வாழ்க்கை பாதுகாப்பற்றது (Insecurity in Tamil)

சத்குரு: வாழ்க்கை என்பது பாதுகாப்பற்றது. வாழ்க்கையில் எந்த பாதுகாப்பும் இல்லை. நான் அந்த ரகசியத்தை உங்களுக்கு சொல்லட்டுமா? நீங்கள் எவ்வளவு இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தாலும், நீங்கள் ஒருநாள் இறக்கப் போகிறீர்கள். நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டும் என்று நான் ஆசீர்வதிக்கிறேன், ஆனால் நீங்கள் ஒருநாள் இறந்துவிடுவீர்கள், பரவாயில்லையா? வேண்டாமா?

நீங்கள் உங்கள் இறக்கக்கூடிய தன்மையை ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், பாதுகாப்பு, பாதுகாப்பின்மை இதெல்லாம் காணாமல் போய்விடும். நீங்கள் ஏதோ நிரந்தரமாக இருக்கப்போவது போல தினசரி வாழ்வை வாழ்கிறீர்கள்.

நீங்கள் சந்தோஷமாக இறந்து போகலாம், இல்லை அழுதுகொண்டே இறக்கலாம், அது உங்கள் விருப்பம். ஆனால் எப்படி இருந்தாலும் நீங்கள் ஒருநாள் இறப்பீர்கள், ஆமாவா, இல்லையா? நான் இறக்க வேண்டாம் என்று, இன்றிலிருந்து நீங்கள், "நான் இறக்கக்கூடாது, நான் இறக்கக்கூடாது, நான் இறக்கக்கூடாது" என்று ஜபம் செய்தால், அப்போது என்ன நடக்கும் என்றால், நீங்கள் வாழமாட்டீர்கள், ஆனாலும் இறப்பீர்கள், ஆமாதானே?

நான் இறக்கக்கூடாது என்ற பயமே உங்களை வாழவிடாது. ஆனால் அது உங்களை சாகாமல் தடுக்கவும் செய்யாது, எப்படியும் நீங்கள் இறந்துபோவீர்கள். நாம் இறக்கக்கூடியவர்கள் என்று ஏற்றுக்கொள்வது ஒரு மிக முக்கியமான விஷயம். உங்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால், நீங்கள் ஏதோ கற்பனை உலகத்தில் வாழ்கிறீர்கள். அது நிஜம் இல்லாத உலகம். உண்மையான உலகம் இல்லை. உண்மையான உலகத்தில் நாம் வருவோம், போவோம். நமக்கு முன்பு எண்ணிலடங்காத மக்கள் வந்து போயிருக்கிறார்கள், இல்லையா?

நீங்கள் 1857-ல் இருந்து இருக்கின்ற ஒரு கல்வி நிறுவனத்தில் (Sir JJ College of Architecture, மும்பை) இருக்கிறீர்கள். இதை அந்த வருடத்தில் எப்படி ஆரம்பித்தார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ஏனென்றால், அந்த வருடத்தில் நாடு முழுவதும் அவ்வளவு கலகங்கள். 1857-ல் நாட்டில் நிறைய கொந்தளிப்புகள் நடந்தது. ஆனால் எப்படியோ ஒருவர், அப்போது இதை துவங்கியிருக்கிறார். நீங்கள் நடந்து கொண்டிருக்கிற மண்ணில் எத்தனை பேரை புதைத்து இருக்கிறார்கள் என்று நமக்கு தெரியாது. ஆமாவா, இல்லையா?

ஜெருசலத்திற்குப் புனிதப்பயணம் செய்த தம்பதிகள்

இந்த எண்ணற்ற மக்கள், உங்களுக்கும் எனக்கும் முன்னால் இந்த பூமியின்மேல் நடமாடிய மக்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? எல்லோரும் மேல்மண்ணாக ஆகிவிட்டார்கள். ஆமாவா, இல்லையா? இதுவும் ஒருநாள் மேல்மண்ணாகிவிடும். நீங்கள் திரும்ப உயிர்த்தெழுவீர்களோ என்று பயந்து, உங்கள் நண்பர்கள், உங்களை மிக ஆழமாக புதைத்தால் வேண்டுமானால் அப்படி ஆகாமல் இருக்கலாம்.

