கேள்வி: 

நமஸ்காரம் சத்குரு, என் பெயர் ஹர்ஷ். நான் ஆக்ராவிலிருந்து வருகிறேன். இந்த ராமர் ஜன்ம பூமி தகராறு முடிவுக்கு வர ஏறக்குறைய மூன்று தசாப்தங்களாகிவிட்டது. ராமர் கோவிலின் பூமி பூஜை சில நாட்களில் நடைபெற இருக்கும் இந்த வேளையில், அயோத்தியில் பெரும் பரபரப்பாக இருக்கிறது. ராமர் ஒரு அரசராக இருந்தபோதிலும், அவர் ஏன் இன்றும் வணங்கப்படுகிறார்? இன்றைய காலத்தில் ராமர் எத்தகைய முக்கியத்துவம் கொள்கிறார் என்று நான் அறிய விரும்புகிறேன்.

சத்குரு: இவர் ஆக்ராவிலிருந்து வருவதால், இவர் ராம் என்று அழைக்கிறார். நாங்கள் எங்கிருந்து வருகிறோமோ அவ்விடத்தில் அவரை நாங்கள் ராமா என்று அழைக்கிறோம். அந்த ‘அ’ என்ற எழுத்தை நாங்கள் விடமாட்டோம். நான் தென்னிந்தியன் என்பதை சிலர் மறக்கக்கூடும், ஏனென்றால் என் பெயரைப் பார்த்து என்னை பஞ்சாப்பைச் சேர்ந்தவராக சிலர் நினைக்கின்றனர். என் பெயரையும் என் தாடியையும் முடியையும் பார்த்து அவர்கள் என்னை பஞ்சாபி என்று நினைக்கின்றனர். இல்லை இல்லை, நாம் அவரை ராமா என்று அழைக்கிறோம், நான் இன்னும் கீழே தமிழ்நாட்டுக்குச் சென்று அவரை ராமன் என்று அழைத்தால் மக்கள் குழப்பமடைவார்கள். அவர்கள் நான் வேறு யாரையோ பற்றிப் பேசுவதாக எண்ணுவார்கள். இந்த கலாச்சாரத்தின் அழகே இதுதான், ஒரே கடவுள் என்பது இங்கே இல்லை.

நீண்டகாலமாக சமூகத்தில் ஆறாத புண்ணைப்போல தேவையில்லாமல் தொடரும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில், இது ஒரு மைல்கல் என்று நான் நினைக்கிறேன்.

நாம் தெய்வீகம் என்று அடையாளம் காணும் குணங்கள் உள்ளன. ஒரு மனிதர் இந்த குணத்தை வெளிப்படுத்தினால், நாம் அவருக்குத் தலை வணங்குகிறோம், ஏனென்றால் நாம் தலை வணங்குவது அந்த தன்மைக்கு. அந்த மனிதருக்கு அல்ல. இதை உலகின் அனேக பகுதியினர் புரிந்து கொள்ளமாட்டார்கள், ஏனென்றால் மிகவும் கொள்கைப் பிடிவாதமான மதங்கள் அவர்கள் மனதில் ஏற்றப்பட்டுள்ளது. எது கடவுள், எது பிசாசு, எது ஆண், எது பெண் - எல்லாமே தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எதுவுமே வரையறுக்கப்படுவதில்லை. ஏனென்றால், நான் உங்களிடம் மசாலா என்று சொன்னது போல, எல்லாமே பரிணமித்துக் கொண்டே இருக்கிறது, எப்போதும் ஏதோவொன்று நடந்துகொண்டிருக்கின்றது. உங்களை ஒருங்கிணைப்பில்லாமல் வைத்திருக்கும்போதும் ஒரே திசையில் பயணிப்பதற்கு, அதிகமான உயிரும் சக்தியும் செலவாகிறது. ஆனால் இது ஸ்டார்லிங்க் பறவைகளின் கூட்டம் அல்லது தேனீக்களின் கூட்டத்தைப் போன்றது. அவை எங்கும் செல்லாதது போல் தோன்றும், ஆனால் எப்போதும் ஏதோவொரு திசையில் சென்று கொண்டிருக்கும். அவை செல்லுமிடம் அவைகளுக்குத் தெரியும். ஆனால் வெளியிலிருந்து பார்ப்பவருக்கு அவை எங்கும் செல்லாதது போல் தோன்றும். அதனால் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும், ராம் அல்லது ராமா , அயோத்தியைச் சேர்ந்தவர், அது அவருடைய பிறப்பிடமாகையால் அங்கு கோவில் கட்டுமானப் பணி நடைபெறுகிறது.

இக்கோவில் சில ஆயிரம் வருடங்கள் பழமையானது. முதல் கோவில் எப்போது தோன்றியது என்று எவருக்கும் சரியாகத் தெரியாது. பிறகு வளர்ச்சிப் பணிகள் நடந்தன. பல்லாயிரம் ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றன. ஆனால் தோராயமாக ஐந்நூறு வருடங்களுக்கு முன்பு இடித்துத் தள்ளப்பட்டது. படிப்படியாக பல கோவில்கள் இடிக்கப்பட்டன, அதன்மேல் பிற மதங்களுக்கான கட்டமைப்புகள் எழுப்பப்பட்டன. அதே கட்டுமானப் பொருட்களைக் கொண்டு கட்டப்பட்டன. அவை தகர்க்கப்பட்டு அதே பொருட்களைக் கொண்டு வேறு கட்டமைப்புகள் கட்டப்பட்டன.

