மதமும், தொழில்நுட்பமும் – ஒரு விபரீதக்கலவை
நியூசிலாந்திலும், ஸ்ரீலங்காவிலும் நடந்த தீவிரவாத தாக்குதல்கள் குறித்த ஒரு கேள்விக்கு சத்குரு பதிலளிக்கையில், இந்த பூமியில் நீடித்த அமைதியை நிலைநாட்டுவதற்கு நாம் செய்யக்கூடியது என்ன என்பதைப்பற்றி எடுத்துரைக்கிறார்.
கடவுளின் விஷயத்தில் சமரசம் கிடையாது
சத்குரு: இந்த பூமியில் நாம் ஒரு உயிராகப் பிறந்திருப்பதுதான் முக்கியமானது; மற்ற விஷயங்கள் அனைத்துமே நமக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டவை. நாமல்லாத எத்தனையோ விஷயங்களாக நாம் அனைவரும் உருவாகியுள்ளோம். தற்போது உலகில் நாம் நிர்ணயிக்க வேண்டியது இதுதான் – நாம் யார்? மனிதர்களாக இருப்பதைத் தவிர வேறு ஏதோ ஒன்றாக நம்மை உருவாக்கி வைத்திருக்கும் இந்த எல்லா போதனைகளையும் நாம் நிறுத்தியாக வேண்டும். எப்போதும் ஒரு மனிதர் மீது மற்றொரு மனிதரால்தான் தீங்கு விளைவிக்கப்படுகிறதே தவிர, ஒருபோதும் வேறு சக்திகளால் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.மனிதகுல வரலாற்றில் எப்போதும், வானத்திலிருந்து எந்தக் கையும் குதித்து வந்து யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. எல்லாக் காலத்திலும் ஒரு மனிதருக்கு மிகப் பயங்கரமான ஏதோ ஒன்றைச் செய்வது இன்னொரு மனிதராகத்தான் இருக்கிறது. இது பொருளாதாரக் காரணங்களுக்காக, அகங்காரத்தின் காரணமாக, பணம், சொத்து காரணத்தினால் மற்றும் எத்தனையோ பல விஷயங்களுக்காகச் செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், தங்களது கடவுள்களின் பொருட்டு அவர்கள் போராடுவதாக மக்கள் நம்பும்பொழுது, அங்கு சமரசம் கிடையாது. இதைத்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
உங்கள் கடவுளுக்காக நீங்கள் போரிடும்பொழுது, உங்களால் சமரசம் அல்லது சமாதானம் செய்துகொள்ள முடியாது. அது சொத்து குறித்தது என்றால், நான் சமரசம் செய்துகொள்ள முடியும். ஆனால் சமரசம் என்ற கேள்விக்கே இடமில்லாத ஏதோ ஒரு விஷயம் குறித்து நான் போரிடுகிறேன். நீங்கள் ஏதோ ஒன்றின் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டுள்ளீர்கள், நான் வேறொன்றின் மீது நம்பிக்கை வைத்துள்ளேன் என்ற நிலையில், நாம் ஒருவரை ஒருவர் எப்போது கொல்லப்போகிறோம் என்பது என்றைக்கும் நிகழக்கூடியதுதான். இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
Subscribe
நாம் நாளைக்கே அதை நிகழ்த்தக்கூடும் அல்லது நமது குழந்தைகள் நிகழ்த்தலாம் அல்லது அவர்களின் குழந்தைகள் நிகழ்த்துவார்கள், ஆனால் அது நிச்சயம் நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது. நீங்கள் எதையேனும் நம்பும்பொழுது, அதன் பொருள் இதுதான்: உங்களுக்குத் தெரியாதது என்னவோ, அதை நீங்கள் ஊகித்துக்கொள்வதுடன், இந்த ஊகத்தை உங்களது மனங்களில் உறுதிப்படுத்திக்கொண்டு, அதற்கு ஆதரவாக கூட்டம் சேர்க்கிறீர்கள். நீங்கள் ஊகித்துக்கொள்வதுடன் அதேபோல் ஊகித்துக்கொள்ளும் ஆயிரம் பேரை திரட்டுகிறீர்கள். அதேவிதமாக நான் ஏதோ ஒன்றை யூகித்துக்கொண்டு, அதே விஷயத்தை யூகிக்கும் 10,000 மக்களைத் திரட்டும் அந்தக் கணத்தில், ஒரு மோதல் எழுவதைத் தவிர்க்க முடியாது. இது நிச்சயம் நிகழும், என்னை நம்புங்கள்.
