மண் காப்பதற்கும், மனித நேயத்திற்கும் என்ன சம்பந்தம்?
மண்ணிலிருந்து பெறப்படும் பென்சிலின் போன்ற ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகளின் முக்கியத்துவம் பற்றிக் கூறி, கதறும் மண்ணின் கூக்குரலுக்கு செவிசாய்க்காமல் கடந்து சென்றால், நம் ஆன்மீகமே கேள்விக்குறி ஆகிவிடும் என்பதை சத்குரு பேசுகிறார்.
சத்குரு: மண் உங்களுக்கு உணவை மட்டும் கொடுக்கவில்லை. மண்தான் உங்கள் உடலாக இருக்கிறது, மண்தான் இந்த துணியாக இருக்கிறது. மண்தான் இங்கே இருக்கின்ற எல்லாமாகவும் இருக்கிறது, இல்லையா?
எதிலும், எல்லாவற்றிலும்!
மண்ணிலிருந்து பெறப்படும் ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் (Antibiotics in Tamil)
இந்த அழுக்கான மண் உங்கள் மருந்தாகவும் இருக்கிறது. பென்சிலின் என்று நாம் அழைக்கின்ற முதல் ஆன்ட்டிபயாட்டிக் மண் பூஞ்சையில் இருந்துதான் வருகிறது.
பென்சிலின் சுமார் 50 வருடங்களில், 20 கோடிக்கும் அதிகமான மனித உயிர்களை காப்பாற்றி இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. இது மண்ணில் இருந்து வந்தது.
ஸ்ட்ரெப்டோமைசின் - இது இல்லையென்றால், லட்சக்கணக்கானவர்கள் காசநோயால் இறந்திருப்பார்கள்.
என்னுடைய பாட்டி, என் தந்தையுடைய அம்மா 22 வயதில் இறந்துவிட்டார். அப்போது என் தந்தைக்கு நான்கு வயதுதான் இருக்கும். அவருக்கு காசநோய் வந்துவிட்டது. செல்வ செழிப்பான குடும்பம், ஆனால் நோய்க்கு சிகிச்சை இல்லை.
அதனால் மலை உச்சியில் அவருக்கு ஒரு சிறிய வீடு கட்டினார்கள். ஏனென்றால், மலை உச்சியில் வாழ்ந்தால், சுத்தமான காற்றை சுவாசித்தால், உடல் நலம் சரியாகும் என்ற நம்பிக்கை இருந்தது. அங்கே அவரை இருக்க வைத்தார்கள். அவர் உடல்நலம் மோசமாகிக்கொண்டே போனது. எட்டு மாத காலத்தில் அவர் இறந்துவிட்டார்.
முந்தைய தலைமுறையில் இது சாதாரணமாக நடக்கும் விஷயம். இந்த பென்சிலின் மற்றும் ஸ்ட்ரெப்டோமைசின் சேர்ந்து ஒரு தலைமுறையில் சுமார் 40ல் இருந்து 50 கோடி உயிர்களைக் காப்பாற்றி இருக்கும்.
இது எல்லாம் மண்ணில் இருந்து தான் வந்தது. இன்னும் வேறு எத்தனையோ விஷயங்கள் இப்படி இருக்கிறது. ஏன் இப்படி தனித்தனியாக பிரித்துச் சொல்லவேண்டும்?
உயிர் என்று உங்களுக்கு தெரிந்த எல்லாமே, நீங்கள் பயன்படுத்துகின்ற பொருளாக இருக்கும் எல்லாமே மண்தான்.
வலியால் கதறும் நிலம்
நாம் மண்ணை கவனிக்கவில்லை என்றால், அது நம்மை கைவிடக்கூடிய நேரம் வந்துவிட்டது. இனியும் மண்ணைக் கைவிடக்கூடிய கால அவகாசம் நமக்கு இல்லை.
இந்த நிலையை சரிசெய்ய நாம் தீவிரமான முயற்சியை எடுக்கவில்லை என்றால், அது நிச்சயம் நம்மை கண்டிப்பாக கைவிட்டுவிடும்.
யோகா என்றால், ஆன்மீகம் என்றால், இதுதான் அர்த்தம். உங்கள் வாழ்க்கை அனுபவம் உங்கள் உடல் எல்லைக்குள் மட்டுமே அடங்கியிருக்கவில்லை.
அப்படி இருந்தால், ஒவ்வொரு மனிதருக்கும் அப்படி இருந்தால், இந்த நிலம் கதறி கூக்குரலிடும் சத்தத்தை நீங்கள் எப்படி கேட்காமல் தவறவிட முடியும்?
இந்த நிலம் கதறுகிறது!
Subscribe
நான் காடுகளில் மணிக்கணக்கிலும், நாள் கணக்கிலும், சும்மா உயிரோடு மட்டும் இல்லாமல் உயிர்த்தன்மையால் எனக்குள் உச்சநிலையில், போதைநிலையில் அமர்ந்திருக்கிறேன்.
