வள்ளலார் உடல் இல்லாமல் மறைந்தது எப்படி? (Vallalar in Tamil )
மரணமில்லா பெருவாழ்வை அடைவது அனைவருக்கும் சாத்தியம் என்று கூறியுள்ள வள்ளலாரின் கூற்று பற்றி சத்குருவிடம் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் கேட்டபோது, பூதசித்தி என்ற நிலைகுறித்து விளக்கும் சத்குரு, வள்ளலார் எத்தகைய நிலையில் தன் உடலை விட்டுள்ளார் என்பது பற்றியும் விளக்குகிறார்.
முத்தையா: சத்குரு, எல்லோருமே சொல்லும்போது "எனக்கு மறுபடியும் பிறப்பு வேண்டாம்" என்று சொல்கிறார்கள். ஆனால், வள்ளலார் "மரணமில்லா பெருவாழ்வு" என்று சொன்னார். "மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்ததெல்லாம் கண்டீர்" என்று சொல்லிவிட்டு கதை சொல்லவில்லை, பொய் சொல்லவில்லை, சத்தியமாகச் சொல்கிறேன் என்கிறார். "புனைந்துரையேன், பொய் புகலேன், சத்தியம் சொல்கின்றேன்!" என்று சொல்கிறார்.
அவர் தனது உடலை விடுவதற்கு கதவை பூட்டிக்கொண்டார். மறுபடியும் கதவைத் திறந்து பார்த்தால் வள்ளலார் அங்கில்லை. அங்கிருந்து அவர் அப்படியே கலந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். இதற்கு நீங்கள் யோகநிலையிலோ அல்லது ஆன்மீக அடிப்படையிலோ இது எப்படி சாத்தியம் என்று கொஞ்சம் சொல்ல முடியுமா?
சத்குரு: நீங்கள் பிறக்காமல் இருப்பதென்றாலும் அல்லது இறக்காமல் இருப்பதென்றாலும், இரண்டும் ஒரே நிலைதான். பிறந்து இறப்பது ஒரு சுழற்சி. ஒரு சுழற்ச்சியாக இது போய்க்கொண்டே இருக்கிறது. பிறக்காமல் இருக்கும் உயிருக்கும், இறக்காமல் இருக்கும் உயிருக்கும், வித்தியாசம் கிடையாது. இரண்டு விதமாக சொல்லிக்கொள்ளலாம்.
ஏனென்றால், எதற்கு நீங்கள் பிறப்பு என்று சொல்கிறீர்களோ எதற்கு நீங்கள் இறப்பு என்று சொல்கிறீர்களோ இது இரண்டும் வித்தியாசமானது இல்லை. பிறந்து விட்டீர்கள் என்றால், இந்த வாழ்வை வாழ்வது நடக்கும். வாழ்வது என்றால் தவணைமுறையில் இறப்பது. இப்போது, "நான் இங்கே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்" என்று சொல்லமுடியும். அல்லது "நான் மெதுவாக இறந்துகொண்டிருக்கிறேன்" என்று சொல்லமுடியும். இறப்பு என்பது இப்போது நடந்துகொண்டிருக்கிறது. பிறந்தநாளிலிருந்து தொடர்ந்து படிப்படியாக நடக்கிறது. ஒருநாள் முழுமையாகிவிடும் அவ்வளவுதான்! லௌகீகத்தில் சிக்கியிருப்பவர்கள் மட்டும்தான் இந்த பிறப்பு, வாழ்க்கை, இறப்பு என்பவற்றைப் பிரித்துப் பார்க்கிறார்கள். இதைப் பிரித்துப் பார்க்கத் தேவையில்லை.
Subscribe
இதெல்லாமே தொடர்ந்து நடக்கிற செயல். நம் மனதில் நாம் பிரித்துப்பிரித்து பார்க்கிறோம். ஏனென்றால் காரண அறிவு எப்போதுமே எல்லாவற்றையும் பிரித்துதான் பார்க்கிறது. இதையும் நாம் பிரித்துப் பார்க்கிறோம். இது தனித்தனியானது இல்லை. மீண்டும் பிறப்பு வேண்டாம் என்று சொல்கிறவர்களுக்கும், இறப்பில்லாத வாழ்க்கை என்று சொல்கிறவர்களுக்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. வெளிப்படுத்துகிற தன்மையில் மட்டும்தான் வித்தியாசம் இருக்கிறது.
பஞ்சபூதங்களின் விளையாட்டு
இப்போது நாம் என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், உடல் என்றால் பொருள். பொருள் என்றால், இந்த பஞ்சபூதங்களின் விளையாட்டு. இதில் காற்று நீர் நிலம் நெருப்பு ஆகாயம் இந்த ஐந்தும் சேர்ந்துள்ளது. இந்த ஐந்து தன்மையை வைத்துதான் இந்த உடல் நடக்கிறது. ஒருவிதமாக அது விளையாடியது என்றால், உடல் என்று சொல்வோம். இன்னொரு விதமாக விளையாடியது என்றால், அதை மரம் என்று சொல்வோம். இன்னொரு விதமாக என்றால், அதை பூமி என்று சொல்வோம். இன்னொரு விதமாக என்றால், பிரபஞ்சம் என்று சொல்வோம். ஆனால், ஐந்து பூதங்கள்தான் பலவிதமாக விளையாடிக்கொள்கிறது. இந்த விளையாட்டை புரிந்துகொள்கிற, அனுபவப்பூர்வமாக புரிந்துகொள்கிற தன்மைக்குதான் நாம் யோகா என்று சொல்வோம். ஏனென்றால், யோகத்தில் அடிப்படையான பயிற்சி என்னவென்றால், பூதசுத்தி என்று சொல்வோம்.
