குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் நீடிக்க...
நான்கைந்து வயது வரை துள்ளித்திரிந்து ஆனந்தமாக விளையாடிய குழந்தைகள், பள்ளிப்பருவத்தை எட்டியதும் பலவித அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். புத்துணர்வும் பிரகாசமும் நிறைந்த குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடப்படுகிறது. இதுகுறித்து சத்குரு பேசும்போது, குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் நீடிக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதையும் விளக்குகிறார்.
குழந்தைகள்... சில உண்மைகள்! பகுதி 8
நான்கைந்து வயது வரை துள்ளித்திரிந்து ஆனந்தமாக விளையாடிய குழந்தைகள், பள்ளிப்பருவத்தை எட்டியதும் பலவித அழுத்தங்களை எதிர்கொள்கின்றனர். புத்துணர்வும் பிரகாசமும் நிறைந்த குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் கொஞ்சம் கொஞ்சமாகத் திருடப்படுகிறது. இதுகுறித்து சத்குரு பேசும்போது, குழந்தைகளின் முகத்தில் ஆனந்தம் நீடிக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதையும் விளக்குகிறார்.
சத்குரு:
"மனதார ஓர் உண்மையைச் சொல்லுங்கள். உங்களுக்குச் சமூகத்தில் ஒரு நற்பெயரை வாங்கித்தர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன்தானே உங்கள் குழந்தைகளை வளர்க்கிறீர்கள்? நீங்கள் சம்பாதித்ததைவிட கூடுதலாகச் சம்பாதிப்பதுதானே அவர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் வளர்ச்சி? அவர்கள் வெற்றி பெற்றுக்கொண்டு வரும் பரிசுக் கோப்பைகளை உலகுக்குக் காட்டுவதில்தானே உங்கள் பெருமை அடங்கி இருக்கிறது?
நீங்கள் எதிர்பார்த்த வளர்ச்சிகளைக் காட்டுவதில் அவன் முனைப்பாக இருந்தால், அவனுடைய சந்தோஷம் காணாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை. சொல்லப்போனால், உங்கள் எதிர்பார்ப்புகளைப் பூர்த்திசெய்வதில் அவன் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறான் என்பதைத்தான் தொலைந்துபோன சிரிப்பு சுட்டிக்காட்டுகிறது.
சந்தோஷம், அமைதி, அன்பு இவையெல்லாம்தான் வாழ்க்கையின் அடிப்படை என்று நினைக்கும் குடும்பமா உங்களுடையது? என்றைக்காவது ஆனந்தமான உயிராக வளரவேண்டும் என்ற நோக்கத்துடன் உங்கள் மகனை வளர்த்தீர்களா?
பெரும்பாலான குடும்பங்களில் புகழ், வசதி, கௌரவம், போட்டிகளில் முதலிடம், பணம் என்று மற்றவை அல்லவா முக்கியமான நோக்கங்கள் ஆகிவிட்டன? இவற்றை எட்டிப் பிடிப்பதில் கவனம் வைத்தால், ஆனந்தம் சுலபமாகத் தொலைந்துதான் போகும்.
உண்மையில் எவ்வளவு கற்றீர்கள், என்ன செய்கிறீர்கள், எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதை எல்லாம்விட, எந்த அளவு ஆனந்தமாக இருக்கிறீர்கள் என்பதற்குத்தான் முதலிடம் தரவேண்டும். அதுதான் உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிக்கும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதற்கு நேர்மாறான வரிசையைத்தான் நம் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம். இது உங்கள் மகனுடைய தனிப்பட்ட பிரச்சினை அல்ல. இந்த உலகில் மிக அவசியமாக, அவசரமாகக் கவனிக்கப்பட வேண்டிய பிரச்சினை.
Subscribe
நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். குடும்பம் என்பது குழந்தைகளை யார் யாராகவோ உருவாக்கிக் காட்டும் இடமல்ல. குடும்பம் என்றால், ஆனந்தமும் அன்பும் நிலவுகிற இடம்.
'அதைச் செய்தாயா? இதைச் செய்தாயா?' என்று ஒரு குழந்தையை விரட்டிக்கொண்டே இருப்பது அதை எங்கேயும் கொண்டுசெல்லாது. ஒழுக்கம் பற்றிய பாடங்களை நடத்துவதால், உலகம் திருந்தி மகிழ்ச்சியாகிவிடப் போவது இல்லை. அன்பான, ஆனந்தமான, ஆதரவான சூழலை உருவாக்கித் தந்தால், நீங்கள் கற்பனை செய்யக்கூட இயலாத ஒன்றை அவன் எட்டிப்பிடிக்கக் கூடும். நீங்கள் கத்துவதற்கும் அலறுவதற்கும் பயந்து, நீங்கள் சொல்வதை எல்லாம் செய்து முடித்து குழந்தை சந்தோஷம் அற்ற முகத்துடன் வளையவந்தால், அதில் என்ன அர்த்தம் இருக்கிறது?
