கிருஷ்ண ஜெயந்தி - கிருஷ்ணன் பிறந்த கதை (Krishna Jayanthi in Tamil)
கிருஷ்ண ஜெயந்தி அன்று, கிருஷ்ணனின் பிறப்பு குறித்தும், அவன் பிறந்ததும் சிறைச்சாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு, வெள்ளப்பெருக்கெடுத்தோடும் ஆற்றைக் கடந்து யசோதாவிடம் சென்று சேர்ந்த கதையையும் அறிந்துகொள்ளுங்கள்.
கிருஷ்ணன் ஒரு ஆணாகவும், தனது வாழ்வில் அவன் மேற்கொண்ட பணியில், ஒரு மனிதனாக இருப்பதன் பலவீனத்துடன், உயிரோட்டமான வாழ்க்கை வாழும் அதே நேரத்தில், தெய்வீகத்தின் மூலக்கூறுடன் - இந்த எல்லா அம்சங்களும் ஒரு சிக்கலான வலைப்பின்னலை உருவாக்குகிறது. அவன் இதுதான் அல்லது அவன் அதுதான் என்று மட்டும் பார்ப்பது சரியானதல்ல. அவனது வாழ்வின் ஒரு அம்சத்தை மட்டும் நீங்கள் பார்த்தால், அவன் முற்றிலும் சிதைவுபட்ட ஒரு பிம்பமாகத்தான் தோன்றுவான். அவன் எந்த அளவுக்குப் பன்முகப் பரிமாணம் கொண்டவன் என்றால், நீங்கள் அவனின் எல்லா பரிமாணத்திலும் குறைந்தபட்சம் ஒரு சிறிதளவேனும் தொடவில்லை என்றால், அது அவனுக்கு இழைக்கப்பட்ட முழுமையான அநீதியாகத்தான் இருக்கும்.
கிருஷ்ணன் பிறந்த இடம்
பூகோளரீதியாக, தற்போதைய உத்தரப்பிரதேச மாநிலத்தின், மதுராவில் அவனது பிறப்பு நிகழ்ந்தது. யாதவ சமூகத்தில் உக்கிரசேனன் என்ற பெயர்கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த தலைவன் ஒருவன் இருந்தான். உக்கிரசேனன் முதுமைப்பருவம் அடைந்துகொண்டு இருந்த நிலையில், அதிகாரத்தை எப்படிக் கைப்பற்றுவது என்பதில் இரக்கமற்ற, பதவி நோக்கம் கொண்ட மகன் கம்சனால், அவனது தந்தையின் மரணம் வரை காத்திருக்க இயலவில்லை. அவன் தனது தந்தையையே சிறைப்படுத்திவிட்டு, தலைமைப்பொறுப்பை ஏற்றுக்கொண்டான்.
மேலும் அவன் கிழக்கிலிருந்து ஆண்டுகொண்டிருந்த, கருணையில்லாத ஒரு பேரரசனாகிய ஜராசந்தனுடன் தன்னை இணைத்துக்கொண்டான். ஜராசந்தனுக்கு, அவன் அறிந்திருந்த ஒட்டுமொத்த உலகத்தையும் வெற்றிகொள்வது கனவாக இருந்தது. முழுக்கமுழுக்க முரட்டுத்தனமான தாக்குதல் மூலம், அவனது அதிகாரம் பெரும் வேகத்தில் வளர்ந்துகொண்டிருந்தது. கம்சன் அவனுடன் கூட்டணி வைத்துக்கொண்டான், ஏனென்றால் அந்த நேரத்தில் ஆற்றலுடன் இருப்பதற்கு அது ஒன்றுதான் வழியாக இருந்தது.
Subscribe
கம்சன் ஏன் கிருஷ்ணனைக் கொல்ல விரும்பினான்?
கம்சனின் சகோதரி தேவகி, மற்றொரு யாதவகுலத் தலைவன் வசுதேவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். திருமணம் முடிந்தவுடன், புதுமணத் தம்பதியரை கம்சன் தனது தேரில் அமர்த்தி அவனே தேரோட்டிக் கொண்டிருந்தபோது, ஒரு அசரீரி வாக்கு ஒலித்தது. விண்ணிலிருந்து எழுந்த அந்தக் குரல் கூறியது, "ஓ கம்சனே, உன் சகோதரியின் திருமணம் முடிந்து மிகவும் மகிழ்ச்சியாக நீ அவளுக்குத் தேரோட்டிக்கொண்டு இருக்கிறாய். உனது இந்த சகோதரிக்குப் பிறக்கும் எட்டாவது குழந்தை உன்னை வதம் செய்யும். அதுவே உன் முடிவாக இருக்கும்."
