கடுமையான வறட்சியில் இருந்து தமிழகத்தை விவசாயிகள் காக்க முடியும்
இன்றைய பதிவில் சத்குரு அவர்கள் இந்தியாவின் தண்ணீர் ஆதாரம் பருவமழை தானே தவிர்த்து நதிகள் அல்ல என்பதை விவரிக்கிறார். பருவமழையால் கிடைக்கும் தண்ணீர், அதைப் பிடித்துவைக்கும் மரம்செடிகள் இல்லாமல் ஓடி மறைகிறது. இப்பிரச்சினைக்கு வேளாண்காடு வளர்ப்பு தான் நிலையான தீர்வாக இருக்கும் ஏனெனில் இது சுற்றுச்சூழலுக்கும் ஏற்றது பொருளாதாரத்திற்கும் இலாபகரமானது.
ஒருமுறை வெள்ளம், அடுத்த முறையோ கடும் வறட்சி. தண்ணீரை நிர்வகிக்க நாம் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதற்கு இதுவொன்றே போதுமான சாட்சி. தண்ணீர் என்பது நாம் கவனமாக நிர்வகிக்க வேண்டிய ஒரு இயற்கை வளம் என்றாலும், தண்ணீர் இல்லாமல் போகும்போது மட்டும்தான் நாம் அதுபற்றி சிந்திக்கிறோம். சரியாக நிர்வகிக்கவில்லை என்றால் எந்த இயற்கை வளமும் நமக்கு நிரந்தரமாக கிடைத்துக் கொண்டிருக்காது.
நதிகள் நடக்கவேண்டும், ஓடக்கூடாது
நதிகளும், ஏரிகளும், கிணறுகளும் தண்ணீருக்கான ஆதாரம் என்று பலரும் நினைக்கிறார்கள். அவை தண்ணீருக்கான ஆதாரமல்ல, அவை தண்ணீர் சென்று சேருமிடம். நம் நாட்டில் தண்ணீருக்கு ஒரேவொரு ஆதாரம்தான் உள்ளது. அதுதான் பருவமழை. பனி உருகி நமக்குக் கிடைக்கும் தண்ணீர் என்பது வெறும் 4% தான். மீதமிருக்கும் 96% நீர், 50-60 நாட்களுக்குப் பெய்யும் பருவமழையின் மூலம் நமக்குக் கிடைப்பது! இந்த நீரை பிடித்துவைத்துதான் நாம் 365 நாட்கள் செலவிட வேண்டும்.
தற்சமயம் இந்த நீரை அணைகள் வாயிலாக பிடித்துவைக்க முனைகிறோம். ஆனால், அது வேலை செய்யவில்லை. நாம் கட்டியிருக்கும் அணைகளில் கிட்டத்தட்ட 20 சதவிகிதம், மண் படிந்து உபயோகமற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. தண்ணீரைப் பிடித்துவைக்க நாம் கடைபிடித்துவரும் செயற்கை முறைகள் நெடுங்கால தீர்வாகாது. இதற்கு ஒரே நிரந்தர தீர்வு, நிலத்தில் இருக்கும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுதான். மரம் செடிகள் மற்றும் விலங்குகளின் வாயிலாகக் கிடைக்கும் உயிர்மப்பொருட்கள் போதுமான அளவிற்கு நம் மண்ணில் கலந்தால், மண்ணின் தண்ணீர் ஈர்க்கும் திறன் அதிகரிக்கும். இதன்மூலம் மண் ஈர்க்கும் நீர் சிறிதுசிறிதாக மண்ணிற்குள் ஊறிச் சென்று, நிலத்தடி நீராகவும், நதியில் ஓடும் நீராகவும் ஆகிறது.
அதனால் நதி என்பது தண்ணீருக்கான மூலம் அல்ல, அது தண்ணீர் சேருமிடம். இந்த தண்ணீர் எவ்வளவு மெதுவாக நதியில் சென்று கலக்கிறது என்பதுதான் வருடத்தின் எத்தனை நாட்கள் அந்நதியில் நீர் ஓடும் என்பதை தீர்மானிக்கிறது. இப்போது போதுமான அளவிற்கு மரங்கள் இல்லாததால், இம்மழைநீர் மிக வேகமாக நதியில் கலந்து வெள்ளமாக மாறுகிறது.
