அமைதியாக வீட்டில் இருக்கவும் – கோவிட்-19 நெருக்கடியை எப்படிக் கடந்து செல்வது?
COVID-19 தொற்றுநோய் தொடர்ந்து விலைமதிப்பற்ற உயிர்களைக் கோருகையில், நம்முடைய அன்புக்குரியவர்கள் மரண ஆபத்தில் இருக்கும்போது நாம் எவ்வாறு அமைதியாக இருக்க வேண்டும் என்பது குறித்த கேள்விகளுக்கு சத்குரு பதிலளிக்கிறார்.
கேள்வி: எனது குடும்பத்தினர் அனைவரும் இத்தாலியில் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் எப்படி நாம் பதற்றமடையாமல், அமைதியாக இருக்கமுடியும்? அமைதியாக இருப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கிறது.
சத்குரு: இந்தியாவில் எனக்கு நன்கு அறிமுகமான ஒரு பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரது மகன் நியூயார்க் நகரில், தனியாக அப்பார்ட்மெண்ட் வீட்டில் வசித்துவரும் நிலையில், இப்போது கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆகவே மிகுந்த அச்சத்தில் இருந்த அப்பெண்மணி என்னிடம், “நாம் ஏன் நமது குழந்தைகளை அவ்வளவு தொலைதூரத்துக்கு அனுப்புகிறோம்? அவர்களால் இங்கேயே மகிழ்ச்சியாகவும், நலமாகவும் இருக்கமுடியாதா, நாம் என்ன மனநிலையில் இருக்கிறோம்? இப்போது அவன் கொரோனாவினால் பாதிப்படைந்திருக்கிறான், என்ன செய்வது என்றே எனக்குத் தெரியவில்லை,” என்றார். பத்து வருடங்களுக்கு முன்பு, இவரும்கூட தனது பெற்றோரிடமிருந்து வெகுதொலைவில்தான் இருந்தார் என்பதை நான் அவருக்கு நினைவூட்டினேன். இப்போது இவர் திரும்ப வந்துவிட்டார். ஒருவேளை மகனும் திரும்பி வரக்கூடும்.Subscribe
உங்களுடைய அன்புக்குரியவர்கள் எங்கேயோ ஒரு இடத்தில், குறிப்பாக தொற்று அதிகமாக பரவி, ஒரு நாளைக்கு நூற்றுக்கணக்கான மரணங்கள் சம்பவிக்கும் இடத்தில் இருக்கும் நிலையில், உங்களின் போராட்டம் எனக்குப் புரிகிறது. நிச்சயம், நீங்கள் வருத்தமாக இருப்பீர்கள், ஆனால் உங்களையே வருத்திக்கொண்டு உடல் நலத்தைப் பாதித்துக்கொண்டு, பதற்றம் அடைவதனால் நீங்கள் எந்தப் பிரச்சனையையும் தீர்க்கப்போவது கிடையாது. உங்களது மன அழுத்தத்தை இரட்டிப்பாக்குவது மட்டும்தான் நிகழும். தற்போது நம் அனைவருக்குமே பிரச்சனை இருப்பதை யாராலும் மறுக்கமுடியாது. நம்மால் இயன்ற அளவுக்குத் திறமையாக நம் வேதனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டுமா அல்லது நம்முடைய மனதில் அதை நாம் பன்மடங்காக்கிக்கொள்ள வேண்டுமா? இதுதான் நமக்கு இருக்கும் தேர்வு. தயவுசெய்து உங்கள் மனதில் வேதனையை அதிகப்படுத்திக்கொள்ளாதீர்கள் என்றுதான் நான் அறிவுறுத்துவேன். ஏற்கனவே, உலகில் போதுமான அளவுக்கு பிரச்சனை இருக்கிறது. நமக்கும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொருவருக்கும் இந்தப் பிரச்சனையை எப்படிக் குறைத்துக்கொள்வது என்று நாம் பார்ப்போம்.