சட்டென்று கம்சன் மூர்க்கமடைந்தான். "ஓ, இவளின் எட்டாவது குழந்தை வந்து என்னைக் கொல்லப்போகிறதா? நான் இவளை இப்போதே கொல்லப்போகிறேன். அவள் தன் எட்டாவது குழந்தையை எப்படிப் பெறுவாள் என்று பார்ப்போம்", என்றவாறு தனது வாளை உருவி, அந்த இடத்திலேயே அவனது உடன்பிறந்த சகோதரியின் தலையைச் சீவியெறிய எத்தனித்தான். மணமகன் வசுதேவர், கம்சனிடம் இறைஞ்சினார், "தயவுசெய்து அவளை வாழ்வதற்கு அனுமதி. நீ எப்படி இதைச் செய்யமுடியும்? அவள் உனது சகோதரி, அதுமட்டுமன்றி நாங்கள் இப்போதுதான் திருமணம் செய்துள்ளோம். உன்னால் அவளை எப்படி வெட்டமுடியும்?" "இவளின் எட்டாவது குழந்தை என்னைக் கொல்லப்போகிறது. அப்படிப்பட்ட எதையும் நான் நிகழவிடப்போவதில்லை," என்றான் கம்சன். ஆகவே வசுதேவர் ஒரு உடன்படிக்கை வழங்கினார், "நான் எங்களுக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் உன்னிடம் கொடுத்துவிடுவேன். நீ அந்த சிசுக்களை கொன்றுவிடலாம். ஆனால் இப்போது தயவுசெய்து என் மனைவியைக் கொல்லாதே."
ஆனால் கம்சன், அவனது உயிர் மற்றும் பாதுகாப்பு குறித்த அதீத கவலையில், தனது சகோதரி மற்றும் அவளது கணவனை ஒரு விதமான வீட்டுக்காவலில் வைத்து சிறைப்படுத்துவதன் மூலம், அவர்கள் எப்போதும் கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். முதலாவது குழந்தை பிறந்ததும், காவலாளிகள் கம்சனுக்குத் தெரிவித்தனர். அவன் வந்தபோது, தேவகியும் வசுதேவரும் அழுது வேண்டினர், "எட்டாவது குழந்தைதானே உன்னைக் கொல்லப்போகிறது என்று கூறுகிறாய். இந்தக் குழந்தையைக் கொல்லாதே." கம்சன் கூறினான், "நான் எதற்கும் வாய்ப்பளிக்க விரும்பவில்லை." அவன் குழந்தையை எடுத்து, அதன் கால்களைப் பிடித்து, ஓங்கிப் பாறையில் மோதினான். இது தொடர்ந்தது. ஒவ்வொரு முறை குழந்தை பிறந்தபோதும், பெற்றோர்கள் பல வழிகளிலும் கம்சனை கெஞ்சினர், ஆனால் அவன் ஒரு குழந்தையையும் விடவில்லை. ஆறு பச்சிளம் சிசுக்கள் இந்த விதமாகவே கொல்லப்பட்டன.
பலராமன் எப்படி கோகுலத்தை அடைந்தான்?
தேவகியும், வசுதேவரும் கம்சனின் நடத்தைகளில் மிகவும் மனம் நொந்திருந்தனர். அந்த இராஜாங்கத்தில் இருந்த மக்கள் கம்சனை குறித்து மிகவும் அச்சத்தில் இருந்தனர். காலம் செல்லச்செல்ல, யாருடனாவது எப்போதும் போரில் ஈடுபட்டுக்கொண்டும், தங்கையின் பச்சிளம் சிசுக்களைக் கொன்றுகொண்டும், முற்றிலும் கொடூரமான இந்த அரசனின் மற்ற வழிகளினாலும் அவர்கள் மனம் உடைந்திருந்தனர். மெதுவாக, அரண்மனைக்குள்ளேயே கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின. ஆகவே ஏழாவது குழந்தை பிறந்தபோது, வசுதேவர் எப்படியோ அதை வெளியில் கடத்திச்சென்று வேறெங்கோ அவர் கண்டெடுத்த ஒரு உயிரற்ற குழந்தைக்குப் பதிலாக மாற்றிவிட்டார். இந்த ஏழாவது குழந்தை யமுனை ஆற்றைக் கடந்து கடத்திச் செல்லப்பட்டு, வசுதேவரின் மற்றொரு மனைவியாகிய ரோகிணியிடம் கொடுக்கப்பட்டது.