ஏனென்றால் உயிரே மிகுந்த உயிர்ப்போடு நடக்கிறது. பெரும்பாலான உயிர்களை நீங்கள் பார்ப்பதில்லை. ஆனால் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நீங்கள் நடந்து பார்த்தீர்கள் என்றால், நிலம் வலியால் கதறுகிறது.
இதை நீங்கள் உங்கள் மனதில் கற்பனை செய்வது இல்லை. உயிரே கதறுகிறது!
கதறல் சத்தம் ஏன் கேட்கவில்லை?
பெரிய விலங்குகளை வெட்டுகின்ற கசாப்பு கடைக்காரர்களுக்கு, விலங்குகளுடைய அலறல் சத்தம் கேட்பதில்லை.
பிற மனிதர்களை கொல்கின்ற நிறைய மக்கள் இருக்கிறார்கள். அந்த மக்களுடைய கதறலும் வலியும் இவர்களுக்கு கேட்பதில்லை. பலாத்காரம் செய்பவர்களுக்கும், கொலை செய்பவர்களுக்கும் கதறல் சத்தம் கேட்டது என்று நினைக்கிறீர்களா?
அந்த சத்தம் உள்ளே போகவில்லை. அவர்கள் காதுகளுக்கு கேட்டிருக்கலாம், ஆனால் உள்ளே போகவில்லை. மிருகங்களை வெட்டுகின்ற கசாப்பு கடைக்காரர்களுக்கு, விலங்குகளின் கதறல் கேட்பதில்லை. மரங்களையும் மற்ற உயிர்களையும் வெட்டுகின்ற ஒருவருக்கு அது கேட்பதில்லை.
அதே மாதிரி கண்ணுக்குத் தெரியாத உயிர்களை அழிப்பதில் மும்முரமாக இருப்பவர்களுக்கு அது போடும் சத்தம் கேட்பதில்லை.
அதனால் அது இல்லை என்று அர்த்தமில்லை.
இப்போது நாம் ஒரு முக்கியமான தருணத்தில் இருக்கிறோம். அடுத்த 10-15 வருடங்களில் நாம் சில விஷயங்களை சரியாக செய்தால், குறிப்பிடத்தக்க மாற்றம் நடப்பதைப் பார்க்கும் திருப்தி கிடைக்கும்.
பட்டாசு வெடிப்பது போல ஆரவாரமாக இல்லை,
நீங்கள் இதை புரிந்துகொள்ள வேண்டும், பெரிய நிகழ்வுகள் நடந்தபோதும் அது அமைதியாக நடக்கும், மிகவும் அமைதியாக நடக்கும்.
அந்த நான்காவது நபராக இருக்காதீர்கள்
இந்திய சுதந்திரப் போராட்டத்தை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். மிக மோசமாக நாட்டையும் மக்களையும் சுரண்டி அடக்கி ஆண்டார்கள். மக்களை நாய்களைப் போல நடத்தினார்கள்,
இந்தியா முழுவதும் “இந்தியர்களுக்கும் நாய்களுக்கும் அனுமதி இல்லை” என்று பலகைகள் வைத்திருந்தார்கள்.
பெரும்பாலான இடங்களில்…! உணவகங்கள், clubகள் இப்படி முக்கிய இடங்களில் வைத்திருந்தார்கள்.
அதோடு, நீங்கள் எந்த அலுவலகத்திற்கு சென்றாலும், நீங்கள் யாராக இருந்தாலும் சரி, செல்வந்தராக இருக்கலாம், படித்தவராக இருக்கலாம், ஆனால் நீங்கள் ஒரு நாற்காலியில் உட்கார வேண்டும் என்றால், அரசாங்கத்திடம் இருந்து அதற்கு அனுமதி வேண்டும்.
அது இல்லையென்றால் நீங்கள் தரையில் தான் உட்கார வேண்டும். உங்களிடம் அனுமதி இருக்க வேண்டும், அச்சிடப்பட்ட அனுமதி!
இல்லையென்றால் நீங்கள் நாற்காலியில் உட்கார முடியாது.
அவர்கள் உங்களை அவ்வளவு மோசமாக நடத்தியபோதும், தோராயமாக 20 சதவிகித மக்கள்தான் சுதந்திரத்திற்காகப் போராடினார்கள். மற்ற 80 சதவிகித மக்கள் எப்படியும் யாரோ சண்டை போடுகிறார்கள் என்று இருந்தார்கள். நீங்கள் அந்த 80 சதவீதமாக இருக்கப்போகிறீர்களா என்று கேட்கிறேன்.