அமைதியாகவும், ஆரோக்கியத்துடனும் இருப்பது
ஒருவர் உற்சாகமாகவும், ஆனந்தமாகவும் இருக்கும்போது அவரின் நோய் எதிர்ப்பு சக்தியானது, மன அழுத்தம் மற்றும் வருத்தத்தில் இருக்கும் ஒருவருடைய எதிர்ப்பு சக்தியைவிட மேலான நிலையில் செயல்படுகிறது என்பதற்கான வலுவான புள்ளிவிவரங்கள் உள்ளன.
ஒரு சூழ்நிலை அபாயகரமானதாக இருக்கும்போது, நீங்கள் சீரியஸாக இருக்க வேண்டியதில்லை.“ நான் சீரியஸாக இல்லையென்றால், விளையாட்டுத்தனமாக இருக்கப்போகிறேன் என்று அர்த்தமா?” இல்லை, நீங்கள் ஆனந்தமானவராகவும், பொறுப்பானவராகவும், அறிவுள்ளவராகவும்தான் இருக்கப்போகிறீர்கள். எல்லாவற்றைப் பற்றியும் படு சீரியஸாக இருப்பவர்களைவிட, ஆனந்தமான ஒரு மனிதரால் சூழ்நிலைகளை நன்றாக எதிர்கொள்ள முடியும். மேலும் நீங்கள் அச்சத்தில் இருந்தால், அதிகமாக முடக்கப்படுகிறீர்கள். இப்போது உங்களது எல்லாப் புலன்களும் அதற்கே உரிய செயல் நிலையில் இருப்பதும், உங்கள் உடலும், மூளையும் தேவைப்படும் விதத்தில் இயங்கி, எதிர்ச் செயலாற்றுவதும் மிகவும் முக்கியமாக இருக்கிறது.
வைரஸ்சுடன் சண்டையிட வேண்டாம்
இந்தியாவில், சொற்பமானவர்கள் மட்டும்தான் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அது ஒரு சில ஆயிரமாக இருக்கலாம், ஆனால் 140 கோடி மக்கள்தொகைக்கு அது சொற்பம்தான். வைரஸ்சுடன் சண்டையிடுவதற்கான நேரமல்ல இது – நாம் அதை தவிர்க்கவேண்டும். இந்த வைரஸ் நம்மை கடத்தியாகப் பயன்படுத்துகிறது; நாம்தான் கடத்திகளாக இருக்கிறோம், ஆகவே நீங்கள் தொற்றுக்கு ஆளாகாமல் இருப்பதுடன், அதை வேறு யாருக்கும் பரப்பாமல் இருக்கும் இந்த ஒரு விஷயத்தை மட்டும் உறுதி செய்துகொள்ளுங்கள்.
யாரோ ஒருவருக்கு தொற்று ஏற்படும்போது, அவர்களது உடலில் இருக்கும் வைரஸ்சுடன் போராடுவதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்வதற்கு மருத்துவர்கள் இருக்கின்றனர். மக்களிடமிருந்து விலகியிருப்பது மற்றும் தனித்திருப்பதை உறுதி செய்வதன் மூலம், உங்களுடைய உடலில் வைரஸ் பயணம் செய்வதற்கு இடமில்லை என்பதை நிச்சயித்துக்கொள்வது இப்போது அதி முக்கியமான விஷயம். அச்சமோ அல்லது “எனக்கு எதுவும் நிகழாது” என்ற அலட்சியமோ உதவப்போவதில்லை – இந்த மனோபாவத்தினால் நீங்கள் மற்றவருடைய வாழ்க்கைக்கு ஆபத்து ஏற்படுத்தக்கூடும். நம்மிடமிருந்து, வேறு ஒருவருக்கு பயணம் செய்வதற்கு வைரஸுக்கு நாம் இடமளிக்காமல் இருந்தால், பிறகு இறப்புகளை நம்மால் குறைக்கமுடியும். உங்களுக்குத் தொற்று ஏற்படாமல் பார்த்துக்கொள்வதுதான் இப்போது நீங்கள் செய்யக்கூடிய மிகப்பெரிய விஷயம்.