தீமைக்கு ஓர் முற்றுப்புள்ளி
தீமைகள் அழிந்துபட்ட அமைதியானதொரு உலகில் வாழ யார்தான் விரும்பமாட்டார்? “தீது” என்பதுதான் என்ன? அதை எப்படி அழிப்பது? பொதுவான இந்தப் பிரச்சனையை, மாறுபட்ட கோணத்தில், தனக்கே உரிய பாணியில் சத்குரு தெளிவுபடுத்துகிறார்.
Subscribe
கொடூரமான விஷயங்கள் நிகழ்வது, யாரோ ஒருவர் தீயவர் என்பதனால் அல்ல, அவர் அறியாமையில் இருப்பதால்தான். ஒரு மனிதர் செய்யக்கூடிய கொடூரமான ஏதோ ஒன்று தீயதா, இல்லையா என்று முத்திரை குத்தப்படுவது, சுற்றி உள்ளவர்களின் எண்ணிக்கையையும் அவர்களின் வலிமையையும் பொறுத்தது, அவருடன் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பதைத்தான் அது சார்ந்திருக்கிறது. தீங்கிழைக்கும் ஒரு செயலில் நீங்கள் ஒட்டுமொத்த நகரத்தையும் இணைத்துக்கொள்ள முடிந்தால், அது சரியான விஷயத்தைச் செய்ததாகிவிடும். முன்பொரு காலத்தில் மக்கள் செய்த சரியான விஷயங்களைக்கூட இன்று நாம் செய்ய விரும்புவதில்லை, ஏனென்றால் அவையெல்லாம் அவர்கள் உலகில் செய்த அதிபயங்கரமான விஷயங்கள். கடந்த காலத்தில் நல்ல மனிதர்கள் செய்தவைகளைச் செய்ய இந்த காலத்தின் மிகமோசமான தீயவனுக்குக்கூட அருகதை இல்லை. மேலும் இன்று நிகழ்பவை அதிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவை அல்ல.
தீமை ஒருபோதும் அகல்வது இல்லை. அது அகற்ற முடியாதது, ஏனென்றால் அது ஒரு தன்மையோ அல்லது செயலோ அல்ல, அது ஒருவிதமான தெளிவு இல்லாத தன்மை. ஏதோ ஒன்று இருந்தால், அதை நம்மால் அழிக்கமுடியும், ஆனால் இல்லாமையை அகற்ற முடியாது – உங்களால் இருளை அழிக்கமுடியாது, நீங்கள் வெளிச்சத்தைத்தான் கொண்டுவர முடியும். அதைப்போலவே, தீமையை உங்களால் அழிக்கமுடியாது, நீங்கள் தெளிவையும், விழிப்புணர்வையும் மட்டுமே கொண்டுவர வேண்டும். தீமை என்பது வடிவத்தையும், நிறத்தையும், திசையையும் மாற்றிக்கொள்கிறது, ஆனால் அதிர்ஷ்டவசமாக அஞ்ஞானத்திற்கு ஒரே ஒரு வடிவம்தான் உள்ளது, ஆகவே அதனைக் கையாள்வது எளிது. அறியாமையைக் கையாள்வதற்கு நாம் இருப்பை உணர்ந்து அறிந்திருக்க வேண்டும்.
இருப்பை அறிவதற்கு, முதலில் உங்கள் மனமும், உங்கள் உடலும் இந்த உலகம் மற்றும் உலக மக்களின் ஒரு உருவாக்கம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய உண்மையான இயல்பு உங்களது அனுபவத்தில் இல்லை. ஏனென்றால், அது மனத்தின் மறுபக்கத்தில் இருக்கிறது. ஒருவிதத்தில், உங்களது மனம் ஒரு கண்ணாடி போன்றது. அது தெளிவில்லாமல் கோணலாக இருக்கலாம், ஆனால் அது ஒரு கன்ணாடிதான். உலகம் என்பது உங்கள் மனதில் பிரதிபலிப்பதால்தான் நீங்கள் அதைப் பார்க்கிறீர்கள். ஆனால் மனம் ஒருபோதும் சுயத்தைப் பிரதிபலிப்பதில்லை. நான் உங்களுடைய உடல் அல்லது உளவியல் சார்ந்த தன்மையைக் குறிப்பிடவில்லை. உங்களது எண்ணங்களையும், உணர்ச்சிகளையும் நீங்கள் சிந்தனை செய்யமுடியும், ஆனால் சுயத்தை உங்களால் சிந்திக்க முடியாது. உங்களது இருப்பு சிந்தனைக்கு உட்படாதது – அது உணரப்படக்கூடியது. மனம் என்பது உங்களைச் சுற்றிலுமுள்ள உலகத்தைப் பிரதிபலிக்கிறது, ஆனால் நீங்கள் ஒரு உயிர் என்ற நிலையில் உணர்தல் இல்லை.
ஆகவே இந்த “கண்ணாடி” யின் இயல்பை நீங்கள் அறிந்தால், அது பிரதிபலித்துக் காட்டக்கூடிய எல்லா பிம்பங்களையும் நீங்கள் அறிகிறீர்கள். ஆதலால் அறியாமை என்பது ஒரு வகைதான் – அதாவது இந்த கண்ணாடி என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியவில்லை. இந்த ஒரு விஷயம் தெளிந்துவிட்டால், பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா விஷயங்கள் குறித்தும் உங்களுக்கு ஞானம் உண்டாக வேண்டியதில்லை. இந்த உயிர் என்னவென்பதை மட்டும் நீங்கள் அறிந்துவிட்டால், அதுவே அறியாமைக்கு முற்றுப்புள்ளி என்பதுடன், தீமைக்கும் முடிவுரையாக இருக்கும்.