காவேரி கூக்குரல் - இந்தியாவின் நீர் நெருக்கடிக்கு ஒரு முழுமையான தீர்வு
விவசாயிகளுக்கு நன்மை அளிப்பதுடன், காவேரி நதியை புத்துயிர் பெறச் செய்து தண்ணீர் நெருக்கடியையும் முழுமையாய் நிவர்த்தி செய்யும் அனைத்து அம்சங்களும் பொருந்திய ஒரு திட்டமாக காவேரி கூக்குரல் இயக்கம் திகழ்வதைப் பற்றி நமக்கு இங்கே விளக்குகிறார் சத்குரு.
இந்த இரண்டு அம்சங்களுக்கும், மரங்கள் மிகவும் முக்கியமானது. மண் வளமாக இருக்க வேண்டும் என்றால், அதற்கு இரண்டு ஆதாரங்கள் மட்டுமே இருக்கிறது: மரங்களிலிருந்து உதிரும் இலைகள் மற்றும் கால்நடைகளின் கழிவுகள். மரங்கள் நீண்ட காலத்திற்கு முன்பே அழிக்கப்பட்டுவிட்டன, கால்நடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி பயணம் செய்கின்றன. எனவே, நாம் எந்தப் பொருளைக் கொண்டு மண்ணை வளப்படுத்தப் போகிறோம்? மரங்கள் மற்றும் கால்நடைகள் இல்லாமல், உண்மையில் இதற்கு தீர்வு இல்லை.
அதேபோல தண்ணீரைப் பொறுத்தவரை, பெரும்பாலான மக்களின் மனங்களில், ஒரு நதிதான் தண்ணீருக்கு ஆதாரமாக இருக்கிறது என்ற தவறான புரிதல் இருக்கிறது. இல்லை, ஒரு வெப்பமண்டல தேசத்தில்{tropical nation), ஒரு நதியோ, குளமோ அல்லது ஏரியோ தண்ணீருக்கு ஆதாரம் அல்ல, இவை எல்லாமே தண்ணீர் வந்து சேரும் இடமாகும். தண்ணீருக்கான ஒரே ஒரு ஆதாரம் பருவமழை மட்டுமே.
நீர் மற்றும் மண்ணுக்கு புத்துயிரூட்ட வேளாண் காடுகள்
கால்நடைகளையும் மரங்களையும் மீண்டும் நிலத்தில் கொண்டு வருவதுதான் இப்போது நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான செயல். இதை கடந்த பத்து ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட அளவில் நாம் ஏற்கனவே செயல்படுத்தி வந்திருக்கிறோம். 69,760 விவசாயிகளுக்கு வழக்கமான பயிர்சாகுபடியிலிருந்து வேளாண் காடு வளர்ப்பிற்கு மாறுவதற்கு நாம் உதவியாக இருந்துள்ளோம்.
வேளாண் காடுகள் என்பது வழக்கமான பயிர்களுடன் மரங்களை நடும் முறையாகும். இது மண் மற்றும் நீர் நிலைமையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், விவசாயியின் பொருளாதார சூழ்நிலையிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொடுக்கிறது. அவர்களின் வருமானம் ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் மூன்று முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்.
Subscribe
சுமார் 83,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள காவேரி படுகை முழுவதும் வேளாண் காடுகளை கொண்டு வர நாம் விரும்புகிறோம். நிலத்தின் மூன்றில் ஒரு பகுதி மர நிழலின் கீழ் இருக்குமானால், காவேரி நிச்சயம் பாயும். ஏனெனில், நடப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் அது மண்ணில், ஆண்டுக்கு சுமார் 3800 லிட்டர் தண்ணீரைத் தக்க வைத்துக்கொள்ளும் திறன் உள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.
எந்த மரங்களை நடவு செய்ய வேண்டும்?
