கே: தியானலிங்கம் முன்பாக, கருப்புத் துணிகள் கட்டப்பட்டிருக்கும் ஒரு புளிய மரம் இருப்பது ஏன்?

சத்குரு : புளிய மரத்தின் மீது ஆவிகள் தொங்குவதாக எப்போதும் இந்தியாவில் சொல்லப்படுகிறது. இரவு நேரங்களில் எந்த விலங்கும் அல்லது பறவையும் புளிய மரத்தில் தங்குவது கிடையாது, இதை நீங்கள் கவனித்திருக்கலாம். பகல் பொழுதுகளில் புளியம்பழத்தை அவைகள் சாப்பிடுகின்றன, ஆனால் இரவு நேரம் ஓய்வெடுப்பதற்காக அவைகள் புளிய மரத்தின் மீது உட்காராமல் வேறு மரங்களில் அமர்கின்றன. இது ஏனென்றால், வேறு எந்தத் தாவரங்களை விடவும் ஒப்பீட்டளவில் புளியமரத்தைச் சுற்றிலும் பிராணவாயுவின் அளவு மிகவும் குறைவாக இருக்கிறது. இதைப்போன்ற வேறு சில மரங்களும் உள்ளன, ஆனால் புளியமரம் அதற்கு முக்கியத்துவமானது.

இதனால் புளியமரத்தில் எந்த உயிரினமும் தங்காமல் இருப்பதுடன், குறைந்த அளவு பிராணவாயுவும் சேர்ந்துகொள்வதால், உடலற்ற உயிர்கள் இந்தச் சூழலை மரணம் மற்றும் கரைதலுக்கானது போல உணர்கின்றன. இதனால்தான், அவைகள் இத்தகைய மரங்களின் திசையில் நகர்வதற்கு உந்தப்படுகின்றன.

ஒரு காலத்தில், ஒவ்வொரு சிவாலயத்தின் முன்பாகவும் ஒரு புளியமரம் இருப்பது வழக்கம். இதன் காரணம் என்னவென்றால், கோவிலை நிர்மாணித்தவர்கள், உடலை இழந்தவர்களுக்கும், தெய்வத் திருவுருவத்துடன் இருக்கும் வாய்ப்பை வழங்க விரும்பினார்கள். இந்த உயிர்களுக்கான ஒரு இடமாக, கோயிலுக்கு வெளியில் மரம் அமைக்கப்பட்டது.

தியானலிங்கத்திற்கு முன்னால், வெகு அருகில் ஒரு புளியமரம் இருக்கிறது. தியானலிங்கத்தின் சக்தி வாய்ந்த இருப்பின் காரணத்தினால், தங்களது முக்திக்கான செயல்களைச் செய்திராத உயிர்களும்கூட, ஒரு குறுகிய காலத்திற்குள்ளேயே முக்தி அடைந்துவிடுகின்றன. ஏனென்றால் ஒரு நிலையில், அவைகளுடைய கட்டமைப்பு வைத்துக்கொள்ள முடியாததாகிறது. அந்த விதமான சக்தியின் இருப்பில், உயிர் கரைந்து போகிறது.

மரத்தில் துணிகள் கட்டப்பட்டிருப்பது ஏனென்றால், நாற்பத்தி இரண்டு நாட்களுக்கான ஒரு குறிப்பிட்ட சாதனா செய்கின்ற மக்கள் இருக்கின்றனர். இது சிவாங்கா சாதனா என்று அழைக்கப்படுகிறது. அவர்கள் நாற்பத்தி இரண்டு நாட்களுக்கும் தங்களது உடலில் ஒரு துணி கட்டியிருப்பார்கள். அவர்களது உடல், ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது வியர்வையின் வடிவில், அந்தத் துணியினுள் புகுந்துவிடுகிறது. இன்றைக்கு, டி.என்.ஏ.- பயன்படுத்தி இந்த விஷயங்களை நீங்கள் விளக்கி பேசமுடியும். அந்த டி.என்.ஏ. அல்லது அவர்களது உடலின் ஞாபகத்தைப் பயன்படுத்தி, தியானலிங்கத்தின் முன்னால் நிகழும் செயல்முறை ஒன்று இருக்கின்றது. அதன் மூலம் அவர்களது கர்மக் கட்டமைப்பிலிருந்து நாம் அவர்களை விடுவிக்கிறோம்.