மதத்தை ஒரு தனிமனித தேடலாக உருவாக்குவது
இந்த மாதிரி பயங்கரமான சம்பவங்கள் நிகழும்பொழுது, அனைவரும் ஒரு சில நாட்களுக்கு அதைப்பற்றி மிகப் பலமான கண்டனங்களும், வருத்தங்களும் தெரிவிக்கின்றனர், பிறகு அவர்கள் தங்களது இயல்பான செயல்பாடுகளுக்குச் சென்றுவிடுவார்கள். இங்கும், அங்கும் ஒரு சிறிதளவு மட்டும் அமைதி உருவாக்குவதற்கான இந்த எல்லாப் பேச்சுகளும் ஒரு தீர்வு அல்ல. உலகத்தின் எதிர்காலம் குறித்து நாம் உண்மையிலேயே அக்கறை கொண்டால், அடுத்த 25 வருடங்களில் நாம் செய்யவேண்டிய ஒரு அடிப்படையான விஷயம் ஒன்று உண்டு. அதாவது, உங்கள் மதம் என்பது உங்கள் தனிமனித தேடலுக்கானது, நீங்கள் விரும்பும் எதையும் செய்துகொள்ளுங்கள். ஆனால், அதை தேசிய அளவில் அல்லது உலகளவில் எடுத்து செல்ல தேவையில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும்.
இது நூறு சதவிகிதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதை நாம் செய்யவில்லை என்றால், நாம் பார்ப்பது ஒரு சில தேவாலயங்களின் தகர்ப்போ அல்லது மசூதியில் அல்லது வேறெங்கோ யாரோ துப்பாக்கி சூடு நடத்துவதோ மட்டுமல்ல. பல தேசங்கள் துண்டுகளாக வெடித்துச் சிதறுவதையும் பார்க்க நேரிடும். ஏனென்றால், வாள் வீச்சுகளின் காலம் முடிந்துவிட்டது. இப்போது உங்களால் கற்பனை செய்து பார்க்கவும் முடியாத விஷயங்களைச் செய்யக்கூடிய படுபாதகமான ஒற்றை பொத்தான் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் நாள் இது. மனிதகுலத்தின் ஒரு பெரும்பகுதி துண்டு துண்டுகளாகப் போய்விட முடியும். ஏனென்றால், தொழில்நுட்பத்தின் பெயரில் நாம் பெற்றிருக்கும் வல்லமை அந்த விதமாகத்தான் இருக்கிறது. இது ஏதோ நீங்கள் ஒரு வாளை எடுத்து ஒரு நூறு பேரைக் கொல்வதைப் போன்றதல்ல. ஒரே நேரத்தில் இலட்சக்கணக்கானவர்களை நீங்கள் சாய்க்கப்போகிறீர்கள்.
உலகத்தின் மாற்றத்திற்குப் பயன்படும் தொழில்நுட்பம்
இந்தத் தொழில்நுட்ப முன்னேற்றம்தான் இன்றைக்கு நாம் இங்கேயே இருந்துகொண்டு ஒட்டுமொத்த உலகத்திடமும் பேசும் சாத்தியத்தை உருவாக்கியுள்ளது – உலகின் 57 சதவிகிதத்தினர் இணையதளத்தில் தொடர்பு கொள்கின்றனர். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்காவில் இணையதளத் தொழில்நுட்பத்தில் நிபுணராக இருந்த ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பேச்சுவாக்கில், “இந்த வலைத்தளத்தில் மணிக்கணக்காக மக்கள் அமர்ந்திருக்கின்றனர். அவர்கள் எதைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்?” என்று நான் கேட்டேன். அவர் மிகச் சாதாரணமாக, “சத்குரு, ஏறக்குறைய 70 சதவிகிதம் ஃபோர்னோகிராஃபி (ஆபாசம்) என்று கூறினார்,” அவர் கூறியதை நான் நம்ப விரும்பவில்லை. “இது சாத்தியமில்லாதது. அதுவும் 70 சதவிகிதமாக இருக்கமுடியாது,” என்று கூறினேன். ஆனால், பிறகு நான் சிலரிடம் அந்தத் தகவலை சரிபார்த்ததில், அவர்கள் ஒவ்வொருவருமே, இணையத்தில் 70 சதவிகிதம் ஃபோர்னோகிராஃபி (ஆபாசம்) இருப்பதை உறுதி செய்தனர்.