வேளாண் காடுகள் விவசாயத்திற்கென ஒருமுறை உள்ளது. இதன்மூலம் மூன்றரை ஆண்டுகளில், ஏழு ஆண்டுகளில், பன்னிரண்டு ஆண்டுகளில் மற்றும் பதினைந்து ஆண்டுகளில் அறுவடை செய்துகொள்ளக் கூடிய வெவ்வேறு வகையான மரங்களை பயிர் செய்யமுடியும். நமது வேளாண் காடுகள் முன்மாதிரிகளில், பொருளாதார ரீதியாக பலன் தர முடியாத மரவகைகளை நாம் தவிர்க்கிறோம். மேலும், இந்த பிராந்தியத்தில் வளரும் பூர்வீக மரவகைகளை மட்டுமே தேர்ந்தெடுப்பதிலும் நாம் கவனமாக உள்ளோம்.
நாம் இதனை கவனமுடன் தேர்ந்தெடுக்க காரணம் இருக்கிறது. உதாரணமாக, கேரளாவின் வயநாட்டில், பல விவசாயிகள் யூகலிப்டஸ் மரங்களை பயிரிட்டுள்ளனர். யூகலிப்டஸ் நிலத்திற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. எனவே, நிலத்துடன் நன்றாக ஒத்திசைந்து வளரும் இனங்கள் மட்டுமே நமது பரிந்துரைகளின் ஒரு பகுதியாக இருப்பதை நாம் உறுதிசெய்துள்ளோம்.
வேளாண் காடுகள் வனங்களுக்கு இணை ஆகாது, அப்படி ஒருபோதும் ஆகப்போவதும் இல்லை. ஒரு விவசாயியிடம் நீங்கள் சென்று அவரது நிலத்தை வனப்பகுதியாக மாற்றச் சொல்ல முடியாது, ஏனெனில் அதுதான் அவருக்கு வாழ்வாதாரம். ஆனால், வழக்கமாக ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை நிலத்தை உழும் பயிர் சாகுபடி முறையைவிட, ஒரு விவசாயிக்கு வேளாண் காடுகள் வளர்ப்பு சிறந்த மாற்றமாக அமையும்.
வேளாண் காடுகள் என்பது பல்வேறு மரவகைகளை அவை ஒன்றில் இருந்து மற்றொன்று பலன் பெறும் வகையில் ஒன்றிணைந்து வளர்ப்பதற்கான வழியாகும். தனிப்பட்ட முறையில் விவசாயிகள் வேளாண் காடுகள் திட்டத்தில் முழுமூச்சாக இறங்கினால், அவர்களிடம் பத்து ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு இருந்தால், அதை நாம் மிகவும் விரிவாக ஒன்றிணைத்த முறையில் செய்ய முடியும். நிலப்பரப்பு ஒன்று முதல் மூன்று ஏக்கர் வரை இருந்தால், அதிக ஒன்றிணைப்புக்கு சாத்தியமில்லை. நீங்கள் இதை இன்னும் கொஞ்சம் எளிமையாக செய்ய வேண்டும், ஆனால் அது சிறந்த வழியாக இருக்காது. ஆனால் நீங்கள் இதில் துல்லியமான நிலையில் மட்டுமே செயல்பட வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் ஒருபோதும் எதுவும் செய்யமாட்டீர்கள். இப்போதைய சூழ்நிலையில் எப்படி செய்தால் அது வேலை செய்யுமோ, அப்படி நீங்கள் அதைச் செய்ய வேண்டும். இல்லையெனில் எதுவும் நடக்காது, கடைசி வரை நாம் பேசிக்கொண்டு மட்டும்தான் இருப்போம்.
திட்டம்
இப்போது, காவேரி நதிப் படுகையில் 242 கோடி மரங்களை நடவு செய்ய விவசாயிகளுக்கு நாம் உதவுகிறோம். விவசாயிகள் இதை ஒரு பொருளாதார ரீதியான செயலாக முன்னெடுக்கப் போகிறார்கள். தேவையான மரக்கன்றுகள் மக்கள் அளித்துள்ள நன்கொடைகளிலிருந்து வரப்போகின்றன - இங்குதான் நமக்கு மக்களின் ஆதரவு தேவையாக இருக்கிறது.
