திருமணமா அல்லது லிவ் இன் ரிலேஷன்ஷிப்பா?
சேர்ந்து வாழும் லிவ் இன் உறவுகள், திருமணத்தை விட சிறந்தவையா என்ற கேள்விக்கு சத்குரு அவர்கள் இங்கு பதிலளிக்கிறார். மேலும், ஒரு தனிமனிதர் தனது வாழ்க்கையை விழிப்புணர்வுடன் தேர்வு செய்யும் வழிமுறையை காண்கிறார்
கேள்வி: திருமணத்தை விட சேர்ந்து வாழும் லிவ்-இன் உறவுகள் சிறந்தவையா? இது பெரும்பாலும் மேற்கில் செய்யப்படுகிறது. அவர்கள் பொதுவாக ஒரு துணையை தேர்வு செய்துகொண்டு சேர்ந்து வாழ விரும்புகிறார்கள். ஏனென்றால், திருமணத்தில் நிறைய அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது.
சத்குரு: திருமணம் என்றால் என்ன என்பதற்கான அடிப்படையை பார்ப்போம். சமுதாயத்தில் திருமணம் ஏன் வந்தது? எல்லாவற்றிற்கும் மேலாக, நீங்கள் ஏன் எதிர்பாலினத்துடன் சேர்ந்து இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் இனப்பெருக்கம் செய்ய, இயற்கை வகுத்த தந்திரம் இது. எதிர்பாலினத்தை ஈர்க்க, ஒரு ரசாயன விளையாட்டை இது உங்களுடன் விளையாடுகிறது.
உடலியல் ரீதியாக மட்டுமே ஒரு ஆண் ஒரு பெண்ணிடம் இருந்து வேறுபடுகிறார். மற்ற எந்த விதத்திலும் அவர்கள் நேரெதிரானவர்கள் அல்ல. ஆனாலும், இதை வைத்து நாம் ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளோம். மனித குலம் தழைக்க, இயற்கை உருவாக்கிய ஒரு எளிய வித்தியாசம் இது. ஆனால், இந்த உடல் தேவை உங்களுக்குள் இருப்பதாலும், ஒரு மிருகத்துடன் ஒப்பிடும்போது உங்களுக்கு இன்னும் சில உணர்வுகள் மற்றும் வலுவான உணர்ச்சிகள் இருப்பதாலும், நமது பாலுணர்வை நாம் உறுதிப்படுத்தினோம். திருமணம் என்பது அதுதான். நமது குழந்தைகளை நாம் பேணி வளர்க்க வேண்டும். ஒரு அர்ப்பணிப்பான சூழ்நிலை இல்லையெனில் இது சரியாக நடக்க வாய்ப்பில்லை. இதனால்தான் இந்த திருமண பந்தத்தை நாம் நிறுவினோம். இதனால், நமது பாலியல் மற்றும் சந்ததியினரைப் பராமரித்தல் ஆகிய இரண்டும் கையாளப்படுகின்றன. இதன்மூலம் குழந்தைகள் மேலும் சமநிலையான சூழ்நிலைகளில் வளர்கிறார்கள்.
Subscribe
திருமணம் இவை எல்லாவற்றையும் கையாளுவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு விஷயம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, பல விஷயங்களைப் போலவே இதுவும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தவறான பயன்பாடு வந்தவுடன், சிலர் "நாம் திருமணங்களை நிறுத்த வேண்டும், ஏனெனில் இது துன்பத்தை ஏற்படுத்துகிறது" என்று கூறுவார்கள். மக்கள்தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியினர் திருமணத்தை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். அவர்களுக்கு சிக்கவைக்காத உறவுகளாக சேர்ந்து வாழ வேண்டும். ஆனால் நீங்கள் இந்த புதிய விஷயத்தை 10 ஆண்டுகள் தொடர்ந்தால், இது பழையதாகவும் பரிதாபமானதாகவும் மாறும். லிவ் - இன் உறவில் சேர்ந்து வாழும் தம்பதிகள் கூட ஒருவருக்கொருவர் சண்டையிடுகிறார்கள், அவர்களுக்குள்ளும் பொறாமை மற்றும் அனைத்து வகையான பிரச்சனைகளும் உள்ளன. எனவே இது திருமணம் காரணமாக அல்ல; மக்களின் முழுமையற்ற தன்மை மற்றும் முதிர்ச்சியற்ற தன்மையே காரணம். திருமண பந்தங்களை அழிக்க முயற்சி செய்வது இப்போது முட்டாள்தனமாக இருக்கும் என்று நான் கூறுவேன், ஏனென்றால் உங்களிடம் இன்னும் இதற்கு நல்ல மாற்று இல்லை.
