சாகச வீரர்
ஆபத்துடன் விளையாடுவதே இவருக்கு வாடிக்கை, இதை சாகசம் என்று பொதுவாக சொல்லலாம்! வாழ்வின் விளிம்பில் வாழ்ந்து பார்க்கும் சத்குருவின் சாகசங்கள் பற்றி மேலும் அறியுங்கள்!
சத்குருவுக்கு பதிமூன்று வயதிருக்கும் பொழுது மல்லாடிஹள்ளி ஸ்வாமி என்றழைக்கப்பட்ட ராகவேந்திர ஸ்வாமி என்ற யோகியைச் சந்தித்தார். எண்பது வயது ஆன முதியவராக இருந்தாலும், அவரின் வேகமும் சுறுசுறுப்பும் சத்குருவை விட அதிகமாக இருந்தது சத்குருவை அவர்பால் ஈர்த்தது.
சத்குரு: நான் சிறுவனாக இருந்தபொழுது அவர் எனது தாத்தா வீட்டிற்கு வருவார். எனக்கு அப்பொழுது பனிரெண்டு பதிமூன்று வயது இருக்கும், அவருக்கோ எண்பது வயது. அப்பொழுதெல்லாம் நான் எத்தனை உயரமாக இருந்தாலும், எது மேலும் ஏறி விடுவேன். எங்கள் தாத்தா இருந்த கிராமத்து வீட்டின் பின் புறம் 6-7 அடி சுற்றளவுடனும் 120-130 அடி ஆழத்துடனும் பெரிய கிணறுகள் இருந்தது. தண்ணீர் 60 அடி ஆழத்தில் இருந்தது. நாங்கள் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று இந்த கிணத்தில் குதித்து திரும்ப ஏறி வருவது. சிறிது பிசகினாலும் தலை பாறாங்கல்லில் பட்டு தெறித்து பறலோகம் போகக் கூடும். இதில் வேறு எந்த பையனாலும் என்னைத் தோற்கடிக்க முடியாது. ஆனால் அன்று இந்த எண்பத்தியோறு வயது முதியவர் என்னை விட வேகமாக ஏறி விட்டார். நான் எப்படி இது சாத்தியம் என்று கேட்தற்கு ‘என்னுடன் வந்து யோகப் பயிற்சிகளை செய்’ என்று சொன்னார். அதுதான் என்னை சில சுலபமான யோகப் பயிற்சிகளை அவரிடம் கற்றுக் கொள்ள ஊக்குவித்தது.