இதுபோல சில சம்பவங்கள் நடந்திருக்கிறது. டெக்சாஸ் நகரத்தில் ஒரு வயதான தம்பதியர் இருந்தார்கள், அவர்களுக்கு வயது 75 திற்கு மேல் இருக்கும். அவர்களுடைய கனவு, புனித பூமியான ஜெருசலத்திற்கு போகவேண்டும். ஆனால் அவர்களுடைய வியாபாரம், அப்புறம் குழந்தைகள், அவர்களை வளர்ப்பது, அவர்களுடைய கல்லூரி படிப்பு, அவர்களுக்கு திருமணம், அது இது என்று அவர்கள் அங்கே போகவே இல்லை. 75 வயதிற்கு மேல்தான் ஜெருசலத்திற்கு பயணமானார்கள். ஜெருசலத்தில் கூழாங்கல்லும் வரலாற்றை சொல்லும். இயேசு நடந்ததாக சொல்லப்படுகின்ற அதே பாதையில் அவர்கள் நடந்தார்கள். அவர் தண்ணீர் மேல் நடந்ததாக சொல்லப்படுகின்ற இடம், இப்படி பல விஷயங்களைப் பார்த்தார்கள். இந்த அனுபவத்தால் மிகவும் பூரிப்படைந்தார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

துரதிருஷ்டவசமாக, அந்த மூதாட்டிக்கு மாரடைப்பு வந்து இறந்துவிட்டார். அவருடைய கணவர், உடலை டெக்சாஸிற்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்தார். ஆனால் அங்கே இருந்த மக்கள் அவரிடம், "ஜெருசலம் ஒரு புனித பூமி, இது சாவதற்கு சரியான இடம், அவர் சரியாகத்தான் இறந்திருக்கிறார், அதனால் அவருடைய இறுதி சடங்குகள் எல்லாவற்றையும் இங்கேயே செய்து, இங்கேயே புதைத்துவிடலாம். அதற்கு வெறும் 25,000 டாலர்கள்தான் செலவாகும். ஆனால் அவரை டெக்சாஸிற்கு நீங்கள் கொண்டுபோனால், பயணத்திற்கே 18,000 டாலர்கள், உள்ளூர் செலவுகள், அமெரிக்காவில் தகனத்திற்கான கட்டணமும் மிக மிக அதிகம். இது எல்லாவற்றையும் சேர்த்தால் இன்னும் அதிகமாக செலவாகும். எல்லாவற்றிற்கும் மேல், அவர் புனித பூமியில் இறப்பதைத் தேர்ந்தெடுத்திருக்கிறார், இங்கேதான் அவரை புதைக்க வேண்டும், இங்கேயே செய்யலாம்" என்று சொன்னார்கள்.

அதற்கு அந்த மனிதர், "இல்லை, நான் அவரை டெக்சாஸிற்கு கொண்டுபோகிறேன்" என்று சொன்னார்.

அவர்கள் சொன்னார்கள், "நீங்கள் உங்கள் மனைவியுடைய இறப்பால் மிகவும் துயரத்தில் இருக்கிறீர்கள், உங்களால் சரியாக சிந்திக்க முடியவில்லை என்று எங்களுக்கு புரிகிறது. அதனால் உங்களுக்கு சிறப்பு தள்ளுபடியாக 15,000 டாலர்கள் கட்டணத்தில் செய்கிறோம்."

"இது பேரம் பேசுகின்ற இடம், புரிகிறதா? நாம் செய்துவிடலாம்". அந்த மனிதர் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு மறுபடியும், "இல்லை, நான் அவரை டெக்சாஸிற்கே கொண்டுபோகிறேன்" என்று சொன்னார்.

அப்போது அவர்கள் சொன்னார்கள், "இந்த முடிவில் அர்த்தமே இல்லை. நீங்கள் மிகவும் வேதனைப்படுவதை எங்களால் பார்க்க முடிகிறது. 45 வருடம் மனைவியாக இருந்தவரை இழந்துவிட்டீர்கள், அதனால் நீங்கள் சொல்லமுடியாத மனவேதனையில் இருக்கிறீர்கள். உங்களால் சரியாக யோசிக்க முடியவில்லை, எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் ஒரு அமெரிக்கர், டெக்சாஸில் இருந்து வந்திருக்கிறீர்கள், அதனால் உங்களுக்கு விசேஷமான சிறப்பு தள்ளுபடி கொடுக்கிறோம்.

