மஹாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்ட திருப்பூர் குமரன்

சத்குரு: திருப்பூர் குமரன் என்று அழைக்கப்படும் குமாரசாமி முதலியார் ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர். சுதந்திரப் போராட்டம் தீவிரமடைய ஆரம்பித்த காலத்தில் திருப்பூர் குமரன் மஹாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அறப்போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார்.

திருப்பூர் குமரனும் தலையில் அடிபட்டு கீழே சரிந்தார். அந்த நிலையிலும் அவர் நம் இந்திய தேசியக்கொடி அவர் கரங்களில் இருந்து நழுவாமலும், தரையைத் தொடாமலும் காத்து நின்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

திருப்பூர் குமரன் முன்னெடுத்த போராட்டங்கள்

அவர் 1930-ம் ஆண்டு உப்பு சத்தியாகிரக போராட்டத்திலும் பங்கேற்றார். மேலும், தேச பந்து இளைஞர் அமைப்பையும் தொடங்கினார். அந்த அமைப்பு தமிழ்நாடு மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்க விரும்பிய ஆயிரக்கணக்கான இளைஞர்களை ஈர்த்தது.

திருப்பூர் குமரன் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் ஏராளமான ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தி தொடர்ந்து மக்களை கவர்ந்து கொண்டிருந்தார். மஹாத்மா காந்தி கைது செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு உட்பட தேசம் முழுவதும் பல இடங்களில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக, திருப்பூரில் நடந்த போராட்டத்தில் குமரன் பங்கேற்றார். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுப்ரமணிய பாரதியின் ‘அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லையே’ போன்ற தேசப்பற்று பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.

தேசியக்கொடி சாயாமல் காத்த நிகழ்வு

அப்போது தடை செய்யப்பட்டிருந்த நமது இந்திய தேசிய கொடியையும் கரங்களில் ஏந்தி இருந்தனர். இதனால் கோபமடைந்த காவல்துறை, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது லத்திகளைக் கொண்டு கடுமையாக தாக்கியது. இதில் பலர் காயம் அடைந்தனர். திருப்பூர் குமரனும் தலையில் அடிபட்டு கீழே சரிந்தார். அந்த நிலையிலும் அவர் நம் இந்திய தேசியக்கொடி அவர் கரங்களில் இருந்து நழுவாமலும், தரையைத் தொடாமலும் காத்து நின்றார். அதற்கு மறுநாள் அவர் தனது 27-வது வயதில் சிகிச்சை பலனின்றி உயிர்நீத்தார். நமது தேசியக்கொடியின் கௌரவத்தைக் காத்த குமரன் அவர். இதன்காரணமாக, அவர் இன்றும் கொடிகாத்த குமரன் என்றே அழைக்கப்படுகிறார்.

இதயத்திற்கு நெருக்கமான திருப்பூர் குமரன்

இந்த நிகழ்வு திருப்பூரில் நொய்யல் ஆற்றங்கரைக்கு அருகேதான் நிகழ்ந்தது. அந்த நொய்யல் நதி ஈஷா யோக மையத்திற்கு அருகில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால், கொடிகாத்த குமரன் எங்கள் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்.

: Tiruppur Kumaran image from Wikimedia