நாற்பத்தி இரண்டு நாட்கள் சாதனா முடித்த பிறகு சாதகர்கள் மேற்கொள்ளும் இந்த முறையினால், ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் சேகரித்து வைத்திருந்த பதிவுகளிலிருந்து பெருமளவு விடுவிக்கப்பட்டதாக சாதகர்கள் உணர்கிறார்கள்.

கே: கீழ்நோக்கி நெளியும் பாம்பு சிற்பங்கள் ஏன் எண்ணற்று காணப்படுகின்றன?

சத்குரு : யோகக் கலாச்சாரத்தில், சக்தியின் உயர்நிலைப் பரிமாணங்களின் குறியீட்டு அடையாளமாக, பாம்பு பயன்படுத்தப்படுகிறது. இது ஏனென்றால், குண்டலினியின் அசைவானது, ஒரு பாம்பு சீண்டப்படும்போது எப்படி அசையுமோ அதை மிகவும் ஒத்திருக்கிறது. இந்தக் காரணத்தினால்தான், சக்தி நிலவும் பல இடங்களில், பாம்புகளின் உருவங்களை நீங்கள் பார்ப்பீர்கள். பொதுவாக, பாம்புகள் மேல்நோக்கி நகர்வதாக இருப்பதைத்தான் நீங்கள் பார்ப்பீர்கள். ஏனெனில் நீங்களும் தெய்வீகத்தை நோக்கி நகரத்தானே முயற்சிக்கிறீர்கள்.

ஆனால் தியானலிங்கத்தில், பாம்புகள் சங்கிலித்தொடராகக் கீழிறங்குவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஏனென்றால்,அவை தெய்வீகத்தைப் பொழிவதை அது குறிக்கிறது, அவை தெய்வீகத்தின் தேடுதலில் இல்லை. அங்கே இருப்பது அருளின் ஓங்கி உயர்ந்த ஒரு தூண் – அருள் நிரம்பி வழிகிறது. இதனை மிகவும் சூட்சுமமான விதத்தில் குறிப்பதற்காகத்தான், இந்த பாம்புகளின் சங்கிலித்தொடரை கீழ்நோக்கிய விதமாக நாம் சித்தரித்துள்ளோம்.

கே: தியானலிங்கத்திற்கு ஏறிச் செல்லும் படிகள் ஏன் மிகவும் உயரமாக இருக்கின்றன?

சத்குரு : தியானலிங்கம் வழிபாட்டுக்கான ஒரு இடம் அல்ல. அது தியானத்திற்கான ஒரு இடம். தியானம் ஒரு செயல் அல்ல, அது நீங்கள் செய்யக்கூடிய ஒன்றல்ல. ஆனால், தியானமாகவே நீங்கள் மாற முடியும். உங்களது முயற்சியினால் தியானம் நிகழாது. ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை எட்டும் அளவுக்கு உடல், மனம், உணர்ச்சிகள் மற்றும் சக்திகளை நீங்கள் பண்படுத்தினால், இயல்பாகவே நீங்கள் தியானத்தன்மை அடைவீர்கள்.

ஒருவர் தனது பாதங்களை படிகளின் மீது வைத்து அழுத்தும்போது, அது ஒரு குறிப்பிட்ட விதத்தில் உடலமைப்பைத் தூண்டுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆகவே, தியானலிங்கத்திற்கு வருபவர்களுக்கு, எளிமையான வழிமுறைகளை நாம் அமைக்கிறோம். படிகளின் வடிவமைப்பு எப்படிப்பட்டது என்றால். ஒருவர் தனது பாதங்களை படிகளின் மீது வைத்து அழுத்தும்போது, அது ஒரு குறிப்பிட்ட விதத்தில் உடலமைப்பைத் தூண்டுகிறது. மற்றொரு விஷயம், முதல் படியிலிருந்து அடுத்த படிக்குச் செல்லும் முயற்சியில், காலை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உயர்த்தி, அடுத்த படியில் அழுத்தி உடல் எடையை மேல்நோக்கித் தள்ளும்போது, உங்களது மூலாதாரம் திறந்துகொள்கிறது – அது தேவையான தூண்டுதலைப் பெறுகிறது.

