அம்பேத்கர் ஒரு மாமனிதர் (Ambedkar in Tamil)
சத்குருவின் இந்த உரை அம்பேத்கரின் அரசியல் மற்றும் சமூகப் பார்வை எத்தகையது என்பதை வெளிப்படுகிறது. தடைகளைத் தகர்த்து அம்பேத்கர் வாழ்ந்த உத்வேகமான வாழ்க்கையையும், அவருடைய வாழ்க்கையை நாம் ஏன் பின்பற்ற வேண்டும் என்பதையும் சத்குரு விளக்குகிறார்.
கேள்வியாளர்:
அம்பேத்கர் என்பவர் யார் என்பதை இந்தியாவிற்கு நாம் நினைவூட்ட வேண்டும். இப்போது பிரச்சனை என்னவென்றால் அவர் தலித்துகளின் அடையாளமாக ஆக்கப்பட்டு விட்டார்.
சத்குரு: துரதிருஷ்டவசமாக, எல்லா தலைவர்களையும் ஏதோ ஒன்றுடன் அடையாளப்படுத்துகிறோம். சர்தார் பட்டேல் என்று சொன்னால் காங்கிரஸ், அவர் காங்கிரஸ்காரர், எதற்காக அவரைப் பற்றி பேசுகிறீர்கள்?" என்று கேட்கும். அம்பேத்கர் என்று சொன்னால், "அவர் ஒரு தலித், அவரைப் பற்றி ஏன் பேசுகிறீர்கள்?" என்பார்கள். இந்த தேசத்திற்காக உழைத்த அத்தனை பேர்களும், அனைவருக்கும் உத்வேகம் அளிக்கக்கூடியவர்களாய் இருப்பது அவசியம்.கேள்வியாளர்:
குறிப்பாக, நாம் அம்பேத்கரை சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர் இன்றைக்கும் பொருத்தமானவராக உள்ளார்.
சத்குரு:
அம்பேத்கரின் ஆன்மீகம்
அம்பேத்கர் அவர்களின் சொந்த வார்த்தைகளில் நான் சொல்ல வேண்டும் என்றால், ஜனநாயகம் என்பது அரசின் ஒரு வடிவமாக இருப்பது மட்டுமல்ல, இது ஒவ்வொரு மனிதனும் ஒருவருக்கொருவர் மரியாதையையும் மதிப்பையும் வழங்குதல் என்றார். இது அவரது வார்த்தை. அவர் ஒருவருக்கொருவர் அளிக்கும் மரியாதை பற்றி பேசுகிறார். ஒருவருக்கொருவர் அளிக்கக்கூடிய மரியாதையைப் பற்றி யாரோ ஒருவர் பேசினால், அது ஆன்மீகம்தான், அல்லவா?
அவர் பேசுவது அரசியல் ஜனநாயகம் பற்றியல்ல, சமூக ஜனநாயகத்தைப் பற்றி. காகிதத்திலும் சட்டத்திலும் அனைவரும் சமம் என்பது இருக்கிறது. ஆனால் சமூகரீதியாக அது ஏற்படவில்லை. எந்த ஒரு சமூகமும் எல்லா மனிதர்களையும் சமம் என்று வைப்பதில்லை. அது எப்போதுமே நிகழாது, அது வேறு விஷயம். ஆனால் அதற்கான வாய்ப்புகளை நிச்சயம் ஏற்படுத்த வேண்டும். சமம் என்பது ஒப்புயர்வில்லாமல் நிகழாது. ஆனால் சமமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். துரதிருஷ்டவசமாக, அதனை நாம் இன்னும் சாதிக்கவில்லை. சட்டப்படி நம் அனைவருக்கும் சமமான வாய்ப்பு உண்டு என்றாலும், சமூக அளவில் நமக்கு சரிசமமான வாய்ப்பு இல்லை. பல காரணங்களால் விலக்கப்பட்டு இருக்கிறார்கள், அல்லது இந்த வாய்ப்புகள் அவர்களை சென்று சேரவில்லை. அது நிகழவேண்டும் என்றால், இது மிக முக்கியம்.