இந்தக் குழந்தையின் பெயர் பலராமன். அவன் வளரவளர பெரும் பலசாலியாகியதுடன், அவனது வலிமை மற்றும் அவன் செய்த சாதனைகளைப் பற்றியும் எண்ணற்ற பல கதைகள் உண்டு.
கிருஷ்ண ஜெயந்தி - கிருஷ்ணனின் பிறப்பு
எட்டாவது குழந்தை பிறக்க இருந்தபோது, கம்சன் உண்மையாகவே பதற்றமடைந்தான். இத்தனை நாட்களாக அவர்கள் இருவரும் வீட்டுக்காவலின் கீழ் இருந்துகொண்டிருந்தனர். ஆனால் இப்போது கம்சன், வசுதேவருக்கு சங்கிலியிட்டதுடன், தேவகியையும் சிறையில் அடைத்தான். ஏதாவது அசம்பாவிதம் நிகழக்கூடும் என்பதால், கம்சன் சிறைக்குள் நுழைவதற்கு யாரையும் அனுமதிக்கவில்லை. அவனுடைய நம்பிக்கைக்கு உகந்த பணிப்பெண், உறவுக்காரப் பெண்ணொருத்தி, பூதனை என்ற பெயர் கொண்டவளை, மருத்துவச்சியாக நியமித்தான். அவள் கண்காணிப்புக்காக நிறுத்தப்பட்டாள். குழந்தை பிறந்த கணமே, கம்சனிடம் குழந்தையைக் கொல்வதற்காக ஒப்படைக்க வேண்டும் என்பது திட்டம்.
பிரசவ வலி அவ்வப்போது வந்துபோனது. பூதனை காத்துக்கிடந்தாள். பிரசவம் நிகழவில்லை. இரவானதும், அவள் ஒரு சில நிமிடங்கள் தனது வீட்டுக்குச் செல்வதற்காக வெளியில் சென்றாள். ஆனால் அவளது வீட்டை அடைந்தவுடன், திடீரென்று ஒரு பெருமழை ஆரம்பித்துவிட்டதுடன், வீதியெங்கும் வெள்ளத்தில் மிதந்தது. இந்த ஒரு சூழ்நிலையில், பூதனையால் சிறைக்குத் திரும்பிச்செல்ல இயலவில்லை. அப்போதுதான், அந்த அமாவாசையை அடுத்த எட்டாவது நாளில், கொட்டும் மழை மற்றும் பலத்த இடிகளுக்கு மத்தியில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்தவுடன் மற்றும் ஒரு அதிசயமும் நிகழ்ந்தது. சிறையின் கதவுகள் தாமாகவே திறந்துகொண்டன - எல்லாக் காவலாளிகளும் உறக்கத்தில் ஆழ்ந்தனர் - சங்கிலிகள் உடைந்துபோயின. வசுதேவருக்கு, இது ஒரு தெய்வீகத் தலையீடு என்று சட்டென்று புரிந்தது.
அவர் புத்தம்புது சிசுவைக் கையிலேந்திக்கொண்டு, உள்ளுணர்வின் வழிகாட்டுதலுடன் யமுனை நதிக்கு நடந்தார். அந்த இடம் முழுவதும் வெள்ளமாக இருந்தபோதிலும், அவரை ஆச்சரியமூட்டும் வகையில் ஆற்றின் குறுக்கே ஆழமில்லாத பகுதியானது வெளியில் தெரிந்ததால், அவரால் சிரமமில்லாமல் நடக்கமுடிந்தது. அவர் நதியைக் கடந்துசென்று, நந்தன் மற்றும் அவனது மனைவி யசோதாவின் வீட்டுக்குச் சென்றார். அப்போதுதான் யசோதா ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்திருந்தாள். அவளுக்கு பிரசவம் கடினமாக இருந்ததால், நினைவிழந்த நிலையில் இருந்தாள். வசுதேவர் பெண்குழந்தையின் இடத்தில் கிருஷ்ணனை கிடத்திவிட்டு, பெண் குழந்தையை எடுத்துக்கொண்டு, சிறைச்சாலைக்கு மீண்டும் திரும்பினார்.
யசோதாவின் மகளுக்கு என்ன நிகழ்ந்தது?
