சங்குப்பூ தரும் மங்காத உடல் நலம்! (Sangu Poo Benefits in Tamil)
வாசனைக்காக சில மலர்கள், அழகுக்காக சில மலர்கள், அர்ப்பணம் செய்வதற்காக சில மலர்கள் என நம் வாழ்வில் இயற்கையின் பெரும் கொடையாக மலர்கள் இருப்பதை பார்க்கிறோம். மருத்துவ குணங்களுடன் இருக்கும் மலர்களில் முக்கியமானதாக சங்குப்பூ உள்ளது. சங்குப்பூவின் மருத்துவ குணங்கள் குறித்து உமையாள் பாட்டி கூறுவதை இங்கே படித்து அறியலாம்.
கொல்லைப்புற இரகசியம் தொடர்
"வாப்பா 90's கிட்...! அந்த செல்ஃபோனை கொஞ்சம் இங்கிட்டு எடுத்துக் குடு."
மழைக்கு சூடாக டீ போட்டுக்கொண்டே என்னிடம் அன்பு கட்டளையிட்ட உமையாள் பாட்டியின் செல்ஃபோனை எடுத்து அவள் கையில் கொடுத்தேன்.
"ஒரு YouTube சேனல் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். நம்ம சேனலுக்கு என்ன பேரு வைக்கலாம்னு சொல்லுப்பா."
2k கிட்ஸுக்கு சவால் விடும் வகையில் சோசியல் மீடியாவில் அட்ராசிட்டி செய்யும் உமையாள் பாட்டியின் பதிவுகள் சமீப காலங்களில் என்னை வெகுவாக லைக் செய்ய வைத்தது.
"பாட்டி நீங்க சேனல் ஆரம்பிங்க, நீங்க ஸ்கிரீன்ல வந்தாலே போதும். சப்ஸ்கிரிப்ஷன் அள்ளும்." பாட்டியின் ரசிகனாய் நான் சொன்ன இந்த வார்த்தைகள் வெறும் பாராட்டுக்காக அல்ல, உண்மையும் அதுதான்!
பாட்டிக்கு தெரிந்த பாட்டி வைத்தியங்களை பதிவுசெய்ய வேண்டும் என்பது எனது ஆசையாகவும் இருந்தது.
பாட்டி போடும் அந்த டீயைக் குடித்துக்கொண்டே சேனல் பெயரை யோசிக்கலாம் என நினைத்தபோது, பாட்டி கொடுத்த டீ நீலக் கலரில் வண்ணமயமாக இருந்தது. சற்று தயக்கத்துடன் குடித்த எனக்கு அதன் சுவை ஈர்த்தது.
“என்னப்பா, எப்படி இருக்கு?”
“டீ சூப்பர் பாட்டி!!! ஆனா கலரே ஒரு வித்தியாசமா இருக்கு, ஒன்னும் ஆகாதுல்ல பாட்டி, தைரியமா குடிக்கலாமா?
சங்குப்பூ டீ (Sangu Poo Tea)
Subscribe
"ஒன்னும் ஆகாதுன்னு சொல்ல முடியாது. ஆனா.... என்னன்ன ஆகும்னு நான் சொல்றேன். இது சங்குப்பூவில செஞ்ச டீ. இந்த சங்கு புஷ்பம் பத்தி சொல்றேன் கேளு!"
பாட்டி ஏதோ பூடகமாய் ஆரம்பிக்க, நானும் அதுகுறித்து தெரிந்துகொள்ள ஆவலானேன்.
"இந்த சங்குப்பூவை "காக்காட்டான்" அப்படினும் சொல்வாங்க. இந்த பூக்கள தண்ணியில போட்டு சில நிமிஷம் கொதிக்க வச்சு கொஞ்சம் நீல நிறமாக மாறுன பிறகு, எலுமிச்சைச் சாறு கொஞ்சமும் கருப்பட்டி கொஞ்சமும் சேர்த்தா சுவையான சங்குப்பூ டீ தயாராகிடும். எப்பவும் குடிக்குற டீ, காப்பிக்கு பதிலா இந்த சங்கு புஷ்ப டீய குடிச்சு வந்தா, பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு."
சங்குப்பூ செடியின் மருத்துவ பயன்கள் (Sangu Poo Benefits in Tamil)
நுரையீரல் பாதை சம்பந்தமான பிரச்சனைகள்:
"இதோட இலைய சாறெடுத்து, இஞ்சிச் சாறு சம அளவு சேத்து, கொஞ்சமா கொடுக்க, நுரையீரல் பாதை சம்பந்தமான பிரச்சனைகள் குறையும், இளைப்பு நோய் குணமாகும்."
சிறுநீரகப் பிரச்சனைகள்:
"இதோட வேரை தண்ணியில ஊறவச்சு அந்த தண்ணிய குடிச்சு வந்தா, சிறுநீரை நல்லா பெருக்கும். சிறுநீரகப் பாதையில தொற்றுக்களையும் சரிசெய்யும்."
யானைக்கால் நோய்:
"இதோட வேர் யானைக்கால் நோய்க்கு மருந்தா பயன்படுது."
நீரிழிவு நோய்:
"சங்கு பூக்கள வச்சு தயாரிக்கப்படும் குடிநீர், நீரிழிவு நோயாளிகளோட சர்க்கரை அளவைக் கட்டுக்குள்ள வைக்குறதா சொல்றாங்க."
செரிமான பிரச்சனை, குடற்புழு, வாதம் மற்றும் கப நோய்கள்:
‘மாந்தங் கிருமியடல் வாதங் கபவினமும்
சேர்ந்த மலக்கட்டுஞ் சிதையுங் காண்’
"இப்படி ஆரம்பிக்குற ஒரு செய்யுள், செரிமான பிரச்சனை, குடற்புழு, வாதம் மற்றும் கப நோய்களுக்கு சிறந்த மருந்தா இதோட வேர் பயன்படுதுன்னு சொல்லுது."
ஞாபக சக்தி:
"ஞாபக சக்தியை சிறப்பாக்க சங்கு புஷ்பத்தை கிராமங்கள்ல பயன்படுத்துவாங்க."
தோல் நோய்கள்:
"தோல் நோய்களுக்கும் இந்த செடி சிறந்த மருந்தாகுது."
கழிவுகளை வெளியேற்ற:
"பேதிக்கு கொடுக்குற மருந்துகள்ல காக்காட்டான் வேர் சேர்க்கப்படுது. காக்காட்டான் வேர், திப்பிலி, விளாம்பிசின், சுக்கு சேர்த்துச் செய்யப்படுற சித்த மருந்து, கழிச்சலை உண்டாக்கி கழிவுகளை வெளியேத்தி ஆரோக்கியம் தருது."
உமையாள் பாட்டி சங்கு புஷ்பம், அதன் வேர் மற்றும் இலைகளின் மருத்துவ பயன்களை சொல்லிக்கொண்டே போக, நான் பாட்டி கொடுத்த சங்குப்பூ டீயை ருசித்துக்கொண்டே YouTube சேனல் பெயரை யோசித்து பாட்டியிடம் கூறினேன்.
பாட்டி அந்த பெயரைக் கேட்டதும், என்னை மேலும் கீழுமாக பார்த்தபடி உள்ளே சென்றாள்.
"வேற லெவல் பாட்டி வைத்தியம்"
நல்லாதான இருக்கு சேனல் பேரு?! யோசித்துக்கொண்டே மீதமிருந்த டீயை குடித்து முடித்தேன்.
மருத்துவ குறிப்பு: டாக்டர். S.சுஜாதா MD (S)
ஆரோக்யா சித்தா க்ளினிக், சேலம்.