ஆன்மீகம் என்றால் இதுதான். உங்கள் உடலுடன் நீங்கள் அடையாளம் கொள்ளவில்லை. உங்கள் உடலுடன் நீங்கள் அடையாளம் கொள்ளாதபோது, அது பரம்பரை சார்ந்ததல்ல, வம்சாவளியை சார்ந்ததல்ல. வம்சாவளி சார்ந்த சலுகைகள் மறைய வேண்டும், அப்போதுதான் சமூக ஜனநாயகம் நிகழும். ஆனால், வம்சாவளி சார்ந்த சலுகைகள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன. "உங்கள் தந்தை யார்?" என்பது இன்னமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே உள்ளது. இது ஒழிய வேண்டும்.
என் தந்தை யார் என்பது உங்களுக்கு ஒரு பொருட்டாகவே இருக்கக்கூடாது. அது என் சார்ந்த விஷயம், உங்களுக்கு அது ஒரு பொருட்டல்ல. நான் எப்படிப்பட்டவன் என்பதுதான் உங்கள் எண்ணமாய் இருக்க வேண்டும். இந்த சமுதாயத்தில் இது நிகழ வேண்டும். இன்னும் நிகழவில்லை. ஜனநாயக முறையில் நாம் இன்னமும் பரம்பரை ஆட்சிமுறையையே வழக்கில் வைத்திருக்கிறோம். ஒரு தேர்தல் என்று வரும்போது, சமயம், ஜாதி, மதம் பற்றிய பேச்சுக்கள் ஏன் எழுகின்றன? நீங்கள் யாரைக் கும்பிடுகிறீர்கள், எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்பவை எப்படி பொருட்டாக முடியும்? ஆனால் இவற்றிற்கெல்லாம் அர்த்தம் கற்பித்துவிட்டோம். ஏனென்றால், ஜனநாயக முறையில் வாரிசு அரசியல் செய்துகொண்டிருக்கிறோம்.
இந்த ஜாதியை கவர்ந்தால் எத்தனை சதவிகித வாக்கு பெறலாம், அந்த மதத்தை கவர்ந்தால் எத்தனை சதவீதம் பெறலாம் என்பதை அனைவரும் அறிந்திருக்கிறார்கள்.
Subscribe
அம்பேத்கரின் கனவு
அம்பேத்கரின் கனவு - சமூக ஜனநாயகம், அரசியல் ஜனநாயகம் அல்ல. அரசியல் ஜனநாயகம் என்பது, எந்தவொரு ஜனநாயகமாக இருந்தாலும் சரி, முடிவில்லா வாக்குவாதமாகவும் குழப்பமாகவுமே இருக்கிறது. நாம் சமூக ஜனநாயகத்தை அடைந்தால் மட்டுமே இது பயனுள்ளதாகும்.
அரசியல் ஜனநாயகம் என்பது பல பல வழிகளில் ஒரு தடையாகவே உள்ளது. நம்மால் நேரடியாக சமூக ஜனநாயகத்திற்கு மாறமுடியாது. அரசியல் ஜனநாயகத்தை அடைந்த பின்னர், படிப்படியாக சமூக ஜனநாயகத்தை அடைய வேண்டும். ஆனால், 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் நாம் சற்றே மெதுவாகத்தான் செல்கிறோம். அதனால் நீங்கள் ஆணா-பெண்ணா, அதுவா-இதுவா, எந்த ஜாதி, எந்த மதம் என்பதெல்லாம் பொருட்டாகவே இருக்கக்கூடாது. அதைத்தான் அவர் கொண்டுவர விரும்புகிறார். சட்டப்படி தலித்துகளுக்கு சமஉரிமை இருக்கிறது, ஆனால் சமூகரீதியாக அதனை நாம் இன்னும் அடையவில்லை. இன்னும் பாகுபாடுகள் அப்படியேதான் நடக்கின்றன.
தன் வாழ்வில் நடந்த ஒரு உருக்கமான கதைப் பற்றி அவர் பேசுவார். தனக்கு 9 வயது இருந்தபோது புனேவுக்கு அருகே தன் தந்தை வேலை செய்து கொண்டிருந்தபோது, அவர் அங்கு பயணம் செய்தார். 9 வயது பையனும், குடும்பமும் அவ்விடத்திற்கு பயணம் மேற்கொண்டது. இரயில் நிலையத்தில் அவர்கள் இறங்கியபோது, காத்திருப்பு அறையில் அவர்கள் தங்க அனுமதி கிடைக்கவில்லை. அவர்கள் இடத்திற்கு அழைத்துச்செல்ல ஒரு மாட்டு வண்டியும் விருப்பமாய் இல்லை. ஒரு பெரிய பேரத்திற்கு பிறகு ஒரு மாட்டு வண்டிக்காரர் இறங்கி வருகிறார். இவர்களை வண்டியில் ஏற்றிக்கொண்டு அவர்களுடன் சரிசமமாக அந்த வண்டியில் உட்கார விருப்பமில்லாமல் நடந்து செல்கிறார். அவர்களுடன் தொடர்பு ஏற்பட்டால் நீங்களும் களங்கப்பட்டு விடுவீர்கள் என்பது நம்பிக்கை.