10,000 டாலர்தான், நாம் செய்துவிடலாம், வாருங்கள், வாருங்கள் முடித்துவிடலாம்."

நான் சொல்வதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் காசி, ஹரித்வார் போன்ற இடத்திற்கு போய், இது எப்படி நடக்கிறது என்று பார்க்க வேண்டும்.

அந்த மனிதர் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு மறுபடியும், "இல்லை, நான் டெக்சாஸிற்கே கொண்டுபோகிறேன்" என்று சொன்னார்.

இதை கேட்டபிறகு அவர்கள் கைகளை விரித்து, "ஏன், உனக்கு என்னதான் பிரச்சனை? 10,000 டாலர்களுக்கு முடித்துவிடலாம்" என்று சொன்னார்கள்.

அதற்கு அந்த மனிதன் சொன்னார், "பாருங்கள் டெக்சாஸில் இறந்தவர்கள் இறந்தவர்களாகவே இருப்பார்கள்."

பாதுகாப்பில்லா உணர்வு வராமல் இருக்க… 

அதனால், நீங்கள் உங்கள் இறக்கக்கூடிய தன்மையை ஏற்றுக்கொண்டீர்கள் என்றால், பாதுகாப்பு, பாதுகாப்பின்மை இதெல்லாம் காணாமல் போய்விடும். நீங்கள் ஏதோ நிரந்தரமாக இருக்கப்போவது போல தினசரி வாழ்வை வாழ்கிறீர்கள். இந்த அடிப்படையான விழிப்புணர்வு, அதாவது, இது இறக்கக்கூடியது, இது இங்கே குறிப்பிட்ட காலத்திற்கு தான் இருக்கும் என்பது எப்போதும் சாதாரணமாக உங்கள் விழிப்புணர்வில் இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை சிறப்பான முறையில் வாழ்வீர்கள், அது உறுதி.

இந்த ஒரு விஷயத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், பாதுகாப்பில்லாத உணர்வே இருக்காது. ஏனென்றால் இந்த வாழ்க்கையில் கிடைப்பதற்கும் எதுவும் இல்லை, தொலைப்பதற்கும் எதுவும் இல்லை. நீங்கள் எதுவும் இல்லாமல் வந்தீர்கள், வாழ்க்கையில் என்னவே நடந்தாலும் உங்களுக்கு லாபம்தான், ஆமாவா, இல்லையா? நீங்கள் ஏதாவது கொண்டு வந்தீர்களா? இல்லை, நீங்கள் எதுவும் இல்லாமல் வருகிறீர்கள், அதனால் எதுவே நடந்தாலும் உங்களுக்கு எப்போதும் லாபம்தான், இல்லையா?

எப்படியும் கடைசியில் ஒரு கண்டெய்னர் எடுத்து செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அதனால் உங்களிடம் இருப்பதெல்லாம் உங்கள் வாழ்க்கை அனுபவம் எவ்வளவு ஆழமானதாக, தீவிரமானதாக, அழகானதாக இருக்கிறது என்பதுதான். அதனால் இதற்கு மிக அதிக பரபரப்பு வேண்டாம். நீங்கள் எதையோ இழக்கப்போவது போன்று நடந்துகொள்கிறீர்கள். இல்லை, தொலைப்பதற்கு எதுவும் இல்லை, கிடைப்பதற்கும் எதுவும் இல்லை. நீங்கள் வந்து போய்விடுகிறீர்கள். நீங்கள் நினைக்கலாம், "ஓ, என் வாழ்க்கை, என் வாழ்க்கை." இல்லை, இந்த பூமியில் உங்கள் வாழ்க்கை ஒரு கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் வருகின்ற pop-up மாதிரி. நீங்கள் இந்த pop-upகளைப் பார்த்திருக்கிறீர்களா? நீங்கள் pop-up ஆகிறீர்கள், பிறகு போய்விடுகிறீர்கள். நடுவில் நீங்கள் எழுச்சிகொண்டு ஜொலிப்பீர்களா என்பதுதான் ஒரே கேள்வி, புரிகிறதா?