அடுத்த முறை நீங்கள் உயரமான ஏதோ ஒன்றின் மீது ஏறும்போது, ஒரு குறிப்பிட்ட விதத்தில் பாதங்களைக் கீழே அழுத்துவதால், மூலாதாரத்தைச் சுற்றிலும் உள்ள ஒட்டுமொத்தப் பகுதியும் எப்படித் தூண்டப்படுகிறது என்று கவனித்துப் பாருங்கள். தியானத்தன்மையை அடைய ஒருவர் விரும்பினால், இது மிகவும் முக்கியமானது.

நீங்கள் ஒரு யோகா வகுப்புக்கு சென்றிருந்தால், பல்வேறு பயிற்சிகளுடன் இதை நீங்கள் செய்திருப்பீர்கள். ஆனால்,தியானலிங்கத்திற்கு வரும் பெரும்பாலான மக்களும் எந்தவிதமான தியான வழிகாட்டுதலும் அறிந்திராதவர்கள். இருப்பினும், அவர்கள் வெறுமனே உள்ளே சென்று உட்காரும்போது, அங்கே ஐந்து நிமிடங்களுக்கு உட்காரப்போவதாகத்தான் நினைக்கின்றனர், ஆனால் மணிக்கணக்கில் அவர்கள் உட்கார்ந்துவிடுகின்றனர்.

தியானலிங்கம் கொண்டிருக்கும் சாத்தியம் என்னவென்றால், எந்தக் குறிப்புகளும் கொடுக்காமலேயே உங்களை தியானத்தன்மையை அடையச் செய்யமுடியும். ஆனால்,உடலில் சில முன்னேற்பாடுகளும், உள்வாங்கும் தன்மையும் தேவைப்படுகிறது. பல வழிகளிலும் தியானலிங்க வெளியின் ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், தியானத் தன்மையை அடைவதற்கு உங்கள் உடலமைப்பை அது தயார்ப்படுத்துகிறது.

கே: பதஞ்சலி மற்றும் வனஸ்ரீயும்கூட சக்தியூட்டப்பட்டு உள்ளனவா?

சத்குரு : பதஞ்சலியும், வனஸ்ரீயும் திருவுருவங்கள். இந்த இரண்டு அற்புதமான உயிர்களைப்பற்றி நாம் மிகவும் குறைவான அளவிலேயே பேசியுள்ளோம். ஏனென்றால், நமது ஒட்டுமொத்த கவனமும் தியானலிங்கத்தின் மீது இருக்கிறது. தியானலிங்கத்தைப் போன்று பல பரிமாணங்களையும், அளப்பரிய தன்மையும், நிரந்தரத்தன்மையும் அவர்களிடம் இல்லையென்றாலும், அவர்களுக்கே உரிய தன்மைகளைக் கொண்டிருக்கின்றனர். நாம் அவர்களை அதிகம் மேம்படுத்தவில்லை. அவர்களைக் குறியீடுகளைப் போலத்தான் நாம் வைத்திருக்கிறோம். ஆனால் அவர்கள் தங்களுக்குரிய தன்மையில் உயிர்ப்புடன் இருக்கின்றனர். மக்களின் வாழ்க்கையின் மீது அவர்கள் தாக்கங்களையும், விளைவுகளையும் ஏற்படுத்துகின்றனர்.

தியானலிங்கத்திற்கான சமன்பாடாக, ஒரு சிறிதளவு பெண்தன்மை கொண்டதாக வனஸ்ரீ அமைக்கப்பட்டது. ஆனால், தியானலிங்கம் போன்ற ஒரு ஆண்தன்மைக்கு, வனஸ்ரீ மிக எளிய மனைவியாக இருக்கிறாள். தியானலிங்கத்திற்குச் சமமாக ஒரு பெருஞ்சக்தி தேவைப்படுகிறாள். நாம் தியானலிங்கத்தை பிரதிஷ்டை செய்தபோது, லிங்கபைரவிக்கான தென்மேற்கு மூலை எப்போதும் என் மனதில் இருந்துகொண்டிருந்தது. ஆனால் தியானலிங்கம் கட்டமைக்கப்பட்ட நேரத்தில், நம்மிடம் அதைச் செய்வதற்கான நிதியும், நேரமும் இல்லாமலிருந்தது.

