தலைமைத்துவத்தின் வகைகள்
சத்குரு அவர்கள், இரண்டு வெவ்வேறு விதமான தலைமைகள் பற்றியும், எந்தச் செயல்பாடும் வெற்றிகரமாக இருப்பதற்கு, இந்த இரண்டு தலைமைகளுக்கு இடையிலும் ஒரு சமநிலை இருக்கவேண்டியது ஏன் முக்கியமானதாக இருக்கிறது என்றும் உரையாற்றுகிறார்.
மனம்கவர்ந்த தலைவராக இருக்கும் ஒருவர் மக்கள் எதிர்பார்க்காத ஏதோ ஒன்றை வெளிப்படுத்த வேண்டியவராக இருக்கிறார். அது முற்றிலும் வித்தியாசமான ஒரு செயல்பாடு. இப்போது வரைக்கும் இல்லாத வேறு ஏதோ ஒன்றை அவர் செய்யவேண்டியிருக்கிறது. இது உங்களுக்குள் இருக்கும் அதிபுத்திசாலித்தனத்தைப் பொறுத்தது என்பதுடன், உங்களுக்குள் நீங்கள் எவ்வளவு ஒருங்கிணைப்புடன் இருக்கிறீர்கள் என்ற கேள்விக்கும் உரியதாக இருக்கிறது. ஆனால் ஆழ்ந்த நம்பிக்கை உண்டாக்கும் உங்களது தலைமைப் பண்பானது, விஷயங்களை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு நகர்த்திச் சென்றுவிடுகிறது. அதற்குப் பிறகு, செயல்பாடுகளை நிகழச் செய்வதற்கு உங்களுக்கு ஒரு அமைப்புமுறை தேவைப்படுகிறது. அமைப்புமுறை என்பது கான்க்ரீட் ப்ளாக் போன்றது; அது உங்களது சமயோசித திறமைக்கு இடமளிப்பதில்லை. ஆனால் அமைப்புமுறை இல்லாமல், இயல்பான திறன் உங்களுக்கு இருந்தால், அந்தத் திறன் வானத்தைக் கடந்து செல்லும் நிலையில் யாரும் அதைப் பார்க்கமாட்டார்கள். அளவு கடந்த அதிபுத்திசாலித்தனம், பைத்தியக்காரத்தனம் என்று ஒதுக்கப்படும். ஆகவே, அமைப்புமுறையில் உங்களது ஒரு பாதம் பதிந்திருக்க வேண்டும்.
இந்த இரண்டு விஷயங்களும் ஏதோ ஒரு இடத்தில் சமன்பாடு அடைய வேண்டியதுடன், அவர்களை ஒத்திசைவான தன்மைக்குக் கொண்டுவர வேண்டியுள்ளது. மக்கள் புரிந்துகொள்வதற்கும், அதனுடன் தொடர்பு ஏற்படுத்தவும் மற்றும் அவர்களுக்கு அது எப்படி பயனுள்ளதாக இருக்கிறது என்று பார்ப்பதற்கும், ஒரு அமைப்புமுறைக்கும், அதிபுத்திசாலித்தனத்துக்கும் இடையில், உங்களுக்குள் சற்று இணக்கம் நிகழவேண்டியிருக்கிறது; இல்லையென்றால் எதுவுமே நடைமுறையில் நீடிப்பதில்லை.
Subscribe
நுண்ணறிவும் வழிமுறையும்
எந்த ஒரு செயலும் வெற்றிகரமாக நிகழ்வதற்கு ஒரு அமைப்பும் வழிமுறையும் கட்டாயம் உள்ளது. ஆனால் ஒரு அதிபுத்திசாலியும் உண்டு. அநேகமாக தலைவர்களால் தங்களின் நுண்ணறிவை விவரிக்க முடியாது; அவர்கள் பின்பற்றும் வழிமுறைகளை வேண்டுமானால் விவரிக்க முடியும். ஏனெனில், நுண்ணறிவு என்பது ஒருவரால் வார்த்தைகளில் விவரிக்கக்கூடிய ஒன்று அல்ல, அது என்னவென்றால் அவர்களது வாழ்க்கையே அதைப் பற்றி பல்வேறு வழிகளில் பேசுவதாக இருக்கிறது.
அதிபுத்திசாலித்தனமா அல்லது வழிமுறையா என்ற கேள்வி எப்போதும் மக்களைத் தொந்தரவு செய்கிறது. உங்களிடம் ஒரு கச்சிதமான வழிமுறை இருக்கலாம். ஆனால் நீங்கள் வாழ்க்கை முழுவதும் சராசரி மனிதராகவே இருந்துவிடக்கூடும்.