சிறிது நேரத்தில், சிறைச்சாலையில் பெண் குழந்தையின் அழுகுரல் கேட்டது. காவலாளிகள் கம்சனிடம் செய்தியை அறிவித்தனர். அதற்குள் பூதனையும் திரும்பிவிட்டிருந்தாள். கம்சன் வந்து, அது ஒரு பெண் குழந்தையாக இருப்பதைக் கண்டான். மர்மமான ஏதோ ஒன்று நிகழ்ந்திருப்பதை அவன் அறிந்துகொண்டான். ஆகவே அவன் பூதனையிடம் கேட்டான், "உனக்கு நிச்சயமாகத் தெரியமா? குழந்தை பிறந்தபோது நீ இங்கு இருந்தாயா?" தனது உயிருக்குப் பயந்த பூதனை கூறினாள், "நான் இங்கேதான் இருந்தேன். என் கண்களால் பார்த்தேன். இந்தக் குழந்தை தேவகிக்கு பிறந்தது." மேலும் உறுதிசெய்யும் விதமாக அவள் கூறினாள், "இந்தக் குழந்தை என் கண்முன்னேதான் பிறந்தது."
தேவகியும், வசுதேவரும் இறைஞ்சினர், "இது ஒரு பெண்தான். இந்தப் பெண்ணால் உன்னைக் கொல்லமுடியாது. இது ஒரு ஆண் குழந்தையாக இருந்தால், அவன் உன்னைக் கொல்பவனாக இருந்திருப்பான். ஆனால் இது ஒரு பெண் குழந்தை." ஆனால் கம்சன் கூறினான், "இல்லை, நான் எந்த ஆபத்துக்கும் வாய்ப்பு கொடுக்க விரும்பவில்லை." ஆகவே மீண்டும் ஒருமுறை, அவன் குழந்தையின் கால்களைப் பற்றி எடுத்து, தரையில் மோதிக்கொல்ல எத்தனித்தான். அவன் இதைச் செய்யத் துணிந்தபோது, அந்தக் குழந்தை அவனது கைகளிலிருந்து நழுவி ஜன்னலுக்கு வெளியில் பறந்து, அவனைப் பார்த்து சிரித்துவிட்டு, "உன்னைக் கொல்பவன் வேறெங்கோ இருக்கிறான்", என்று கூறியது.
இப்போது கம்சனுக்கு உண்மையாகவே சந்தேகம் வந்துவிட்டது. அங்கிருந்த அனைவரிடமும் அவன் விசாரணை நடத்தினான். காவலாளிகள் உறங்கிவிட்டிருந்தனர், பூதனை வெளியில் சென்றிருந்தாள். ஆனால், இது எதையும் வெளிக்காட்டிக்கொள்வதற்கு யாருக்கும் விருப்பமில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவரும் தங்களது தலைகளை பெரிதென மதித்தனர். சூழ்நிலைகளை நீங்கள் அச்சுறுத்தலால் நிர்வகிக்கும்போது, ஆரம்பத்தில் அது ஒரு நன்மையாக இருப்பதாக நீங்கள் நினைத்துக்கொள்கிறீர்கள். "இதனை நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் பிணமாகிவிடுவீர்கள்" என்று அச்சுறுத்துகிறீர்கள், ஆகவே நீங்கள் எப்படி விரும்புகிறீர்களோ அப்படி விஷயங்கள் நிகழும். ஆனால், சிறிது காலத்துக்குப் பிறகு, இது ஒரு பெரிய பிரச்சனையாகிறது. நீங்கள் விரும்பும்படி ஏதோ ஒரு விஷயம் நிகழவில்லையென்றால், அது அவர்களது உயிரை விலையாகக் கேட்கும் என்பதை மக்கள் அறிந்துள்ளனர். ஆகவே, அவர்கள் உங்களைச் சுற்றிலும் முழுமையான ஒரு நம்பவைக்கும் சூழலை உருவாக்குவார்கள். நீங்கள் அச்சுறுத்தலால் நிர்வாகம் செய்யும்போது, இதுதான் நீங்கள் எதிர்கொள்ள வேண்டிய பின்விளைவு.
இதற்கிடையில், கிருஷ்ணன் கோகுல சமூகத்தில் வளர்க்கப்பட்டான். ஒரு தலைவனின் மகனாக இருந்தாலும், அவன் ஒரு சாதாரண மாடு மேய்க்கும் சமூகத்தில் வளர்ந்துவந்தான். அவனது வாழ்வின் அந்தக் காலகட்டத்தில், அவனைச் சுற்றிலும் எண்ணற்ற அதிசயங்களும், சாகசங்களும் நிகழ்ந்தன.