தியானலிங்கம் அவரளவில் முழுமையானவர், ஆனால் எல்லா அம்சங்களையும் வைத்துப் பார்க்கும்போது, தியானலிங்க வெளி சற்று முழுமையில்லாமல் இருந்தது. தியானலிங்கத்தை முடித்தபிறகும் நாம் உயிரோடு இருந்ததால், இது என் மனதில் தொடர்ந்து எழுந்தவண்ணம் இருந்தது. இப்போது தென்மேற்கு மூலையில் லிங்கபைரவியையும் வீற்றிருக்கச் செய்ததால் தற்போது இது ஒரு முழுமையான அமைப்பாக இருக்கிறது.

கே: ஏன் தினமும் நாத ஆராதனை நடக்கிறது?

சத்குரு : லிங்கத்தைச் சுற்றிலும் திரண்டிருக்கும் சக்தி வளையம் அதிதீவிரமாக இருக்கும் காரணத்தால், தியானலிங்கத்தின் சக்தியானது திடமான ஒரு சுவரைப் போல ஆகிவிடக்கூடும். அதனை ஊடுருவிச் செல்பவர்களுக்கு, அது அற்புதமாக இருக்கும். அவ்வாறு ஊடுருவ முடியாதவர்கள் அந்த இடத்தில் உட்கார்ந்திருந்தாலும், அதன் தீவிரம் காரணமாக, சக்தி வளையத்திற்கு வெளியில்தான் இருப்பார்கள். அது சற்று குறைந்த தீவிரத்தில் இருந்தால், அப்போது பெருவாரியான மக்களும் சக்தி வளையத்திற்குள் செல்லமுடியும்.

ஆகவே, ஒரு நாளைக்கு இரண்டு முறை, குறிப்பிட்ட ஒலிகளைப் பயன்படுத்தி, இந்த சக்தி சுவற்றில் விரிசல் உண்டாக்குவதைப் போன்று செய்கிறோம் – சில நேரங்களில் இனிய ஒலிகளால், சில நேரங்களில் இனிமையற்ற ஒலிகளால்! அவர்கள் எழுப்பும் இசையின் இனிமை என்பது அங்கு அமர்ந்திருக்கும் மக்களைப் பொறுத்தது. ஆனால், இசை கடூரமாக இருந்தாலும் ஒலிகளை எழுப்புவதன் நோக்கம் நிறைவேறுகிறது. ஏனென்றால், தன்னை மிகவும் தீவிரமாக – ஏறக்குறைய கெட்டிப்படுத்தப்பட்ட ஒரு சக்தியின் இருப்பாக – உருவாக்கியிருக்கும் ஏதோ ஒன்றில் தடங்கல் ஏற்படுத்துவதுதான் நோக்கம். அதனால் தியானலிங்க வளாகத்திற்குள் நுழையும் எல்லா மக்களும், அச்சக்தியை சற்று அதிகமாகப் பெறமுடிகிறது.

நீங்கள் ஒரு சில கத்தல்களில்கூட அல்லது சமையல் பாத்திரங்கள் சிலவற்றைக் கொண்டு போதுமான தீவிரத்துடன் சப்தம் செய்வதிலும்கூட அதைச் செய்துவிட முடியும். சமூக நோக்கில் அது பயனற்றுத் தெரியலாம். ஆனால், நமது ஆன்மீக நோக்கம் நிறைவேறி விடுகிறது. இருப்பினும், இந்த செயல்முறையை ஒரு அர்ப்பணிப்பான செயல்முறையாக மாற்ற நாம் விரும்பினோம். ஏனென்றால், அர்ப்பணிப்பு நிலையில் ஒரு மனிதர் அதிகபட்சமான உள்வாங்கும் தன்மையில் இருக்கிறார்.

