேலும் உங்களைப் பற்றியது இல்லை. இந்த ஒரு விஷயத்தை உங்களுக்குள் நீங்கள் கொண்டு வந்தால் மற்றதை நான் உங்களுக்காக கவனித்துக்கொள்வேன். நீங்கள் உங்களை தள்ளி வைக்க கற்றுக்கொண்டால் - உங்கள் விருப்பு வெறுப்பு, உங்கள் தேவைகள், முடிவுகள் என அனைத்தையும் தள்ளி வைக்க கற்றுக்கொண்டால் - வெறுமனே என் அங்கமாக நீங்கள் அங்கு நின்றால், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் கவனித்துக்கொள்வது என் பொறுப்பு.

ஆசிரியர் குறிப்பு: ஈஷா வலைப்பதிவின் சமீபத்திய பதிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளுங்கள். Twitter, facebook, Instagram or App, உங்களுக்கு விருப்பமானதை தேர்ந்தெடுங்கள்.