சோளம் பயன்கள் (Cholam Benefits in Tamil) மற்றும் 4 சுவையான சோளம் ரெசிபிகள்
கம்புக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் சோளத்தை தங்கள் அன்றாட உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சோளத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மேலும் நான்கு சுவையான சோளம் ரெசிபிகளையும் அறிந்து கொள்ளுங்கள்.
கொல்லைப்புற இரகசியம் தொடர்
மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வலம்வரும் ஆதியோகி ரதம் எங்கள் ஊருக்கு வந்தடைய இருப்பதை முன்னிட்டு, ரதத்தையும், சிவாங்கா விரதமிருந்து பாதயாத்திரையாக ரதத்தைக் கொண்டுவரும் அன்பர்களையும் வரவேற்பதற்காகக் காத்திருந்தோம்.
உமையாள் பாட்டி தியான அன்பர்களுக்காக வீட்டில் இருந்து பிரசாதம் செய்து, கொண்டு வந்திருந்தார். ஆதியோகி ரதத்தை சிறப்புடன் வரவேற்று, ஆதியோகியின் அருளில் திளைத்த எங்கள் ஊர் ஈஷா தன்னார்வலர்கள் அனைவருக்கும், வீட்டிலிருந்து தான் செய்து கொண்டு வந்திருந்த பணியாரங்களை உமையாள் பாட்டி பரிமாறினார். பாட்டி வழங்கிய அந்த இனிப்பான சோளப் பணியாரத்தை சுவைத்தபோது, அதன் ருசி என்னை வெகுவாகக் கவர்ந்தது. பாட்டியுடன் வீட்டிற்கு சென்றபின் மீதமிருந்த பணியாரங்களை வாங்கி சுவைத்தேன்.
"என்னப்பா, சோளப் பணியாரத்தை வேற லெவல்ல ரசிச்சு சாப்பிடுற போல?" நான் ருசித்து சாப்பிடுவதை சிலாகித்துப் பார்த்த பாட்டி, கேட்டுக்கொண்டே அடுப்பங்கறைக்குச் சென்றாள்.
பாட்டியைப் பின்தொடர்ந்த நான், சோளம் பற்றி தெரிந்துகொள்ள ஆர்வமானேன்.
"இந்த சோளப் பணியாரம் இவ்வளவு ருசியா இருக்கறதுக்கு என்ன காரணம் பாட்டி?"
"சோளம்ங்கறது நாம பாரம்பரியமா சாப்பிட்டு வர்ற ஒரு சிறுதானியம். நீ இப்ப சாப்பிட்ட பணியாரம் சிவப்பு சோளத்துல செஞ்சது. சோளத்திலேயே வெள்ளை சோளம், சிவப்பு சோளம், பழுப்புநிறச் சோளம் இப்படி ஏறக்குறைய 30 வகையான சோளம் இருக்குதுன்னு சொல்றாங்க. இந்த சோளம் வறட்சிய தாங்கி விளையுறதால, நம்ம வானம் பார்த்த பூமிகள்ல வெள்ளாம பண்றதுக்கு ஏத்ததா இருக்குது.
நீ சாப்பிட்ட பணியாரம் இவ்வளவு ருசியா இருக்குறதுக்கு காரணம், இது இயற்கை விவசாயத்துல விளைஞ்ச சோளத்துல இருந்து பண்ணதுப்பா. அதனால இன்னும் கூடுதல் ருசியா இருக்குது. அது மட்டுமில்ல, சோளத்துல ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்குது"
"சொல்லுங்க பாட்டி கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்"
பாட்டி அருகிலிருந்த சாக்கில் உள்ள சோள மணிகளை ஒரு முறத்தில் அள்ளி, கைபார்த்துக்கொண்டே சொல்லத் தொடங்கினாள்.
சோளம் பயன்கள் (Cholam Benefits in Tamil)
"சோளத்துல அதிகமான புரதம், தாமிரம், இரும்பு சத்துக்கள் இருக்குது. மெக்னீசியம், கால்சியம் சத்துக்களும் இதுல இருக்கறதால உடலுக்கு வேண்டிய உயிரோட்டம் கிடைக்குது. உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமான சத்தான வைட்டமின் பி மற்றும் போலேட் ஆகிய சத்துக்கள் இதுல நிறைய இருக்குது.