இந்திய வாழ்க்கை முறையில், நீங்கள் கோவிலுக்குச் சென்றால், எப்போதும் ஏதாவது ஒன்றை அர்ப்பணிக்க வேண்டும். உங்களது வாழைப்பழத்தையோ அல்லது தேங்காயையோ கடவுள் சாப்பிட விரும்புகிறார் என்பது இதன் பொருள் அல்ல. உங்களிடம் வாழைப்பழம் அல்லது தேங்காய் இல்லையென்றால், குறைந்தபட்சம் ஒரு இலையை நீங்கள் அர்ப்பணம் செய்யவேண்டும். நீங்கள் அர்ப்பணிக்கும் நோக்கத்துடன் செல்கிறீர்கள்; ஒரு அர்ப்பணிப்பாக நீங்கள் செல்கிறீர்கள் என்பதுதான் இதன் கருத்து. அர்ப்பணிப்பாக நீங்கள் செல்லும்போது, அங்கு என்ன இருக்கிறதோ அதை நீங்கள் அதிகபட்சம் உள்வாங்குகிறீர்கள்.

ஆகவே, நாத ஆராதனாவுக்கான நேரங்கள் ஒரு அர்ப்பணிப்பாக இருக்கும் காரணத்தால், அவைகள் மக்களுக்கு அதிகம் உள்வாங்கும் நேரங்களாக இருக்கின்றன.

கே: ஒரு மனிதர் தியானலிங்கம் போல் ஆகமுடியுமா?

சத்குரு : ஒவ்வொரு மனிதரும், ஏழு சக்கரங்களின் உச்சபட்ச அதிர்வுடன் ஒரு தியானலிங்கம் போல் வீதியில் நடந்துசெல்ல முடியும். இந்த மாதிரி பலர் மாறக்கூடிய நாள் அற்புதமானதாக இருக்கும்.

ஒவ்வொரு மனிதரும், ஏழு சக்கரங்களின் உச்சபட்ச அதிர்வுடன் ஒரு தியானலிங்கம் போல் வீதியில் நடந்துசெல்ல முடியும். இந்த மாதிரி பலர் மாறக்கூடிய நாள் அற்புதமானதாக இருக்கும்.

தியானலிங்கம் ஒரு வாழும் உயிராக இருக்கிறது. ஏனெனில், அது ஏழு சக்கரங்கள் கொண்டு அங்கே நிற்கிறது. அங்கே பௌதீக உடல் மட்டும் இல்லாமலிருக்கிறது. யோகி ஒருவர் அங்கே அமர்ந்திருப்பதைப் போல், தியானலிங்கம் மிக மேன்மையான ஒரு உயிரின் சக்தி உடல் போல இருக்கிறது. அல்லது பாரம்பரிய முறைப்படி கூறவேண்டுமென்றால், நாம் சிவனையே உருவாக்கினோம். மக்களுக்கு என்றென்றைக்கும் ஒரு வாழும் குரு இருக்கிறார் என்பதுதான் இதன் கருத்து.

உங்களது சாதனாவை நீங்களாகவே செய்துகொள்வதற்கும் ஒரு குருவின் அருகாமையில் செய்வதற்கும் மிகவும் வித்தியாசம் உண்டு. மிகச் சிலருக்கே குருவின் அருகாமையில் இருக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. ஏனென்றால், உடலளவில் அந்த அருகாமையை அனைவருக்கும் எப்போதும் வழங்குவது சாத்தியமில்லாதது. ஆனால் தியானலிங்கத்தின் இருப்பினால், ஒவ்வொருவருக்கும் அந்த வாய்ப்பு தடையின்றி கிட்டுகிறது. தியானத்தைப்பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்றாலும், ஒரு சில நிமிடங்கள் மட்டும் நீங்கள் அங்கே உட்கார்ந்தாலும், ஒரே ஒரு வழிகாட்டும் குறிப்பு கூட இல்லாமல் நீங்கள் தியானத்தன்மை அடைவீர்கள். ஏனென்றால், அந்த சக்தியின் இயல்பே அப்படித்தான் இருக்கிறது.

சந்தேகவாதிகள் இதற்கு ஆட்சேபம் தெரிவிப்பார்கள், ஆனால் கருத்தியல்படி, இந்த சூட்சும உடலின் மீது ஒரு பௌதீக உடலை உருவாக்குவது சாத்தியமே. நம்மால் ஒரு மாபெரும், அற்புதமான மனிதரை உருவாக்கமுடியும். ஆனால் அது மிக மிக விரிவான செயல்முறை. தற்போது பௌதீக உடல் இல்லாமலே அவர் மிக நன்றாகவே இருக்கிறார் – மிகவும் சக்தி வாய்ந்த அதிர்வுகளுடன் அவர் இருக்கிறார். ஒரு பௌதீக உடலைக் கட்டமைத்துவிட்டால், பிறகு புற உடலின் எல்லா கட்டுப்பாடுகளும் அவருக்கு வந்துவிடும். புற உடல் இல்லையென்றால், கால வரையறை குறித்த பிரச்சனை இருப்பதில்லை. உடல்தன்மை கொண்ட சூப்பர் மனிதரை விட உடல்தன்மை இல்லாத சூப்பர் மனிதர் மேலானவர். ஏனென்றால் இவர் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நிலைத்திருப்பார்.

