ஒரு பந்து உலகை மாற்ற முடியுமா? காளியூரைப் பார்த்து அதனை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்!

கோவையிலிருந்து 60 கி.மீ தொலைவிலுள்ள சத்தியமங்கலத்திற்கு அருகில் அமைந்துள்ளது காளியூர் கிராமம். ஆனால் காளியூர் வழக்கமான கிராமமாக இல்லை! அந்த கிராமத்தில் நிறைய பேர் வந்து படிக்கும் வகையில் ஒரு சிறப்பான நூலகம் அமைந்துள்ளது. குறுகிய கடனுதவி அமைப்பும் வெற்றிகரமாக அங்கே செயல்படுகிறது. வருடம் ஒருமுறை மாட்டுப்பொங்கலை முன்னிட்டு காளியூர் கிராமம் விளையாட்டு திருவிழா மையமாக மாறிவிடுகிறது. சுமார் 60 கிராமங்களிலிருந்து வரும் அணிகள் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள். காலை 8 மணிக்கு துவங்கும் விளையாட்டு தொடர்ச்சியாக மறுநாள் காலை 8 மணிவரை 24 மணிநேரம் நிகழ்கிறது.

இப்படி 24 மணிநேர விளையாட்டு திருவிழாவை நிகழ்த்துவதற்கு ஓரளவு பணமும் சக்தியும் மற்றும் ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளும் தேவையாக உள்ளன. ஓரிடத்தில் 60 கிராம விளையாட்டு அணிகளையும் ஒன்றாக கொண்டுவந்து போட்டியை நடத்துவது சற்று அசாதாரணமான செயல்தான்! ஒவ்வொரு வருடமும் இந்த சிறிய கிராம மக்கள் எப்படி இதனை செய்துமுடிக்கிறார்கள்? 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்...

15 வருடங்களுக்கு முன்பு, ஈஷா தன்னார்வத் தொண்டர் குழுவினர் காளியூர் கிராமத்திற்கு வந்து ஒரு விளையாட்டு அணியை உருவாக்க சித்தமானார்கள். ஆனால் அந்த கிராமத்தினர் முதலில் ஒரே அடியாக மறுத்தனர். ஒரு விளையாட்டு அணி என்பது அந்த கிராமத்திற்கு பொருந்தாத ஒன்றாக அந்த மக்களால் பார்க்கப்பட்டது. ஒருவருட காலத்திற்கு மீண்டும் மீண்டும் அந்த கிராமத்தை பார்வையிட்டு இதுகுறித்து விளக்கிய பின்னர் அவர்கள் சம்மதித்து முதன்முதலில் ஒரு வாலிபாலையும் அதற்குரிய வலையையும் பெற்று விளையாடத் துவங்கினர்.

விரைவிலேயே பந்து தரையில் அடிக்கும் சத்தம் கேட்டு கேட்டு, அந்த சத்தத்தின் ஈர்ப்பால் ஒரு எட்டு பேர் முதலில் ஆர்வமுடன் தொடர்ச்சியாக விளையாடத் துவங்கினர். ஊரின் அருகே விளையாடுவதால் பந்து விழுந்து அடிக்கடி வீட்டு ஓடுகள் உடைந்து விடுவது போன்ற சில சிரமங்கள் இருந்தன. அதிலும் சிலர் வீட்டில் அவர்களின் இல்லத்தரசிகளுக்கு இந்த விளையாட்டில் முதலில் உடன்பாடில்லை. அதில் ஒரு பெண்மணி இந்த வாலிபால் பந்து சத்தம் தங்களுக்கு தொந்தரவு தருவதாக கிராம பஞ்சாயத்தில் புகார் தெரிவித்த ருசிகர சம்பவமும் நிகழ்ந்தது. கிராம பஞ்சாயதார் இதற்கான சமூக தீர்வை வழங்கி தொடர்ந்து வாலிபால் அணி தங்கள் கிராமத்தில் தொடர்வதற்கு உறுதுணை புரிந்தனர்.

1 Volleyball = Sports Fest + Temple Roof + Library + Microloan!

இப்படியான நிலையிலிருந்து இப்போது இந்த கிராம வாலிபால் அணி மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. இன்று இந்த கிராமத்தில் வாலிபால் கமிட்டி வெற்றிகரமாக செயல்பட்டு வருவதோடு, வருடம் ஒருமுறை இதற்காக நிதிதிரட்டப்படுகிறது. இந்த நிதி இவர்களின் கிராம விளையாட்டு திருவிழாவிற்கு பயன்படுத்தப்படுகிறது. இத்திருவிழாவிற்கு பெண்களும் கூட பெருமளவில் வருகைதந்து இரவுமுழுக்க தங்கியிருந்து சிறப்பிக்கின்றனர். இந்த நிகழ்விற்கு வருகை தருபவர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி மற்றும் அன்னதானமும் நாள்முழுக்க வழங்கப்படுகின்றன. திருவிழாவிற்கு பின்னர், மீதமுள்ள நிதியைக் கொண்டு பல்வேறு வழிகளில் கிராம மேம்ப்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிராம கோயிலின் கூரை மற்றும் நூலகத்தைப் புதுப்பித்தல், பணத்தேவை உள்ள கிராம மக்களுக்கு அல்லது சிறுதொழில் துவங்க விரும்பும் கிராம மக்களுக்கு சிறிய அளவிலான கடன் உதவியும் கூட இதன்மூலம் வழங்கப்படுகிறது.

ஆகவே, ஒரு பந்து உலகை மாற்ற முடியுமா? காளியூரைப் பார்த்து அதனை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்!

ஆசிரியர் குறிப்பு: ஈஷா கிராமோத்சவம் 2018 குறித்த சமீபத்திய தகவல்களை உடனுக்குடன் பெறுவதற்கு தொடர்ந்து இணைந்திருங்கள்! மேலும் தகவல்கள் பெற  isha.co/gramotsavam-tamil என்ற இணையதளத்திற்கு வருகை தாருங்கள்!

Gramotsavam2018-tamilbanner