சோளமாவு, ரவை மாதிரி கிடைக்கிறதால சோள உப்புமா, சோள ரொட்டி, சோள கேக், சோள லட்டுன்னு விதவிதமா செஞ்சு சாப்பிட முடியும். வாரத்துல மூனு நாள் சோளத்தை கஞ்சியா ஆக்கியும் இட்லி, தோசையா செஞ்சும் நம்ம உணவுல சேர்த்து பலன்பெறலாம்."
நீரிழிவுக்கு சோளம்
"சோளத்தை உணவுல சேர்த்துக்கறதால, நீரிழிவு நோய்க்கு சிறப்பா பலனளிக்குது. நார்ச்சத்தும் புரதமும் இரத்தத்தில சர்க்கரை அளவை கட்டுக்குள்ள வைக்குது."
சோளத்தின் நார்ச்சத்து
"சோளத்துல நார்ச்சத்து அதிகம் இருக்கறதால மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாம தடுக்குது. உடல் எடையை கட்டுக்கோப்பா வச்சிக்கறதுக்கு சோளம் உதவுது. சோளத்துல இருக்கற நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள், மூலநோய் போன்றவை வராம தடுக்க முக்கிய பங்களிக்குது."
இதய ஆரோக்கியத்திற்கு சோளம்
"இதுல இருக்கற ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள் கெட்ட கொழுப்பை குறைச்சு, இதய நாளங்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கறதோட, சீரான ரத்த ஓட்டத்தை உறுதிப்படுத்தி, இதய பாதிப்புகள் ஏற்படாம தடுக்குது."
எலும்புகளை பலப்படுத்தும் சோளம்
"சோளத்துல மாவுச்சத்தும் புரதச்சத்தும் அதிகம் இருக்கறதால எலும்புகளை வலுவடையச் செய்யுது. வெள்ளை சோளம் வயது முதிர்ச்சியால ஏற்படுற நாட்பட்ட மூட்டு வலிக்கும் எலும்பு தேய்மானத்துக்கும் ரொம்ப நல்லது."
பாட்டி சோளத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி சொல்லிமுடிக்க, ஈஷா மஹாசிவராத்திரி விழாவிற்கு பதிவு செய்வது குறித்து பாட்டிக்கு நினைவுபடுத்தினேன்.
"வருஷத்துல ரொம்ப இருட்டான ஒரு இரவை கொண்டாடுற கலாச்சாரம், ஒரு ராத்திரி முழுக்க தூங்காம முழிச்சிருந்து ஆதியோகி சிவனை கொண்டாடுற திருவிழா, மறப்பேனா நான்? ஏற்கனவே உனக்கும் சேர்த்து புக் பண்ணிட்டேம்ப்பா!" என்றாள் உமையாள் பாட்டி.
வரும் நாட்களில் சோளத்தில் செய்த பதார்த்தங்களை தினமும் சாப்பிட்டு, மஹாசிவராத்திரி விழாவை உயிரோட்டத்துடன் நடனமாடிக் கொண்டாட ஆயத்தமாகிவிட்டேன்.
Subscribe
மருத்துவக் குறிப்புகள்:
Dr.S.சுஜாதா,
ஆரோக்யா சித்தா மருத்துவமனை,
சேலம்.
சோளம் ரெசிபிகள் (Cholam Recipes in Tamil)
சோள தோசை செய்வது எப்படி? (Chola Dosai in Tamil)
தேவையான பொருட்கள்:
சோளம் - 1 கப்
புழுங்கல் அரிசி - 1/4 கப்
உளுந்தம் பருப்பு - 1/4 கப்
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
சோளம், புழுங்கல் அரிசி, உளுந்தம் பருப்பு ஆகிய மூன்றையும் தண்ணீரில் ஊறவைத்து 1 மணி நேரம் கழித்து நைசாக அரைத்துக்கொள்ளவும். பிறகு அதில் உப்பு சேர்த்துக் கலக்கி 4 மணி நேரம் கழித்து தோசைக் கல்லில் ஊற்றி மொறு மொறு என்று திருப்பிப்போட்டு எடுக்கவும். இது சட்னி சாம்பாருடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
சோள பணியாரம்
தேவையான பொருட்கள்:
சோளம் - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 50 கிராம்
உளுந்து, வெந்தயம் - 25 கிராம்
செய்முறை:
முதல் நாள் இரவு சோளம், புழுங்கல் அரிசி மற்றும் உளுந்து + வெந்தயம் இவற்றை தனித்தனியாக ஊறவைத்துக்கொள்ளவும். காலையில் தனித்தனியாக கரகரப்பாக அரைத்து ஒன்றாக கலக்கி பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.
