அமாவாசை - பொய்மையிலருந்து உண்மை நோக்கிய பயணம்
மனித உடல் கட்டமைப்பின் மீது அமாவாசையின் தாக்கம் என்ன என்பதைப் பற்றி சத்குரு விளக்குகிறார்.
கேள்வியாளர்: சத்குரு, அமாவாசையின் முக்கியத்துவம் என்ன?
Subscribe
அமாவாசை அன்னிக்கு பூமி அடைகாக்கும் நிலைக்கு போகுது. பூமில உயிர்செயலோட வேகம் குறைஞ்சு போகுது. இது ஒரு நல்ல வாய்ப்பாவும் இருக்கு, ஏன்னா, இந்த நாள்ல உயிர் தன்னைத்தானே ஒருங்கிணக்கக்கூடிய தன்மை சிறப்பா இருக்கு. எப்போ குறிப்பிட்ட அளவுக்கு வேகம் குறையுதோ, அப்போ தான் நீங்க உங்க உடலை கவனிப்பீங்க. எல்லாம் நல்லபடியா நடந்து, நீங்க பிஸியா இருக்கும்போது, உங்க உடம்புல என்ன நடக்குதுன்னே உங்களுக்கு தெரியாது, உடம்பு நீங்கன்னு வாழ்வீங்க. ஆனா, உடம்புக்கு சின்னதா ஒரு நோய் வந்தாலும், திடீர்னு உடம்பே பிரச்சனை ஆகுது, இப்போ உடம்புக்கு தனிகவனம் கொடுக்க வேண்டி வருது. உடம்பு சரியில்லாம போகும்போது தான், "இது நான் இல்லை,"னு உங்களுக்கு தெரியுது. இது என் உடம்பு மட்டும்தான், இதுதான் எனக்கு பிரச்சனைகளை தருதுன்னு தெரியுது. இப்போ, உங்களுக்கும் உங்க உடம்புக்கும் இடையில ஒரு தெளிவான இடைவெளி உருவாகுது.
இதுதான் அமாவாசையோட முக்கியத்துவம். அந்த குறிப்பிட்ட நாள்ல, பஞ்சபூதங்கள்ல, குறிப்பிட்ட இணக்கம் ஏற்படறதால, எல்லாத்துலயுமே வேகம் குறையுது. நீங்கள் நல்வாழ்வை நாடறவங்களா இருந்தா, உங்களுக்கு பௌர்ணமி புனிதமானது. நீங்கள் விடுதலையை நாடுபவராக இருந்தா, உங்களுக்கு அமாவாசை புனிதமானது. வாழ்க்கைல, இந்த இரண்டு பரிமாணங்களுக்கும் தகுந்த மாதிரி பல்வேறு விதமான பயிற்சிகளும், சாதனாக்களும் இருக்கு. இந்த நாள்ல ஒருத்தர், "எது நான், எது நான் இல்லை,"ங்கறதைப் பத்தி ரொம்ப விழிப்புணர்வா இருக்க முடியும். இங்க இருந்துதான் "பொய்மையிலிருந்து உண்மையை நோக்கிய பயணம்," தொடங்குது. ஒவ்வொரு மாசமும், அமாவாசைல இருந்து பௌர்ணமி வரைக்கும், இயல்பாகவே இந்த வாய்ப்பு உருவாகுது. சுத்தமா விழிப்புணர்வே இல்லாதவங்களுக்கு கூட அமாவாசை துவங்கி, ஒவ்வொரு நாளும் இந்த வாய்ப்பு இயல்பாவே இருக்கு.
பௌர்ணமியோட இயல்பு, ஈடா அல்லது பெண்தன்மை கொண்டதா இருக்கு. அமாவாசை கரடுமுரடான தன்மை கொண்டது. அமாவாசைக்கு முந்தைய இரவு, சிவராத்திரினு சொல்றோம். இது சிவனோட இரவு. ஆதிமூலமான ஒரு இயல்புல இந்த இரவு இருக்கு. எல்லாமே கும்மிருட்டா இருக்கும்போது, படைத்தலே இருட்டுக்குள்ள கரைஞ்சுட்டதை போல இருக்கும். அமாவாசைல, அழித்தல்செயல் செய்பவனோட சிறு சாயல் இருக்கு. பொதுவா, அமாவாசை இரவுல, பெண்தன்மையோட சக்தி கொஞ்சம் கலக்கமடையும், ஏன்னா, அது பெண்ணுக்குள் பயத்தையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தும், இல்லன்னா, ஆணைப் போல முரட்டுத்தனமா ஆக்கும்.
பௌர்ணமி பெண்தன்மைக்கு ரொம்ப ஏற்றதா இருக்கும். அதனால, பௌர்ணமியை பெண்கள் பயன்படுத்திக்குறாங்க. தன்னை கரைச்சுக்குற தீவிரத்துல இருக்கும் ஒரு ஆணுக்கு பௌர்ணமி இரவு ஏற்றதில்ல. நல்வாழ்வை தேடும் ஆணும், பௌர்ணமி இரவை பயன்படுத்திக்கலாம். ஆனா, அவன் விடுதலையை, முக்தியை நாடுபவனா இருந்தா, அமாவாசை சிறந்தது. முழுமையான கரைதலை, முக்தியை தேடும் அனைவருக்கும் அமாவாசை சிறந்தது.
இது நீங்க கேள்விப்பட்டிருக்க வாய்ப்பிருக்கு, மனசுல சமநிலை தவறுனவங்க, அமாவாசை அல்லது பௌர்ணமி நாட்கள்ல, இன்னும் அதிக சமநிலை தவறிப் போவாங்க. இது ஏன் இப்படி நடக்குதுன்னா, நிலவோட ஈர்ப்புசக்தி பூமி மீது செயல்படுது. அதனால, அது எல்லாத்தையும் மேல்நோக்கி இழுக்குது. சமுத்திரமே அன்னிக்கு மேலே எழ முயற்சிக்குது. அதே மாதிரி, உங்க உடல்ல ஓடுற இரத்தமும் நிலவோட ஈர்ப்புசக்தியினால, மேல எழ முயற்சிக்குது. இதனால்தான், நீங்க கொஞ்சம் சமநிலை இல்லாதவரா இருந்தா, உங்க மூளைல நடக்குற அதிகப்படியான இரத்த ஓட்டத்துனால, சமநிலை தவறி போறீங்க. நீங்கள் ஆனந்தமா இருந்தா, உங்க ஆனந்தம் அதிகரிக்கும். நீங்க வேதனையா இருந்தா, உங்க வேதனை இன்னும் அதிகமாகும். உங்க தன்மை என்னவா இருந்தாலும், அது இந்த நாட்கள்ல இன்னும் கொஞ்சம் அதிகமாகும், ஏன்னா இரத்தம் மேல்நோக்கி இழுக்கப்படுது. ஏதோ ஒருவிதத்துல, மொத்த சக்தியும் மேல்நோக்கி இழுக்கப்படுது. தன்னோட சக்தியை எல்லாவிதத்திலும் மேல்நோக்கி செலுத்த விரும்புற ஆன்மீக சாதகருக்கு, இந்த இரண்டு நாட்களும் இயற்கை வழங்கியிருக்கும் ஒரு வரப்பிரசாதம்.