துரதிருஷ்டவசமாக, கிராமப்புறங்களில் இன்றும் இதே நிலைமை நீடிக்கிறது. முன் அளவுக்கு இல்லாவிட்டாலும், இன்னும் நடக்கத்தான் செய்கிறது. இன்னொரு மனிதரை தொடுவது அல்லது அவர்களது நிழல் உங்கள் மீது படுவது கூட உங்களை களங்கப்படுத்தும் எனும் எண்ணம் இன்றும் நிலவுகிறது. இந்த தலைமுறை மக்களாகிய நாம் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இதை சரிசெய்யாத பட்சத்தில் இந்தியா எனும் குடியரசு முறை பொய்த்துப்போகும்.
கேள்வியாளர்:
சத்குரு, இந்த ஒட்டுமொத்த விவாதமுமே இட ஒதுக்கீட்டைப் பற்றிதான். பொருளாதார இட ஒதுக்கீடுதான் இப்போதைய தேவை என்று அவர்கள் சொல்கிறார்கள். ஒருசாரர் இருக்கிறார்கள், அவர்கள் ஜாதிய ஒதுக்கீடுகளை மக்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள். இன்றைய இந்தியாவிற்கு அது தேவையில்லை என்பது அவர்களது கருத்து.
சத்குரு:
இட ஒதுக்கீட்டு முறை
இந்தியாவைப் போன்ற ஒரு நாட்டில் நீங்கள் என்ன சட்டம் இயற்றினாலும், குறிப்பாக சலுகைகள் கொண்டதாய் அவை அமைந்தால், தவறாக பயன்படுத்துவதை தவிர்க்க இயலாது. பயன்பாட்டிற்கும், தவறான பயன்பாட்டிற்கும் இடையே நாம் எடை போட்டு பார்க்க வேண்டியுள்ளது. நூற்றாண்டுகளாய், குறுகிய காலத்திற்கு அல்ல. நூற்றாண்டுகளாய் ஒதுக்கப்பட்ட, தனது பிறப்பு ஒரு தாழ்பிறப்பு என்று உறுதியாக நம்பவைக்கப்பட்ட ஒரு சமூகத்திற்கு சலுகைகள் கொடுக்கப்பட்டு நாம் கைகொடுத்து உயர்த்தாவிட்டால், அது நியாயமானதாக இருக்காது.
இன்று யாரோ ஒருவருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கிறது, அதனால் உங்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்பதால் உங்களுக்கு ஏற்படும் மனக்கவலையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. நாம் இதனை புரிந்துகொள்ள வேண்டும். அதிகப்படியான மக்கள்தொகையினால் தான் கட்டமைப்பு அல்லது கல்விமுறை அல்லது வசதி வாய்ப்புகளை உருவாக்க முயன்றாலும் அது போதுவதில்லை. ஆனால், இட ஒதுக்கீடு என்பது வட இந்தியாவில் சிறப்பாக பயன்படுத்தப்படாவிட்டாலும், குறிப்பாக தென்னிந்தியாவில் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த சமூகங்களைச் சார்ந்த நிறைய பேர், தலித் சமூகத்தவர்கள் சிறப்பான கல்வி பெற்றிருக்கின்றனர். நல்ல இடத்தில் பணியமர்த்தப்பட்டு இருக்கின்றனர். இவை குறிப்பாக இட ஒதுக்கீட்டினால் தான்.