திருமணத்தில் ஒருவித அர்ப்பணிப்பு உணர்வு இருந்தது. நீங்கள் வழியிலிருந்து விலகிச் சென்றால், அந்த உறுதிப்பாடு உங்களை சிறிதேனும் உங்கள் தடத்திற்கு மீண்டும் கொண்டு வந்து சேர்த்தது. அர்ப்பணிப்பு இல்லாத உறவுகள் ஏராளமான பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும். இது மேற்கத்திய நாடுகளில் நடந்துள்ளது. உறவுகள் மிகவும் நிச்சயமற்றவையாக இருப்பதால், அவை மிகுந்த வேதனையை உண்டாக்குகின்றன. இத்தகைய நிச்சயமற்ற தன்மையைக் கையாள பெரும்பாலானவர்களுக்கு மனதில் ஸ்திரத்தன்மை இல்லை. மனிதர்களிடம் பல நுட்பமான உணர்வுகள் உள்ளன, நீங்கள் அவற்றை கலவரம் நடத்த விட்டுவிட்டால், அவை எப்படியாவது ஒழுங்கமைக்கப்பட்டு சீர்செய்து செலுத்தப்படாமல் விட்டால், பெரும்பாலான மக்கள் பைத்தியக்காரர்களாகி விடுவார்கள். எல்லா நேரத்திலும் ஒருவரைப் பிடித்து வைத்துக்கொள்ள ஆசைப்படுவது ஒரு மனிதனை பல வழிகளில் அழிக்கிறது.
உங்கள் பொருளாதாரம், சமூகம் மற்றும் உங்கள் உடல் சூழ்நிலைகள் இவை எல்லாம் நிச்சயமற்றவை. ஆனால், குறைந்தபட்சம் உங்கள் உணர்ச்சி சூழ்நிலையில் ஏதேனும் ஸ்திரத்தன்மை இருந்தால், அது உங்கள் வாழ்க்கையை மிகவும் திறம்பட வாழ ஒரு தளத்தை அளிக்கிறது. இதனால்தான் இந்திய பாரம்பரியத்தில் உறவுகளுக்கு ஒரு உறுதியை உருவாக்கினோம். உங்கள் திருமணம், வாழ்க்கைக்கும் ஆனது. இதில் மிகவும் அழகான ஒன்று உள்ளது, ஆனால் அதேநேரத்தில் அது பயன்படுத்துதலுக்கு மட்டும் ஆதாரமாக மாறினால், அது மிகவும் அசிங்கமாக மாறும். எனவே, எந்த அமைப்பு சிறந்தது? உலகில் நன்மை பயக்கும் என்று எந்த ஒரு அமைப்பும் இல்லை, ஏனெனில் ஒவ்வொரு அமைப்பும் தவறாக பயன்படுத்தப்படலாம். அதேநேரத்தில், ஒவ்வொரு அமைப்பும் பிரமாதமாக வாழவும் பயன்படுத்தப்படலாம்.
பெரியோர்களால் ஏற்பாடு செய்த திருமணமா, காதல் திருமணமா?
இந்த கேள்வி நீங்கள் எப்படி திருமணம் செய்துகொள்வது என்பது பற்றி இல்லை. உங்கள் திருமணத்தை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள், ஒருவருடன் எவ்வளவு அற்புதமாக வாழ்கிறீர்கள் என்பதுதான் கேள்வி. நீங்கள் எப்படி, எங்கு திருமணம் செய்கிறீர்கள் என்பதன் மூலம் அது தீர்மானிக்கப்படாது. இதில் முக்கியமான விஷயம் திருமணம் செய்துகொள்ளும் இரண்டு பேரும் எவ்வளவு விவேகமாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று உங்களுக்கு சொல்லப்பட்டிருக்கலாம். பெரும்பாலான மக்கள் தங்கள் திருமணத்தை ஒரு நரகமாக உருவாக்கிக் கொண்டதால் அவர்கள் உங்களிடம் அப்படி சொன்னார்கள். நீங்கள் இதை புரிந்துகொள்ள விரும்புகிறேன். நீங்கள் சொர்க்கமாக இருந்தால், உங்கள் திருமணம் உட்பட நீங்கள் செய்யும் அனைத்தும் சொர்க்கமாக இருக்கும். நீங்கள் நரகமாக இருந்தால், உங்கள் திருமணம் உட்பட நீங்கள் செய்யும் அனைத்தும் நரகமாக இருக்கும். திருமணத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதை விட, ஒரு அழகான மனிதனாக தன்னை எவ்வாறு மேன்மைப்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஒருவர் தொடர்ந்து அக்கறை கொள்ள வேண்டும். இதனால் அவர் எந்த ஒரு சூழ்நிலையில் வைக்கப்பட்டாலும், அந்த சூழலை அழகாக வைக்க முடியும்.