ஹென்றி ஃபோர்டுக்கு நிகழ்ந்த ஒரு அழகான சூழ்நிலையை இது எனக்கு நினைவூட்டுகிறது. பொதுவாக, எந்த ஒரு இயந்திரத்தின் செயல்பாடும் எனக்குள் ஆர்வமூட்டுவதாகவே இருக்கிறது. அதனால் இயல்பாகவே நான் பெரும்பாலான பெரிய இயந்திர நிறுவனங்களுக்கு, குறிப்பாக வாகன தயாரிப்புத் தொழிற்சாலைகளுக்குச் சென்றுள்ளேன், டெட்ராய்டில் உள்ள ஃபோர்டு மோட்டார் கம்பெனியின் ஆராய்ச்சிப் பகுதிக்கு நான் சென்றிருந்தபோது, அங்குள்ள ஒரு மூத்த விஞ்ஞானியிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். 35 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்துவரும் அவர், உலகெங்கும் உள்ள வாகனத் தொழில்நுட்பத்தில், இன்றைக்குப் பயன்பாட்டில் இருந்துகொண்டிருக்கும் 52 வெவ்வேறு விஷயங்களுக்கான காப்புரிமைகள் வைத்துள்ளார். நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் ஒரு செய்தியை என்னிடம் பகிர்ந்துகொண்டார்.
ஒருமுறை ஹென்றி ஃபோர்டு, தன்னுடைய ஃபோர்டு மோட்டார் கம்பெனியில் நடக்கும் பல செயற்பாடுகள் திறமையற்ற முறையில் நிகழ்வதை கண்டறிந்தார். அதைக் கையாள ஒரு செயல்திறன் நிபுணரை நியமிக்க முடிவுசெய்தார். அந்த நிபுணர் அலுவலகம் அலுவலகமாக சென்று ஒவ்வொரு தனிநபரோடும் செயல்பட்டு பல முக்கிய பொறுப்பில் இருந்தவர்களையும் பல வழிகளில் சரிசெய்தார். ஆனால் ஒருநாள் அவர் ஹென்றி ஃபோர்டிடம் சென்று புகார் அளித்தார், "பாருங்கள், இங்கு நான் கிட்டத்தட்ட அனைவரையும் சரிசெய்து வருகிறேன். ஆனால் இந்த ஒருவர் மட்டும் நான் சொல்வதைக் கேட்பதே இல்லை. மேலும் பெரும்பாலும் நான் அவர் அலுவலகத்துக்கு சென்றபோதெல்லாம் அவர் மேசை மீது கால்களைப் போட்டபடி புகைபிடித்துக் கொண்டிருப்பதைக் காண்கிறேன். அவர் வேறெதுவும் செய்வதில்லை. மேலும் அவர்தான் நிறுவனத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நபர். நான் அவர் பற்றி முழுவதுமாக அறிந்துகொண்டேன். அவரைப் பற்றி துப்பு துலக்கினேன். அவர் எதுவுமே செய்வதில்லை. அவர் என்னிடமிருந்து எந்த ஒரு அறிவுரையும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. நீங்கள் அந்த நபரை வேலை நீக்கம் செய்யவேண்டும்."
ஹென்றி, "அவர் யார்?" என்று கேட்டார். நிபுணர் அந்த நபரின் பெயரைக் கூறியவுடன், ஹென்றி கூறினார், "அவரை தொந்தரவு செய்யாதீர்கள். கடந்தமுறை அவர் கால்களை மேசைமேல் போட்டுக்கொண்டு சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தபோது அவர் பல லட்சம் டாலர்கள் மதிப்புள்ள ஒரு யோசனையை கூறினார். அவரை நீங்கள் கண்டிப்பாகத் தொந்தரவு செய்துவிடாதீர்கள்."
எனவே வழிமுறையைக் கடந்த சிந்தனைப்பொறி உருவாகும் ஒரு சூழலை நாம் உருவாக்காவிட்டால், வாழ்வியலே சராசரியாகப் போய்விடும். ஆனால் அதிமேதமை என்பது, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் வெளிப்படாமல் போகக்கூடும் என்பதால், வழிமுறை என்பது எப்போதும் பக்கபலமாக இருப்பதற்கான ஒரு காப்பீடாக இருக்கிறது.
நுண்ணறிவு இல்லாத மனிதரே இல்லை. அது வெளிப்படுவதற்குப் பொருத்தமான ஒரு சூழல்தான் அதற்குத் தேவைப்படுகிறது.
இது வெளிப்படுவதற்குரிய விதமான ஒரு உள்சூழ்நிலையை உருவாக்குவதற்கு, இந்த வாழ்வினூடாக நீங்கள் பயணிக்க உதவும் அடிப்படை வாகனங்களாக இருக்கின்ற, உடல் மற்றும் மனம் இரண்டுக்கும் சிறிது கவனம் செலுத்துவது ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது. உங்கள் உடலையும், மனதையும் எவ்வளவு நன்றாக நீங்கள் பண்படுத்துகிறீர்கள் என்பதுதான் உங்களது வெற்றியின் அளவைத் தீர்மானிக்கிறது.
ஆசிரியர் குறிப்பு: “Sadhguru’s Wisdom” என்ற பக்கத்தில் தினசரி குருவாசகம், வீடியோக்கள், ஆடியோ பதிவுகள் மற்றும் "Leadership" என்ற தலைப்பில் கட்டுரைகளை நீங்கள் காணலாம். ஈஷாவின் இன்சைட் நிகழ்ச்சி குறித்து உங்களுக்கு ஆர்வம் இருப்பின்: The DNA of Success என்ற தலைமைப் பண்பு மேம்பாட்டுக்கான நிகழ்ச்சியின் காணொளிகள் மற்றும் இந்திய தொழில் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் பகிர்வுகள் ஆகியவற்றை இங்கே காணலாம்