இது மட்டுமின்றி, ஒரு விவசாயி, தனது வழக்கமான மூன்று மாத, நான்கு மாத பயிர்சாகுபடி முறையிலிருந்து மரப்பயிர் சார்ந்த சாகுபடிக்கு மாறுவதற்கு அரசாங்கம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற நமது வேண்டுகோளுக்கு தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் இசைவு தெரிவித்துள்ளன. விவசாயிகள் வாழ்க்கையில் ஒரு மாபெரும் மாற்றமாக இருக்கும் இந்த முடிவை எடுத்துள்ள இரு மாநில அரசுகளுக்கும் நமது மனமார்ந்த நன்றிகள். இதனை நீண்டகால அடிப்படையிலான ஒரு முதலீடாகவே பார்க்க வேண்டும். ஏனென்றால், மரப்பயிர் சாகுபடியில் பலன் கிடைக்க விவசாயிகள் குறைந்தது மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும். எனவே அந்த காலகட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவோ அல்லது கடன் வலையில் சிக்கிக்கொள்ளாமல் இருக்கவோ அரசு வழங்கும் ஊக்கத்தொகை ஒரு காப்பீடாக இருக்கும்.
தமிழக விவசாயிகளில் எண்பத்து மூன்று சதவீதம் பேர் கடனாளிகளாக உள்ளனர். கர்நாடகாவில், எழுபத்தேழு சதவீதம் விவசாயிகள் கடனாளிகள். இதில் பெரும்பாலானவர்கள் தாங்கள் எடுத்த கடன்களை திருப்பிச் செலுத்தும் வழியே இல்லாத நிலையில் உள்ளனர். விவசாய கடன் தள்ளுபடி பற்றி எல்லோரும் தொடர்ந்து பேசுவதற்கான காரணம் இதுதான்.
உண்மையில், கடன் தள்ளுபடி என்பது நமக்கு எதிராகத்தான் செயல்படும். ஏனெனில், இப்போது இருக்கும் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிடும், ஆனால் அடுத்த முறை ஒரு விவசாயிக்கு கடன் தேவைப்பட்டால், எந்த வங்கியும் அவருக்கு கடன் கொடுக்கப் போவதில்லை. இந்தியாவில், 1970 களில் வங்கிகளை தேசியமயமாக்குவதற்காக நடந்த முழு இயக்கமும் கிராமப்புற மக்களுக்கு வங்கி கடனுதவி கிடைக்கச் செய்வதற்காகத்தான். அந்த முழு புரட்சியும் இப்போது அழிக்கப்பட்டுவிடும் நிலையில் உள்ளது. மீண்டும் கிராமப்புற மக்களை உள்ளூர் வட்டிக் கடைக்காரர்களின் கைகளில் தள்ளுகிறோம், அவர்களோ ஆண்டுக்கு எழுபது சதவீதம் வட்டி வசூலிப்பார்கள்.
நாம் விவசாயத்தை மிகவும் இலாபகரமான செயல்முறையாக மாற்றாவிட்டால், இந்த தேசத்தின் எதிர்காலத்தையே பல வழிகளில் நாம் அச்சுறுத்துகிறோம். நீங்கள் இப்போதே ஒரு கணக்கெடுப்பை நடத்தி, எத்தனை விவசாயிகள் தங்கள் குழந்தைகளை விவசாயத்திற்கு அனுப்ப விருப்பமாக உள்ளார்கள் என்று கேட்டுப்பாருங்கள், இதை நம்புவதற்கு சிரமமாக இருக்கும். ஆனால், இரண்டு முதல் ஐந்து சதவீதம் பேர் மட்டுமே தங்கள் குழந்தைகளும் விவசாயம் செய்யவேண்டும் என விரும்புவார்கள்.
இதன் பொருள், அடுத்த இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகளில், இந்த தலைமுறை கடந்துவிட்ட பிறகு, உணவை வளர்ப்பதற்கான அனைத்து திறனையும் நாம் இழந்திருப்போம். 130 கோடி மக்கள் நம் கையில் இருக்கையில், உணவை வளர்க்கும் திறனை நாம் இழந்தால், இந்த நாட்டில் நாம் ஏற்படுத்தப் போகும் பேரழிவை நீங்கள் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். அதனால்தான் நதிகளை மீட்போம் இயக்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக இப்போது செயல்வடிவத்தில் காவிரி கூக்குரல் இயக்கம் நடக்கிறது. நீங்கள் அனைவருமே ஏதாவது ஒரு வகையில், உங்களால் எந்த வகையில் முடியுமோ அந்த வகையில் இதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம்.