உங்கள் கர்ம தொழிற்சாலையை மூடுங்கள் - பாகம் 1
நாம் நமது எண்ணங்களாலும் நோக்கங்களாலும் புதிய கர்மாவை சேர்த்துக்கொள்ளாத வரை, வாழ்க்கையின் செயல்பாடே கர்மாவை கரைக்கிறது என்பதை சத்குரு விளக்குகிறார். கர்ம நூல்கயிறு நம்மை எவ்வாறு இறுக்கியுள்ளது என்பதையும், அவற்றை வேகமாக விடுவிப்பதற்கான வழிகளைப் பற்றியும் அறியுங்கள்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு க்ஷணத்திலும், நீங்கள் எதைச் செய்தாலும் அல்லது செய்யாவிட்டாலும், உங்கள் கர்மா கரைந்து கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் செயல்முறையே கர்மாவின் கரைதலே. உங்களுக்கு இந்த பிறவிக்கென்று ஒதுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட அளவு கர்மா உள்ளது, அதை நாம் பிராரப்த கர்மா என்று குறிப்பிடுகிறோம். பிராரப்த கர்மா தானாகவே கரைந்து கொண்டிருக்கிறது. ஆனால் பிரச்சனை என்னவென்றால், உற்பத்தி ஆலை கூடுதல் நேரம் வேலை செய்கிறது - புதிய கர்மா வேகமாக குவிந்து கொண்டிருக்கிறது. கரைதல் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே நடக்க முடியும், ஆனால் மக்கள் உற்பத்தியில் மிகவும் திறமையாக இருக்க முடியும்!
உதாரணமாக, உங்கள் வாழ்க்கையின் சாதாரண நாளில், நீங்கள் விழித்தெழும் நேரம் முதல் தூங்கச் செல்லும் வரை, நீங்கள் வெறுமனே வேலை செய்வதன் மூலம் உண்மையில் எவ்வளவு செயல்பாடுகளை செய்கிறீர்கள் என்பதையும், எவ்வளவு விஷயங்களை நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்பதையும் ஒப்பிட்டால், நீங்கள் சிந்திப்பது நீங்கள் செய்வதை விட ஐம்பது மடங்கு அதிகமாக இருக்கலாம். நான் ஐம்பது என்று சொல்வது மிகவும் குறைவான மதிப்பீடு. நீங்கள் செயல்படுத்த முடிவதை விட ஐம்பது மடங்கு அதிக கர்மாவை உருவாக்குகிறீர்கள். இது கலோரிகளைப் போலத்தான். நீங்கள் 600 கலோரிகளை எரிக்கிறீர்கள், ஆனால் 6000 கலோரிகளை உட்கொள்கிறீர்கள் - இது எங்காவது குவிந்துதான் ஆகவேண்டும்.
Subscribe
உங்கள் கர்ம தொழிற்சாலையை மூடுங்கள்
நீங்கள் எந்த கர்மாவையும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம் - நிஷ்கர்மா - நீங்கள் வெறுமனே அமர்ந்திருந்தீர்கள். இதன் பொருள் கர்மா இப்போது அதே வேகத்தில் கரைந்து கொண்டிருக்கிறது, ஆனால் நீங்கள் எதையும் புதிதாக சேர்க்கவில்லை. இதனால்தான் ஆன்மீக சூழல்கள் எப்போது சாப்பிட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்யாத வகையில் உருவாக்கப்படுகின்றன. ஒரு மணி அடிக்கும், நீங்கள் சென்று சாப்பிடுவீர்கள். என்ன சாப்பிட வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்வதில்லை. பரிமாறப்படும் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடுகிறீர்கள். நீங்கள் தேர்வு செய்வதில்லை.