மரியாதைப்புருஷன், புருஷோத்தமன்

ராமன், Ram, Rama

அதனால், ராமா ஒரு சின்னமாக இருப்பதால், அவர் கடவுளல்ல, அவர் ஒரு சின்னம் என்று நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும், ஏனென்றால் நாம் அவரை கடவுள் என்று அழைக்கவில்லை. நாம் அவரை மரியாதைப்புருஷன், புருஷோத்தமன் என்று அழைத்தோம். அப்படியென்றால் ஒரு உயர்ந்த மனிதன். புருஷோத்தமன் என்ற வார்த்தைக்கு அர்த்தமே மனிதர்களின் உத்தமன் என்பதுதான். ராமா எப்போதும் புருஷோத்தமனாகவே குறிக்கப்படுகிறார். அப்படியென்றால் அவர் அவர்களுக்கும் மேலானவர், ஏனென்றால் அவர் அந்த அளவு உயர்ந்த மனிதர். அந்த அளவு அவரை உயர்ந்தவராக்குவது எது?

அவர் பல சோதனைகளையும் இன்னல்களையும் எதிர்கொண்டார் - நான் அதைப் பற்றி இப்போது விளக்கமாகச் சொல்லப்போவதில்லை, ஆனால் தொடர்ந்து பெரும் இன்னல்கள். அவர் வாழ்க்கையே தொடர்ந்து நிகழ்ந்த சோகங்களாக இருந்தது. அவர் தன் ராஜ்ஜியத்தை இழந்தார், மனைவியை இழந்தார், ஒரு போர் செய்ய வேண்டியிருந்தது, பிறகு திரும்பி வருகிறார், மறுபடியும் மனைவியை இழக்கிறார், மகன்களை இழக்கிறார், தன் மகன்களையே கொன்றிருப்பார், கணக்கிலடங்கா பிரச்சனைகள். இவை அனைத்தையும் அமைதியாக, ஆனந்தமாக எதிர்கொண்டார். வலி இருந்தும் ஆனந்தமாக எதிர்கொண்டார். ஒரு நிலையில், தனிப்பட்ட அளவில், அவருக்கு அதிக வலி இருந்தது, அதை அவர் வெளிப்படுத்துகிறார். ஆனால் அவர் என்ன செய்கிறார் என்பதை அந்த வலி நிர்ணயிக்க அவர் அனுமதிக்கவில்லை. ஒரு மனிதன் இப்படி நடந்துகொண்டால் நாம் அவரை புருஷோத்தமா என்கிறோம். உத்தமர் என்றால் மனிதருள் உயர்ந்தவர். அவர் ஒரு மனிதன் என்பது மிகவும் முக்கியமானது. அவர் அயோத்தியில் பிறந்தார், ஒரு குறிப்பிட்ட வயதில் இறந்தார், இவை அனைத்தையும் வாழ்வில் சந்தித்தார். இந்திய நிலப்பரப்பில் பயணித்து தெற்கே வந்து மீண்டும் வடக்கிற்குத் திரும்பினார். அவனது எதிரி, அவனது மனைவியைக் கடத்திக்கொண்டு சென்றதோடு, பிறர் நலனை கவனத்தில் கொள்ளாது தன் இச்சைப்படி வாழ்ந்து ஆட்சிசெய்தவன். அந்த எதிரியை கொன்ற பின், திரும்பி வந்து அதற்கு பிராயச்சித்தமாக ஒரு வருடம் தவம் செய்கிறார். 

 ராமன் இராவணனை வதம் செய்தல்

அதனால் அவரின் சகோதரன் கேட்கிறார். "நீங்கள் என்ன பைத்தியமா? அவன் மிகக் கொடியவன். அவனை நீங்கள் கொன்றாக வேண்டிய சூழ்நிலை. இப்போது அதற்கு பிராயச்சித்தம் செய்ய விரும்புகிறீர்களே. இதற்கு என்ன அர்த்தம்? நாம் அனைவரும் தவறு செய்துவிட்டோமா?" அதற்கு ராமர் சொன்னார், "இந்த ராவணனைப் பற்றிப் பல எதிர்மறையான விஷயங்கள் உள்ளன, ஆனால் அவர் ஒரு சிறந்த பக்தர். மேலும் தனது ராஜ்ஜியத்தை சிறப்பாக நிர்வாகம் செய்தவர். அவன் மற்றவர்கள் அனைவரையும் வஞ்சித்ததால் அவனைக் கொல்ல நேர்ந்தது. ஆனால் அவன் ஒரு சிறந்த பக்தன். ஒரு பக்தனை கொன்றதற்காக நான் வருந்துகிறேன்."

