புதிய முதலாளியை எவ்வாறு சமாளிப்பது?
பணியிடத்தில் புதிய முதலாளியை கையாள்வது அத்தகைய வேதனைக்குரிய விஷயமா? இதுபோன்ற சூழ்நிலையை அணுகுவதற்கான சிறந்த வழிகள் குறித்த தனது தனித்துவமான கண்ணோட்டத்தை சத்குரு பகிர்ந்து கொள்கிறார்
கேள்வி: சில நேரங்களில் ஒரு புதிய முதலாளி ஒரு நிறுவனத்திற்கு வரும்போது, அவர் நிறுவனத்தின் கடந்தகால விஷயங்களோடு முரண்படும் பல மாற்றங்களைச் செய்கிறார். இது நிறுவனத்திற்குள் நிறைய உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கிறது. அதை நாம் எவ்வாறு சமாளிக்க வேண்டும்?
Subscribe
அந்த விஷயத்தில் நிறுவனம், அமைப்பு, நாடு அல்லது அலுவலகத்தின் மீது பற்றுகொண்டவராக இருந்தால், ஒரு தலைவரை நாம் தேர்ந்தெடுத்தால் நாம் அவர்களை முழுமையாக ஆதரிக்க வேண்டும். ஒரு தலைவன் தன் நிலைப்பாட்டில் இருந்து இறங்கி வர முடியாது, நிறுவனத்தில் உள்ள எல்லா ஊழியர்களுக்கும் அவர் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளார் என்பதை சொல்ல முடியாது. அப்படி சொன்னால் அது வேலை செய்யாது. முன்னால் இருந்து வழிநடத்தும் எவரும் இதில் எப்போதும் தனியாக இருப்பார்கள், ஏனென்றால் நீங்கள் உங்களை சுற்றி உள்ளவர்களிடம் கூட இதை பகிர்ந்துகொள்ள முடியாது. நீங்கள் எல்லாவற்றையும் உளறிக்கொட்டினால், அவர்கள் உங்களை வினோதமாக பார்ப்பார்கள்.
ஏதேனும் பெரிய காரியங்களைச் செய்ய, ஒரே நேரத்தில் பல படிகள் எடுக்க வேண்டி இருக்கும், மேலும் நிறைய விஷயங்களை திட்டமிட வேண்டும். எந்த திட்டமிடலும் இல்லையென்றால், எந்த தலைமையும் செயல்படாது. நீங்கள் ஒரு தலைவராக இருந்தால், நீண்ட தொலைநோக்குடன் சிந்திக்க வேண்டும். ஆனால் இந்த தொலைநோக்கு திட்டமிடலை பற்றி முன்கூட்டியே பேசினால், யாரும் உங்களுடன் இருக்கமாட்டார்கள். ஒரு நபருக்கு, நீங்கள் சில விஷயங்களை விளக்கலாம்; மேலும் சிலருக்கும் அதிலும் கொஞ்சம். ஆனால் பலருக்கும், நீங்கள் எதைப் பற்றியும் மூச்சுவிடாமல் இருக்க நேரிடும். ஏனென்றால், நீங்கள் எல்லோருக்கும் எல்லாவற்றையும் விளக்கினால், எதுவும் செயல்படாது, ஏனென்றால் அவர்கள் குழப்பத்தைதான் ஏற்படுத்துவார்கள்.
உங்கள் நிறுவனத்தில் தலைவர் யாராக இருந்தாலும், அவர் மனதில் என்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது. பிரச்சனை என்னவென்றால், ஒரு தலைவர் மாற்றங்களைச் செய்ய முயற்சிக்கும் தருணம், பியூன் முதல் மேலதிகாரி வரை “முதலாளி என்ன செய்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை” என்று நினைக்கிறார்கள். நீங்கள் அதை அவரிடம் விட்டுவிட வேண்டும், ஏனென்றால் அவர் ஒரு தலைவராக அதிகாரத்தை பயன்படுத்த முடியும் என்பது மட்டுமல்ல, நிறுவனத்தை வெற்றி பெற வைப்பதும் அவரின் பொறுப்பு. ஒருவேளை அவர் தோல்வியுற்றால், அவருக்கு என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கும். ஆனால் நீங்கள் அவரது கால்களை இழுத்து அவரை தோல்வியடையச் செய்ய வேண்டியதில்லை. உங்கள் வேலை என்னவென்றால், அவர் என்ன சொல்கிறாரோ அதை செய்வது மட்டுமே.
எனவே, அதை உங்கள் புதிய முதலாளியிடம் விட்டுவிடுங்கள். அவர் என்ன செய்ய விரும்புகிறாரோ அதை அவர் செய்யட்டும் - அவரை ஆதரியுங்கள். அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரிந்தால், அது ஒரு வெற்றியாக அமையும். இல்லையெனில், அது தோல்வியாக போய்விடும். ஆனால், அவரை யார் தேர்ந்தெடுத்திருந்தாலும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட செயல்முறையை அவரிடம் நடத்திப் பார்த்து, இவர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கையில்தான் அவரை தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
நீங்கள் ஒரு தலைவனாக வளர விரும்பினால், தேவையான திறமையை நீங்கள் வெளிப்படுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, நடக்கும் எந்தவொரு காரியத்திற்கும் பொறுப்பேற்க தயாராக இருங்கள் - அது நல்லதோ அல்லது கெட்டதோ. நீங்கள் உட்கார்ந்து “இன்று எவ்வளவு வேலை செய்துள்ளேன்” என்று கணக்கிட வேண்டாம். அதற்கு பதிலாக, “இன்று இன்னும் பல விஷயங்கள் செய்ய வேண்டியிருந்தது, ஆனால் நான் அவற்றைச் செய்யவில்லை, ஏனென்றால் எனக்கு நேரமோ சக்தியோ இல்லாமல் போய்விட்டது,” என்று நினைக்க ஆரம்பிக்கும் பட்சத்தில் நீங்கள் இயல்பாகவே தலைவனாக வளருவீர்கள்.