ரூமி - சூஃபி வழியில் ஓர் உன்னதக் காதலர்!
ஜலாலுதீன் ரூமி பக்தி வழியில் பயணித்த ஒரு சூஃபி ஞானி. காதலில் தன்னையே கரைத்துக் கொண்ட ரூமியின் வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை சத்குரு விளக்குகிறார்.
காதல் கொண்டு வந்தவர்கெல்லாம் திறந்திடும் கதவு
தன்னை காணாமல் போகச் செய்தவர்க்கெல்லாம் திறந்திடும் கதவு
தீவிரமாய் காதல் உணர்வில் கொதிப்பவர்க்கே திறந்திடும் கதவு
பித்துநிலை உச்சத்தில் அனைத்தையும் இழந்தவர்க்கே திறந்திடும் கதவு!
சத்குரு: தாளிட்டிருந்த கதவு தட்டப்பட்டது. தட்டியவர் தீராத காதலில் இருந்தார். ஆனால் கதவு திறக்கவில்லை. உள்ளிருந்து ஒரு குரல் மட்டும் கேட்டது.“யார் அது?”
“நான்தான் ரூமி!”
“காதலரே கதவைத் திறங்கள்!”
உள்ளிருந்து கேட்ட குரல் அமைதியாகி மறைந்து போய்விட்டது!
கதவைத் திறக்குமாறு ரூமி கெஞ்சினார், அழுதார். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
பல நாட்கள் இதுபோல கெஞ்சி அழுதார். ஆனால், கதவு திறக்கப்படவில்லை. அது எப்போதும் திறக்காத கதவாகவே இருந்தது. ரூமி விரக்தி அடைந்தார். தன்னை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார். மலை மீது ஏறினார். அங்கே அவர் ஓரிரு மாதங்கள் தங்கினார். பிறகு மீண்டும் தன் காதலரை நோக்கித் திரும்பினார்.
முற்றிலும் வேறொரு நிலையில் தற்போது இருந்தார்.
மீண்டும் தன் காதலரின் வீட்டுக் கதவைத் தட்டினார். முன்பு போலவே உள்ளிருந்து குரல் எழுந்தது.
Subscribe
“யார் அது?”
அதற்கு ரூமி பதிலளிக்கும்போது...
“இது நீங்கள்தான், நீங்கள் மட்டும்தான், இங்கே அந்த ரூமி இல்லை.”
இப்படி அவர் பதிலளித்ததும் கதவு திறக்கப்பட்டது.
சூஃபியும் ரூமியும்
சூஃபி வழிமுறையில் கடவுளைக் “காதலர்” என்றே அழைப்பார்கள். “நான்” என்பது இல்லாமல் இருப்பவருக்கே கதவுகள் திறக்கப்படும் என்று கூறுவார்கள்.
ரூமியின் பாதை, தீவிர பக்தியின் பாதை. 21ம் நூற்றாண்டில் இவரது பாதை பிரபலமடைவதைப் பார்க்க ஆச்சர்யமாக இருக்கிறது. எங்கு பார்த்தாலும் ரூமியின் புத்தகங்கள், ரூமி இசை என காண்கிறேன். ரூமியை படிக்க இயலாது. ஒரு புத்தகத்தில் புரிந்துகொள்ளப்படுபவர் அல்ல ரூமி!
ரூமி என்ற ஒன்றை நீங்கள் உணர வேண்டும் என்றால், நீங்கள் ரூமியாக ஆகவேண்டும் என்றால், நீங்கள் உங்களை கட்டுக்கடங்காது சுழற்றிட வேண்டும். உங்கள் மூளைகளைக் கழற்றி வெளியே சுழற்றிட வேண்டும். சூஃபி வழி மிகமிகத் தீவிரமான பக்திவழி.
ஜலாலுதீன் ரூமி, மிகச் சிறந்த சூஃபி, ஞானி. ரூமி என்பவர் மிகமிகத் தீவிரமானவர்.
நீங்கள் தீவிரமாக இல்லையென்றால் உங்களால் காதலராக இருக்க இயலாது. தீவிரம் இல்லாத காதலர் காதலரே அல்ல. ஒருவர் மிகத் தீவிர நிலையில் இருக்க வேண்டும். நடுநிலையான மனிதர் காதலராக ஆக முடியாது. ஒரு புழு போன்று வாழ்ந்து செல்லும் மனிதர் காதலை உணர இயலாது. எல்லா காரணங்களையும் தாண்டி தனக்குள் உணர்வினில் கொதிக்கும் மனிதனே உண்மையான காதலனாக இருக்க இயலும். புழு பூச்சியைப் போல காதல் செய்வதில் ஒன்றும் இல்லை. அது தனது ஆசைகளையும் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ளும் வர்த்தகம் மட்டுமே.
ரூமியின் பித்துநிலை
தனது உச்சத்தை அடைந்திட உணர்ச்சியினை உபயோகப்படுத்த விரும்பினால் அது மிகமிகத் தீவிரமான உணர்ச்சியாக இருக்க வேண்டும். ஒரு சாதாரண உணர்வு உங்களை அங்கே எடுத்துச் செல்லாது.
