அரிஸ்டாட்டிலின் தவறை உணர்த்திய ஞானி! (Aristotle in Tamil)
அரிஸ்டாட்டில் எனும் கிரேக்க தத்துவஞானியின் பெயர் நம்மில் பலருக்கும் பரிட்சயம் தான். ஆனாலும், தத்துவஞானிகள் ஏன் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்கிறார்கள்? அவர்களால் வாழ்க்கைக்கான சிறந்த வழிகாட்டியாக இருக்க முடிவதில்லையே என்ற கேள்வி உங்களுக்கு இருந்தால், சத்குரு இந்த பதிவில் அதற்கான விடையை அளிக்கிறார். கூடவே அரிஸ்டாட்டிலின் தவறை உணர்த்திய ஒரு மகத்தான ஞானியைப் பற்றியும் அறிந்துகொள்ளுங்கள்.
உள்நிலையின் பேரானந்தம் உலகிற்குப் புரியவில்லை, உரக்கக் கத்தினார்
உடல் தாண்டிப் பறந்திடவோ இவருக்கு இயலவில்லை, துள்ளிக் குதித்தார்
உயிர்த் துடிப்பு அடங்கவில்லை இன்பநிலை தாங்கவும் முடியவில்லை
பைத்தியம் என்றனரே ஞானியை இழந்தனரே!
பரந்து விரிந்த வானம், பிரம்மாண்டமான சமுத்திரம், சூரியன் அஸ்தமிக்கும் நேரம். சூரியக் கதிர்கள் வானத்தில் ஒளிச்சிதறல்களால் கோலமிட்டது. அந்த அற்புதக்காட்சியை ரசித்திட மனமில்லாமல், ஏதோ ஒரு பிரச்சனையைப் பற்றி மிகவும் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். அது என்ன பிரச்சனை? அவர் வாழ்க்கைதான் அவருக்குப் பிரச்சனை. ஆம், அவரது வாழ்க்கைதான் அவரது பிரச்சனை. மாபெரும் தத்துவ ஞானி அரிஸ்டாட்டில்தான் அவர்.
சிந்தனை செய்தவாறு நடந்த அரிஸ்டாட்டில்
தத்துவ ஞானிகளுக்கு இதுதான் பிரச்சனை. அவர்கள் வாழ்க்கை என்பதை ஒரு பிரச்சனையாகப் பார்ப்பார்கள். பிறகு அந்தப் பிரச்சனையை அவர்கள் தீர்ப்பதாக நினைத்துக் கொள்வார்கள்.
வாழ்க்கையைப் பற்றியும் உயிர்களைப் பற்றியும் மிக ஆழமாகச் சிந்தித்துக்கொண்டே அவர் நடந்து வந்தார். மிக அழகான ஒன்று கண்ணெதிரில் நிகழ்வதுகூட அவருக்குத் தெரியவில்லை. அதே கடற்கரையில் இன்னொரு மனிதர் இருந்தார். மிகவும் தீவிரமாக கடற்கரையில் ஏதோ செய்து கொண்டிருந்தார்.
Subscribe
அரிஸ்டாட்டில் நேரமில்லாத மனிதர். அவர் எதிரில் வந்து நிற்கும் மனிதர்களைக் கூட கண்ணெடுத்துப் பார்ப்பதற்கு நேரமில்லாமல் எதையோ சிந்தனை செய்தவாறே இருப்பார். நீங்கள் அதிகமாக சிந்தனை செய்ய ஆரம்பித்துவிட்டால் எதிரில் வரும் உயிர், உங்கள் கண்களுக்குத் தெரியாது.
அப்படித்தான் அன்று அரிஸ்டாட்டிலும் இருந்தார். ஆனால், அருகில் இருக்கும் மனிதர் மிகவும் தீவிரமாக ஏதோ செய்து கொண்டிருந்தார். அரிஸ்டாட்டிலால் கூட அதனைக் கவனிக்காமல் இருக்க இயலவில்லை. இவர் என்ன செய்கிறார் என அரிஸ்டாட்டிலால் புரிந்துகொள்ள இயலவில்லை. வேக வேகமாக கடலுக்குள் ஓடிச் சென்று ஏதோ செய்துவிட்டு மீண்டும் திரும்பி வந்தார். மீண்டும் கடலை நோக்கி ஓடிச் சென்றார். அரிஸ்டாட்டில், “ஏய், நீ என்ன செய்கிறாய்?” என்றார்.