ஓட்ஸ் சோள பக்கோடா
தேவையான பொருட்கள்:
ஓட்ஸ் - 100 கிராம்
சோள மாவு - 100 கிராம்
தேங்காய் துருவல் - ஒரு கைப்பிடி
சோம்பு - சிறிதளவு
இஞ்சி - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகாய் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - கால் லிட்டர்
செய்முறை:
ஓட்ஸை மிக்ஸியில் நன்கு அரைத்துக் கொள்ளவும். அதில் சோள மாவு, தேங்காய் துருவல், சோம்பு, இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகாய் தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து வடை பதத்திற்கு நீர் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும். எண்ணெயில் பொறித்து எடுத்தால் சூடான ஓட்ஸ் சோள பக்கோடா ரெடி. ஓட்ஸ் சேர்த்து செய்வதால் இது மிக சத்தான பதார்த்தம்.
சோள அவல்
தேவையான பொருட்கள்:
சோள அவல் - 100 கிராம் (ஊறவைத்தது)
காரட் - சிறிதளவு
பீன்ஸ் - சிறிதளவு
முட்டைகோஸ் – சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காரட், பீன்ஸ் மற்றும் முட்டைகோஸைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தாளித்துப்போட்டு, காய்கறி வேகும் வரை வதக்கி, பின்னர் சோள அவல் சேர்த்துக் கிளறினால், காய்கறிகள் சேர்ந்த சோள அவல் ரெடி!
சிறுதானியங்கள் பற்றிய பிற பதிவுகள்:
1) ராகி வழங்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்! 4 எளிய ராகி ரெசிபிகளுடன்!
கேழ்வரகு அல்லது ராகி எனும் சிறுதானியத்தின் வரலாறு, 7 ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ராகி ரெசிபிகள் என ராகி பற்றிய முக்கியக் குறிப்புகள் இப்பதிவில்...
2) தினை அரிசி நன்மைகள் மற்றும் 6 சுவையான சமையல் குறிப்புகள்
எடை குறைதல், நீரிழிவு நோய் கட்டுப்படுவது மற்றும் கர்ப்பம் தரிப்பதற்குத் துணைநிற்பது உட்பட தினையின் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. இதில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் அதிகமாக உள்ளன. மேலும், இதன் சுவையின் காரணமாக பல்வேறு சமையல் பதார்த்தங்களில் அரிசி அல்லது கோதுமைக்கு ஒரு அற்புதமான மாற்றாக அமைகிறது.
3) வியக்க வைக்கும் வரகு அரிசி பயன்கள்!
சிறுதானியங்களில் அதிக சத்தும் சுவையும்கொண்ட வரகு அரிசியின் ஆரோக்கிய பலன்கள் பற்றி உமையாள்பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாருங்கள்.
4) சத்துக்கள் நிறைந்த சாமை அரிசியின் பயன்கள்!
நம் பாரம்பரிய சிறுதானியங்களில் சுவையும் சத்தும்மிக்க சாமை அரிசியைப் பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாருங்கள்.
5) குதிரைவாலி அரிசி பயன்கள் மற்றும் 2 எளிய ரெசிபிகள்
மலச்சிக்கல், உடல் எடை, நீரிழிவு, இதய ஆரோக்கியமின்மை என பல்வேறு பிரச்சனைகளிலிருந்து வெளிவர உதவும் சத்தான குதிரைவாலி அரிசியைப் பற்றி இந்தப் பதிவில் உமையாள் பாட்டி வாயிலாக அறிந்து கொள்வோம்!
6) கம்பு சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்!
நம் தென்பகுதிகளில் சிறுதானியங்களில் மிகவும் பிரசித்திபெற்ற கம்பு, அதிக சத்துடையதாக, ஆரோக்கிய பலன்களை வழங்கக்கூடியதாக உள்ளது. கம்பு தானியம் பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டறிய வாருங்கள்.