உணவை ரசிப்பதை நாங்கள் எதிர்க்கவில்லை, சாப்பிடும் எளிய செயலுக்காக நீங்கள் ஆசைப்படுவதன் மூலமும், சிந்திப்பதன் மூலமும், இவை அனைத்தையும் பன்மடங்காக்குவதன் மூலமும் அதிக கர்மாவை உருவாக்குகிறீர்கள். எப்படி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே சாப்பிட முடியும். உணவு நன்றாக இருந்து உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால் ஒருவேளை 5% கூடுதலாக சாப்பிடலாம். 10%-க்கு மேல் போனால் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். சாப்பிடும் இந்த எளிய செயலுக்கு, மக்களின் மனதில் எவ்வளவு நடக்கிறது!
நான் மற்றவர்களைப் போலவே உணவை ரசிக்கிறேன், ஆனால் நீங்கள் உணவை உங்கள் நாக்கில் அல்லது வயிற்றில் தான் போடவேண்டும். அல்லது சமைக்க விரும்பினால் வாணலியில் சமைக்கலாம். எனக்கு சமைக்க பிடிக்கும் என்பதால் நான் வாணலியில் செய்கிறேன். உணவு பிடித்திருந்தால் நாக்கில் அல்லது வயிற்றில் சேர்க்கிறேன். நீங்கள் அதை தலைக்குள் செய்கிறீர்கள் - அது உணவுக்கான இடம் அல்ல. தலையும் உணவும் ஒன்றாக செல்வதில்லை - நீங்கள் கர்மாவை உருவாக்குகிறீர்கள்.
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் இப்படி பாருங்கள். நீங்கள் தினமும் கரைக்கும் கர்மாவை விட ஐம்பது அல்லது நூறு மடங்கு அதிகமான கர்மாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உணவு சமைக்கும்போது, அல்லது மகிழ்ச்சியுடன் உண்ணும்போது, அதை செரிமானம் செய்து உங்களின் ஒரு பகுதியாக மாற்றும்போது, நீங்கள் கர்மாவை கரைத்துக் கொண்டிருக்கிறீர்கள். வாழ்க்கையின் எளிமையான செயல்முறையே கர்மாவைக் கரைக்கும்.
ஆன்மீகப் பாதை என்பது நமது கர்ம செயல்முறையை வேகமாக முன்னோக்கி செலுத்த விரும்புவதாகும். மீண்டும் திரும்பி வந்து அதே விஷயங்களை மறுபடியும் மறுபடியும் செய்ய விரும்பாததால், நமக்கு ஒதுக்கப்பட்ட கர்ம சுமையை விட அதிக சுமையை ஏற்க விரும்புகிறோம். இப்போதே அதை முடித்துவிட விரும்புகிறோம். இது ஒருவர் எடுக்க வேண்டிய விழிப்புணர்வான தேர்வு - நீங்கள் மெதுவாக இதை செய்து முடிக்க விரும்புகிறீர்களா அல்லது எல்லா அர்த்தமற்ற விஷயங்களையும் முடிந்தவரை துரிதமாக முடித்துவிட விரும்புகிறீர்களா?
நீங்கள் ஒரு செயல்மிகு ஆன்மீகப் பாதையில் நுழையும்போது, திடீரென எல்லாமே திகைப்பூட்டும் வேகத்தில் நகர்வதை உணரலாம். முன்பை விட அதிக துன்பங்களில் சிக்கியிருப்பதை நீங்கள் காண்பீர்கள். முன்பெல்லாம், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பிரச்சனைகள் வரும். இப்போது, உங்கள் கர்ம செயல்முறை வேகமாக முன்னோக்கி செல்வதால், ஒவ்வொரு ஆறு மணி நேரத்திற்கும் நீங்கள் பெரும் பிரச்சனையில் இருப்பீர்கள். வாழ்க்கையிலிருந்து தங்களை ஒதுக்கிக்கொண்ட முட்டாள்கள் மட்டுமே ஆன்மீகம் என்பது அமைதியாக இருப்பது என்று நினைப்பார்கள். இல்லை, ஆன்மீகமாக இருப்பது என்பது தீயாக எரிவது - உள்ளே, வெளியே, எல்லா இடங்களிலும். நீங்கள் இறுதி அமைதி அடையும்போது (இறக்கும்போது) மட்டுமே அமைதி கிடைக்கும். இது உற்சாகமான வாழ்க்கைக்கான நேரம்! நீங்கள் பரவசமாகவும் பேரானந்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தால், அமைதியாக இருப்பதைப் பற்றி சிந்திப்பீர்களா? அப்படி ஒரு எண்ணமே உங்களுக்கு தோன்றாது.