இந்த மனிதரின் உதாரணம் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று. மேலும் அவர் ஒரு மனிதராக இருப்பது மிகவும் முக்கியமானது. அவர் ஒரு கடவுளாகிவிட்டால் அவரை உங்கள் சுவற்றில் தொங்கவிட்டு அவரை மறந்துவிடுவீர்கள். ஒருவரும் ஒரு கடவுளைப் போல ஆகவேண்டும் என்று விரும்புவதில்லை; நீங்கள் இதைப் புரிந்துகொள்ளவேண்டும். கடவுள் என்றால் அவர் நாம் பின்பற்றக்கூடிய குணங்களுக்கு அப்பாற்பட்டவராய் ஆகிவிடுகிறார். இதுதான் மனித மனத்தில் இருக்கும் கருத்து. ஒரு மனிதன் என்றால், அவர் அற்புதமாக இருந்தால், இயல்பாகவே எல்லோருக்குள்ளும் ஒரு ஆர்வம் எழுகிறது, "நான் ஏன் இப்படி இருக்கக் கூடாது?" அதனால் அவர் மனிதர் என்பது மிகவும் முக்கியமானது. அவர் ஒரு அரசராக இருந்தார், தன் ராஜ்ஜியத்தைத் தொலைத்து மீண்டும் வந்தவர். யாரோ துயரமடைந்ததனால் அத்தனை சொத்துக்களையும் தன் ராஜ போகத்தையும் விட்டுச் சென்றவர். 

அவரின் மாற்றாந்தாய் சிறிது வருத்தப்பட்டாள், அவர் முதுகுக்குப் பின்னால் சற்று கிசுகிசுத்தாள். அவர் சொன்னார் "இதுதான் உனக்கு வேண்டும் என்றால், நான் செல்கிறேன். " இத்தகைய மனிதரை நாம் முன்னுதாரணமாகக் கொள்ளவேண்டும் - இன்று பைத்தியக்காரத்தனமாக மக்கள் அதிகாரத்தை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருக்கையில் - என்ன ஆனாலும் சரி, அவர்கள் தேர்தலில் தோற்றாலும் அவர்கள் போக விரும்புவதில்லை. இத்தகைய தருணத்தில் ராமரைப் போல ஆக விரும்புவது மிக மிக முக்கியமானது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அயோத்தி ராமர் கோவில் ஏன் முக்கியமானது? (Ayothi Ramar Kovil)

அயோத்தி ராமர் கோவில், Ayothi Ramar Kovil

இந்த கோவில் எதனால் முக்கியமாகிறது? இந்த கோவில் முக்கியம், ஏனென்றால் தெற்கே இது அதிகம் இல்லை, இருக்கிறது ஆனால் அவ்வளவாக இல்லை, ஆனால் வட இந்தியாவில் இது அதிகமாக இருக்கிறது. வடக்கில் ராமர்தான் அவர்களின் உயிர்நாடி. ஐந்நூறு வருடங்களுக்கு முன் அயல்நாட்டு படையெடுப்பாளர்கள் துருக்கியிலிருந்தும் சிலர் மங்கோலியாவிலிருந்தும் வந்து படிப்படியாக எல்லா கோவில்களையும் அழித்தனர். அக்கோவில்கள் புராதனமானவை, நீண்ட காலத்திற்கு முன் கட்டப்பட்டவை. அந்த கால சமூகத்தின் அடிப்படை சக்தியாக இருந்த அவற்றை எல்லாம் அழித்து அதற்கு மேல் அவசரமாக அவர்களுக்கு வேண்டியவற்றைக் கட்டியெழுப்பினர். இந்த பிரச்சனை பலகாலமாக முற்றிவந்துள்ளது. இந்த பிரச்சனை சுமார் நூற்று முப்பத்தைந்து வருடங்களாக நீதிமன்றத்தில் உள்ளது என்று நினைக்கிறேன். ஆங்கிலேயர் காலத்திலிருந்து இது நீதி மன்றத்தில் இருந்துவந்துள்ளது, போய்க்கொண்டே இருந்தது, ஏனென்றால் நாம் என்ன விலை கொடுத்தாலும் அரசியல் ரீதியாக சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புவதால், துரதிர்ஷ்டவசமாக இந்நாட்டில் உள்ள எந்தவொரு நீதிபதியும் அது குறித்து முடிவெடுக்க முன்வரவில்லை. 

