செயற்கை நுண்ணறிவு மனிதர்களின் வேலை வாய்ப்பை பறிக்குமா? (Artificial Intelligence in Tamil)
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வளர்ச்சியால் ரோபோக்களும் இயந்திரங்களும் மனித புத்திசாலித்தனத்தைவிட சிறப்பாக செயலாற்றும் நிலையில், மனிதர்கள் தங்களை இந்த சூழலுக்கேற்ப தகவமைத்துக்கொள்ள செய்யவேண்டியது என்ன என்பதைப் பற்றி "Youth & Truth" நிகழ்ச்சிக்காக சத்குரு அளித்த பதிலை இந்த கட்டுரையில் காணலாம்.
கேள்வி: இந்த நவீன உலகத்தில் செயற்கை நுண்ணறிவும், ரோபோக்களும் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியிருக்கிறது. அதுதான் இப்போது அதிநவீனமான ஆற்றலான தொழில்நுட்பமாக இருக்கிறது. அதனால், அந்த தொழில்நுட்பங்களும், பழமையான பயிற்சிகளான தியானமும் யோகாவும் எப்படி சந்திக்கமுடியும் என்று நினைக்கிறீர்கள்?
சத்குரு:நான் நிஜமானவராக உங்களுக்குத் தெரிகிறேனா? ஏனென்றால் கடந்த ஒன்றரை வருடங்களாக, உலகத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பலவிதமான கருத்தரங்கங்களுக்கு என்னைப் பேசச்சொல்லி அழைப்பு வந்துகொண்டிருக்கிறது.
“ஏன் அவர்கள் செயற்கை நுண்ணறிவு பற்றி என்னை பேசச்சொல்கிறார்கள்?” என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் அந்தத் துறையில் நான் நிபுணத்துவமுடைய ஆளும் கிடையாது. நானும் செயற்கையான அறிவு கிடையாது. அதனால் அப்படியொரு கருத்தரங்கில், அவர்களிடம் நான் கேட்டேன், அது செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நடந்தது.
நான் அவர்களிடம் கேட்டேன், “ஏன் நீங்கள் என்னை இந்தமாதிரி செயற்கையறிவு கருத்தரங்குகளுக்கு கூப்பிடுகிறீர்கள்? நான் இயற்கையான அறிவு, செயற்கையறிவு இல்லையே?”
Subscribe
அதற்கு அவர்கள், “பிரச்சனை என்னவென்றால், செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டதென்றால் நாங்கள் என்ன செய்வோம்? நாங்கள் எங்கள் வேலையை இழந்துவிடுவோம்.”
இவர்களெல்லாம் MIT, Harvard போன்ற பெரிய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள். அவர்கள் என்னிடம், “அடுத்த 10 வருடங்களில் நாம் என்ன செய்யப்போகிறோம்?” என்று கேட்கிறார்கள். ஏனென்றால் நமக்குத் தெரிந்த எல்லாமே, இந்த கணப்பொழுதுவரை புனிதமாக இருந்த எல்லாமே, இப்போது திடீரென்று ஒரு சின்ன Gadget உள்ளேயே இருக்கும்.
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன? (Artificial Intelligence in Tamil)
நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும், செயற்கை நுண்ணறிவு என்றால், அர்த்தம் என்னவென்றால், தகவல்களை சேர்த்து, அதை ஆய்வுசெய்து, தேவையான நேரத்தில் அதை வேண்டியவிதமாக வெளிப்படுத்துவது. இனிமேல் மனித ஆற்றல் அளவில் மதிப்பானதாகக் கருதப்படாது. ஏனென்றால் ஒரு சின்ன கருவியே அது எந்த மனிதனையும்விட சிறப்பாகச் செய்யும். ஏற்கனவே அந்த கூகுள்பெண்மணி உங்கள் எல்லோரையும்விட சாமர்த்தியமாகத் தெரிகிறார், இல்லையா? அந்தப் பெண் என்னைவிட சாமர்த்தியமாகத் தெரிகிறார், பரவாயில்லை.