இப்போது மன வருத்தங்கள் பல்வேறு நிலைகளில் ஏற்படலாம். அதனால் காலம் செல்லச்செல்ல இந்த ஒதுக்கீட்டு முறையில் சிறு திருத்தங்களை நாம் செய்யலாம். உதாரணத்திற்கு, ஒருவருக்கு சேர்க்கைக்கு அனுமதி வழங்கலாம். ஆனால் அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் தேர்ச்சியடைய செய்யக்கூடாது. இப்படி செய்வதால் தேசத்தின் திறன்நிலைகளை நீங்கள் குறைத்துவிடுவீர்கள். அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அதேசமயத்தில் தேவையான பயிற்சிகள் அளித்து, அவர்கள் முறையான பள்ளி கல்வி கிடைக்காததால் இழந்தவற்றிற்கு ஈடுகட்ட வேண்டும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் திறன் நிலைகளில் நாம் சமரசம் செய்துகொள்ளக் கூடாது. அதேபோல பணியிலும், வேலைக்குள் நுழைவதற்கு இட ஒதுக்கீடு இருக்கலாம், ஆனால் பணி உயர்வு என்பது திறன் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த திருத்தம் செயல்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் ஜனநாயக நடைமுறையில், ஒருவர் தேர்தலில் வெற்றிபெற வேண்டிய நிலை இருக்கிறதே! யாருமே மாற்றத்தைப் பற்றி பேசவே மாட்டேன் என்கிறார்கள். அது சரியானதோ, எதிர் விளைவுகள் ஏற்படுத்தக்கூடியதோ, ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதி சார்ந்ததாக இருக்கும்போது, தேர்தல் வெற்றி-தோல்வியை பொறுத்த அளவில் சாதி என்பது கொந்தளிப்பான அம்சமாக இருக்கிறது. நான் உறுதியாக சொல்வேன், இட ஒதுக்கீடு என்பது நம் தேசத்தின் தற்போதைய வளர்ச்சியை காணும்போது, தலித்துகள் இருக்கும் நிலையைப் பார்த்தால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு நிச்சயம் தேவை.
இட ஒதுக்கீடு நீக்கப்பட வேண்டுமா?
நகர்ப்புற மற்றும் கிராமப்புற தலித்துகளை நாம் பிரித்துப் பார்த்தால், பெரும்பாலான பாகுபாடுகள் கிராமப்புறத்தில் தான் நடக்கின்றன. அதனால் நகர்ப்புற தலித்துகளை விட கிராமப்புற தலித்துகளுக்கு அதிகப்படியான சலுகைகள் வழங்கப்பட வேண்டும். இப்படி கூட நாம் செய்யலாம். தங்களுக்கு வெட்டப்பட்ட பாழும்குழியில் இருந்து அவர்களை மேலெழுப்ப, முதல் தலைமுறையினருக்கு கட்டாயம் இட ஒதுக்கீடு வழங்கலாம். இரண்டாம் தலைமுறையினருக்கு சலுகைகளை சற்று குறைக்கலாம். மூன்றாம் தலைமுறை அதிலிருந்து முற்றிலும் வெளிவர வேண்டும். ஆனால் கிராமப்புற தலித்துகளுக்கு இது மிக மிக தேவை. தற்சமயம் அதிலிருந்து அவர்களால் வெளிவர முடியாது. ஏனென்றால் பாகுபாடுகள் மிகக் கொடுமையானதாக இருக்கிறது. அதனால் இதனை குறைத்து மதிப்பிட்டு, "அவர்களுக்கு அதிகப்படியான சலுகைகள் கிடைக்கின்றன, இட ஒதுக்கீட்டை நீக்க வேண்டும்" என்று நீங்கள் நினைக்கக்கூடாது.
இல்லை, அப்படி நினைக்கிறவர்கள் கிராமப்புற இந்தியாவை பார்க்க வேண்டும். கொடூரமான பாகுபாடுகள் அங்கு நிலவுகின்றன. வாசல் கதவு வழியாக அவர்கள் வீட்டிற்குள் வரமுடியாது, கொல்லைப்புற வாசல் வழியாகத்தான் வரமுடியும். எந்தவொரு மனிதரும் இப்படி நடத்தப்படுவதை ஏற்கமுடியாது. ஊர் டீக்கடையில் அவர்கள் டீ குடிக்க முடியாது. இதனை என்னால் நிச்சயம் ஏற்கமுடியாது. அதனால் இந்த வம்சாவளி சார்ந்த சலுகைகள் நீங்க வேண்டும். இட ஒதுக்கீட்டு முறை இந்த தேசத்தின் சாபம் அல்ல.