எல்லோரும் இந்த பிரச்சனையை அடுத்து வருபவர் கையாளட்டும் என்று, அதை தன் பதவிக்காலம் முடிவடையும் வரை ஒத்திவைக்கின்றனர். ஏனென்றால் யாருடைய சொத்து இது என்று இரு சமூகங்கள் தீவிரமாக வாதிடுகின்றனர். ஆனால் உச்சநீதிமன்றத்தில் மூன்று நான்கு தசாப்தங்களாக இது கடந்துவந்த செயல்முறைக்குப்பின், இப்போது இது ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. எல்லா சான்றுகளும், தொல்லியல் சான்றுகளும் நூறு சதவிகிதத்திற்கு மேல் தெளிவாகச் சொல்வது என்னவென்றால், அங்கு ஒரு கோவில் இருந்தது, அது இடிக்கப்பட்டது, அவசரமாக அதற்கு மேல் ஒரு கட்டிடம் அமைக்கப்பட்டது. அதனால் அவர்கள் இது கோவிலாக கட்டப்பட வேண்டும் என்று சொன்னார்கள். மற்றொரு சமூகத்திற்கு அவர்கள் அருகாமையில் உள்ள வேறொரு நிலத்தை ஒதுக்கினார்கள். அது தோராயமாக 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்று நினைக்கிறேன். அவர்கள் தங்களுக்கான இடத்தை அங்கு கட்டிக்கொள்ளட்டும் என்று சொன்னார்கள். அதனால், அது இன்னுமொரு கோவில் அல்ல, இது பாரதத்தின் உயிர்நாடியை மீட்பது, ஏனெனில் ராமரை உயர்வாகப் போற்றுவது ஒரே ஒரு சாராரோ ஒரே ஒரு மதத்தை சேர்ந்தவர்களோ அல்ல. நிறைய பேர் உள்ளனர், பிற மதங்களைச் சேர்ந்த பலரும் அவரை முன்மாதிரியாகக் கொண்டு அவரைப் போல வாழ விரும்புகிறார்கள். அவரைப் பல விதத்தில் போற்றுகின்றனர். அதனால் பல வழிகளில் ராம், ராமாயணம், ராமனின் கதை இந்தியப் பண்பின் இன்றியமையாத அங்கமாக இருந்துள்ளது, எனவே அது ஒரு நாட்டின் சிதைந்த உயிர்நாடியை மீட்டெடுப்பதற்கு இணையானது. அதனால் இது நடப்பது நல்லது என்று நான் கருதுகிறேன், இல்லையென்றால் மற்ற சமூகங்களுக்கு எதிரான தேவையில்லாத வெறுப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும்.

பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இது ஒரு மைல்கல்

Problem Solving

இந்த தீர்மானத்தினால், பல மனங்களும் இதயங்களும் குளிர்ந்துள்ளன, இது நாட்டின் எதிர்காலத்திற்கு நன்மையானது. இதோடு இரு சமூகங்களிடையே தேவையில்லாமல் தொடரும் உரசல்களும் முடிவுக்கு வரும். அதனால் ஒரு பெரிய பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். ஆகஸ்டு 5ம் தேதி அவர்கள் அடிக்கல் நாட்டுகிறார்கள், மேலும் ஒரு பிரம்மாண்டமான கோவிலை கட்ட திட்டமிட்டுள்ளார்கள். அனேகமாக அசரவைக்கும் வேகத்தில் இதை முடிப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கடந்த 25 - 30 வருடங்களாக அவர்கள் எல்லா தூண்களையும், மற்ற கல் வேலைப்பாடுகள் எல்லாவற்றையும் செதுக்கிவிட்டார்கள். கல் வேலைப்பாடுகள் முடிக்கப்பட்டு தயாராக வேறெங்கோ வைக்கப்பட்டிருக்கிறது, அவர்கள் அதை கொண்டுவந்து கட்டிடமாக அமைத்தால் போதும். மீதமுள்ள கட்டிடம் அதிவிரைவில் கட்டப்பட்டுவிடும். இன்னும் இருபத்தி நான்கு மாதங்கள் அல்லது முப்பது மாதங்களில் இந்த பிரமாண்ட கோவில் கட்டப்படும் என்று நம்புகிறோம், வைரஸ் சூழ்நிலை காரணமாக அவர்கள் நூற்றைம்பது அழைப்புகளை மட்டுமே அனுப்பியுள்ளனர். இல்லாவிட்டால் கோவில் திறப்பு அல்லது அடிக்கல் நாட்டு விழாவிற்கு அநேகமாக ஒரு கோடி அல்லது 1.2 கோடி மக்கள் அங்கே கூடுவார்கள். ஆனால் நூற்று ஐம்பது அழைப்புகள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன. மற்றது நேரலையில் ஒளிபரப்பாகிறது, மக்கள் அதைத் தொலைக்காட்சியில் அல்லது இணையதளத்தில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன். அதனால், நீண்டகாலமாக சமூகத்தில் ஆறாத புண்ணைப்போல தேவையில்லாமல் தொடரும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில், இது ஒரு மைல்கல் என்று நான் நினைக்கிறேன். இது பலரைக் குளிர்விக்கும் என்று நினைக்கிறேன்.

தன்னலமின்றி இருந்த ராமன்

ராமன், Ram, Rama

ராமனின் இந்த பண்புகளை சுருக்கமாக தொகுத்துச் சொன்னால்; அவர் தனது மக்களின் நல்வாழ்வின் மீது கொண்ட பேரார்வம் எல்லையில்லாதது, தன்னையே தியாகம் செய்யும் அளவுக்கு இருந்தது. அதுதான் ராமாயணத்தில் பல விதமாக புகழ்ந்து போற்றப்பட்டுள்ளது. அதனால், அடிப்படையில், அவர் எல்லாவற்றின் மீதும் பேரார்வம் காட்டினார், ஆனால் தன் தனிப்பட்ட தேவைகளுக்கு பற்றின்றி இருந்தார். இதற்குத்தான் அவர் முன்னுதாரணமாக இருந்தார். இந்த தன்மையைத்தான் எல்லா மனிதர்களும் தங்களுக்குள் கொண்டுவர விரும்பவேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் யாராக இருந்தாலும் எங்கிருந்தாலும் அவர்களுக்கு இந்த தன்மை வரவேண்டும். நீங்கள் எந்த அளவுக்கு தன்னலமின்றி பிற உயிர்கள் ஒவ்வொன்றின் மீதும் பேரார்வமாக இருக்கிறீர்கள் என்று வைரஸ் உங்களை சோதிக்கிறது. தப்பிக்க வழி இல்லை, உங்களை நீங்களே ஏமாற்றிக்கொண்டு இதிலிருந்து வெளிவர முடியாது.

