Education Quotes in Tamil: கல்வி பற்றிய சத்குருவின் வாசகங்கள்!
சத்குரு தனது கற்றலில் பள்ளிப்படிப்பு ஒருபோதும் குறுக்கிடாதவாறு பார்த்துக்கொண்டார். அவரது பல்வேறு கல்வி சார்ந்த முன்னெடுப்புகளும் ஊக்கப்படுத்துவதற்குத் தான் எப்போதும் முக்கியத்துவம் அளிக்கின்றன, கேள்வியின்றி சொல்வதை ஏற்றுக்கொள்ள வைக்கும் போதனைக்கு அல்ல. அது ஒருபோதும் தகவல்களை சேர்ப்பதைப் பற்றியதாக இருப்பதில்லை, உணர்ந்து உள்வாங்குவதை மேம்படுத்துவதாக இருக்கிறது. கல்வி குறித்து சத்குரு பகிர்ந்துள்ள ஒரு சில மேற்கோள்களைப் படித்து தெளிவுறுங்கள்.
ArticleOct 10, 2023
கல்வி குறித்த சத்குருவின் மேற்கோள்கள்!
நம் கல்வி முறை, பொருளாதார இயந்திரத்திற்கு அச்சாணிகளைப் போன்றவர்களை உற்பத்தி செய்வதைத் தாண்டி வளரவேண்டும்.
கல்வி பிழைப்புக்கான ஒரு கருவியாக மட்டுமே இருக்கவேண்டிய அவசியமில்லை, அது உணர்ந்து உள்வாங்குவதை மேம்படுத்துவதாக இருக்கவேண்டும். குழந்தைகள் மகத்தான மனிதர்களாக மலர்ந்திட வேண்டும்.
கல்வி என்பது ஒரு குழந்தையை கட்டற்ற புத்திசாலித்தனத்துடன் வளரச் செய்வதைப் பற்றியது. புத்திசாலித்தனம் என்பது கலாச்சாரம், மதம், கருத்தியல் அல்லது முன்முடிவுடன் அடையாளப்படாமலும் சிக்கிப்போகாமலும் இருக்கும்போது, அது இயல்பாகவே அவரின் உச்சபட்ச மலர்தலுக்கு வழிநடத்தும்.
கல்வி கற்பித்தல் ஒரு தொழிலாக இருக்கக்கூடாது - அது பேரார்வத்தினால் செய்வதாக இருக்கவேண்டும். அப்போதுதான் கல்வி என்பது தகவல்களைத் திணிப்பதிலிருந்து உண்மையின் தேடுதலுக்கு நகரமுடியும்.
Subscribe
Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
கல்வி என்பது குழந்தைகளை நீங்கள் விரும்பும் அச்சில் வார்ப்பதாக இருக்கக்கூடாது, அறிந்துகொள்ள வேண்டும் என்ற அவர்களது இயல்பான ஆர்வத்துக்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.
கல்வி என்பது வல்லமை அளிப்பதைப் பற்றியது, ஒரு மனிதரை உச்சபட்ச ஆற்றலுக்கு பண்படுத்துவதைப் பற்றியது - உயிரின் பிரம்மாண்டம் முழுநிறைவை அடையச் செய்வதற்கான கருவி அது.
கல்வி என்பது குழந்தையின் மனதை தகவல்களால் நிரப்புவதைப் பற்றியது அல்ல, அது குழந்தையை கத்தியின் கூர்மையை ஒத்த உள்வாங்கும் திறனுடனும், வாழ்வை அதன் முழு ஆழத்திலும் பரிமாணத்திலும் அறிந்துகொள்ளும் திறனுடனும் உருவாக்குவதைப் பற்றியது.
நீங்கள் பிறந்த நாள் முதலாக, அனைவருமே அவர்களது வாழ்க்கையில் வேலைசெய்யாத ஏதோவொன்றை உங்களுக்குக் கற்பிக்க முயற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.
உங்கள் திறமைதான் உங்களுக்கு எந்தவொரு கதவையும் திறந்துகொடுக்கும், உங்கள் கல்வித்தகுதி அல்ல.
கல்வி என்றால் ஏதோவொரு சான்றிதழைப் பெறுவது அல்ல, உங்களை நீங்களே மேம்படுத்திக் கொள்வது.
கல்வி என்பது உங்கள் எல்லைகளை விரிவுபடுத்துவதாக, வாழ்க்கையைப் பரந்த பார்வையுடன் பார்க்க வைப்பதாக இருக்கவேண்டும்.
கல்வியின் கவனம், ஒடுக்கும் தன்மையுடைய தகவல்களின் மீது இருக்கக்கூடாது, அறிவுக்கான தாகத்தைத் தூண்டுவதன் மீது இருக்கவேண்டும்.
கல்விக்கு ஊக்கம் தேவை, வெறும் தகவல்கள் அல்ல. ஊக்கம் நிறைந்த மனிதர்களால்தான் தங்கள் வாழ்வையும் சுற்றியுள்ளவர்களது வாழ்வையும் மாற்றமடையச் செய்யமுடியும்.
நவீன கல்வி முற்றிலும் தகவல்மயமானது - அது ஊக்கப்படுத்துவதாக இல்லை. ஊக்கப்படுத்தாவிட்டால் எந்தவொரு மனிதரும் தான் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையின் எல்லைகளைக் கடந்து உயருவதில்லை.