தவறை உணர்த்திய ஞானி
அதற்கு, “நான் மிக மிக முக்கியமான வேலை ஒன்றைச் செய்து கொண்டிருக்கிறேன். என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்” என்றார் அவர். தற்போது அரிஸ்டாட்டிலுக்கு அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் கூடியது. மீண்டும் அந்த மனிதரை நிறுத்தி, “என்ன செய்கிறாய் என்பதைத் தெளிவாகச் சொல்” என்றார். ‘‘நான் கடற்கரையில் ஒரு சிறு பள்ளம் தோண்டியிருக்கிறேன். இந்த கடலைக் காலி செய்து அந்தப் பள்ளத்திற்குள் நிரப்பிக் கொண்டிருக்கிறேன்” என்றார். அவர் தன் கையில் ஒரு தேக்கரண்டி மட்டுமே வைத்திருந்தார். பெரிய வாளிகூட கைவசம் இல்லை!
அரிஸ்டாட்டிலுக்குச் சிரிப்பு வந்துவிட்டது. அரிஸ்டாட்டிலைப் போன்ற மனிதர்கள் சிரிப்பது மிக மிக அபூர்வம். சிந்தனை செய்திடும் மனிதர்கள் சிரித்திடக் கூடாது. அவர்கள் அனைவருக்கும் நீளமான, சோகமான முகமே இருக்கும். அவர்களிடமிருந்து சிரிப்பு என்பது போய்விடும். ஆனால், அன்று அரிஸ்டாட்டிலே சிரித்துவிட்டார். “இந்தச் சிறிய பள்ளத்திற்குள் கடலை காலி செய்து நிரப்புவதா? அதுவும் ஒரு தேக்கரண்டியை வைத்துக் கொண்டு?! நீ கிறுக்கனாகத்தான் இருக்க வேண்டும்! இதனை முதலில் நிறுத்து. எப்படி ஒரு சிறிய பள்ளத்திற்குள் இந்தக் கடலை காலி செய்து நிரப்புவாய்? அதுவும் இந்த தேக்கரண்டியைக் கொண்டு! இந்த வேலையை விட்டுவிடு. இதனால், எந்தப் பயனும் இல்லை” என்றார்.
உடனே அவர் அந்தத் தேக்கரண்டியைக் கீழே விசிறி எறிந்தார். “சரி; எனது வேலை முடிந்து விட்டது” எனக் கூறி அங்கிருந்து புறப்பட்டார். அரிஸ்டாட்டில், “உனது வேலை முடிந்ததா? இந்தக் கடல் இன்னும் இங்குதானே இருக்கிறது. அந்தச் சிறிய பள்ளம்கூட இன்னும் நிறையவில்லையே!” என்றார்.
உடனே அந்த மனிதர். “இங்கே பார்! இந்தக் கடலை காலி செய்து இந்தப் பள்ளத்தினை நிரப்ப நான் தேக்கரண்டியைப் பயன்படுத்துகிறேன். நீ இதை பைத்தியக்காரத்தனம் என்று கூறுகிறாய். நான் ஒரு பைத்தியம் என்று ஏசுகிறாய். ஆனால், நீ இந்த பிரபஞ்சத்தை காலி செய்யப் பார்க்கிறாய்! அதில் கோடிக்கணக்கான கடல்கள் இருக்கின்றன. அதுவும் உன் தலை என்கிற சிறிய பள்ளத்தில் நிறைத்திடப் பார்க்கிறாய். அதுவும் எதைக் கொண்டு? தேக்கரண்டியைப் போன்ற உன் எண்ணங்களைக் கொண்டு, இதுதான் பைத்தியக்காரத்தனம். இதை முதலில் விட்டுவிடு!” எனக் கூறி அவர் அங்கிருந்து சென்றார்.
இவர்தான் ஹிராக்ளிடஸ்.