நான் படித்தவன் இல்லை. ஆனால் நீங்கள் அப்படியில்லை. அந்தப் பெண் நம் எல்லோரையும்விட சாமர்த்தியமாகத் தெரிகிறாரா இல்லையா? என்ன கேட்டாலும் கண்ணிமைக்காமல் பதில் சொல்கிறார். அதனால் இது எந்த நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்றால், புத்தியைக்கொண்டு நீங்கள் செய்கிற எல்லாமே முட்டாள்தனமாகவும் அர்த்தமற்றதாகவும் தெரியும்.
ஒரு Calculator ஏற்படுத்திய தாக்கம்…
எனக்கு 13 வயதாக இருக்கும்போது இது நடந்தது. எனக்கு 13, 14 வயதென்று நினைக்கிறேன். முதல் தடவையாக நான் ஒரு தட்டையான Calculatorஐப் பார்த்தேன். அது Panasonic Calculator. அந்த சமயத்தில் அதன்விலை 110 ரூபாய். அது மிகவும் அதிகவிலை. இன்றைக்கு ஒரு காபிக்கே அதைவிட அதிக காசு கொடுத்து குடிக்கிறீர்கள். ஆனால் 110 ரூபாய்க்கு Panasonic Calculator. Sony 125 ரூபாய். அதனால் விலை குறைவானதை வாங்குவோம். 100 ரூபாய் Panasonic. என்னிடம் அதைக் காட்டினார்கள். நான் அதை வாங்கவில்லை. யாரோ ஒருவர் வாங்கினார். அவர் டுக், டுக், டுக் எனத்தட்டி, எனக்கு விடையைக் காட்டினார். அப்போது எனக்கு வந்த முதல் எண்ணம், “நான் எதற்காக கணக்குப்பாட வகுப்பில் என் வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கிறேன்?”
நான் சொன்னேன், “எனக்கு இது இருந்தால் போதும். நான் கணித வகுப்புக்குப் போகத்தேவையில்லை.”
நீங்கள் என்ன கேள்வி கேட்டாலும் டுக், டுக், டுக். 100 ரூபாய் மதிப்புள்ள பொருள் உங்களுக்கு விடை சொல்லிவிடும். எதற்காக 10 வருடம் இந்த கணிதம், கணக்கு எல்லாவற்றையும் படித்துக் கஷ்டப்பட வேண்டும்? அது Sin Theta, Cos Theta இப்படி உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்துவிடும்.
இயந்திரங்களால் அர்த்தமற்றதாகும் மனிதக் கல்வியறிவு
அப்போது நான் நினைத்தேன், “இந்த அபத்தத்தை எல்லாம் செய்ய, நாம் ஒரு பெரிய இயந்திரத்தை உருவாக்கிவிட வேண்டும்.” அப்போது நான் Schoolக்குப் போகத்தேவையிருக்காது. கடைசியில் அந்த கனவு இப்போது நனவாகிக் கொண்டிருக்கிறது. அடுத்த 10, 15 வருடங்களில் இன்றைக்கு உங்களுக்குத் தெரிந்த கல்வி, இப்போது இருக்கிற வேலைவாய்ப்புகள் அர்த்தமற்றதாகிவிடும்.
ஏனென்றால் இப்போது அவர்கள் அந்த இயந்திரங்களை உருவாக்கியிருக்கிறார்கள். இப்படி வந்துவிட்டதென்றால், நாம் பலப்பல வருடம் எடுத்து கற்றுக்கொள்கிற விஷயங்கள் அர்த்தமில்லாததாக ஆகிவிடும்.