ஒரு குட்டிக் கதை

இது டெக்ஸாஸில் நடந்தது, ஒரு FBI அதிகாரி, சிலர் சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா வளர்க்கிறார்களோ என்று சந்தேகித்தார். சில காலத்திற்கு முன் கஞ்சா வளர்ப்பது சட்டத்திற்குப் புறம்பானதாக இருந்தது, எனவே சட்டத்திற்குப் புறம்பாக இவர்கள் கஞ்சா பயிரிட்டு பணம் பார்க்கிறார்கள் என்று சிலரை சந்தேகித்தனர். அதனால் ஒரு அதிகாரி ஒரு பண்ணைக்கு வந்தார். அங்கே ஒரு எழுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர் இருந்தார், ஆனால் அவர் மிகவும் உடல்திடமான கடின உழைப்பாளி. அவர் சொன்னார், "நான் வந்து உங்கள் பண்ணையை சோதனையிட விரும்புகிறேன், ஏதாவது சட்டத்திற்குப் புறம்பான செடிகளை, போதையை உண்டாக்கும் செடிகளை நீங்கள் வளர்க்கிறீர்களா என்று சோதனையிட விரும்புகிறேன்." அந்த முதியவர் சொன்னார், "இல்லை, நாங்கள் அப்படி எதையும் வளர்க்கவில்லை, எங்களிடம் கால்நடைகள் உள்ளன, இதுவும் அதுவும் உள்ளது, ஆனால் சட்டவிரோதமான எதுவும் இல்லை." "இல்லை, நான் நேரடியாக சோதனையிட வேண்டும்." 

"சரி, நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சோதனையிடலாம், அந்த ஒரு இடத்திற்கு மட்டும் போகவேண்டாம்,” என்று சொன்ன முதியவர், ஒரு சிறிய இடத்தைக் காட்டி, "அங்கு மட்டும் போகாதீர்கள்," என்றார். அந்த அதிகாரி வெகுண்டு எழுந்தார். "நான் எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக்கூடாது என்று நீங்கள் என்னிடம் சொல்கிறீர்கள். நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா, நான் FBI அதிகாரி, நான் ஒரு மூத்த புலனாய்வாளர். நான் எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக்கூடாது என்று என்னிடம் கூறுகிறீர்கள். இந்த பேட்ஜுடன் நான் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்," என்று கூறி அவர் தனது FBI என்ற பேட்ஜை காட்டினார். அதற்கு அந்த முதியவர், "சரி, மன்னித்துவிடுங்கள், நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள்," என்றார். சில நிமிடங்களுக்குப் பின் போகவேண்டாம் என்று அந்த முதியவர் சுட்டிக்காட்டிய இடத்திலிருந்து அந்த அதிகாரியின் கூச்சல் சத்தம் கேட்டது. முதியவர் பார்த்தபோது, அந்த அதிகாரி உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்தார், அவரை முரட்டுக்காளை ஒன்று துரத்திக்கொண்டிருந்தது. அந்த முதியவர் உடனே வேலிக்கு அருகில் ஓடிச்சென்று, வேலிக்கம்பத்தின் மீது ஏறி நின்று, "அதனிடம் உங்கள் பேட்ஜை காண்பியுங்கள்! அதனிடம் உங்கள் பேட்ஜை காண்பியுங்கள்" என்றார். தயவு செய்து உங்கள் அதிகாரத்தையெல்லாம் வைரசின் முன் காட்ட வேண்டாம்; அது பாரபட்சமற்றது.

சத்குருவுடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நேர்காணல்

சத்குருவுடன் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நேர்காணல், Sadhguru Interview with Hindustan Times

கேள்வியாளர் : ராமர் குறித்த இந்த கருத்து வெறி, விரைவில் எப்படியும் திறந்துவைக்கப்பட இருக்கும் ராமர் கோவிலின் மீதான இந்த வெறி, இது எங்கே செல்வதாகப் பார்க்கிறீர்கள்? இது தேவையற்றதல்லவா?

சத்குரு: நான் நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளைப் பயன்படுத்த மாட்டேன். கருத்து வெறி, வெறி போன்றவை மிகவும் கடுமையான வார்த்தைகள். ஏனென்றால் ஒருவர் ஏழாயிரம், எட்டாயிரம் ஆண்டுகளுக்கு பின்னும் பிறருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்றால், அங்கே ஏதோவொரு அடிப்படை இருக்கவேண்டும். ஒருவருக்கோ இருவருக்கோ அல்ல, கோடிக்கணக்கான மக்களுக்கு, ஒருவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் இன்னும் முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்றால், ஏதோ ஒன்று இருக்கவேண்டும். அந்த ஏதோவொன்றை நாம் பார்க்காவிட்டால், பிறகு நாம் அதை கருத்துவெறி, அது இது என்போம். 