உங்கள் குழந்தையின் முகத்தில் இருந்து சந்தோஷம் திருடு போய்விட்டது என்றால், அதற்குப் பலகாலம் முன்னதாகவே உங்கள் முகத்தில் இருந்தும் அது விலகிப்போயிருக்க வேண்டும். ஒரு நாளில் 24 மணிநேரத்தில் எத்தனை தருணங்கள் ஆனந்தமாக அன்பாகக் கழிந்தன என்று ஒவ்வொரு பெற்றோரும் தன்னைத்தானே கவனிக்க வேண்டும்.
ஆனந்தமாக இருக்கும் மனிதன்தான் அன்பும் கருணையும் கொண்டு எல்லாவற்றையும் பார்ப்பான். எதையும் மென்மையாகக் கையாள்வான். இந்த பூமியின் மீது மிருதுவாக நடப்பான். உலகில் மற்றவரிடத்தில் பெருந்தன்மையாக நடந்துகொள்வான். ஒரு மனிதன் முழுமையாக, ஆனந்தமாக இருந்தால்தான் அவன்மீது நீங்கள் நம்பிக்கை வைக்கமுடியும்.
உலகில் போட்டி இருக்கிறது என்பதை அறிவேன். குழந்தைகள் அந்தப் போட்டிகளில் பங்குகொள்ள வேண்டியதையும் அறிவேன். உங்கள் உடலும் மனமும் எந்த அளவுக்கு உச்சத் திறனுடன் செயலாற்றுகின்றன என்பதே உலகில் உங்கள் வெற்றியைத் தீர்மானிக்கின்றன. உங்கள் உடலும் மனமும் மிகக் கூர்மையான திறனுடன் செயலாற்ற வேண்டுமானால், நீங்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும்.
சந்தோஷத்தை எது கொல்கிறது?
பணம், செல்வம், வசதி, அதிகாரம் என்று நீங்கள் எதற்கெல்லாம் மதிப்பு கொடுக்கிறீர்களோ, அவையே ஆனந்தத்தை உறிஞ்சி எடுத்து உலர்த்திவிடுகின்றன.
அந்த வயதான மனிதர் மரணப்படுக்கையில் இருந்தார். சுயநினைவு அவ்வப்போது திரும்பும். உடனே நழுவிவிடும். நினைவு திரும்பிய ஒரு தருணத்தில் கேட்டார்...
'என் முதல் மகன் ராமு எங்கே?'
'அப்பா, இங்கே இருக்கிறேன்' என்றான் மூத்த மகன்.
சிறிதுநேரம் கழித்து மறுபடியும் நினைவு திரும்பியபோது பெரியவர் கேட்டார்...
'என் இரண்டாவது மகன் சோமு எங்கே?'
'அப்பா, இதோ இங்கேதான் இருக்கிறேன்'.
மறுபடி நினைவு மீண்டபோது, பெரியவர் குரல் சன்னமாக வந்தது.
'என் மூன்றாவது மகன் பீமு?'
'அப்பா, நானும் இங்கேதான் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறேன்'.
பெரியவர் விழிகள் படக்கென்று திறந்தன. 'முட்டாள்களா, எல்லோரும் இங்கே இருந்தால் யாரடா கடையைப் பார்த்துக்கொள்வார்கள்?'
இப்படி ஒரு வாழ்க்கை முறையில் சிக்கிப்போயிருப்பவர்கள் ஆனந்தமாக இருக்க வேண்டும் என்றால் எப்படிச் சாத்தியம்?
உங்களை உள்ளே உறுதிப்படுத்திக்கொள்ளாமல், வெளியே உறுதிப்படுத்திக்கொள்ளப் பார்க்கும்போது இந்த விபத்து நேரத்தான் செய்யும். கல்வி, வேலை, குடும்பம், பிசினஸ் என்று வெளியில் பல சவால்கள் இருக்கின்றன. உங்களை உள்ளே உறுதிப்படுத்திக்கொண்டு, வெளி உலகில் அடி எடுத்துவையுங்கள். எந்தச் சவாலாக இருந்தாலும், அதை ஆனந்தமாக எதிர்கொள்ள முடியும்.
மனிதகுலம் மேன்மையுறுவதற்கு ஆனந்தமாக இருப்பது ஒன்று மட்டுமே உத்தரவாதம் தரமுடியும்".
அடுத்த வாரம்...
டிவி மற்றும் சினிமா போன்ற பொழுதுபோக்கு சாதனங்களால் குழந்தைகளிடத்திலும் சமூகத்திலும் விளையும் கேடுகள் குறித்து சத்குருவின் பார்வை...