வீரபாண்டிய கட்டபொம்மன் - அடிபணிய மறுத்த மாவீரன்!
வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரத்தைப் பற்றியும், ஆங்கிலேயருக்கு எதிராக அவர் செய்த வரலாற்றுப் புரட்சியையும், நாம் கதைகளாகவும் திரைப்படங்களாகவும் பார்த்தும் கேட்டும் இருக்கிறோம். சத்குருவின் பார்வையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றையும் வீரத்தையும் தொடர்ந்து படித்தறியுங்கள்.
Subscribe
சரணடைய மறுத்த வீரபாண்டிய கட்டபொம்மன்
கட்டபொம்மனுடன் பிரிட்டிஷ்காரர்கள் பேச்சுவார்த்தை முயற்சியை செய்தார்கள். அது வெற்றியடையவில்லை. அவர்களுடைய ஒரு சந்திப்பில் வன்முறை ஆகிவிட்டது. கட்டபொம்மன் ஒரு ஆங்கிலேய அதிகாரியைக் கொன்றுவிட்டார். ஆங்கிலேய அரசு அவரது தலைக்கு சன்மானம் அறிவித்தது. இதைப் பார்த்த மற்ற பாளையக்காரர்கள் ஆவேசமானார்கள். அவர்கள் எல்லோரும் கிளர்ச்சி செய்தார்கள், இதுவே 1799ல் முதல் பாளையக்காரர் போராக ஆனது. ஆங்கிலேயர்கள் கட்டபொம்மனின் கோட்டையைத் தாக்கினார்கள். ஆனால் அதற்கு முன்பாக, நிபந்தனையற்ற சரணாகதி கோரி ஒருவரைத் தூதுவிட்டார்கள். அதற்கு கட்டபொம்மன், "இந்த மண்ணின் மைந்தர்கள் நாங்கள், வாழ்வதும் சாவதும் இந்த மண்ணுடைய பெருமைக்காகவும் மானத்திற்காகவும் கண்ணியத்திற்காகவும் தான்!" என்று சொல்லி அனுப்பிவிட்டார்.
விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்ட வீரன்
ஆங்கிலேயர்களின் பீரங்கிகள் தன்னுடைய கோட்டையை அழித்துவிடும் என்பது கட்டபொம்மனுக்குத் தெரியும். அதனால் அவரும் படைகளும் ரகசிய பாதை வழியாக தப்பித்துவிட்டார்கள். புதுக்கோட்டை பக்கத்தில் போய் பதுங்கி இருந்தார்கள். ஆனால் புதுக்கோட்டை ராஜா அவர்களுக்கு வஞ்சகம் செய்தார்; கட்டபொம்மன் சிறைப்பிடிக்கப்பட்டார்; பொது இடத்தில், புளிய மரத்தில் தூக்கிலிடப்பட்டார்.
அவர் தூக்கில் தொங்குவதை மற்ற பாளையக்காரர்கள் பார்க்கும்படி செய்தார்கள். 'அவர்கள் புரட்சிசெய்தால் அவர்களுக்கும் இதே கதிதான்' என்று சொல்கிற எச்சரிக்கை அது. ஆனால் கட்டபொம்மனுடைய வெளிப்படையான புரட்சியும், தியாகமும் வீண்போகவில்லை! அடுத்த தலைமுறையில் எத்தனையோ இளம் விடுதலை போராளிகளுக்கு ஒரு வழிகாட்டியாக அவர் ஆனார்.
அதன்பிறகு வரவிருந்த இந்திய சுதந்திர போராட்டத்திற்கு அவர் அடித்தளம் அமைத்துவிட்டார். வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் வரலாற்றில் ஒரு பிரம்மாண்டமான நாயகனாக உயிர்வாழ்கிறார். அவரது துணிச்சலும் சாதுரியமும் என்றென்றைக்கும் கொண்டாடப்படும். அனைத்திற்கும் மேலாக, இந்த மண்ணின் மகத்தான மைந்தர் அவர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு முழுமையாக தலை வணங்குகிறோம்.