நீங்கள் எந்தமாதிரி யோகா செய்தாலும் சரி, ஆசனம் செய்தாலும், பிராணாயாமம் செய்தாலும், தியானம் பண்ணினாலும்.... பலவிதமான தன்மை இருக்கிறது, எதைச் செய்தாலும், அவை எல்லாமே இந்த பூதசுத்தி என்கிற அடிப்படை பயிற்சியிலிருந்து எடுத்த ஒரு பங்குதான், ஒர் அங்கம்தான். அதிலிருந்து சிறு சிறு பகுதிகளை எடுத்து, நாம் மக்களுக்கு சொல்லிக்கொடுக்கிறோம். ஆனால் அடிப்படையாக இருப்பது, பூதசுத்தி. ஏனென்றால், இந்த பஞ்சபூதங்களிலிருந்து நமக்கு விடுதலை வரவில்லை என்றால், அதன்மேல் நமக்கு ஒரு ஆளுமை வரவில்லை என்றால், நாம் வாழ்க்கையில் எதைச்செய்தாலும் நாம் அடிமைத்தனமாகத்தான் வாழமுடியும். வேறு எப்படியும் வாழ முடியாது.
வள்ளலார் உடல் இல்லாமல் செய்தது எப்படி?
இந்த ஐந்து பூதங்களை நாம் சுத்திகரிப்பதற்கு 'பூதசுத்தி' என்று சொல்வோம். இந்த பூதசுத்தியை நாம் ஒரு நிலைக்கு கொண்டு வந்தால், அப்போது நமக்கு 'பூதசித்தி' என்ற ஒரு நிலை கிடைக்கும். எப்போது பூதசித்தி என்பது நம் கையில் இருக்கிறதோ, இப்போது நாம் இங்கே உட்கார்ந்த இடத்திலேயே உடலை இல்லாமல் செய்துவிடுவோம். இது உடலை விடுவது அல்ல. நமது உயிர் உடலைவிட்டுப் போவது ஒரு தன்மை. உடலே இல்லாதமாதிரி நாம் பண்ணிவிட முடியும். அதற்கு அவர் "சாவில்லாத வாழ்க்கை" என்று சொல்லியிருக்கிறார். ஏனென்றால், உடலை இப்படி வைத்திருக்கிறார். நாளைக்கே அது வேண்டாம் என்றால், கழற்றிப் போட்டுவிடுவதுதான்; எல்லாவற்றையும் கழற்றிப் போடுவதுதான். இந்த ஐந்து பூதங்களை கழற்றிப்போட்டீர்கள் என்றால், போய்விடும். இந்த மாதிரி பலயோகிகள் இப்படி விட்டிருக்கிறார்கள். ஏனென்றால், நான் நாளைக்குப் போய்விட்டால், நான்குபேர் என் உடலை எடுத்துக்கொண்டு போகிறமாதிரியான தொந்தரவுகூட வேண்டாமென்று, அங்கேயே அவர் எல்லாவற்றையும் விட்டுவிடுவது.
இந்த பஞ்சபூதங்கள் மேல் ஒரு முழுமையான ஆளுமை - இதற்கு நாம் ஆங்கிலத்தில் Dematerialization என்று சொல்வோம். இது நிறையமுறை நடந்திருக்கிறது. இப்போதுகூட, சமீபத்தில் கூட நம்மைச்சுற்றி இந்தமாதிரி நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இது சாமானியமாக நடந்தபோது, வள்ளலார் அவர்களுக்கு இப்படி நடந்தபோது, கவனித்தீர்களோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை, இந்தமாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்தபோது கொஞ்சம் கவனித்தீர்கள் என்றால், சாமானியமாக கொஞ்சம் தண்ணீர் அங்கிருக்கும்.
தண்ணீர் ஏன் எஞ்சியிருக்கிறது?