அவர்கள் இப்படி ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், இப்போது ஒரு வாடிக்கையாளர் வந்து, தனக்கு எந்த விதமான வீடு வேண்டும் என்று சொன்னால், தன்னுடைய அழகியல் என்ன, கலாச்சாரம் என்ன, பிடித்தது என்ன, அது எப்படி இருக்கவேண்டும், பட்ஜெட் என்னவாக இருக்கவேண்டும் என்று சொன்னால், ஒரு Machine வீடு முழுவதையும் design செய்து காட்டிவிடும். நீங்கள் விரும்புவதுபோல பத்துவித designகளைக் காட்டும். ஓவியங்கள், சுவரில் தொங்கவிடுகிற பொருட்கள், மரச்சாமான்கள் எல்லாவற்றையும் காட்டிவிடும். இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், இன்னும் 5 - 7 வருடங்களில், அந்த வீட்டை முப்பரிமாணமாக அச்சிட்டுக்காட்டவும் அதனால் முடியுமாம்.
Design செய்கிற ஆட்களின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். அதனால் நீங்கள் ஒரு இயந்திரத்தால் செய்யமுடியாத ஒன்றை செய்யவில்லை என்றால், உங்களில் பலருக்கு வேலையில்லாமல் போய்விடும்.
நம்மைத் தயார்ப்படுத்திக் கொள்வதன் அவசியம்
எல்லோரும் இப்போது இதற்கு உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் புத்திசாலித்தனத்தைத் தாண்டி உங்களால் ஏதோ செய்ய முடியவேண்டும். மனிதனுடைய புத்திசாலித்தனம் பல அடுக்குகளைக் கொண்டிருக்கிறது. அதில் புத்தி ஒரு சின்ன பகுதிதான். இப்போது நம் கல்விமுறை முழுவதுமே மனிதனுடைய புத்தியை வளர்ப்பதை நோக்கியே இருக்கிறது. அதுதான் வாழ்வதற்கு பிரம்மாண்டமான வழி என்று நினைக்கிறோம். இல்லை, அப்படியில்லை.
நமக்கு நேரமிருந்தால் நாம் அதை அறிந்துணரலாம். ஆனால் யோகமுறையில் நாம் மனித புத்திசாலித்தனத்தை பதினாறு பகுதிகள் உடையதாகப் பார்க்கிறோம். நீங்கள் புத்திசாலித்தனத்தின் மற்ற பரிமாணங்களை அறிந்துணர வேண்டும். அப்போதுதான் நீங்கள் இருப்பதில் அர்த்தமிருக்கும்.
எல்லாமே புத்தியளவில் இருந்தால், புத்தியளவில் என்றால், உங்கள் புத்தியால் அது சேர்க்கும் தகவல்கள் இல்லாமல் இயங்கமுடியாது. உங்கள் புத்தியால் தகவல்களைச் சேர்க்காமல் இயங்கமுடியாது, அப்படித்தானே? இப்போது இந்த தகவல்களைச் சேர்ப்பதும், ஆய்வுசெய்வதும், அதைக்கொண்டு முடிவுக்கு வருவதும், இது எல்லாவற்றையும் ஒரு இயந்திரமே உங்களைவிட நன்றாகச் செய்யும். ஆனால் ஒரு மனிதன் எப்போதும் தவறு செய்துவிட முடியும். எப்போதும் தகவல்களை மாற்றிப்போடலாம். ஆனால் இயந்திரம் துல்லியமாக செயல்படும்.
சாதாரணமாக அது எல்லாவற்றையுமே செய்துவிடும். அதனால் நீங்கள் புத்தியைக்கொண்டு செய்யக்கூடிய எல்லாமே அடுத்த 10, 15 வருடங்களில் அர்த்தமற்றதாகிவிடும். இந்தியாவில் வேண்டுமானால் அதற்கு இன்னும் 20, 25 வருடங்கள் எடுக்கலாம். ஆனால் அது எப்படியும் நடந்தேயாகும்.