கர்ம சுருள்
துரதிருஷ்டவசமாக, இன்றைய காலகட்டத்தில், மனிதகுலம் வாழ்க்கையை எவ்வாறு தீவிரப்படுத்துவது என்பதைப் பார்க்காமல், எப்போதும் வாழ்நாளை நீட்டிக்க மட்டுமே முயற்சிக்கிறது. இதன் காரணமாக, பல மக்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தங்களது நினைவுகளையும், மனத் திறன்களையும் இழக்கின்றனர். இந்த நோய்களில் கர்மவினையின் தாக்கம் மிகவும் அதிகமாக உள்ளது.
கர்மா என்பது நீங்கள் தெரியாமலேயே உருவாக்கிய ஒரு வகையான மென்பொருள் போன்றது. நீங்கள் பிறப்பதற்கு முன், கருவுற்ற 40 முதல் 48 நாட்களுக்கு இடையில், இந்த கர்ம நூல்கயிறு தன்னை ஒரு சுருள் வில் போல இறுக்கிக் கொள்கிறது. கடந்த கால தகவல்கள், உங்கள் உடலின் வலிமை, உங்கள் பெற்றோரின் இயல்பு, கருவுறுதலின் தன்மை மற்றும் பல்வேறு காரணிகளைப் பொறுத்து, ஒரு குறிப்பிட்ட அளவு தகவல்களை சுருளாக இறுக்கிட தேர்ந்தெடுக்கிறது. இது ஒரு சுருள் வில் போன்றது. நீங்கள் வெறுமனே அமர்ந்திருந்தால், அது மெதுவாக தானாகவே விரிந்துவிடும். நீங்கள் எவ்வளவு அமைதியாக அமர்ந்திருக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக அது விரிந்துவிடும். ஆனால் நீங்கள் செயல்பாட்டில் இருப்பதாலும், புதிய விஷயங்களை சேர்த்துக் கொண்டிருப்பதாலும், அது ஒரு குறிப்பிட்ட வேகத்துடன் விரிகிறது.
ஒருவர் பிறக்கும்போது கர்ம நூல்கயிற்றின் இறுக்கத்தை நாம் பார்த்தால், அந்த குழந்தை தோராயமாக எத்தனை ஆண்டுகள் வாழும் என்பதை எளிதாகச் சொல்ல முடியும் - ஏதேனும் குடிபோதையில் இருக்கும் ஓட்டுநர் அந்தக் குழந்தையை மோதி விடாவிட்டால், அல்லது அவர் எந்த ஆன்மீக குருவுடனும் தொடர்பில் இல்லை என்றால்! அவர் வெறும் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தால், அவர் எவ்வளவு காலம் வாழ்வார் என்று நாம் சொல்ல முடியும். சுருள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் தன்னைத்தானே விரித்துக்கொள்ளும் என்பது நமக்குத் தெரியும்.
இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்தவுடன் இது ஒரு பொதுவான வழக்கமாக இருந்தது: குடும்பத்தினர் முதலில் செய்யும் காரியம் என்னவென்றால், ஒரு யோகியை அல்லது சாதுவை வீட்டிற்கு அழைப்பார்கள், அல்லது குழந்தையை அவரிடம் கொண்டு செல்வார்கள், ஏனெனில் அவர் குழந்தையை உணர்ந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இது இன்றும் கூட இருக்கிறது, ஆனால் பொதுவாக பிறந்தநாள் விழாக்கள் இவற்றை மாற்றியுள்ளன. இல்லையெனில், இதுதான் மிக முக்கியமான விஷயமாக இருந்தது. சுருள் மிக இறுக்கமாக உள்ளதா என்று பார்க்கக்கூடிய, மற்றும் குழந்தையின் நல்வாழ்வை உறுதிப்படுத்த அதை சரிசெய்யக்கூடிய ஒரு குறிப்பிட்ட நபரிடம் உங்கள் குழந்தையை அழைத்துச் செல்ல விரும்புகிறீர்கள். இருப்பினும், குடிபோதையில் இருக்கும் ஒரு ஓட்டுனர் அவனை மோதிவிடலாம். அல்லது ஏதோ ஒரு குரு வந்து அவனை வேகமாக விடுவித்துவிடலாம் அல்லது அவனது தற்போதைய சுமையில் பல பிறவிகளின் கர்மாவை ஏற்றிவிடலாம். ஆகவே, ஏதாவது நடந்து அது மீண்டும் சிக்கிக்கொள்ளும் வரை அல்லது மிக வேகமாக விடுபட்டுவிடும் வரை கர்மா ஒரு குறிப்பிட்ட வழியில் தன்னை கரைத்துக்கொள்கிறது. சில குறிப்பிட்ட பிரச்சனைகள் காரணமாக இவை நடக்கலாம்.
இன்று நாம், கர்ம நூல்கயிறைப் பற்றிய கவலையின்றி, உயிர் வேதியியலில் நமக்கு உள்ள ஓரளவு தேர்ச்சியால் மனிதனின் உடல் ஆயுளை மட்டும் நீட்டிக்க முயல்கிறோம். மருந்துகளாலும் அறுவை சிகிச்சையாலும் வாழ்நாளை நீட்டிக்க முயல்கிறோம். ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் பலர் தங்கள் நினைவாற்றலையும் மனத் திறன்களையும் இழப்பதற்கு இதுவே முக்கியக் காரணமாக இருக்கலாம். ஏனெனில், இது ஒரு "முட்டாள் கம்ப்யூட்டர்" போன்றது – நீங்கள் என்ன செய்தாலும், அது வெறுமனே உங்களை முறைத்துக் கொண்டிருக்கிறது, ஏனென்றால், சாஃப்ட்வேர் செயலிழந்திருந்தாலும், மாற்று இதயம் அல்லது சிறுநீரகத்தால் ஹார்டுவேர் இயங்கிக் கொண்டிருப்பதால்.
அவர்கள் தங்கள் வாழ்க்கையின் மற்றொரு பரிமாணத்தை மேம்படுத்த முயன்றிருந்தால், கொஞ்சம் உடல்தன்மைக்கு அப்பாற்பட்ட ஆன்மீக வேலையையும் செய்திருந்தால் - நீங்கள் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்தாலும் கூட தேவையான சாஃப்ட்வேரை உருவாக்க முடியும், ஏனெனில் வேறொரு இடத்தில் நிறைய விஷயங்கள் உள்ளன. சஞ்சிதா என்று அழைக்கப்படும் கர்ம கிடங்கு ஒன்று இருக்கிறது, அது இன்னும் திறக்கப்படவில்லை. அல்லது, உங்கள் சாஃப்ட்வேர் முடியும்போது உங்கள் ஹார்டுவேரை உதிர்க்கும் சுதந்திரமும் உங்களுக்கு இருக்கும்படி நீங்கள் உங்களை புரோகிராம் செய்துகொள்ள முடியும்.
குறிப்பு:
சத்குரு அவர்களின் ஆழமான புரிதலில் கர்மா செயல்படும் விதம் மற்றும் அதன் சூட்சுமங்களை விரிவாக விளக்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.