ஹிராக்ளிடஸை தவறவிட்ட மேற்கத்திய சமூகம்
கிரேக்க நாட்டில் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஞானி. யோகமும் ஞானமும் பாரத தேசத்தில் பெருமளவு வளர்ந்திருந்தாலும், பிற தேசங்களிலும் ஆங்காங்கே உண்மையை உணர்ந்த மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள். அவர்கள் எங்கு பிறந்து எங்கு வளர்ந்திருந்தாலும் உண்மையை உணர்ந்த மனிதர்கள் அனைவரும் பேசும் மொழி ஒன்றே.
அவருக்கு முன் தோன்றிய கிரேக்க தத்துவ ஞானிகளிடமிருந்தும் அவருடன் சமகாலத்தில் வாழ்ந்த ஞானிகளிடம் இருந்தும் இவர் பெரிதும் வேறுபட்டிருந்தார். அந்த வேறுபாட்டினை ஏற்க இயலா மக்கள் இவரை பைத்தியம் என அழைத்தனர்.
திடீரென நடனமாடுவார், கத்துவார். ஒரு காரணமும் இன்றிக் குதிப்பார். எப்போதும் ஒருவித பேரானந்த நிலையில் இருப்பார். அவரது இருப்பு மிக மிகப் பெரிது. அதனால், அவருக்கு அவரது உடல் கொள்ளாது. அதனால் கத்துவார், குதிப்பார். வானில் பறக்க முயற்சி செய்வார். அதனால், மக்கள் அவரை பைத்தியம் என்று நினைத்தனர்.
மேற்கத்திய சமூகம் அரிஸ்டாட்டிலைத்தான் தேர்வு செய்தது. அவர்கள் ஹிராக்ளிடஸைத் தேர்வு செய்திருந்தால் அங்கே வாழ்வு மிக வித்தியாசமாக இருந்திருக்கும். துரதிர்ஷ்டவசமாக கல்வி என்ற பெயரில் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்கள் அரிஸ்டாட்டிலைத் தேர்ந்தெடுத்தனர். அவர்கள் வாழ்வை விட்டு மேலும் மேலும் மிக மிகத் தூரமாக சென்றுவிட்டனர். அவர்கள் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் உறுதியற்றவராகினர்.
சிந்தனையில் சிக்குவதால் நிகழும் அபத்தம்
எவ்வளவுக்கெவ்வளவு நீங்கள் சிந்திக்கும் மனிதர்கள் ஆகிறீர்களோ, அந்த அளவிற்கு வாழ்விலிருந்து விலகிச் செல்கிறீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக உங்களது மனிதத் தன்மை உங்களிடமிருந்து மறைந்து விடுகிறது. உங்களிடம் நீங்கள் இப்படி ஒரு பரிசோதனையைச் செய்து பாருங்கள். இது தத்துவம் அல்ல.
நீங்கள் இங்கே இருந்தால், நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால், நீங்கள் சிரித்துக் கொண்டிருந்தால், அன்பாக இருந்தால் நீங்கள் வாழ்வுடன் இயைந்திருக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் சிந்தனை செய்திடும் மனிதராக இருந்தால் வாழ்விலிருந்து மிகத் தொலைவில் இருக்கிறீர்கள் என்று பொருள். நீங்கள் வாழ்க்கையை வாழ்ந்திடாமல் வாழ்வைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தால் வாழ்வு வெறுமனே வீணாகிப் போய்விடும். வாழ்வு உங்களைத் தாண்டிப் போய்விடும். உங்கள் வாழ்வு உங்களைத் தாண்டிப் போக வேண்டுமா அல்லது அதனுடன் நீங்கள் ஈடுபாடாக இருக்க வேண்டுமா? இதனை ஒருவர் தேர்ந்தெடுக்க வேண்டும். அதனால், வாழ்வைப் பற்றிச் சிந்திப்பதை நிறுத்திவிட்டு வாழத் துவங்குங்கள்!
குறிப்பு:
இந்தக் கட்டுரை சத்குருவின் "யோகாவும் யோகிகளும்" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தை வாங்குவதற்கு இங்கே க்ளிக் செய்யுங்கள்!