புத்தியைத் தாண்டிய வல்லமையைப் பெறுங்கள்
அதனால் புத்தியைத் தாண்டிய ஏதோவொரு வல்லமை உங்களுக்கு இருக்கவேண்டும். புத்தியைத் தாண்டியது என்று சொல்லும்போது, அதைப் பலவிதங்களில் பார்க்கலாம். நான் ஒரு எளிமையான உதாரணம் கொடுக்கிறேன். எதனால் எளிமையானதென்றால், கடினமான எடுத்துக்காட்டிற்குள் போனால், அதை நிறையவே அலசி ஆராயவேண்டும். இன்றைக்கு நம்மிடம் அந்த அளவுக்கு நேரமில்லை. உதாரணமாக, மதிய உணவிற்கு நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்?
நீங்கள் Maggi சாப்பிடுகிறீர்களா? யாராவது அவருடைய ஊட்டச்சத்தை கவனித்துக்கொள்ளுங்கள். அவர் Maggi சாப்பிட்டு வாழ்கிறார். சரி, நீங்கள் நூடுல்ஸ் சாப்பிட்டாலும், நூடுல்ஸ் அவரைப்போலத் தோற்றமளிக்கவில்லை. உணர்ந்து பார்த்தால் அவரைப்போல இல்லை, எதுவுமே இல்லை. ஆனால் அவர் சாப்பிடுகிற இந்த நூடுல்ஸ், 3-4 மணி நேரத்தில், இந்த Maggi நூடுல்ஸ் ஒரு மனிதராக ஆகிவிடுகிறது, இல்லையா? அது உங்கள் உடலுடைய ஒரு பாகமாக ஆகிவிட்டது.
அப்போது இவ்வளவு சிக்கலான இந்த இயந்திரத்தை நீங்கள் Maggi நூடுல்ஸ் சாப்பிட்டு உற்பத்தி செய்கிறீர்கள். இது ஒரு முப்பரிமாண அச்சு இயந்திரம் மாதிரி. நீங்கள் அதற்குள் Maggi நூடுல்ஸ் போட்டால், இல்லை, நான் Maggi நூடுல்ஸால் ஆனவன் கிடையாது. நான் அதைவிட நல்ல உணவு சாப்பிடுகிறேன். ஆனால் நீங்கள் இதற்குள் ஒரு சப்பாத்தியைப் போட்டால், அது மனித உடலாகிவிடுகிறது. இதுதான் பூமியிலேயே மிக நுட்பமான இயந்திரம். நீங்கள் என்ன உணவை சாப்பிட்டாலும் இந்த உடலை உற்பத்தி செய்கிறீர்கள். அதோடு நீங்கள் சாப்பிடுகிற உணவும் நீங்கள் நடக்கிற மண்தான். அது எழுந்து நிற்கிறது. அப்போது இதுவொரு முப்பரிமாண அச்சு இயந்திரம்தானே? அந்த புத்திசாலித்தனம் உங்களுக்குள் இருக்கிறதா, இல்லையா? உங்கள் மூளையில்கூட இல்லை, உங்கள் வயிற்றிலேயே இருக்கிறது.
அதனால் புத்திசாலித்தனத்தின் இந்த பரிமாணத்தை விழிப்புணர்வாக அணுகும்வழியை நீங்கள் கண்டுபிடித்திருந்தால்தான் நீங்கள் அதிசயமான வாழ்க்கையை வாழ்வீர்கள், இல்லையா? அப்போது செயற்கை நுண்ணறிவு உங்களை பாதிக்காது. நீங்கள் மிகவும் சந்தோஷமாக ஆகிவிடுவீர்கள். ஏனென்றால் மனிதர்களின் அடிமட்ட வேலைகளை இயந்திரங்களே செய்தால், உலகம் எவ்வளவு அற்புதமாக இருக்கும்?
நான் அதை ஆவலாக எதிர்நோக்கியிருக்கிறேன்.