மேலும் அவர்கள் கூறுகின்றனர், ஒவ்வொரு வருடமும், சுமார் 12 இலட்சம் குழந்தைகள், 15 வயதுக்குக் குறைவானவர்கள், இணையத்தில் விற்கப்படுகின்றனர். நம்மிடம் என்ன தவறாகிவிட்டது? தொழில்நுட்பத்தின் இப்படிப்பட்ட பிரம்மாண்டமான ஒரு கருவி நமக்குக் கிடைக்கும்பொழுது, நாம் நமது குழந்தைகளை விற்பதற்கா விரும்புகிறோம்? இப்படித்தான் நாம் அதைப் பயன்படுத்துகிறோமா? நாம் இதை மாற்ற விரும்புகிறோம். இதனால்தான் கடந்த 10 வருடங்களாக இணையத்தில் நான் உரத்து ஒலித்துக்கொண்டிருக்கிறேன். இணையத்தில் அடங்கியுள்ள 70 சதவிகிதத்தை நாம் எதிர்கொள்ள, ஒரு மாற்று வழங்க வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்பு, நான் பெங்களூரு நகரத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தேன். என்னைக் கண்ட 12-13 வயதுடைய சிறுவர்கள் சிலர் ஓடோடி வந்து, “ஹே, சத்குரு, சத்குரு!” என்று கூவினர். நான், “அட! நான் யார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டதற்கு, “நாங்கள் உங்களுடைய வீடியோக்களைப் பார்க்கிறோம் சத்குரு,” என்று பதில் அளித்தனர். நானும் வேடிக்கையாக அவர்களிடம், “என்ன? உங்களுடைய தாய்மார்கள்தான் என் வீடியோக்களை பார்க்குமாறு உங்களைக் கட்டாயப்படுத்தி இருக்கவேண்டும், அப்படித்தானே?” என்றேன். ஆனால் அவர்களோ, “இல்லையில்லை, எங்கள் வகுப்பில் நாங்கள் அனைவரும் உங்கள் வீடியோக்களைப் பார்க்கிறோம்,” என்றனர். பிறகு நான் செல்லும் ஒவ்வொரு பள்ளியிலும் உண்மையாகவே விசாரித்ததில், குறைந்தபட்சம் 20 திலிருந்து 30 சதவிகித குழந்தைகள் நமது வீடியோக்களைப் பார்ப்பதாகத் தெரிந்துகொண்டேன். உங்களுக்கு ஒன்று கூறுகிறேன், நான் 15 வயதாக இருந்தபொழுது, என்னை யாரும் ஆன்மீக வீடியோ பார்க்கச் செய்திருக்க முடியாது, அதற்கு வாய்ப்பே இல்லை.
இன்றைக்கு, மனித மனங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி உலகையே மாற்றம் செய்வதை, தொழில்நுட்பம் நமக்கு சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதை நிகழச் செய்யும் உறுதியுடன் நாம் இருக்கிறோமா என்பதுதான் கேள்வி.
பூமியின் மீது இது நமக்கான நேரம், இதனை மனிதகுலத்திற்கு என்றென்றைக்கும் தலைசிறந்த காலமாக உருவாக்குவோம். நாம் அதிவல்லமை பெற்ற ஒரு தலைமுறையாக இருக்கிறோம், அனைவருடைய நல்வாழ்வுக்காகவும் இதை நாம் பயன்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டது. நாம் அதனை நிகழச் செய்வோம்.
ஆசிரியர் குறிப்பு : இந்த கட்டுரை ஸ்வராஜ்யா பத்திரிகையில் வெளியாகியதாகும்.