தமிழில் காவேரி பற்றி மிக அழகாக ஒரு வரி உள்ளது, "நடந்தாய் வாழி காவேரி!" என்று. காவேரி நடந்து வந்தால்தான் செல்வச்செழிப்பு தருவாள். அவள் வேகமாக ஓடி வந்தால், பேரழிவுதான் நிகழும். காவேரி நடந்துவர வேண்டுமெனில், அந்த வடிநிலத்தில் போதுமான மரங்கள் இருக்கவேண்டும். வடிநிலம் என்றால் அந்த நதி பிறக்கும் இடத்தினருகே இருக்கும் பள்ளத்தாக்கு மட்டுமல்ல. வெப்பம் அதிகமாக இருக்கும் இடங்களில் இருக்கும் ஒவ்வொரு சதுரடி நிலமும் வடிநிலம்தான். எங்கெல்லாம் மரம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் நீர் மண்ணுக்குள் ஊடுறுவிச் செல்கிறது. மரம் இல்லாத இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடி காணாமற் போகிறது.
Subscribe
தற்காலிக சீர்திருத்தத்தில் இருந்து நீடித்து நிலைக்கும் தீர்வு நோக்கி
ஓரிடத்தில் 10,000 மரங்கள் இருந்தால், அங்கு 3.8 கோடி லிட்டர் தண்ணீர் மண்ணை ஊடுறுவிச் செல்லுமாம். காவேரியின் வடிநிலப் பகுதி என்பது 83,000 சதுரடி கி.மீ பரப்பளவில் உள்ளது. இதில் 87% நிலத்தில் மரப்போர்வையை நாம் அகற்றி இருக்கிறோம். அப்படியெனில், எத்தனை லிட்டர் தண்ணீரை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்று கற்பனை செய்து பாருங்கள்! தண்ணீர் பற்றாக்குறை என்பது வெயில்காலத்தில் மட்டும் சிந்திக்கும் விஷயமல்ல. மழைக்காலம் முடியும்போது எவ்வளவு தண்ணீர் வேகமாக ஓடி காணாமற் போகிறது என்பதை சற்று கவனியுங்கள். அப்போதே நாம் சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குடிப்பதற்கு நீர் இல்லாமல் போகும் சமயத்தில்தான் நாம் விழித்துக் கொள்கிறோம்.
உதாரணமாக சென்னையையே எடுத்துக் கொள்ளுங்களேன். ஒரு காலத்தில் சென்னையில் 1500 ஏறிகளும் குளங்களும் இருந்தனவாம். இப்போது அவற்றில் எதுவுமே தென்படுவதில்லை. ஏனெனில், இயற்கையான நீரின் ஓட்டத்தைப் புரிந்துகொள்ளாமல் பொறுப்பற்ற விதமாக இந்நகரத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம்.
இப்போது பிரச்சனையில் தவிக்கும் நேரத்தில் மட்டும் உடனடியாக பலன் தரும் தற்காலிக தீர்வு என்ன என்று சீர்திருத்தப் பணிகளில் ஈடுபடுகிறோம். ஆங்காங்கே பலரும் ஏரிகள், குளங்களை தூர்வாருவது, ஆழப்படுத்துவது பற்றி பேசுவதை பார்க்க முடியும். தமிழ்நாட்டில் மட்டும்தான் இப்படி என்றில்லை. எல்லா இடத்திலும் இப்படித்தான் நடக்கிறது.
இதையெல்லாம் செய்ய வேண்டும்தான். ஆனால், அடிப்படைகளை சரிசெய்யாவிட்டால், இந்த செயல்கள் நீண்ட காலம் பலன் தராது.
முன்காலத்தில் ஏரி, குளம் என்று ஒன்று அமைத்தால், வருடம் முழுவதும் அதற்கு தண்ணீர் கொண்டுவந்து சேர்க்கும் வடிகால்களும் சேர்த்தேதான் அமைக்கப்பட்டன. ஆனால் இப்போதோ, அந்த வடிகால்களின் மீது நாம் வீடுகளும் கட்டிடங்களும் அமைத்துவிட்டோம். இப்படி தண்ணீர் கொண்டுவரும் பாதைகளை அகற்றிவிட்டு, ஏரிகளையும் குளங்களையும் தூர்வாறி ஆழப்படுத்துவது அந்தளவிற்கு பயன்தராது. மழைக்காலத்தில் அதில் நீர் சேரலாம். ஆனால் வருடம் முழுவதும் அதில் நீர் நிறைந்திருக்காது.