கேள்வியாளர்: நீங்கள் இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சத்குரு: அதற்கு நான் வருகிறேன். ராமர் கோவிலைப் பற்றி பார்ப்போம். ராமனுக்கு வாழ்க்கையில் தொடர்ச்சியாக பிரச்சனைகள் வந்தன. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் ரியல் எஸ்டேட் பிரச்சனை இருந்து வருகிறது. அவரின் ரியல் எஸ்டேட் பிரச்சனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அதனால், அவரை நேசிப்பவர்கள் இந்த ரியல் எஸ்டேட் பிரச்சனையை தீர்க்க எண்ணுகின்றனர். அது முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைக்கிறேன். உச்ச நீதிமன்றம் அதை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. அதனால் அவர்கள் ஒரு கோவில் கட்ட விரும்புகிறார்கள். அது பக்தி. அதை வெறி என்றும் கருத்து வெறி என்றும் ஏன் கூறவேண்டும்.

கேள்வியாளர்: அப்படியா? வேறு ஒரு வார்த்தையை பயன்படுத்துகிறேன், அதையும் நீங்கள் கடுமையானது என்றே சொல்வீர்கள். இது பிரிவினைவாதம் இல்லையா?

சத்குரு: இது எப்படி பிரிவினைவாதமாகும்?

கேள்வியாளர்: ஏனென்றால் அது இரு சமூகங்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது.

சத்குரு: உண்மையாகவா?

கேள்வியாளர்: இது இரத்தக்களரியான ஒரு கதை, இரத்தம் தோய்ந்த கதை என்று நான் சொல்லும்போது, கொலைகளும் கலவரங்களும் நிறைந்த கதை என்கிறேன்.

சத்குரு: கடந்த 800 வருடங்களாக இங்கு நடந்தது, உலக வரலாற்றில் வேறெந்த பகுதியையும் விட அதிக இரத்தம் ஓடிய கதை. யூதர்களுக்கு அடோல்ஃப் ஹிட்லரால் நடந்தது, அமெரிக்கப் பூர்வக்குடியினருக்கு வட அமெரிக்காவில் நடந்தது, கம்போடியாவில் நடந்தது - அவற்றை கடந்த 800 ஆண்டுகளாக இந்தியாவில் நடந்ததோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அவை ஒன்றுமே இல்லை. அவற்றை நீங்கள் இரத்தக்களரி என்று கருதவில்லை என்றால், மேலும் இவை அனைத்தையும் செய்த மக்கள் அதற்காக வருத்தப்படவில்லை. மக்கள் ஏதோ சிறிய நிலத்தை அவர்கள் வழிபாட்டிற்குக் திருப்பிக் கேட்டால் அது பிரிவினைவாதமாகுமா? அது எப்படி பிரிவினைவாதமாகும்?

கேள்வியாளர்: நீங்கள் கோவில் என்று கூறாமல் ரியல் எஸ்டேட் என்ற வார்த்தையை உபயோகிப்பதை நான் கவனிக்கிறேன். வேண்டுமென்றே அப்படிச் சொல்கிறீர்கள்?

சத்குரு: அது ரியல் எஸ்டேட் தான். ஆனால் கோவில் பக்தரின் இதயங்களால் கட்டப்படுகிறது. நிலம் வெறும் ரியல் எஸ்டேட் தான். ஆனால் அது அவர்களுக்குப் புனிதமானது, ஏனென்றால் அது அவரின் ஜன்ம பூமியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அங்கு ஒரு கோவில் இருந்ததா இல்லையா என்பது குறித்து எந்த கேள்விக்கும் இடமில்லை. ஒரு கோவில் அல்ல. ஆயிரமாயிரம் கோவில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. ஏனெனில் அதை இடிக்கவேண்டும் என்பதுதான் கொள்கை, அது வருங்காலத்திலும் இடித்து தரைமட்டமாக்கப்படும். நாம் அதைப் பாதுகாக்கவில்லை என்றால், அது வருங்காலத்திலும் இடிக்கப்படும். இப்போதும்கூட பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் இது நடக்கிறது. இது எதற்காக பிரிவினைவாதமாக இருக்கவேண்டும்? ஒவ்வொருவரும் அவரவர் நம்பும் அபத்தம் என்னவாயினும் அதை தழுவிக்கொண்டு அவரவர் செய்யும் காரியங்களைச் செய்யமுடியாதா?

எந்த நம்பிக்கை முறையும் இல்லாமல் என்னால் வாழமுடியும், ஆனால் மக்களுக்கு ஏதோவொரு நம்பிக்கை முறை தேவைப்படலாம், அதனால் அவர்களுக்கு நம்பிக்கைகள் உள்ளன. ஆனால் என் நம்பிக்கை சரி உன் நம்பிக்கை தவறு, மேலும் நான் நம்பாத ஒன்றை நம்புவதால் நீ சாகவேண்டும் என்று நான் எப்படி நினைக்கலாம்? அதைச் சரிசெய்யாமல் நீங்கள் இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்வது, இது வெறும்.. இது என்ன? இது எங்கிருந்து வருகிறது?