ஏனென்றால் இந்த உடலில், இந்த ஐந்து பூதங்களில் 72% தண்ணீராகத்தான் இருக்கிறது. எனவே நாம் இந்த பூதங்களை கழற்றிப்போட்டால், மற்றதையெல்லாம் கழற்றிப்போட்டால், உடல் இல்லாமல் போய்விடும். ஆனால் எல்லா தண்ணீரையும் முழுமையாக நாம் உடைக்க முடியவில்லை. தண்ணீர் அங்கே கொஞ்சம் தேங்கிவிடும். அங்கே எந்த அளவுக்கு தண்ணீர் இருக்கிறது என்று பார்த்தால், அவருக்கு எந்த அளவுக்கு அதன்மேல் நிபுணத்துவம் இருக்கிறது என்று நாம் ஓரளவுக்குப் பார்க்க முடியும். இது போன்று நிர்ணயிப்பதற்காக நான் சொல்லவில்லை. நான் சொல்வது, யாரோ ஒருவர் இவ்வளவுதான் (குறைவாக) தண்ணீரை விட்டுவிட்டுப் போனார், ஏறத்தாழ முழுமையாக. இன்னொருவர் கொஞ்சம் அவ்வளவாக (அதிகமாக) விட்டுவிட்டு போனார். மற்றதையெல்லாம் கழற்றிப் போட்டுவிட்டார். ஆனால் தண்ணீரை கழற்ற முடியவில்லை அது நின்றுவிட்டது, தேங்கிவிட்டது!
இவர் ஏதோ ஒரு சொட்டு விட்டுவிட்டு போனாரோ அல்லது மிகவும் குறைவாகத்தான் விட்டுச்சென்றிருக்க வேண்டும். அதனால்தான் மக்கள் கவனிக்கவில்லை. அதிகமாக இருந்திருந்தால் கவனித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த பூதசுத்தி பயிற்சியை எப்போது ஒரு யோகி முழுமையாக ஆளுமையில் கொண்டுவந்திருக்கிறாரோ, அவர் இந்த உடலை எரிக்கத் தேவையில்லை. புதைக்கத் தேவையில்லை, சும்மா இல்லாமல் பண்ணிவிடலாம்.
இது இன்றைக்கும் சாத்தியமா?
எப்போதுமே சாத்தியம். ஏனென்றால், அடிப்படையான உண்மை என்பது இயற்கையிலும் சிருஷ்டியிலும் மாறவில்லை. மனிதனின் மனம் மட்டுமே மாறியிருக்கிறது. குடிசையில் இருப்பதற்கு பதிலாக கட்டிடத்தில் இருக்கிறோம். அதனால் உலகம் மாறிவிட்டது என்று நினைக்கவேண்டாம். ஒருநாளில் போய்விடும் இது எல்லாம். தனிமனிதனுடைய உடலை மட்டுமல்ல, ஏதோ ஒரு பொருளையும் கூட எடுத்து பண்ணமுடியும். மக்களுக்கு இந்த மாதிரி ஒரு பேராசை, பைத்தியம் வந்திருப்பதனால், ஏதோ ஒன்றை உருவாக்கி உங்களுக்கு தங்கமாகக் கொடுத்துவிட்டால், அது பெரிய அதிசயம் என்று நினைக்கிறார்கள். அப்படியில்லை, நீங்கள் ஏதோ ஒன்றைக் கொடுங்கள், நான் அதை இல்லாமல் பண்ணிவிடுவேன். அது அதிசயம்! ஏனென்றால் இந்த ஐந்து பூதங்கள்மேல் ஒரு ஆளுமை இருந்தால்தான் அதை இல்லாமல் பண்ணமுடியும். இல்லாமல் செய்வதென்றால், எடுத்து pocketல் வைத்துக்கொள்வது அல்லது அங்கே வைத்துக்கொள்வது அல்ல. அப்படியில்லை!
ஏனென்றால் அது இல்லையென்றால், அதற்குப்பிறகு உலகத்தில் பிரபஞ்சத்தில் எங்கே தேடினாலும் அது இல்லை. ஏனென்றால் பஞ்சபூதங்கள் பிரிந்துபோய்விட்டன. அதேவிதமாக நம் உடலுக்குகூட பண்ணிக்கொள்ள முடியும். வள்ளலார் அந்தமாதிரி அவருடைய உடலை அப்படி செய்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போதுகூட, இந்த காலத்தில்கூட, அந்தமாதிரி நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அப்போது மக்கள் பக்தியாக இருந்ததனால், அதை மதித்து, அதைப் பெரிய அளவிற்கு கொண்டுசென்றார்கள்.
இப்போது சொன்னால், அதற்கு நூறு கேள்வி கேட்பார்கள். அவருக்கு கேள்விக்கான பதில் தெரியவில்லை என்றால், "ஓ… நமக்குத் தெரியாதது ஏதோ இருக்கமுடியும்" என்று ஏற்றுக்கொள்கிற பக்குவம் இல்லை இப்போது நமக்கு. தெரியாதது என்றால், அது இல்லை என்றுதான் நிரூபிக்கப்போகிறார்கள். எப்போது ஒரு மனிதன், எனக்கு எது தெரியாதோ அதெல்லாம் உலகத்தில் கிடையாது என்று அவன் உறுதி எடுக்கிறானோ, அது அவனுடைய முட்டாள்தனத்திற்கு கிரீடம் போட்டதுமாதிரி. எனக்குத் தெரியாதது உலகத்தில் எவ்வளவோ இருக்கிறது என்று பார்த்தால், வாய்ப்பு இருக்கிறது. எனக்குத் தெரியாதது உலகத்தில் எதுவும் கிடையாது என்று நினைத்தால், முட்டாள்தனத்திற்கு கிரீடம் போட்டதுமாதிரி.