70 லட்சம் மக்கள் இருக்கும் ஒரு நகரத்திற்கு வெறும் இரண்டு ஏரிகளை மட்டும் நீர் ஆதாரமாகக் கொண்டிருப்பது நிலையான தீர்வாக இருக்காது. இந்நகரத்தில் நிலத்தடி நீர் உயரவேண்டும். அது நடக்கவேண்டுமெனில், மழை பெய்யும்பொழுது மழைநீர் மண்ணை ஊடுறுவி கீழே செல்லவேண்டும். இப்பிரச்சனைக்கு வேறு தீர்வே கிடையாது. குறுகிய கால தீர்வாக வெள்ள நீரோட்டத்தை ஆங்காங்கே தடுக்கும் தற்காலிக அணைகளைக் கட்டி, நிலப்பரப்பின் ஏற்ற இறக்கங்களை பயன்படுத்தி நீர் மெதுவாக நிலத்தை ஊடுறுவி கீழே செல்ல வழிசெய்யலாம். ஆனால் மரம்செடி வகைகளை வளரச்செய்வதுதான் இதற்கு சரியான தீர்வு. நாட்டுரக புல், புதர், மரங்கள் ஆகியவை நிலப்பரப்பை நிறைக்கவேண்டும். இப்போது இதுதான் அவசியம்.
வேளாண்காடு வளர்ப்பு - நாம் முன்னேற வேண்டிய வழி
அப்படியென்றால் எல்லா இடத்திலும் நாம் காடு வளர்க்க வேண்டுமா? இது நிச்சயம் சாத்தியமில்லை. நாம் செல்லவேண்டிய பாதை, வேளாண்காடு வளர்ப்பு. நம் விவசாயிகளை இயற்கை முறையிலான பழமரம் வளர்ப்புக்கு மாற்றினால், மரங்கள் மற்றும் விலங்குகளிடம் இருந்து கிடைக்கும் உயிர்மச்சத்து தொடர்ந்து நம் மண்ணை வளமாக்கும்.
மரம்-சார்ந்த விவசாயத்திற்கு மாறினால் அது நம் மண்ணிற்கும் நதிகளுக்கும் புத்துயிரூட்டுவதோடு, விவசாயியின் வருமானத்தையும் 3 - 8 பங்கு அதிகரிக்கும். மரம்-சார்ந்த விவசாயத்தில் அதிகளவு வருமானம் கிடைக்கும் என்பதற்கு சான்றாக, பெரியளவில் முன்மாதிரிகளை நாம் செயல்படுத்திக் காட்டவேண்டும். அப்படி செய்தாலே நம் நாட்டில் இருக்கும் விவசாயிகள் தாமாகவே மரம்-சார்ந்த விவசாயத்திற்கு மாறுவர்.
அதனால்தான் "காவேரி கூக்குரல்" எனும் இயக்கத்தை துவக்க உள்ளோம். இதன்மூலம் காவேரி நதிக்கு புத்துயிரூட்டும் செயல்கள் மேற்கொள்ளப்படும். வற்றிவரும் ஒரு நதியை மீண்டும் அதன் பழைய பொழிவிற்கு மாற்றுவது சாத்தியம்தான் என்றும், 10-12 ஆண்டுகளில் அந்த நதி பெருமளவில் புத்துயிர் பெறுவதோடு விவசாயிகளின் வருமானமும் அதிகரிக்க முடியும் என்பதையும் நாம் உலகிற்குக் காட்ட விரும்புகிறோம். இதில் மற்றுமொரு முக்கியமான விஷயம், சுற்றுச்சூழலும் பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று எதிரானது அல்ல. சுற்றுச்சூழலை மேம்படுத்த மேற்கொள்ளப்படும் செயல்கள் நில உரிமையாளருக்கு இலாபத்தையும் அள்ளிக்கொடுக்கும். இது நடைமுறைக்கு வரவேண்டும் என்பதற்குத்தான் இம்முயற்சி.
ஆசிரியர் குறிப்பு : காவேரி கூக்குரல் எனும் இந்த ஒரு முன்னெடுப்பு, காவேரி நதிக்கரையோரங்களில் 242 கோடி மரக்கன்றுகளை அங்குள்ள விவசாயிகளை நடச்செய்வதன்மூலம் காவேரி நதியை மீட்பதற்கான ஒரு தீர்வாகிறது. விவசாயிகளின் வருமானத்தை 5 மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும், காவேரி வடிநிலப் பகுதிகளில் நீர்பிடிப்பை அதிகரிப்பதாகவும் அமையும் இந்த முன்னெடுப்பிற்கு ஆதரவு தாருங்கள்! #CauveryCalling மரம்நடுவதில் பங்களிக்க, வாருங்கள்: Tamil.CauveryCalling.Org அல்லது அலைபேசி : 80009 80009