சில விஷயங்களை செய்ய வேண்டி இருக்கும்போது, நீங்கள் எழுந்து நின்று அதற்கானதை செய்ய வேண்டும். கன்னடத்தில் இந்த அர்த்தத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. யாராவது இறந்துவிட்டார்கள் என்றால், பிணத்தை எடுத்துக்கொண்டு போகவேண்டும். இந்தியாவில் எப்போதும் பிணத்தை தூக்க நான்கு பேர் வேண்டும். அது ஒரு மரியாதை!
குறைந்தது நான்கு பேராவது தூக்க வேண்டும். நான்கு பேர் சுமந்துகொண்டு போகும்போது, அதில் ஒரு ஆள் எடையைத் தாங்காமல் இருப்பார்,
அவர் சும்மா வெறுமனே போவார். நீங்கள் அந்த நபரா? தயவுசெய்து நீங்கள் அந்த ஆளாக இருக்காதீர்கள். அப்படி இருந்தால் நிறைவில்லாத வாழ்க்கையை வாழ்ந்து இறப்பீர்கள்.
கூடுதல் எடை கடினமாக இருந்தாலும் சரி, அதுதான் நிறைவளிப்பதாக இருக்கும். நீங்கள் உங்கள் பொறுப்புகளில் இருந்து தப்பிக்கின்ற ஆளாக இருக்காதீர்கள். ஒரு தலைமுறை மக்களாக நாம் அப்படி இருக்கக்கூடாது. அப்போதுதான் நாம் வாழ விரும்புகிற மாதிரியான உலகம் நமக்கு கிடைக்கும். இல்லையென்றால், பலவித கொடுங்கோலர்களால் உருவாக்கப்படுகிற உலகத்தில் நாம் வாழ்வோம்.
கொடுங்கோலர்கள் எங்கெல்லாம் இருக்கலாம்…?
அடால்ஃப் ஹிட்லர், முசோலினி இப்படி யார் யாரோ தான் கொடுங்கோலர்கள் என்று நினைக்காதீர்கள். கொடுங்கோலர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அது தொழில் வடிவில் வரலாம், ஒரு அரசியல் தலைவர் வடிவத்தில் வரலாம், அது உங்கள் வடிவிலேகூட வரலாம்.
யாருக்குத் தெரியும்?
கொடுங்கோன்மை என்றால், உங்கள் உயிரைத் தவிர, வேறு எந்த உயிரைப் பற்றியும் உங்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தம். அதுதானே கொடுங்கோன்மை?
கொடுங்கோன்மை என்றால், நீங்கள் ஒரு நாட்டுடைய சர்வாதிகாரியாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சர்வாதிகாரியாக இருப்பதற்கான திறமை உங்களில் பெரும்பாலானவர்களுக்கு இல்லை என்று நினைக்கிறேன்.
அது எளிதில்லை!
மண் காப்போம் இயக்கம் எத்தகைய வாய்ப்பு?
நீங்கள் இந்த 100 நாட்களுக்கு மட்டும் ஏதாவது செய்து, இந்த இயக்கத்தை நடத்துவதை நான் விரும்பவில்லை. நான் கேட்பது அதுவல்ல. உங்களை, கூர்மையான உணர்திறனுடைய உயிராக மாறுங்கள் என்று கேட்கிறேன்.
ஏனென்றால் உணர்திறன் இல்லாமல் உயிர் இல்லை, அவ்வளவுதான். ஆனால் மனிதராக இருப்பது என்றால், பல சாத்தியங்கள் இருக்கிறது என்று அர்த்தம். மிக உயர்ந்த உணர்திறனை நீங்கள் வெளிப்படுத்தவில்லை என்றால், உங்கள் மனிதத்தன்மையே கேள்விக்குறி ஆகிவிடும்.
இது மண் காப்போம் இயக்கத்தைப் பற்றியது இல்லை. உங்கள் மனிதத்தன்மையே கேள்விக்குறி ஆகும்போது, உங்கள் ஆன்மீகம் நிச்சயமாக பெரிய கேள்விக்குறி ஆகிவிடும். ஏனென்றால், நீங்கள் எதையும் உணர்ந்துகொள்ளவில்லை என்றால், ஆன்மீகம், யோகா எப்படி வேலை செய்யும்.
நான் மற்றும் என்னுடையதை மட்டும் தான் என்னால் உணரமுடிகின்றது என்றால் இதன் அர்த்தம் என்ன?
ஒருவருடைய எல்லைகள் உறுதியாக இருக்கிறது, இல்லையா? ஒருவருடைய எல்லைகள் கான்கிரீட் மாதிரி இறுகி இருக்கிறது, அதைத் தாண்டி அவருக்கு எதுவும் இல்லை.
நீங்கள் அப்படி ஆகிவிடாதீர்கள்!
நீங்கள் இப்போது இருக்கும் நிலையைவிட கொஞ்சம் அதிக விழிப்புணர்வாக ஆவதற்கு, இது ஒரு மகத்தான வாய்ப்பு.