கேள்வியாளர்: நீங்கள் கடந்த காலத்தைப் பற்றி பேசினீர்கள், நீங்கள் கடந்தகால போர்களைப் பற்றி பேசினீர்கள். ஒரு தவறை சரிசெய்ய இன்னொரு தவறு செய்வது அதை சரியாக்கிவிடுமா?

சத்குரு: பாருங்கள், இரண்டு தவறுகள் இல்லை, அது ஒரே ஒரு வேண்டுகோள். மூன்று பெரும் சின்னங்களான சிவன், ராமன், மற்றும் கிருஷ்ணனின் ஆயிரக்கணக்கான கோவில்கள் தகர்க்கப்பட்டுள்ளன. எவரும் அதைப்பற்றி கேட்கவில்லை, ஏனென்றால் சரித்திரத்தை திருத்துவது இயலாதது. எவரும் அது சாத்தியம் என்று நினைக்கவில்லை, எவரும் அதில் ஆர்வமும் கொள்ளவில்லை. இந்த மூன்று சின்னங்களின் அடிப்படையான இருப்பு எங்கு இருந்ததோ, அந்த மூன்று தலங்களை மீண்டும் கேட்கிறார்கள். அதை சண்டையின்றி கொடுக்கமுடியாதா என்ன? சண்டை எங்கு இருக்கிறது? மேலும் எவரும் சண்டையிடவும் இல்லை, அவர்கள் நீதிமன்றத்திற்குத் தான் செல்கின்றனர். நீதிமன்றம் சண்டையிடுவதற்கு இல்லை, அது ஒரு சட்டப்பூர்வமான செயல்முறை. ஒரு சட்டப்பூர்வமான செயல்முறையை நீங்கள் ஏன் சண்டை என்கிறீர்கள்?

கேள்வியாளர்: நீங்கள் உங்கள் வாழ்க்கையில் வழிபாடுசெய்ததோ கோவிலுக்குச் சென்றதோ இல்லை அல்லவா? அல்லது சென்றிருக்கிறீர்களா? சென்றிருந்தால் எப்போது அதை நிறுத்தினீர்கள்? நீங்கள் சமய நூல்களை வாசித்துள்ளீர்களா?

சத்குரு: நான் நிச்சயமாக சமய நூல்களை வாசித்ததில்லை. நான் கோவிலுக்குச் செல்லும் பழக்கமுடையவனும் அல்ல. நான் கோவில்கள் கட்டியுள்ளேன். 

கேள்வியாளர்: ஆம்! அழகானவை!

சத்குரு: ஆனால் நான் அங்கு செல்வதில்லை. நான் ஒரு கோவிலுக்குச் சென்றால்… நமது கோவில்கள் பிரார்த்தனை செய்யும் இடங்கள் அல்ல. இது மக்கள் முற்றிலும் தவறவிட்டுள்ள ஒன்று. அனேகமாக வடக்கில் இது முற்றிலுமாக இல்லாமல் போய்விட்டது, தென்னிந்தியாவில் இன்னும் அறிவுறுத்தல்கள் உள்ளன. இங்கு கர்நாடகத்திலும் தமிழ்நாட்டிலும் வழிமுறைகள் உள்ளன. நீங்கள் கோவிலுக்குச் சென்றால், நீங்கள் அங்கு பிரார்த்தனை செய்யவேண்டும், கடவுளிடம் முறையிடவேண்டும், அதையும் இதையும் செய்யவேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. நீங்கள் அங்கு சென்றால், ஒரு இடத்தில் அமைதியாக உட்கார வேண்டும். ஏனென்றால் பல விதமான சக்திகள் இருக்கின்றன. பிரதிஷ்டைகள் பலவிதமானதாகும். ஒவ்வொரு விக்ரகமும் உங்கள் வாழ்வின் குறிப்பிட்ட ஒரு பரிமாணத்தைத் திறப்பதற்காக ஒரு குறிப்பிட்ட விதமாகப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அதனால் நீங்கள் அங்கு உட்கார்ந்து அதை உள்வாங்கவேண்டும்.

வடக்கிலும், அவர்கள் தரிசிக்க வேண்டும் என்றே சொன்னார்கள், முறையிட வேண்டும் என்று சொல்லவில்லை, இல்லையா? தரிசனம் என்றால், அது ஒரு சக்தி வடிவமாகையால், அதை உங்கள் மனத்திலும் இதயத்திலும் பதிக்கிறீர்கள், இது உங்களை மாற்றும். இது ஒரு சக்தி வடிவம் என்பதால், அதன் ஸ்தூல வடிவம் ஒரு சாரக்கட்டு போன்றது மட்டும்தான். அது இருக்கிறது. அது உங்கள் கண்களுக்கு தேவைப்படுகிறது, ஆனால் அது ஒரு சக்தி வடிவம், நீங்கள் அதை உள்வாங்கவேண்டும். ஏனெனில் இப்போது நீங்கள் ஹிந்து என்று குறிப்பிடும் இந்த நாகரிகத்தில்… துரதிர்ஷ்டவசமாக இப்போது ஹிந்து என்பது மிகவும் மோசமாக சிதைக்கப்பட்டுள்ளது. அல்லது இன்னும் பொருத்தமான வார்த்தை சனாதனம் எனலாம், ஆனால் அதுவும் இன்று கெட்ட வார்த்தை ஆகிவிட்டது. சனாதனம் என்றால் நித்தியமானது என்று பொருள்.

