ஆயுத பூஜை - அதன் முக்கியத்துவம் என்ன? (Ayudha Pooja in Tamil)
ஆயுத பூஜையின் முக்கியத்துவம் குறித்தும் ஆன்ம வளர்ச்சிக்கு அது எவ்வாறு ஒரு முக்கிய கருவியாக விளங்குகிறது என்பது குறித்தும், மேலும் இது ஒரு சடங்கை விட எப்படி மேலானது என்பதையும் சத்குரு இங்கு விளக்குகிறார்.
கருவிகளைப் பயன்படுத்தும் விதம்
சத்குரு: நவராத்திரியின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஆயுத பூஜை. இந்திய கலாச்சாரத்தில், இந்த அம்சத்தை நாம் உருவாக்கி வைத்துள்ளோம். எந்த ஒரு கருவியாக இருந்தாலும், உங்கள் கலப்பையைப் பயன்படுத்துவதாக இருந்தால், முதலில் அதற்கு தலைவணங்கி, பின்னர் அதைப் பயன்படுத்துவீர்கள். நீங்கள் ஒரு புத்தகத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால், முதலில் அதனை வணங்கி, பின்னர் அதைப் பயன்படுத்துவீர்கள். ஆயுத பூஜை என்றால், நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு கருவியையும், அது தொழில், விவசாயம் அல்லது வேறு எதுவாக இருந்தாலும், நீங்கள் அதை மதிப்புடன் அணுகுவதைக் குறிக்கிறது. உங்கள் துறை எதுவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட மதிப்புடனும், ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் நீங்கள் அதை அணுகும் வரை, அது பலனை தராது. ஒரே இசைக்கருவி வெவ்வேறு நபர்களின் கைகளில் வெவ்வேறு விதமாக ஒலிக்கிறது. ஒருவரின் கைகளில் அது சத்தமாகிறது, மற்றொருவரின் கைகளில் அது முற்றிலும் மயக்கும் இசையாக வெளிப்படுகிறது, ஏனெனில் நீங்கள் அதை அணுகும் விதம் அப்படி இருக்கிறது.செயல் செய்வதன் ஆனந்தம்
மதிப்பளிப்பது என்றால் வழிபடுவது அல்லது ஒரு சடங்கு செய்வது என்று அர்த்தமல்ல, மதிப்பளிப்பது என்றால், ஒரு குறிப்பிட்ட விதத்தில் நீங்கள் அதை உயர்வாக பார்க்கிறீர்கள். நீங்கள் அதை உயர்வாக பார்க்காவிட்டால், அது உங்களைவிடக் குறைவானது என்று நீங்கள் நினைத்தால், பிறகு நீங்கள் அதில் ஈடுபாட்டுடன் இருக்கமாட்டீர்கள். நீங்கள் எங்கு ஈடுபாட்டுடன் இல்லையோ, அந்த இடத்திலிருந்து உங்களுக்கு பலன் கிடைக்காது. எனவே, நீங்கள் பயன்படுத்தும் எதையும், உங்களைவிட உயர்வான ஒன்றாகக் கருதி, அதற்கு தலைவணங்குகிறீர்கள், அப்போதுதான் அது ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டுவருகிறது. அந்த ஈடுபாடு வந்துவிட்டால், நீங்கள் அதை நன்றாகக் கையாள்கிறீர்கள், அதனிலிருந்து மிக சிறந்ததைப் பெறுகிறீர்கள். இப்போது நீங்கள் வெறுமே பொருட்களை அடைவதை மட்டுமல்லாமல், செயல்களை செய்வதிலுள்ள ஆனந்தத்தை உணர்கிறீர்கள்.
Subscribe
வாழ்க்கைத் தரம் என்பது நீங்கள் எவ்வளவு அறுவடை செய்கிறீர்கள் என்பதில் இல்லை. தரமான வாழ்க்கை என்பது நீங்கள் செய்த செயலை எவ்வளவு ஆனந்தத்துடன் செய்திருக்கிறீர்கள் என்பதில் இருக்கிறது. உங்கள் கருவியை நீங்கள் மதிப்புடன் நடத்தினால், அது உங்களுக்குள் ஆனந்தத்தைக் கொண்டு வருகிறது. ஏனென்றால் நீங்கள் அதைத் தொடும் ஒவ்வொரு முறையும், கடவுளைத் தொடுவது போன்று உணர்கிறீர்கள் - நீங்கள் எதை தெய்வீகமாக கருதுகிறீர்களோ, அதனுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள்.
துன்பம் தொடாமல் இருக்க ஒரு வழி
ஆனால் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து கருவிகளிலும், மிக அடிப்படையான கருவி என்றால், அது உங்களின் உடலும் மனமும்தான். ஆயுத பூஜை என்றால் உங்கள் சொந்த உடல் மற்றும் மனதை மதிப்புடன் அணுகுவது. நீங்கள் எதையாவது மதிப்புடன் அணுகினால், அந்த மதிப்பு இயல்பாகவே ஒரு குறிப்பிட்ட இடைவெளியைக் கொண்டு வருகிறது. உங்கள் சொந்த உடல் மற்றும் மனம் குறித்து நீங்கள் மதிப்புடன் இருந்தால், உங்களுக்கும் உங்கள் உடலுக்கு இடையேயும் மற்றும் உங்களுக்கும் உங்கள் மனதிற்கு இடையேயும் ஓர் இடைவெளியை நீங்கள் நிலைநிறுத்துகிறீர்கள். உங்களுக்கும், உங்கள் உடல் மற்றும் மனதிற்கு இடையேயும் தெளிவான வேறுபாடு இருந்தால், அதுதான் துன்பங்களுக்கு எல்லாம் முடிவு. நீங்கள் அறிந்துள்ள எந்தவொரு துன்பமாக இருந்தாலும், உங்கள் உடல் அல்லது மனதின் வழியாகத்தான் உங்களுக்குள் நுழைந்துள்ளது. நீங்கள் உடல் அல்ல, நீங்கள் மனமும் அல்ல என்பது உங்களுக்கு ஒரு வாழ்க்கை அனுபவமாக இருந்தால், துன்பம் உங்களைத் தொட முடியுமா? ஒரு குறிப்பிட்ட இடைவெளி இருந்தால், அது வாழ்க்கையில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யும் சுதந்திரத்தை அளிக்கிறது, ஆனால் வாழ்க்கை உங்களை தொடாது. அது உங்களை எந்த வகையிலும் காயப்படுத்தாது.