நாம் ஒரு கால வரையறையை வேண்டுமானால் ஏற்படுத்திக் கொள்ளலாம். இரண்டு தலைமுறைக்கு பின், அவர்கள் அதிலிருந்து வெளிவந்துவிட்டால், தானாக முன்வந்து அவர்கள் சலுகைகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். இதுபோன்ற ஒரு ஏற்பாட்டை நாம் செய்ய வேண்டும். சலுகைகளில் இருந்து வெளிவந்த தலித்துகள் அதிலிருந்து வெளிவராதவர்களுடன் அதனை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
நான் என்ன சொல்கிறேன் என்றால், இது பொறுப்பு சார்ந்தது. இந்த சலுகைகள் நாம் புரிந்துகொள்ள வேண்டும், இவை குறிப்பிட்ட அநீதிகள் நடப்பதால்தான் வழங்கப்படுகின்றன. இந்த சலுகைகளையே இன்னொரு அநீதியாக நாம் ஆக்கிவிடக்கூடாது. அதற்கு இன்னும் சற்றே விழிப்புணர்வுள்ள ஒரு சமூகம் நமக்கு தேவை. இந்த ஜாதி, அந்த ஜாதி என்று பார்ப்பதை நாம் நிறுத்த வேண்டும். ஏனென்றால் நாம் எல்லோருக்குமே ஒரே ஓட்டுதான். யாருக்குமே அதிக ஓட்டுகள் கிடையாது. இரண்டு ஓட்டுகள் யாருக்குமே கிடையாது. அப்படியென்றால், சட்டம் எல்லோருக்கும் சமமானதுதான். சமூகத்தில் இது நிலைபெற வேண்டும்.
கேள்வியாளர்:
சத்குரு, நீங்கள் அம்பேத்கரை பற்றி ஆன்மீக கண்ணோட்டத்தில் பேசினீர்கள். எல்லா மனிதர்களும் சமம் என்று அவர் சொல்லியதை குறிப்பிட்டீர்கள். இளைஞர்களுக்கு அதுதான் சரியான செய்தி என்று நான் கருதுகிறேன்.
சத்குரு:
பாருங்கள், தன் வாழ்க்கை மீது பொறுப்பெடுத்துக் கொள்வதில் அம்பேத்கர் ஒரு தலைசிறந்த உதாரணம். அவர் வந்த பின்னணி, அவர் வெளிப்படுத்திய அசாத்திய அறிவு, எந்த தலைமுறைக்குமே உத்வேகம் அளிக்கக்கூடியது தான். சமூக ஏற்றத்தாழ்வுகள் அவரைக் கட்டுப்படுத்தவில்லை. அவர் அது பற்றி பேசினாரா இல்லையா என்பது விஷயம் அல்ல. அவர் வாழ்க்கையே அப்படித்தான். தன் வாழ்க்கைக்கு பொறுப்பெடுத்து, அவர் எப்படிப்பட்ட பின்புலத்தில் இருந்து வந்திருந்தாலும், தடைகளை தகர்த்தெறிந்தார். ஆனால் ஒவ்வொரு மனிதரும் அவர் செய்ததை செய்வார் என்று எதிர்பார்ப்பது சரியல்ல. அவர்களுக்கு சில ஏற்பாடுகளை நாம் செய்துகொடுக்க வேண்டும். இது அவமானகரமான ஒரு விஷயம். இன்றும்கூட இதனால் நான் அவமானப்படுகிறேன். நாங்கள் பல்வேறு கிராமங்களில் களப்பணி ஆற்றினாலும், இந்தவொரு விஷயத்தை எங்களால் மாற்ற இயலவில்லை. நான் முயற்சிகள் செய்திருக்கிறேன், பார்த்திருக்கிறேன், பூசல்கள் மட்டுமே விளைந்திருக்கிறது. அதனால், தலித் சமூகத்திற்கு தேவை - கல்வி, கல்வி, கல்வி.
பொருளாதார வளம், கல்வி வளத்தினால் நிகழ வேண்டும். அவர்கள் அந்த சமூகத்தை விட்டு வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து வாழ வேண்டும், அப்போதுதான் மாற்றம் நடக்கும் அல்லது தலைமுறை மாற்றமாய் இருக்கும். இந்த தலைமுறையில் இந்த மாற்றம் நடக்க வேண்டும் என்றால், அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், தாழ்த்தப்படும் சூழ்நிலையிலிருந்து அவர்கள் அனைவரும் உயர் கல்வி கற்று அந்த கிராமங்களை சமூகங்களை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் உட்படுவது, பலவீனப்படுத்தக்கூடிய பாகுபாடு.