கே: நாம் ஒருமுறை தியானலிங்கத்தைத் தரிசித்துவிட்டால், அதன் பிறகு எங்கிருந்தாலும் நம்மால் தியானலிங்கத்தை உணரமுடியுமா?

சத்குரு : உங்கள் மனதில், குறிப்பாக உணர்வு மனதில் நீங்கள் சிறைப்பட்டிருக்கும்வரைதான் காலமும், இடமும் ஒரு எல்லையாக இருக்கும். மனதின் ஆழ்நிலைகளுக்கு நீங்கள் சென்றுவிட்டால்கூட, அங்கு காலமும், இடமும் இல்லை.

தியானலிங்கம் ஒரு குறிப்பிட்ட பொருள்தன்மையின் வடிவம் கிடையாது, அது காலம் மற்றும் இடத்தை வெல்லுகின்ற ஒரு சக்தி வடிவமாக இருக்கிறது.

தியானலிங்கம் ஒரு குறிப்பிட்ட பொருள்தன்மையின் வடிவம் கிடையாது, அது காலம் மற்றும் இடத்தை வெல்லுகின்ற ஒரு சக்தி வடிவமாக இருக்கிறது. தியானலிங்கத்தைப் பார்த்திராத மக்களும் அல்லது தியானலிங்கத்தைப்பற்றி அறிந்திராதவர்களும்கூட, அவர்கள் உள்வாங்கும் நிலையைப் பெறும் அந்தக் கணமே அதை உணர்கின்றனர். நீங்கள் எங்கிருந்தாலும், இந்த இடத்திற்கு நீங்கள் வந்ததில்லை என்றாலும், ஒருவிதமான திறந்ததன்மையில் இருப்பதற்கு உங்களுக்கு விருப்பமிருந்தால், தியானலிங்கம் எப்போதும், எந்த இடத்திலும் இருந்துகொண்டிருக்கிறது.

பலருக்கும் இது மிகவும் தத்துவார்த்தமாகத் தோன்றலாம், ஆகவே குறைந்தபட்சம் ஒருமுறை தியானலிங்கத்தை நேரடியாகத் தரிசிப்பது சிறந்தது. நீங்கள் தியானலிங்கத்தைப் பார்த்துவிட்டாலும், அங்கே உட்கார்ந்திருந்தாலும், தியானலிங்கத்தின் மூலமாக ஆன்மீக விதை உங்களுக்குள் ஊன்றப்படுவது என்பது எப்படியும் நிகழ்ந்தே தீரும். உங்கள் வீட்டின் ஒரு இடத்தை ஒதுக்கிவைத்து, காலையும், மாலையும் உங்களுக்காகவே ஒரு குறிப்பிட்ட நேரத்தை முடிவு செய்துகொண்டு, வெறுமனே அமைதியாக நீங்கள் அமர்ந்தால், தியானலிங்கத்தின் சக்தி உங்களுக்குள்ளிருந்து எழுந்து உங்களைப் பரவிச் சூழ்ந்துகொள்ளும்.

ஒரு உருவத்தின் உதவி உங்களுக்குத் தேவைப்பட்டால், உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்படி, ஒரு உருவப்படத்தை எப்போதும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். உளவியல்ரீதியாக கவனச் சிதறல் ஏற்படுவதன் காரணத்தினால்தான் ஒரு பக்கபலம் அவசியமாகிறது. இல்லையென்றால், எந்தப் பக்கபலமும் தேவையில்லை. தியானலிங்கத்தின் முன்னிலையில், இருப்பில் இருப்பதால் ஊன்றப்படும் ஆன்மீக விதை, எந்த விதத்திலாவது இதைக் கவனித்துக்கொள்ளும்.