IYO-Blog-Mid-Banner

 

டாக்டர். கிரீஷ்நாயக்: எனக்கு ஏற்பட்ட கோவிட் நோயை எதிர்த்துப் போரிட்ட எனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதனால் மக்கள் ஊக்கமடைந்து, க்ரியா செய்வதன் கண்கூடான பயனை அறிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்

கடந்த இரண்டு வருடங்களாக நான் தவறாமல் ஷாம்பவி மஹாமுத்ரா, சூன்ய தியானம் மற்றும் சக்தி சலன கிரியா செய்து வருகிறேன். மேலும் வார நாட்களில் சூரிய கிரியாவையும், வார இறுதிகளில் யோகாசனங்களையும் செய்கிறேன். இது தவிர, எனது சம்யமா பயிற்சியையும் நான் செய்கிறேன். எனது பயிற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பதற்காக, நான் இயன்றவரை பிராணசக்தி மிகுந்த காய்கறி உணவுகளை உண்கிறேன். கடந்த பதினெட்டு மாதங்களாக, நான் நெஞ்சக மருத்துவராக லுடன்(Luton), லண்டன், யுகே(UK)-ல் பணியாற்றுகிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தொற்றிய வைரஸ் கிருமி

பிப்ரவரி மாதத்தின் இடைப்பட்ட நாட்களில், யுகே-வில் கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டதால், நானும், ஒப்பீட்டளவில் என்னை விட மிகவும் இளவயதும், ஆரோக்கியமும் உடைய மற்றும் இரண்டு சக பணியாளர்களும், கோவிட் முன்னணி நுரையீரல் மருத்துவர்களாக பணிபுரியச் சென்றோம். நாங்கள் உற்சாகத்துடனும், முடிந்த அளவுக்குத் திறமையாகவும் பணியாற்றி, கோவிட் நோயாளிகளை கவனித்துக்கொண்டோம். துரதிருஷ்டவசமாக, சிறந்த முன்னெச்சரிக்கைகளை எடுத்திருந்தும், நாங்கள் மூன்று பேருமே கோவிட் தொற்றுக்கு ஆளாகிவிட்டோம். எனது சகமருத்துவர் இன்னமும் குணமடைந்துகொண்டிருக்கிறார், மற்றொருவர் மூன்று வாரங்களில் குணமடைந்தார், ஆனால், என்னால் மூன்றே நாட்களில் குணமடைய முடிந்தது!

அந்த நேரத்தில், வழக்கமான உடல் வலி, வெப்பமும், குளிரும் ஒருங்கே இணைந்த ஒரு உணர்வு, நாவில் சுவை குறைபாடு மற்றும் நீர்ச்சத்து இழப்பை நான் அனுபவித்தேன். கோவிட் சளி மாதிரி சோதனைக்காக எங்களது மருத்துவமனைக்கு நான் சென்றபோது, நான் நிலைகுலைந்து, ஒரு நிமிடத்திற்கு நினைவிழந்துவிட்டேன். இது பெரும்பாலும் நீர்ச்சத்து இழப்பு மற்றும் சட்டென்று எழுந்து நிற்பதால் ஏற்படும் குறைந்த இரத்த அழுத்தத்தால் வருவது. எங்கள் மருத்துவமனை இயக்குனர் என்னை உள் நோயாளியாக இருந்து, நெஞ்சுப் பகுதிக்கு சிடி ஸ்கேன் மற்றும் விரிவான மருத்துவ சோதனை செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார். ஆனால் எனது வேண்டுகோளுக்கு இணங்கி நான் வீட்டிலேயே ஓய்வெடுப்பதற்கு அனுமதித்தார். தினமும் 3-4 முறைகள் தொலைபேசியில் எனது நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.

எனக்கு இருமல் ஏற்படவில்லை, மூச்சுத்திணறல், மிக அதிக காய்ச்சல் அல்லது இரத்தத்தில் ஆக்ஸிஜன் குறைவு என்று கோவிட்-19 க்கு உரிய எந்தத் தொந்தரவும் காணப்படவில்லை. நான் 4 கிலோ எடை குறைந்து, பலவீனமாக உணர்ந்தாலும், சுவாச உறுப்புகளைப் பொறுத்து நோய்வாய்ப்பட்ட அந்த நிலையில் முழுமையாக நலமுடன் இருந்தேன். இதற்கு மாறாக, எனது இரண்டு சக மருத்துவர்களும் குறிப்பிடத்தக்க சுவாசப் பிரச்சனை அறிகுறிகளுடன் மிகவும் நோயுற்றிருந்தனர்.

என் சாதனா என்னை வலிமையாக வைத்திருந்தது

எனது உடல் பலவீனமாக இருந்ததால், யோகாசனங்கள், சூரிய க்ரியா மற்றும் நாடிவிபாசனம் போன்றவற்றைச் செய்ய முடியவில்லை என்றாலும், பெரும்பாலான மற்ற எனது பயிற்சிகளை நான் தொடர்ந்து செய்துவந்தேன். நாள் தவறாத எனது க்ரியா பயிற்சிகள் மற்றும் பிராணசக்தி மிகுந்த உணவுகள், எனது ஆரோக்கியத்தில் குறிப்பாக எனது சுவாசம் மற்றும் ஓரளவுக்கு எனது நோய் எதிர்ப்புத் திறனில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவே நான் உணர்கிறேன். சத்குருவின் அருளினால், மிக இலேசான நோயுடன், அதிக சிக்கல்கள் இல்லாமல் வேகமாக குணமடையும் அதிர்ஷ்டம் வாய்க்கப் பெற்றேன் என்றுதான் கூறவேண்டும்.

ஒரு நுரையீரல் மருத்துவராக, தினமும் என் கண்முன்னே பல நோயாளிகள் இறந்ததையும், இன்னமும் இறந்துகொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறேன், மற்றும் எண்ணற்ற நோயாளிகள் குணமடைவதற்கு மிகக் கடுமையாகப் போராடிக்கொண்டிருக்கின்றனர். இந்தமாதிரி ஒரு சூழ்நிலையில், ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவிதமான க்ரியா அல்லது யோகப் பயிற்சி செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன். யோகப் பயிற்சிகள் ஆரோக்கியம் மற்றும் உடல் திறனில் நீடித்த விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைத் தவிர, அதன் முக்கியமான பலனாக -ஆன்மீகத் தன்மையை மேம்படுத்துவதாக இருக்கும்.

ஆசிரியர் குறிப்பு: ஆன்லைனில் இலவசமாக கற்றுக்கொள்ளக்கூடிய இந்த எளிய 3 நிமிட சாதனாவை பயிற்சிசெய்து பாருங்கள்: சிம்ம க்ரியா