கேள்வியாளர்:
அம்பேத்கர் இதையும் சொன்னார்... அவர் தனிமனித வழிபாட்டினை கடுமையாக எதிர்த்தார், சத்குரு. ஒரு சிலரை மட்டுமே ஹீரோக்களாக வழிபட்டு, அவர்கள் காலடியில் அனைத்தையும் போடுவதன் மூலம் இந்தியா ஒரு பெரும் தவறை செய்கிறது என்றார். அந்த தவறை நாம் இன்றும் செய்துகொண்டுதான் இருக்கிறோம். யாரோ ஒரு நபர், நம் எல்லா கஷ்டங்களையும் தீர்ப்பார் என்று வெகுசுலபமாக நாம் அவரை வழிபட துவங்கிவிடுகிறோம்.
சத்குரு:
அம்பேத்கரை ஏன் வழிபடக்கூடாது?!
இந்த கலாச்சாரம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆன்மீகத்தில் தோய்ந்து இருந்தாலும், நம் வாழ்க்கை நம் கர்மா என்று எப்போதுமே நமக்கு சொல்லப்பட்டிருந்தாலும், அதாவது நம் வாழ்க்கை நம் கையில், அதையும் மீறி கடந்த சில நூற்றாண்டுகளில் நாம் கைவிடப்பட்டவர்களாய் ஆகிவிட்டோம். கிட்டத்தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேல் அடக்குமுறையின் கீழ் இருந்ததால் ஏற்பட்ட விளைவு என்று நான் சொல்வேன். யாரோ ஒருவரை உயர்வாக வைத்து வழிபடாமல் உயிர்வாழ முடியாது எனும் நிலை இருக்கிறது. இந்தியர்களின் மனநிலையில் இது ஆழமாக சென்றுவிட்டது.
ஒரு நல்ல தலைவர் வருகையில், தகுதியான தலைவர் வருகையில், திறமையான தலைவர் வருகையில், அவருக்கு தேவைப்படுவது, பல நிலைகளிலான தலைமைகள். அதற்கு பதிலாக அவருக்கு கிடைப்பது என்னவோ வழிபாடுதான். அந்த வழிபாட்டை வைத்து அவர் என்ன செய்யப் போகிறார்? துரதிருஷ்டவசமாக, அத்தனை நிலைகளில் நாம் தலைமைகளை உருவாக்குவதில்லை. ஏனெனில், அடக்குமுறைக்கு உட்பட்ட தேசம் எனும் மனநிலையிலிருந்து, குறிப்பாக நாம் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆக்கிரமிக்கப்பட்ட சூழலில் வாழ்ந்த பின், மெல்ல மக்கள் புரிந்துகொண்டார்கள். தலையைத் தூக்கினால் தலையை இழப்போம் என்று எதுவும் செய்யாமல், தானுண்டு என்றிருப்பதே சிறந்தது. உங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால், மேலே இருக்கும் யாரையாவது பற்றிக்கொள்ள வேண்டும். இந்த எண்ணம் நமக்குள் மிக ஆழமாக சென்றுவிட்டது. பல வழிகளில் இதனை எதிர்த்து அம்பேத்கர் போராடி இருக்கிறார். அதாவது, ஒரு தலைவரை, அரசியல் தலைவரை கடவுள் நிலைக்கு உயர்த்த வேண்டாம் என்று போராடி இருக்கிறார்.
அம்பேத்கரை பொறுத்தவரையில், அவரை நீங்கள் கடவுளாக வணங்கக்கூடாது. மாறாக, அவரது வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டும், இதுதான் இப்போதைய தேவை. அவரது வாழ்க்கையை பின்பற்றுவதை விடுத்து அவரையும் வழிபட துவங்கிவிட்டனர். இல்லை இல்லை, அவரது வாழ்க்கையை நீங்கள் பின்பற்ற வேண்டும். அதாவது, சமூகம் உங்களுக்கு எந்த தடை ஏற்படுத்தினாலும் சரி, உங்களை தடைசெய்ய இயலாதவாறு நீங்கள் இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கையை உங்கள் கைகளில் எடுக்க வேண்டும். இதைத்தான் நாம் செய்து காண்பிக்க வேண்டும்.