ரூமி அதைத்தான் செய்தார். அவர் தன்னை சுழற்றிக் கொண்டார். அவர் தனது மூளை காணாமல்போகும் அளவிற்கு சுற்றினார். பிறகு அந்த போதை நிலையில் இருந்தார்.
ரூமியின் மனதைப் பார்த்தால் ஒரு பைத்தியத்தைப் போலவே வாழ்ந்தார் எனலாம். ரூமியை இன்று நாம் அனைவரும் பாராட்டலாம். ஆனால், அவரது பாதையை இன்று நீங்கள் கடைப்பிடிப்பது கடினம். சமூகத்தின் பார்வையில் அவர் ஒரு பைத்தியமாகவே இருந்தார். ஆனால், உயிர்நிலையில் மிகவும் உன்னத நிலையில் இருந்தார்.
இராமகிருஷ்ணரை விட அவர் பைத்திய நிலையில் இருந்தார். இராமகிருஷ்ணருக்காவது ஒரு சில முறைமை இருந்தது. ஆனால், ரூமிக்கு எந்தவித ஒழுங்கும் இருக்கவில்லை. அவர் முழுமையாக பைத்திய நிலையில் இருந்தார். ஆனால், ஒரு அற்புத மனிதராக இருந்தார். அவருக்குள் அதிர்ந்து கொண்டிருந்த அது மிகவும் அற்புதமானது. ஆனால், இந்த சமூகத்தில் அவரால் எதையும் செய்ய இயலவில்லை.
இன்று அவரைப் பலவிதமாகப் பார்க்கிறார்கள். அடிப்படையில் அவருடைய வழி மிகத் தீவிரமான பக்திப் பாதை. ரூமி இந்த உலக நடைமுறையில் இருந்து மிகவும் வேறுபட்டவர். ஒவ்வொன்றும் ஒரு கணக்காகவும் ஒரு வர்த்தகமாகவும் நடைபெறும் இந்த உலகத்தின் தன்மையில் இருந்து அவர் முற்றிலும் மாறுபட்டவர்.
ஒவ்வொன்றையும் நாம் வர்த்தகமாகப் பார்த்தால் அங்கே சூஃபிக்கள் இருக்க இயலாது.
இந்தியாவில் ரூமியின் பயணம்
ரூமி இந்தியாவில் பல காலம் இருந்தார். யோக வழிமுறைகளைக் கற்றுக் கொள்வதற்காக இந்தியாவின் பல இடங்களுக்குப் பயணம் செய்தார். திருவண்ணாமலையிலும் அவர் சில காலம் தங்கியிருந்தார். இந்தியாவில் அளிக்கப்படும் எல்லாவிதமான யோக வழிமுறைகளையும் மிகக் குறுகிய காலத்தில் கற்றார். அவரது திறமை அத்தகையதாக இருந்தது.
அவர் எங்கு சென்றாலும் யோகிகளை சந்தித்தார். சில வாரங்களிலேயே அந்த யோக சாதனையைக் கற்றுக் கொள்வார். பிறகு வேறு ஒரு யோகியைக் காண பயணம் மேற்கொள்வார். இப்படியே பல இடங்களுக்கு பயணம் செய்தார்.
ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு!
ஒரு நாள் ரூமி மெக்காவிற்கு சென்று கொண்டிருந்தார். அவருடன் இன்னொரு சூஃபி சாது பயணம் செய்தார். தினமும் படுக்கச் செல்வதற்கு முன் அவர் மிகவும் தீவிரமாக ஏதோ ஒன்றை வேண்டி கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். ஒருநாள் ரூமி, “நீ கடவுளிடம் தினமும் என்ன வேண்டுகிறாய்?” எனக் கேட்டார்.
“நான் இந்த தேசத்தின் அரசனாக வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன்”, என்றார்.
இதைக் கேட்ட ரூமி அதிர்ந்து போனார்.
“ஏய் முட்டாளே, நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்? உனக்கு இந்த ஏழ்மை எளிதாக வந்துவிட்டது என நினைக்கிறேன்.
நீ அரசனாகவா ஆசைப்படுகிறாய்? நான் அரசனாகத்தான் இருந்தேன். மிகப் பெரிய போராட்டத்திற்குப்பின் இன்று பிச்சைக்காரனாகி இருக்கிறேன்.
உனக்கு இந்த பிச்சைக்கார நிலை மிக எளிதாக வந்துவிட்டதால் நீ இன்று அரசனாக வேண்டும் என்று மன்றாடிக் கொண்டு இருக்கிறாய்” என்றார்.
இதைப் போலவே நம்மை உச்சத்தை நோக்கிக் கொண்டு செல்லும் பல வாய்ப்புகளும் எளிதாக நம்மிடம் வந்திருக்கலாம்.
அவை உங்களை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கலாம். உங்களுக்கு அளிக்கப்படும் வாய்ப்பை நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு பதிலாக அந்த சூழ்நிலையில் நீங்கள் சிரமப்படுகிறீர்கள்.
சரியாகப் பயன்படுத்தினால் அந்த வாய்ப்புகள் உங்களை உச்சத்திற்கே கொண்டு செல்லலாம்.
கதவுகள் உங்களுக்காகத் திறக்கப்படலாம்.
குறிப்பு:
இந்தக் கட்டுரை சத்குருவின் "யோகாவும் யோகிகளும்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை வாங்குவதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்!