அதனால் நீங்கள் எப்படியும் ஜொலிக்கிறீர்கள் என்றால், சில சமயம் மக்கள் உங்களைப் பார்க்கலாம், சில சமயம் மக்கள் உங்களைப் பார்க்காமல் இருக்கலாம். முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் உங்களுக்குள் ஜொலிக்க வேண்டும், அதுதான் முக்கியம். மக்களுக்கு பார்க்கின்ற கண்கள் இருந்தால் அவர்கள் பார்ப்பார்கள், கண்கள் இல்லையென்றால் அவர்கள் பார்க்கமாட்டார்கள்.

அது அவர்கள் பிரச்சனை. ஆனால் நீங்கள் ஒரு தீவிரமான, ஆழமான வாழ்க்கை வாழ்வீர்கள், அதுதான் இங்கே முக்கியமானது. நீங்கள் இதை புரிந்துகொண்டு, இதை உங்கள் வாழ்க்கையில் கொண்டுவந்தீர்கள் என்றால், பாதுகாப்பில்லாத உணர்வு ஏற்படாது. ஏனென்றால், பாதுகாப்பு இறப்பில் மட்டும்தான் வரமுடியும், ஆமாவா, இல்லையா?

சத்குரு வழங்கும் ஆசீர்வாதம்…

மக்கள் என்னிடம் அடிக்கடி வந்து கேட்கின்ற விஷயம் இது, "சத்குரு, எங்களுக்கு எதுவும் நடக்கக்கூடாது என்று எங்களை ஆசீர்வதியுங்கள்."

நான் சொல்வேன், "அட இது என்ன மாதிரியான ஆசீர்வாதம்?"

என்னுடைய ஆசீர்வாதம், உங்களுக்கு எல்லாமே நடக்க வேண்டும். வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் உங்களுக்கு நடக்க வேண்டும். நீங்கள் இங்கே வாழ்க்கையை தவிர்ப்பதற்கு வந்திருக்கிறீர்களா? இல்லை, வாழ்க்கையை உணர்வதற்கு வந்திருக்கிறீர்களா? தயவுசெய்து இப்போதே முடிவெடுத்து விடுங்கள். நீங்கள் வாழ்க்கையை தவிர்ப்பதற்கு வந்திருக்கிறீர்களா, உணர்வதற்கு வந்திருக்கிறீர்களா?

வாழ்க்கையை உணர்வதற்கு. இந்த வாழ்க்கையில் உள்ள பல்வேறு பரிமாணங்கள் எல்லாமே உங்களுக்கு நடக்க வேண்டும், அப்படித்தானே?

நீங்கள் இங்கே வாழ்க்கையை தவிர்ப்பதற்கு வந்திருக்கிறீர்கள் என்றால், இங்கே பக்கத்திலேயே ஒரு கடல் இருக்கிறது, அந்த கடலுக்குள் நீங்கள் குதித்துவிடலாம். நீங்கள் வாழ்க்கையை தவிர்க்க விரும்பினால், நீங்கள் இறக்க வேண்டும், அதுதான் திறன்பட செய்வதற்கான வழி, இல்லையா? நீங்கள் உயிரோடு இருந்துகொண்டு, வாழ்க்கையை தவிர்க்க முயற்சி செய்தால், அது துயரமானதாக ஆகிவிடும். நீங்கள் பாதுகாப்பில்லாமல் உணர்ந்தீர்கள் என்றால், நீங்கள் அதைத்தான் செய்வீர்கள்.

நீங்கள் வாழ்க்கையையே தவிர்க்க முயற்சி செய்வீர்கள். நீங்கள் உயிரோடு இருந்துகொண்டு வாழ்க்கையை தவிர்க்க முயற்சி செய்தால், அது பெரும் துயரத்தை உருவாக்கும். நீங்கள் உயிரோடு இருக்கும்போது வாழுங்கள், இறக்கும்போது இறந்துவிடுங்கள். இறந்த பிறகு உயிர்த்தெழுந்து விடாதீர்கள்.