அதனால் இந்த கலாச்சாரத்தில், ஏதோவொன்று எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக இருந்தாலே தவிர, எதுவும் நித்தியமானதாக இருக்கமுடியாது. இந்த கலாச்சாரத்தில் பிரார்த்தனை என்று எதுவும் கிடையாது. இந்த கலாச்சாரத்தில் தரிசனம் இருக்கிறது. இந்த கலாச்சாரத்தில் சொர்க்கத்திற்கு சென்று கடவுளின் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வதற்கு நமக்கு நாட்டமில்லை. இந்த கலாச்சாரத்தில் தெய்வீகமாய் மாறுவதில்தான் நமக்கு நாட்டமிருக்கிறது. ஏனென்றால் சாதாரண மனித செயல்-எதிர் செயல் கொண்ட வாழ்கையிலிருந்து மேலே உயர்ந்திருப்பதைத்தான் நாம் தெய்வீகம் என்று கருதுகிறோம்.

உதாரணத்திற்கு, பலர், நாளிதழ்களில்கூட இப்படி எழுதுகிறார்கள், "டெண்டுல்கர் ஒரு கிரிகெட் கடவுள்!" ஏனெனில் மக்கள் மனதில், அவர் வாழ்ந்த காலத்தில், மனிதனால் முடிந்தது என்று நாம் நினைத்ததைவிட அவர் உயர்ந்தார். இன்றும் அப்படித்தான் இருக்கிறார். வெறுமனே ஒரு பந்தை அடிப்பது, அவ்வளவு தான், ஆனால் அதை அவ்வளவு சிறப்பாகச் செய்தார்.

கேள்வியாளர்: மக்கள் சத்குரு கடவுள் என்கின்றனர், உங்களை பின்பற்றுபவர்கள் சத்குருவை கடவுள் என்கிறார்கள்.

சத்குரு: இல்லை, எவரும் அப்படிச் சொல்லவில்லை. அவர்கள் என்னை தினமும் வேலைசெய்ய வைக்கிறார்கள். அதனால் அவர்கள் “அவர் கடவுள்,” என்று சொல்லும்போது, அவர் சொர்கத்தில் வாழ்கிறார் என்றோ வேறேதோ அபத்தத்தையோ அவர்கள் கூறவில்லை. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், நாங்கள் மனிதனின் உச்சபட்ச எல்லை என்று நினைப்பதை விட அவர் மேலே உயர்ந்துள்ளார் என்று கூறுகிறார்கள். இப்படித் தான் நாம் ராமன், கிருஷ்ணன் என்று எல்லோரையும் வழிபட்டோம். அவர்கள் தங்கள் கட்டுப்பாடுகளைக் கடந்தார்கள், வாழ்க்கை அவர்கள் மீது என்னதான் வீசினாலும், போர்க்களத்திலும் அவர்கள் நிதானமாக இருந்தார்கள். போர்க்களத்திலும் அவர் சிரித்துப் பேசுகிறார். அதனால் நாம் அவருக்குத் தலை வணங்குகிறோம். எல்லோரும் வாழ்வையும் சாவையும் குறித்து பயப்படும்போது, யாரோ ஒருவர் அதை விட உயர்ந்திருந்தால் நாம் அவருக்குத் தலை வணங்குகிறோம். இப்போதும்கூட இந்திய இராணுவத்தில், ஒரு மேஜரோ கர்னலோ அல்லது வேறெவருமோ, சுற்றியும் தோட்டாக்கள் பறக்கும்போதும் நிதானமாக இருக்கிறார் என்றால், எல்லோரும் அவரை வணங்குவர். ஏனெனில் அவர் ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்திருக்கிறார். 

அதனால் இந்த கலாச்சாரத்தில், நாம் கடவுளிடம் போக விரும்புவதில்லை, நாம் அதாகவே ஆக விரும்புகிறோம். நம் கருத்து ஒரே கடவுள் என்பதல்ல. நாம் எல்லாவற்றையும் கடவுளாகப் பார்க்கிறோம், நாம் ஒரு மரத்திற்கு தலை வணங்குவோம், நாம் ஒரு பசுவுக்குத் தலை வணங்குவோம், நாம் ஒரு பாம்பிற்குத் தலை வணங்குவோம், ஒரு பாறைக்கும் மனிதனுக்கும் பெண்ணிற்கும் குழந்தைக்கும் எதற்கும் தலை வணங்குவோம். ஏனெனில் உயிரின் மூலமானது அதற்குள் துடிக்காமல் உயிரின் எந்தவொரு துண்டும் இங்கு நடப்பதில்லை. அதை நீங்கள் கண்டுணர்ந்தால் நீங்கள் தலை வணங்குவீர்கள். அவ்வாறு உணரவில்லை என்றால், இல்லை.